2. கண்ணுக்கினியாள் இசைக் கருவிகளின் பல்வேறு வகைகளையும், பல்வேறு வடிவங்களையும் சுமந்து நின்ற பொருநரும், பாணரும், விறலியருமாகக் கூடியிருந்த அந்தக் கூட்டம், தன்னை இன்னாரென்று இனங் காண்பித்துக் கொள்ளாது அமைதியாக நுழைந்த இளையபாண்டியரைக் கண்டதும் மௌனமாக விலகி வழி விட்டது. கூட்டத்தினிடையே பொன்னிறப் பூமாலை ஒன்று சரிந்து தளர்ந்து விழுந்து கிடப்பதுபோல் இளம்பாண் மகள் ஒருத்தி விழுந்திருந்தாள். அவளருகே யாழ் ஒன்றும் விழுந்து கிடந்தது. மயங்கி விழுந்தவளைக் கண்ட இளைய பாண்டியரின் விழிகள் 'இவள் யார்? ஏன் இப்படி விழுந்து கிடக்கிறாள்?' - என்று வினாவுவது போன்ற பாவனையில் சுற்றி நின்றவர்களைத் துழாவின. புதிதாக வந்த அவனைக் கண்டதும் அவர்கள் அழுகையும் கண்ணீரும் நின்றன. "எல்லாரோடும் உடன் நடந்து வந்து கொண்டிருந்தவள் திடீரென்று நடைதளர்ந்து மயங்கி விழுந்துவிட்டாள்" - என்று ஒரே சமயத்தில் பல குரல்கள் இளைய பாண்டியரின் செவியில் ஒலித்தன. துயரமும், சோர்வும், பயமும் கொண்ட அந்தக் கூட்டத்தில் மலர்ந்த முகமும், புன்சிரிப்பும் ஒளிர இளையபாண்டியர் புகுந்தது இருளில் மின்னல் தோன்றிப் பொலிவது போலிருந்தது. இளையபாண்டியரைப் பின் தொடர்ந்து வந்திருந்த முடிநாகன் குறிப்பறிந்து செய்ய வேண்டியதை உணர்ந்தவனாகச் சாலையோரமாய் மரக் கூட்டத்திற்கு அப்பாலிருந்த நெற்கழனிகளுக்கு நீர்பாயும் வாய்க்காலைத் தேடி ஓடினான். பக்கத்திலிருந்த மரங்களில் இலைகள் பெரிதாயிருந்த மரமொன்றிலிருந்து நாலைந்து இலைமடல்களை இணைத்துப் பேழைபோற் செய்து நீர்முகந்து கொண்டு விரைந்தான் அவன். தண்ணென்று குளிர்ந்த வாய்க்கால் நீரை ஒரு கை அள்ளி அவள் முகத்தில் தெளித்தபோது - தண்ணீரின் குணத்தினாலோ அதைத் தெளித்த சாரகுமாரனின் மனத்தில் நிரம்பியிருந்த கருணையினாலோ அங்கு மயங்கிக் கிடந்தவளின் உடலில் அசைவுகள் புலப்படலாயின. அல்லி மலர்வது போல் அவள் விழிகளில் மலர்ச்சியும் தெரிந்தது. அவள் பருகுவற்கு வசதியாக இலைப் பேழையிலிருந்த நீரை வாயிதழ்களினருகே சாய்த்த இளையபாண்டியனை நோக்கி அவள் கண்களில் நன்றி சுரந்தது. உடலிலே சிறிது தெம்பு வந்ததும், கூடியிருந்த கூட்டத்தினரையும், அருகே அமர்ந்து நீரையும், குளிர்ந்த பார்வையையும் சேர்த்தே பொழியும் சுந்தர இளைஞனையும் கண்டு அவள் நாணியபடியே எழுந்து நிற்க முயன்றாள். மின்னல் பாய்வதுபோல் விரைந்து தெரிந்த அந்த நாணம் அவளுக்கு மிகமிக அழகைக் கொடுத்தது. "உண்ணாமல் வயிற்றுப் பசியோடும் களைப்போடும் நெடுந்தூரம் நடந்து வந்தாள் போலிருக்கிறது. சோர்வுக்கும் மயக்கத்துக்கும் அதுதான் காரணம்" - என்று சுற்றியிருந்தவர்களிடம் கூறினார் இளையபாண்டியர். "ஆர்வத்தின் காரணமாக இவளே உண்டாக்கிக் கொண்ட சோர்வுதான் ஐயா இது! வயது முதிர்ந்த பெற்றோர்கள் பின்னால் வருகிற கூட்டத்தோடு வந்து கொண்டிருக்கிறார்கள். மணிபுரத்திலிருந்து இன்றிரவு இளையபாண்டியர் கோநகருக்கு வருகிறாராம். நகரின் முதற்கோட்டை வாயிலிலேயே அவரைப் பார்த்துவிட வேண்டுமென்று இவளுக்கு ஆசை. அதனால் முதுமையின் காரணமாக விரைந்து நடக்க முடியாத பெற்றோர்களை அவர்கள் ஏற்கனவே வந்து கொண்டிருந்த கூட்டத்தினரோடு விட்டு விட்டு இவள் முன்னால் விரைகிறாள். கபாடபுரத்தை அடைந்து இளையபாண்டியரின் சுந்தரத் தோற்றத்தைக் கண்டு மயங்க வேண்டியவள்; பாவம்! இங்கேயே அவசரப்பட்டு மயங்கி விழுந்துவிட்டாள்" - என்று கூட்டத்திலிருந்த முதியவர் ஒருவர் - முதுமை தமக்களித்திருக்கும் உரிமையோடும் துணிவோடும் கூறியபோது கூட்டத்தில் சிரிப்பொலி அலை அலையாக எழுந்தது. சிரிப்புக்குக் காரணமாயிருந்தவளோ நாணித் தலை கவிழ்ந்தாள். இந்த நிலையில் உடனிருந்த முடிநாகனுக்கோ தன் ஆவலைச் சிறிதும் அடக்க முடியவில்லை. அந்தக் கூட்டத்தினரையும், விண்மீன்களுக்கிடையே முழுநிலவு தளர்ந்து கிடப்பது போல் துவண்டு நிற்கும் அந்தப் பெண்ணையும் நோக்கி, "பாண் மக்களே! விறலியர்களே! பேரழகு வாய்ந்த இசைச் செல்வியே! நீங்கள் எல்லோரும் காணத் தவித்துக் கொண்டிருக்கும் இளைய பாண்டியர் சாரகுமாரரைத்தான் இப்போது உங்களருகே காண்கிறீர்கள்" - என்று சொல்லி அவர்களுடைய முக மலர்ச்சியையும், மன மகிழ்ச்சியையும், அன்பையும் அந்தக் கணமே இளையபாண்டியர் நேருக்கு நேராகப் பெறும்படி செய்துவிட வேண்டும் போல முடிநாகனின் நாவும் இதழ்களும் முந்தின. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|