http://www.chennailibrary.com





18. நாதகம்பீரம்

     எயினர் தலைவன் அவர்களைத் தன் விருந்தினர்களாக ஏற்று மிகவும் அன்போடும் ஆர்வத்தோடும் உபசரிக்கத் தொடங்கி விட்டான். அவர்கள் அவனுக்குப் பரிசளித்த முத்துக்களும் அவற்றைவிட நயமான வார்த்தைகளும் எயினர் தலைவனின் மனத்தில் ஒரு நன்மதிப்பை உண்டாக்கியிருக்க வேண்டுமென்பது அவனுடைய மலர்ச்சியிலிருந்தே தெரிந்தது. இந்த முதல் இராசதந்திரச் சந்திப்பை எவ்வளவிற்கு எவ்வளவு பயணத்தைப் பற்றிய நம்பிக்கை தங்கள் மனத்தில் பெருக முடியுமென்பது இருவருடைய எண்ணமுமாக இருந்தது. கூடியவரை தங்கள் உரையாடல் பொதுவான உரையாடலாக இருக்குமாறு இருவருமே கவனம் வைத்துக் கொண்டு பேசினார்கள்.

     தொன்மையான தென்பழந்தீவுகளுக்கும், கபாடபுரத்துக்கும் இடையேயுள்ள அரசியல் உறவின்மைகளையோ, உறவுகளையோ, உரையாடலுக்குப் பொருளாக்கி விடாமல் தவிர்ப்பதை இருவருமே சாதுரியமாக நிறைவேற்ற முடிந்தது. எதை விரும்பிப் பேசுகிறோமோ 'அதையே ஏன் விரும்பிப் பேசுகிறோம்' என்ற கேள்வி எதிராளியின் மனத்தில் எழுந்துவிடாமலும், எதை விரும்பித் தவிர்க்க முயல்கிறோமோ 'அதை மட்டும் ஏன் தவிர்க்க முயல்கிறோம்?' - என்ற சந்தேகம் எதிரிக்கு ஏற்படாமலும் பேசுவதுதான் இராசதந்திரப் பேச்சு. இத்தகைய பேச்சுக்களைப் பயிலவும், பழகவுமே பெரியபாண்டியர் தங்களை இந்தச் சுற்றுப்பயணத்திற்கு அனுப்பியிருக்கிறார் என்பது இருவருடைய மனத்திலும் மேலெழுந்து நின்ற காரணத்தினால் இருவருமே அதைச் செம்மையாகச் செய்ய முடிந்தது.

     பகல் நேரத்திலும் வெயில் உள்ளே நுழைய முடியாதபடி அடர்ந்து செறிந்திருந்த காடுகளாலான அந்தத் தீவில் காட்டு விலங்குகளின் தொல்லைகளிலிருந்து விடுபடக் கருதியோ, என்னவோ குடியிருப்புகளை எல்லாம் மரங்களின் உச்சியில் அமைந்திருந்த பரண்களில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அந்தத் தீவில் செழித்து வளர்ந்திருந்த ஒருவகைப் புல்லினால் குடிசைகள் அழகுற வேயப்பட்டிருந்தன. முடிநாகனும், சாரகுமாரனும், தங்குவதற்குக்கூட அப்படி இரண்டு பரண்களிலமைந்த புல்வேய் குரம்பைகளே கிடைத்தன. உயர்ந்த மரக்கிளைகளில் வைரம் பாய்ந்த பல கைகளைப் பதித்துப் பசுமைச் சூழலில் தொங்குவதுபோல் அமைக்கப்பட்டிருந்த அந்தக் குடிசைகளில் தங்குவதற்கு இதமாக இருந்தது. நீருள் அமிழ்ந்திருப்பதுபோன்ற தண்மை அங்கு நிலவியது. அந்தத் தண்மையின் சுகத்தினாலும், பயணம் செய்துவந்த களைப்பினாலும் முடிநாகன் நன்றாக உறங்கிவிட்டான்.

     இளையபாண்டியனுக்குத்தான் உறக்கமே வரவில்லை. அந்த இயற்கையழகின் தூண்டுதலில் கண்ணுக்கினியாளின் நினைவு வந்தது அவனுக்கு. 'உண்மை அன்பிற்கும், பரிவிற்கும்தான் எத்தனை பெரிய சக்தி? நினைப்பதிலும், காண்பதிலும், சிந்திப்பதிலும், எல்லாவற்றிலும் நம்முள் பொங்குகிற பரிவின் மற்றொரு நுனியிலிருப்பவர்களே நமக்கு ஞாபகம் வருகிறார்களே?' என்றெண்ணி வியந்தான் அவன். மரங்களும், செடிகளும், கொடிகளுமாக ஒரே மனத்தின் பல உணர்வுகளைப் போல் நெருங்கிப் பிணைந்திருந்ததனால் அவன் அமர்ந்திருந்த பரணில் காட்டின் பசுமை மணம் கம்மென்று தொகுதியாகப் பரவியிருந்தது. 'பூக்களின் நறுமணம் நமக்குப் பிரியமானவர்களின் ஞாபகத்துக்கு ஒரு தூதுபோல வாய்க்கும்' என்று அகப்பொருள் இலக்கணத்தில் ஏதோ ஒரு துறைக்கு விளக்கம் கூறுகிறபோது ஆசிரியர் கூறியது நினைவு வந்தது அவனுக்கு.

     அந்தத் தண்மை அந்த இயற்கையின் மலர்ச்சி, அந்த இரவின் ஏகாந்தம், யாவும் கண்ணுக்கினியாளையே எண்ணச் செய்தன. சிலருடைய நினைவு ஞாபகத்தின் ஒரு மூலையில் இருக்கும். வேறு சிலருடைய நினைவு ஞாபகத்தின் ஒரு பாதியாக இருக்கும். இன்னும் சிலருடைய நினைவே ஒரு ஞாபகமாக இருக்கும். மனத்தின் அந்தரங்க கீதங்களாகப் பெருகிப் பல்லாயிரம் பண்களை ஒலிக்கும் இங்கித நினைவுகள் சிலவும் இதயத்திற்கு உண்டு. அந்த நினைவுகள் குருதியும் சதையுமாக இதயத்தோடு பிணைந்தவையாக இருக்கும். கண்ணுக்கினியாளைப் பற்றிய நினைவும் அவனுள் அப்படித் தவிர்க்க முடியாததாகவே இருந்தது. இயற்கையழகு மிகுந்த அந்தக் குளிர்ந்த வனத்தில் அவளை நினைப்பதற்கு என்றே இரவெல்லாம் விழித்திருந்தாலும் தகும் என்பது போலிருந்தது அவன் நிலை. 'மனித இதயத்திற்குள் கரை கொள்ளாத் தவிப்பாக நிரம்பியிருக்கும் ஏதோ ஓர் உணர்வுதான் அவன் பாடும் இசையாகிறது' என்று இசை நுணுக்கங்களைக் கற்பிக்கும் போது ஆசிரியர் சிகண்டியார் இடைக்கிடை கூறுவதுண்டு. கண்ணுக்கினியாளின் இசையும் நளினமான குரலும் ஞாபகம் வருகிற வேளைகளில் எல்லாம் சிகண்டியார் கூறும் இந்த வாக்கியத்தையும் உடனிகழ்ச்சியாகச் சேர்த்தே நினைத்திருக்கிறான் அவன்.



கபாடபுரம் : கதைமுகம்  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/kapadapuram/kapadapuram18.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.