http://www.chennailibrary.com





4. கடற்கரைப் புன்னைத் தோட்டம்

     இளையபாண்டியருடைய தேர் திடீரென்று அங்கு நின்றது எல்லோருக்கும் ஒரு புதிராகவே இருந்தது. முன்னால் சென்ற தேர்கள் வெகுதூரம் போய்விட்டன. பின்னால் வர வேண்டிய தேர்கள் வரமுடியாமல் இளையபாண்டியருடைய தேர், கோட்டத்தின் வாயிலிலேயே வழிமறித்து நின்று கொண்டது. நூலிழை கோத்தாற்போல் வரிசையாக இடைவெளி விடாமல் வீதியில் செல்ல வேண்டிய தேர் உலாவில் இதனால் இடைவெளி உண்டாகி அணிவகுப்புக் குலைந்தது.

     'அத்தனை அவசரம் என்னவாயிருக்கும்?' என்று எல்லாருடைய கண்களுக்கும் தேரிலிருந்து கீழிறங்கி இளையபாண்டியர் சென்ற திசையையே நோக்கின. அங்கே அவர்களுக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. தேர் உலாக்கோலத்தில் இளையபாண்டியர் மிக மிகக் கவர்ச்சி நிறைந்து தோன்றினார். சொந்த தேசத்தில் விளைந்த முத்துக்களும், இரத்தினங்களும் பதித்த கிரீடத்தினோடு சுருண்ட கருங்குஞ்சி பிடரியில் கற்றை கற்றையாய் அலையிட ஆண் சிங்கம் போல அவர் நடந்து சென்ற அழகைக் கண்டு மயங்காதவர்களில்லை. அவருடைய அழகிலே பெண்மையின் கனிவு இருந்தது என்றால் நடையிலே ஆண்மையின் கம்பீரம் இருந்தது. பெருமிதமும் இருந்தது. தேரிலிருந்து கீழிறங்கி நடந்து போய் அவர் செய்த காரியத்தைப் பார்த்த போது தோற்றத்தில் மயங்கியவர்களே மறுபடியும் அவருடைய தொண்டினால் மயங்கினார்கள்.

     கூட்டத்தில் இடியுண்டு நெருக்கப்பட்டதன் காரணமாக இளம் பாண்மகள் ஒருத்தியின் கைகளிலிருந்து கீழே நழுவி விழுந்துவிட்ட யாழை அவள் கைகளில் எடுத்துக் கொடுத்த இளையபாண்டியரின் அந்தக் கருணையைக் கண்டு வியந்தனர் யாவரும். 'அந்தப் பெண் யார்? இளையபாண்டியரின் கருணையையும், கண்ணோட்டத்தையும் அடைய அவள் கொடுத்து வைத்தவளாயிருக்க வேண்டும்! அவளுடைய பாக்கியமே பாக்கியம்' - என்றெல்லாம் கூட்டத்தினர் அந்தப் பாண் மகளைக் கண்டு வியந்ததுபோல் முடிநாகன் வியக்கவில்லை.

     மணிபுரத்திலிருந்து நகரணி மங்கல விழாவிற்காகக் கபாடபுரத்திற்கு வருகிற வழியில் இளையபாண்டியரோடு தேரில் இடம்பெற்ற பெண்தான் அவள். மனத்தில் ஒருவிதமான பயத்தோடு முன்னால் தேர்கள் செல்லும் வீதியைப் பார்த்தான் முடிநாகன். நல்ல வேளையாகப் பாட்டனாருடைய தேர் முன்னால் வெகுதூரம் போய்விட்டது. ஆனால் கோட்டத்தினுள்ளிருந்து வெளியே வரவேண்டிய மற்ற இரதங்கள் ஏன் பின் தங்கின என்ற சந்தேகம் முன்னால் போய்விட்ட அவருக்கு வரக்கூடாதே என்பது முடிநாகனின் பயமாயிருந்தது.

     இளையபாண்டியரைக் காண்பதிலுள்ள ஆவல் அடங்காமல் கோநகரின் விழா நாளில் அவரைக் காணமுடிந்த ஒவ்வோரிடத்திற்கும் அந்த பாண்மகள் வருவதைக் கவனித்திருந்தான் முடிநாகன். பகலில் நகரணி மங்கலத்துக்காக அரசவை கூடியிருந்த போதும் அங்கு இதே பெண்ணைப் பார்த்ததாக ஞாபகமிருந்தது அவனுக்கு. இப்போதும் இளையபாண்டியர் கீழே நழுவி விழுந்திருந்த யாழை அவள் கைகளில் எடுத்தளித்துவிட்டு ஏதோ கூறவே முடிநாகன் அதைச் செவிகொடுத்துக் கேட்கலானான்.

     "மறுபடியும் உன் யாழைக் கீழே தவற விட்டு விட்டாயே பெண்ணே? அதற்குள் நான் கூறியதை மறந்து விட்டாயா? 'கவிஞனின் எழுத்தாணியும், பாணனின் யாழும் வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவர்களிடமிருந்து கீழே நழுவி விடக்கூடாது' என்று நான் கூறியது இனிமேலாவது உனக்கு நினைவிருக்கும் அல்லவா?"

     "அவர்களுடைய எழுத்தாணியும், யாழும் கீழே விழும் போதெல்லாம் - அதை நினைவூட்டி மறுபடியும் எடுத்தளிக்க உங்களைப் போன்ற 'முத்துவணிகர்கள்' இருக்கும்போது கவலை எதற்கு?" - என்று குனிந்த தலை நிமிராமல் அவள் கூறிய பதில் வார்த்தைகளில் 'முத்து வணிகர்களிருக்கும் போது' - என்ற இடத்தில் மட்டும் குரலை நிறுத்தி வார்த்தைகளை அழுத்தி 'நீங்கள் ஒரு முத்து வணிகர்' - என்பதாக என்னிடம் பொய் சொல்லியிருக்கிறீர்கள், ஞாபகமிருக்கட்டும் - என்பது போல் பேசினாள்.

     "அதில் சந்தேகமென்ன? இந்தப் பாண்டி நாட்டுக் கபாடத்தின் புகழ்பெற்ற முத்துக்களுக்கெல்லாம் சொந்தக்காரர்கள் நாங்களே அல்லவா?" - என்று அவள் கேள்வியிலே குத்திக் காட்டப்பட்ட குறிப்புக்கும் சேர்த்தே மறுமொழி கூறினான் இளையபாண்டியன். அவளும் விடவில்லை. மேலும் அவனை வம்புக்கிழுத்தாள்.



கபாடபுரம் : கதைமுகம்  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/kapadapuram/kapadapuram4.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.