5. தென்பழந்தீவுக் கடற்கொலைஞர் நகரணி மங்கலத்தில் பல்வேறு விதமான ஆரவார நிகழ்ச்சிகளில் எல்லாம் ஓடியாடிக் களைத்த மக்கள் கூடாரங்களிலும் அறக்கோட்டங்களிலும் தெருத் திண்ணைகளிலும் மேடைகளிலுமாக முடங்கிவிட்டனர். சாமக் கோழி கூவுகிற நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. தொலைவிலே கடல் அலைகளின் ஓசை கரையோடு மோதும் நேரத்திலே பெரிதாகியும், மற்ற வேளைகளில் அடங்கியும் ஒலித்துக் கொண்டிருந்தது. பின்னிரவின் இதமான மென் காற்றுக் குளிரையும் மென்மையையும் இலேசாகப் பூசிக் கொண்டு உலா வந்தது. புட்பகத்திலிருந்தும், சாவகத்திலிருந்தும், தருவித்துப் பயிர் செய்து வளர்க்கப்பட்ட முகவர்ணம், முகவசீகரம் ஆகிய சாதி எலுமிச்சை மரங்களின் பூக்கள் கம்மென்று மணம் பரப்பி அந்த மகேந்திர மலைக் குன்றுகளைச் சொப்பன புரியாக்கிக் கொண்டிருந்தன. அடி வயிற்றின் உள் மண்ணில் இரத்தினக் கற்களை விளைவிக்கும் அதே நிலவளம் மேலே பொற்கனிகளாக மின்னும் எலுமிச்சைப் பழங்களைக் கொத்துக் கொத்தாகக் கனிய வைத்திருந்தன. பூக்களின் வாசனையோடு பழங்களின் வாசனையும் விரவி வந்து அந்தப் பகுதியில் நடந்து செல்வதையே போதையுண்டாக்கும் ஒரு காரியமாகச் செய்து கொண்டிருந்தன. அங்கங்கே இரத்தினக் கற்களை எடுப்பதற்காக அகழ்ந்து தோண்டப்பட்டிருந்த பெருங்குழிகளில் நீர் தேங்கியிருந்து கண்ணாடியாய் மின்னியது. குழிகளின் அருகே குவிக்கப்பட்டிருந்த கற்களில் பட்டைத் திட்டப்பட்டும், இரத்தினமாகியும் பெருமை பெறாது கழிக்கப்பட்ட சாதாரணக் கற்கள் கூடத் தங்களிடமிருந்த ஏதோ ஒரு நிறச் சிறப்பாலும் வடிவின் தனித் தன்மையாலும் நிலவொளியில் பிரகாசமாகத் தோன்றின. மகேந்திர மலைக் குன்றுகளில் நீர்வளம் அதிகம். ஈரப்பாங்கான அந்த மண்ணில் கைகளால் அகழ்ந்து சிறுகுழி தோண்டினால் கூட நீர் பெருகிவிடும். கிணறுகள் போல் வெட்டப்பட்ட குழிகளில் விரைந்து ஊறும் நீரை உடனுக்குடன் மேலே இறைத்துக் கொட்டினால்தான் தோண்டுகிறவர்களுக்கும் கற்களை வாரிப் பெரிது சிறிதாகச் சலித்து எடுக்கிறவர்களுக்கும் வசதியாயிருக்கும். அவ்வாறு நீர் இறைத்துக் கொட்டுவதற்காக மிடா மிடாவாய்க் கவிழ்த்துக் கிடந்த செப்புச் சால்கள் அங்கங்கே தோன்றின. கீழே கோ நகரில் விழா நிகழும் காலமாகையினால் இரத்தினாகரங்கள் எனப்படும் இரத்தினச் சுரங்கங்கள் இருந்த மகேந்திர மலைக் குன்றுகள் வெறிச்சோடியிருந்தன. உடம்பில் மண்ணும் சேறும் படக் குழிகளில் இறங்கி வேலை செய்யும் பணியாளர்களின் கூட்டமும் அவரவர்களுக்குக் கட்டளையிடும் இரத்தின வணிகர்களாகிய சீமான்களின் கூட்டமுமின்றி மகேந்திர மலையே வறுமையாகிப் போய்விட்டது போலிருந்தது. அந்த இரவின் ஒடுக்கத்தில் குன்றுப் பகுதிகளில் எங்கோ நரிகள் ஊளையிடும் ஓசையையும் கீழே கடலலையோசையையும் தவிர வேறு ஆரவாரங்கள் இல்லை. சிறிது நேரம் மகேந்திரமலைக் குன்றுகளில் சுற்றிவிட்டு அப்புறம் கடற்கரைப் புன்னைமரத் தோட்டத்தின் பக்கமாகச் சென்று அங்குத் தங்கியிருக்கும் பாணர்களும் விறலியர்களும், ஒருவிதமான குறைவுமின்றித் தங்கியிருக்கிறார்களா என்பதைக் கவனித்துவிட்டு அப்புறம் கோட்டைக்குள் போய் அகநகரில் அரண்மனையை அடையலாம் என்று புறப்படும்போது எண்ணியிருந்தான் இளையபாண்டியன். ஆனால், மகேந்திர மலைக் குன்றுகளில் சுற்றிவிட்டுத் திரும்பும் போதே அதிக நேரமாகிவிட்டது. திரும்பி வரும் போது தற்செயலாக முடிநாகனிடம் வினாவினான் சாரகுமாரன்: "கோ நகரிலோ நமது கடற்பகுதிகளிலோ குறும்பர்களின் தொல்லைகள் இப்போதும் இருக்கின்றனவா? அல்லது அவர்கள் அடங்கி வழிக்கு வந்து விட்டார்களா?" "முழுமையாக அடங்கி விட்டார்கள் என்று சொல்ல முடியாது. அவ்வப்போது கடற் குறும்பர்களின் தொல்லைகள் ஏற்படத்தான் செய்கின்றன. கடற்பகுதிகளைத் தவிரக் கோ நகரிலும் குறும்பர்களின் இரகசியக் குழுக்கள் உண்டு. இந்தக் குழுக்களாலும் அவ்வப்போது கலகங்கள் வரும்." "பாட்டனாரும், என் தந்தையும் மனம் வைத்தால் இவர்களை ஒரு நொடியில் அழித்தொழித்து விடலாம். ஏன் கோ நகருக்குள்ளேயே இவர்களைக் கலகக் குழுக்களாகவும், கொள்ளையிடுவோர்களாகவும் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களென்று தெரியவில்லை..." அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|