31. யாழ் நழுவியது ... தொடர்ச்சி ... அவனுடைய பார்வை போகிற இடங்களையெல்லாம் கவனித்துக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த பாட்டனாரோ, "எங்கே கவனிக்கிறாய் சாரகுமாரா? ஆசிரியருக்குச் செவி கொடுத்து நூலைக் கேள். பராக்குப் பார்க்காதே!" என்றார். இதில் அவருடைய சூழ்ச்சி ஏதோ இருப்பதாகத் தோன்றினாலும் அவரைக் கேட்க முடியாமல் தவித்தான் இளையபாண்டியன். அரங்கேற்றத்தைப் பற்றியும் அதில் அவள் பாட வேண்டியதைப் பற்றியும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் அவளிடம் தான் கூறியவற்றை எல்லாம் நினைவு கூர்ந்தான் சாரகுமாரன். அவளை அரங்கிற்குள்ளேயே வரவிடாமல் ஒதுங்கி நிற்கச் செய்துவிட்ட விதியை எண்ணி நோவதைத் தவிர அப்போது அவனால் வேறெதுவுமே செய்ய முடியவில்லை. அரங்கேற்றம் மகிழ்ச்சிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. "இலட்சணங்கள் பிறக்கிற அவசரம் சில சமயங்களில் இலட்சியங்களையே அழித்துவிடுகிறது" என்பதாக அன்று அவள் கூறியது நினைவு வந்தது அவனுக்கு. அரங்கேற்றம் முடிந்த பின்பாவது அவள் நிற்கிற இடத்தைத் தேடி ஓடவேண்டுமென்பது அவன் ஆவலாயிருந்தது. தான் ஓர் அரசகுமாரனாகப் பிறந்ததற்காக அதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அன்று வருத்தப்பட்டான் அவன். ஒருவாறு அரங்கேற்றம் நிறைகிற நிலை வந்தது. சிகண்டியாசிரியர் இலக்கண நூலின் இறுதி நூற்பாவை விளக்கிக் கொண்டிருந்தார். அரசவையைச் சேர்ந்த இசைப் புலவர்கள் அதற்கு மேற்கோள் பாடிக்காட்டத் தொடங்கினார்கள். பாடி முடிந்ததும், இளையபாண்டியன் நினைத்ததற்கு மாறாகச் சங்கப் புலவர்களும், அவையிலிருந்த அறிஞர் பெருமக்களும், அவனையும், அவனுடைய பாட்டனாரையும் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். பாட்டனார் அவன் கையை அன்பாகப் பற்றிக் கொண்டு நிற்கிற பாவனையில் அவன் எங்கும் நழுவ முடியாதபடி பிடித்துக் கொண்டு விட்டார். புலவர்களின் புகழுரைகள் அவனுடைய செவியை நிறைக்கத் தொடங்கின. "இளையபாண்டியருடைய குரலினிமைக்காகவே இப்படியோர் இசையிலக்கணம் தோன்றியது சாலப் பொருத்தமுடையதே" என்றார் ஒரு புலவர். "சிகண்டியாசிரியர் தருணமறிந்து இந்த இசையிலக்கண நூலை அரங்கேற்றியுள்ளார்" என்று புகழ்ந்தார் வேறோர் புலவர். யாருடைய வாயால் புகழக்கேட்டு மகிழவேண்டுமென்று அவன் ஆசைப்பட்டானோ அந்தப் புகழுரையைக் கேட்க முடியாமலிருந்தது. அவள் தன்னோடு வந்திருக்கும் பெற்றோர்களுடனும் பிற பாணர் கூட்டத்தினருடனும் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னராவது அவளைக் கண்டு இரண்டு வார்த்தைகள் பேசிவிட வேண்டுமென்று அவன் தவித்தான். ஆனால் முடியவில்லை. நீண்ட நேரத்துக்குப் பின் அந்த அவையிலிருந்து அவனும், அவனைச் சுற்றிப் பெரியபாண்டியர், சிகண்டியார், தந்தை அநாகுலன், முதலியோருமாக வெளியேறியபோது, செல்லுகிற வழியில் கண்ணுக்கினியாள் நின்ற பகுதி வெறுமையாயிருந்தது. அவைக்கு வெளியே எங்குமே யாருமே இல்லை. ஆனால் இதென்ன? அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் அவளுடைய யாழ் அல்லவா கேட்பாரற்று வீழ்ந்து கிடக்கிறது? இளையபாண்டியன் பதற்றத்தோடு தன்னைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து பிரிந்து விலகிச் சென்று அந்த யாழை எடுத்தான். அது சற்றே கீறி உடைந்திருந்தது. "யாருடைய யாழ் கீழே விழுந்தபோதெல்லாம் அவன் விரைந்து எடுத்தளித்திருந்தானோ அந்த யாழ் இப்போது கீழே விழுந்து உடைந்தேவிட்டது" என்ற உண்மை மிகவும் வேதனையளிப்பதாக இருந்தது. அது அவளுடைய யாழ்தான் என்பதில் சிறிதும் ஐயமே இல்லை. விரக்தியிலோ, கோபத்திலோ, அல்லது தான் பார்க்கவேண்டுமென்பதற்காகவோ அவள் அதை அப்படி அங்கே போட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று அவனால் அநுமானம் செய்ய முடிந்தது. இதை அநுமானம் செய்யும் போது பரிதாபத்துக்குரிய அந்த அரசகுமாரனின் கண்கள் கலங்கின. கைகள் நடுங்கின. நெஞ்சம் துடிதுடித்தது. நடுங்கும் கைகளால் அந்த யாழை எடுத்துச் சென்ற போது அவன் கால்கள் பின்னின. நடை தளர்ந்தது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|