http://www.chennailibrary.com





20. சந்தேகமும் தெளிவும்

     கலஞ்செய் நீர்க்களத்தை வாய்விட்டுப் பாராட்டுவதோ வியப்பதோ கூட எயினர் தலைவனின் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதைக் குறிப்பறிந்து கொண்ட சாரகுமாரனும், முடிநாகனும், விரைந்து பேச்சை வேறு பொருளுக்கு மாற்றினார்கள். "கலைகளில் எயினர் மரபினருக்கு ஈடுபாடு உண்டா? உண்டானால் என்னென்ன கலைகளில் ஈடுபாடு உண்டு?" என்பதுபோல் உரையாடல் மாற்றப்பட்டது.

     கோ நகரங்களின் அரச தந்திர நாகரிகங்களும் உரையாடல் நுணுக்கங்களும் தெரியாவிட்டாலும் நாட்டுப்புறங்களிலும் காட்டுப்புறங்களிலும், உள்ளோருக்கு இயல்பாகவே வாய்க்கும் சில சந்தேகங்கள் எயினர்களுக்கும் இருந்தன. திடீரென்று தங்களுடைய கப்பல் கட்டும் தளத்தைப் பார்க்க வேண்டுமென்று விருந்தினர்கள் ஆர்வம் காட்டியதும், பார்த்து முடித்ததும் - அதைப்பற்றிய பேச்சை வளர்த்தாமல் - ஒரு விதமான அவசரத்தோடு கலையைப் பற்றிப் பேசத் தொடங்கியதும் - எயினர் தலைவனுக்குக் கவலையை அளித்தன. சாதுரியமாகத் தொடர்ந்து பேசிய பேச்சினால் சாரகுமாரனும், முடிநாகனும் அந்தக் கவலையை மறக்கச் செய்துவிட்டார்கள். எயினர் தலைவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவனுள்ளேயே தளரும்படி செய்ய அவர்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது.

     முடிவில் அவர்கள் இருவரும் அந்தத் தீவிலிருந்து விடைபெற முயன்றபோது. "ஏன் அவசரப்படுகிறீர்கள்? இன்னும் சில தினங்கள் தங்கியிருக்கலாமே?" என்று எயினர் தலைவன் உபசாரத்துக்காகக் கூறினான். அந்த உபசார வார்த்தைகளையே ஏணியாகப் பற்றி ஏறி நின்று கொண்டு எயினர் தலைவனின் சந்தேகத்தைக் கடந்து மீண்டான் இளையபாண்டியன். ஆயினும் சந்தேகத்தை முற்றிலும் கடந்துவிட்ட உறுதி அவனுக்கு வரவில்லை.

     "ஐயா! யாத்திரிகர்களாகிய நாங்கள் ஒரே இடத்தில் தங்கி நின்று என்ன பயன்? புதிய புதிய இடங்களையும், புதிய புதிய காட்சிகளையும், புதிய புதிய மனிதர்களையும் சந்திப்பதும், காண்பதுமே, எங்களுக்குப் பயன் தரும். ஆகவே தயைகூர்ந்து எங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். தங்களுடைய அன்புக்கும் ஆதரவிற்கும் பலகாலும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்" என்று தனக்கோ முடிநாகனுக்கோ அந்தத் தீவில் மேலும் தொடர்ந்து தங்கித் தெரிந்து கொள்ள எதுவுமில்லை என்பதுபோல் அசிரத்தையாகப் பேசிய பின்பே சாரகுமாரன் எயினர் தலைவனின் சந்தேகச் சிறையிலிருந்து மீள முடிந்தது.

     அறிவுக்கூர்மை மிக்கவர்களின் சந்தேகங்களையாவது சொற்களால் தெளிவு செய்துவிடலாம். 'அறியாமையும் பிடிவாதமும் உள்ள நாட்டுப்புறத்து மனிதர்களின் சந்தேகங்களைச் சொற்களாலோ, சிந்தனைத் தெளிவினாலோ மட்டுமே தீர்க்க முடியாது. சாதுரியம் மட்டுமே அப்படிப்பட்ட சந்தேகங்களைத் தீர்க்க முடியும்' என்பதைச் சாரகுமாரன் அந்த வேளையில் மிக நன்றாக உணர முடிந்தது. எயினர் தலைவன் தங்களுக்கு விடை கொடுத்து விட்டாலும் தங்களை வழியனுப்புவதிலும், தாங்கள் செல்ல வேண்டிய வேறு தீவுகளுக்கு எப்படி எப்படிப் போக வேண்டுமென்று வேறு சொல்லுவதிலும் அவன் அதிகமான சிரத்தை காண்பிக்க முன்வந்ததிலும் ஒரு சிறப்பான உள் நோக்கம் இருக்க வேண்டுமென்று தோன்றியது சாரகுமாரனுக்கு. அதை அவன் முடிநாகனிடம் கூறி விவாதிக்கவும் விரும்பவில்லை. அந்த உள்நோக்கத்தின் விளைவு விரைவில் தெரியுமென்றும் அவனுக்குத் தோன்றியது.

     தங்களுடைய மரக்கலத்துக்கு வந்து பயணத்தைத் தொடங்கிய பின்பும் இதைப்பற்றித் தனிமையில் கூட அவன் முடிநாகனிடம் எதுவும் கூறவில்லை. மரக்கலத்தைச் செலுத்தும் மீகாமனும் பிற ஊழியர்களும் முடிநாகனும் செல்ல வேண்டிய திசையைக் குறித்துத் தங்களுக்குள் உரையாடத் தொடங்கிய போதும் இளையபாண்டியன் அதில் கலந்து கொள்ளவில்லை. 'இன்ன இன்ன திசையில் இப்படி இப்படி மரக்கலத்தைச் செலுத்திக் கொண்டு சென்றால் நீங்கள் செல்ல வேண்டிய தீவுகளுக்கு ஏற்றபடி வழி அமையும்' என்று விடைபெறும் போதும் எயினர் தலைவன் கூறிய வழிகளை இப்போது முடிநாகன் பிற ஊழியர்களிடம் நம்பிக்கையோடு விவரிக்கத் தொடங்கியபோது கூட இளையபாண்டியன் அதில் தலையிடவில்லை.



கபாடபுரம் : கதைமுகம்  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/kapadapuram/kapadapuram20.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.