http://www.chennailibrary.com



22. மொழி காப்பாற்றியது

     கப்பலைச் சூழ்ந்து கொண்டவர்களோ இளையபாண்டியன் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகச் சோதனை செய்தனர். வலிய எயினனின் பெருந்தன்மையைப் புகழ்ந்து கூறிய இவர்களது சொற்களினால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. தாங்களிருவரும், எந்தவிதமான அரச தந்திரத்திலும் அக்கறையில்லாத வெறும் யாத்திரீகர்களே என்பதை இவர்கள் நிரூபிக்க முயன்றதிலும் அவர்கள் மனநிறைவு அடைந்துவிட்டதாகத் தெரியவில்லை. அரசியல் உறவுகளில் சந்தேகம் கொண்டவர்களுக்கே உரிய பேய்ப் பிடிவாதத்தோடு சாரகுமாரனிடம் உரையாடலைத் தொடங்கித் தொடர்ந்தார்கள் அவர்கள்.

     "எயினர் தீவிலேயே உங்களை வியக்கச் செய்த இடம் கலஞ்செய் நீர்க்களமாகத்தான் இருக்கும். சிறிதும் ஒளிவு மறைவின்றி அதனை உங்களுக்குச் சுற்றிக் காண்பித்ததற்காகத் தான் வலிய எயினரை நீங்கள் மனமாரப் புகழுகிறீர்கள்! பொதுவாக யாத்திரீகர்களுக்குத் தங்களுடைய பாதுகாப்புப் படைக் கோட்டங்களைச் சுற்றிக் காண்பிக்க யாரும் துணியமாட்டார்கள். வெள்ளை உள்ளமும், பரந்த நல்லெண்ணமும் உள்ள வலிய எயின மன்னரைப் போன்றவர்கள் சூதுவாது அறியாதவர்களாகையினால் யாருக்கும் எதையும் மறைப்பதில்லை" என்று கூறிவிட்டு உடனே சாரகுமாரனின் முகத்திலும் கண்களிலும் பிரதிபலிக்கும் உணர்ச்சிகளைத் தேடுபவன்போலக் கூர்ந்து நோக்கினான் வந்தவர்களில் ஒருவன்.

     "தீவு தீவாகச் சுற்றித் திரியும் எங்களை ஒத்தவர்களுக்கு எந்தப் புதிய பொருளைப் பார்த்தாலும் வியப்புத்தான் ஐயா! ஆனால் அந்த வியப்பும், விந்தையும், அடுத்த புதிய பொருளைப் பார்க்கிறவரைதான் எங்கள் மனத்திலே நிலைத்திருக்கும். ஒவ்வொரு மலராகத் தேடிப்பறந்து திரிந்து தேனுண்ணும் வண்டுகளைப் போல் அனுபவங்களிலே மகிழ்ச்சி கொள்ள அலைபவர்கள் நாங்கள்! சொல்லப்போனால் எயினர் தீவிலே நாத கம்பீரம் என்ற அழகிய அருவியும் ஆறும் எங்களைக் கவர்ந்த அளவு கூட கலஞ்செய் நீர்க்களமும், கப்பல் கட்டும் தொழில் நுணுக்கங்களும், எங்களைக் கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்" - என முகத்தில் எந்தவிதமான உணர்வுகளுமில்லாத ஒரு பாமரனைப் போல் இளையபாண்டியன் மறுமொழி கூறினான். அவ்வளவில் கப்பலை வழிமறித்தவர்களுக்குச் சந்தேகம் படிப்படியாகக் குறைந்திருக்க வேண்டும். சிறிது நேரம் வேறு ஏதேதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு விடை பெற்றுக் கொண்டு அவர்கள் போய்விட்டார்கள். போகும்போது சாரகுமாரனைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தவன் ஓர் எச்சரிக்கையும் செய்துவிட்டுப் போனான்.

     "உங்கள் யாத்திரையை இந்தக் கடற்பகுதியில் மிகவும் கவனத்தோடும், எச்சரிக்கையோடும் செய்ய வேண்டும். இங்கே இந்தத் தென்கடற் பகுதியில் கொடுமையான பழக்க வழக்கங்களையுடைய எத்தனை எத்தனையோ தீவுகள் இருக்கின்றன. யாத்திரை செய்பவர்களையும் அரசதந்திர நோக்கத்தோடு சுற்றுப்பயணம் செய்பவர்களையும் கூடத் தனித்தனியே வேறுபாடு கண்டு பிரித்துணரும் ஆற்றல் குறைந்தவர்களின் முன்னால் கூட நீங்கள் போய் நிற்க நேரிடலாம்". இந்த எச்சரிக்கையை அவன் எதற்காகச் செய்துவிட்டுப் போனான் என்பதை இளையபாண்டியனால் விரைந்து புரிந்து கொள்ள முடியவில்லையாயினும் இதில் ஏதோ உட்பொருள் இருப்பதாக உய்த்துணர மட்டும் முடிந்தது. துன்பமும் சோதனைகளும் வரும்போது மனித மனத்திற்கு இயல்பாகவே முன்னெச்சரிக்கையும் என்ன நேரப்போகிறது என்பதை உணரும் முனைப்பும் வருவதுண்டு. மழை பெய்யுமுன் இயல்பாகவே பூமியில் கிளரும் மண் வாசனையைப் போல் தற்செயலாக மனித இதயத்தில் நேரும் முன்னறிவிப்பு இது. கடலில் அவர்கள் கலத்தை வளைத்துக் கொண்டு தடுத்த கப்பல்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. விரைந்து நிகழ்ந்த ஆரவாரமும் அதைவிட விரைந்து நிகழ்ந்துவிட்ட தனிமையும் மாயங்கள் போல் தோன்றின.

     இளையபாண்டியன், அதுவரை மௌனமாகவும், இனி என்னென்ன நேருமோ என்ற திகைப்புடனும் தன்னருகில் நின்று கொண்டிருந்த முடிநாகனை நோக்கிக் கூறலானான்:

     "இந்தச் சோதனையில் தப்பிவிட்டோம். ஆனால் இதிலிருந்து தப்பிவிட்டதற்காக மகிழ்வதற்குக் கூட நேரமும், அமைதியும் இன்றி அடுத்த சோதனையை எதிர்பார்க்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம் நாம். சில காரியங்களில் வென்றுவிட்டதற்காகவோ, நிறைவு பெற்றுவிட்டதற்காகவோ, அந்த வெற்றியோ, நிறைவோ, நிகழ்ந்து முடிந்துவிட்டதாக நாம் நினைத்த மறுகணமே உடன் விரைந்து மகிழ்வதோ, பெருமிதப்படுவதோ கூட அரச தந்திரமாகாது. நம்முடைய மகிழ்ச்சியும் புறத்தார் அறிய வெளிப்படலாகாது. நம்முடைய துயரமும் புறத்தார் அறிய வெளிப்படலாகாது. சாதுரியத்தின் கனிந்த நிலை நமது உணர்ச்சிகளின் பலங்களையும், பலவீனங்களையும், பிறர் கணிக்கவும் முடியாமல் நம்மை அநுமானத்துக்கும் அப்பாற்பட்டவர்களாக வைத்துக் கொள்ளுவதுதான்."



கபாடபுரம் : கதைமுகம்  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/kapadapuram/kapadapuram22.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.