http://www.chennailibrary.com





17. வலிய எயினன் வரவேற்பு

     அந்தி மயங்குகிற வேளையில் - எதிரே தொடுவானமும் கடற்பரப்பும் சந்திக்கிற விளிம்பில் கருங்கோடு போல் ஒரு வரைவு தெரிந்தது. அருகில் நெருங்க நெருங்க, மரங்களின் வடிவமும் மலையும் மெல்லத் தெரியலாயின. தூரதிருஷ்டிக் கண்ணாடி பதித்த கருவியினால் பார்த்துவிட்டு "தீவு நெருங்குகிறது" என்று அறிவித்தான் முடிநாகன். இளையபாண்டியன் அந்தக் கருவியை வாங்கித் தொலைவில் தெரிவதைப் பார்த்தபோது, வானளாவிய மரங்கள் செறிந்த மலை ஒன்று கண்களில் தெரிந்தது. அவ்வளவு உயரமாகவும், பருமனாகவும், செழிப்பாகவும், அடர்த்தியாகவும் மரங்கள் செறிந்திருந்த மலையைப் பார்ப்பதே மகிழ்ச்சியாயிருந்தது.

     அந்தத் தீவின் நடைமுறைகளையும் ஒழுகலாறுகளையும் பழக்கவழக்கங்களையும் இளையபாண்டியனுக்குச் சொல்லத் தொடங்கினான் முடிநாகன்.

     "யாத்ரிகர்கள் என்பதற்கு அதிகமாக ஒரு வார்த்தை கூட நாம் அங்கே தெரிவிக்கலாகாது. அப்படித் தெரிவிப்பதனால் பெரிய பெரிய கெடுதல்கள் சம்பவிக்கலாம்" என்று முடிநாகன் எச்சரிக்கையாக முன்பே கூறி வைத்தான். இந்த எச்சரிக்கை கப்பல் ஊழியர்களுக்கும் ஒரு முறைக்கு இரு முறையாக வற்புறுத்தித் தெரிவிக்கப்பட்டது. பாய்மரங்களிலும், கப்பலின் பிற்பகுதிகளிலுமிருந்த அரசியல் அடையாளச் சின்னங்கள் மறைக்கப்பட்டன. தீவினர்களுக்குக் கொடுப்பதற்கான அன்பளிப்புப் பொருள்களாக - யானைத் தந்தங்களும், முத்துக்களும், இரத்தினங்களும் எடுத்து வைக்கப்பட்டன.

     "இந்தவிதமான தீவுகளில் மென்மையும், நாகரிகமும் பொருந்திய பண்பட்ட இராசநீதி முறைகள் எவையும் கிடையாது. இறங்கியதும் தீவுத்தலைவனைச் சந்தித்து யாத்ரீகர்களாக வந்திருப்பதாய்த் தெரிவித்து அன்பளிப்புக்களை வழங்கிவிட வேண்டும். மனிதர்களைப் பிடிக்கவில்லை என்றால் உடனே அவர்களைக் கொலை செய்வதற்குக் குறைவான வேறெந்தச் சிறிய தண்டனையையும் வழங்கத் தெரியாது இவர்களுக்கு" என்றான் முடிநாகன்.

     "இயல்புதான்! நாகரிகம் அடையமுடியாத தொடக்க நிலையில் எல்லாக் குடிமக்களும் இப்படித்தான் இருக்க முடியும். மொழியும், பேச்சும், இலக்கணமும், இலக்கியமும், இசையும், நாடகமும், கலையும், காவியமும் தோன்றித்தான் மனிதனின் தொடக்கக்கால மிருகத்தன்மைகளைப் படிப்படியாகக் கரைத்து அவனை மென்மையாக்கியிருக்கின்றன. அந்தக் கலை நாகரிகமும் மொழி நாகரிகமும் தோன்றாத இப்பகுதிகளில் கொடிய நீதிமுறைகள் தான் நிலவமுடியும்" என்று முடிநாகனுக்கு விளக்கம் கூறினான் இளையபாண்டியன்.

     நீலக்கடலினிடையே அந்தத் தீவும் - அதிக உயரமில்லாத குன்றுகளும் மனோரம்மியமாகக் காட்சியளித்தன. மரங்களும், இலை தழைகளும், செடி கொடிகளும், நெய் பூசித் துடைத்துப் பளபளப்பாக வைத்தவை போல் பசுமை மின்னின. தரைப்பகுதி மரங்களின் பசுமைக்கும் இந்தத் தீவுப் பகுதித் தாவரங்களின் பசுமைக்கும் நிறைய வேறுபாடு இருந்தது. இந்தப் பசுமையில் ஒருவிதமான செழிப்பும், அடர்த்தியும் மதம் பிடித்ததுபோல் பற்றியிருந்தன. மனிதர்களும் அதேபோல் வலிமை மதம் பிடித்தவர்களாய்த் தோன்றினார்கள். வலிமையையும், திடனையும் காட்டுவதுபோல் கரிய நிறம், வளையம் வளையமாகச் சுருண்ட செம்பட்டை முடி, ஒளி மின்னும் சிறிய கூர்மையான கண்கள், அதிக உயரமில்லாத தோற்றம், சதைப் பிடிப்பு வாய்ந்த திரண்ட தோள்கள், பரந்த மார்பு, வேகமாக ஓடுவதற்கும், துரத்துவதற்கும் ஏற்ப வாய்ந்தவைபோல் இறுக்கமான குதிகால்கள், அத்தீவின் மனிதர்களான எயினர்கள் பார்ப்பதற்கு விநோதமாயிருந்தார்கள். இடுப்பைச் சுற்றி ஒரு சிவப்பு நிற மரப்பட்டையைக் கச்சையாக அணிந்திருந்தார்கள்.



கபாடபுரம் : கதைமுகம்  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/kapadapuram/kapadapuram17.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.