http://www.chennailibrary.com





7. அவுணர் வீதி முரச மேடை

     கருமசிரத்தையோடு எந்தப் பொருளையோ பொதி பொதியாகச் சுமந்தெடுத்துப் போவதுபோல் அந்த முரட்டு அவுணர்கள் சுமந்து சென்ற பொதிகள் என்னவாயிருக்கும் என்று இளையபாண்டியனால் அநுமானிக்கக்கூட முடியவில்லை. அந்த இரவில் புறவீதி வழியே வானளாவி நிற்கும் கபாடங்களை நோக்கி அவர்கள் நடந்து சென்ற காட்சி பெருமலையை எதிர்த்துச் சிறு கருங்குன்றுகள் விரைவாக உருண்டு செல்வது போலிருந்தது.

     "எதைச் சுமந்து கொண்டு இப்படி கபாடங்களை நோக்கிப் போகிறார்கள் இவர்கள்? அடைத்துவிட்ட கபாடங்களை இவர்களுக்காக இனி யார் திறக்கப் போகிறார்கள்? உன்னால் ஏதாவது அநுமானம் செய்ய முடிகிறதா?" என்று முடிநாகனைக் கேட்டான் இளையபாண்டியன். உடனே பதில் கூற முடியாமல் சில விநாடிகள் சிந்தனையோடு தயங்கிய பின் "முன்பும் இப்படி நடந்திருக்கிறது. ஒரு வேளை இன்றும் அப்படி ஒரு முயற்சி செய்கிறார்களோ என்னவோ? எதையும் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும். என் அநுமானம் சரியாகவும் இருக்கலாம். முற்றிலும் பிழையாகவும் போய்விடலாம்..." என்றான் முடிநாகன்.

     "எந்த அநுமானம்?"

     "தயை செய்து சில விநாடிகள் பொறுத்திருங்கள் இளையபாண்டியரே! நேருக்கு நேர் யாவற்றையும் பார்த்து விடலாம்."

     "ஆவலை அடக்க முடியவில்லை! ஆத்திரமும் வருகிறது..."

     "ஆவல் காரியத்தைக் கெடுத்துவிடும்! ஆத்திரம் இப்போது இந்த இடத்தில் பயன்படாது."

     "இந்த தடியர்களுக்கு இரவு வேளையில் கூட உறக்கம், களைப்பு, சோர்வு எதுவுமே கிடையாதா?"

     "அதுதான் திருடனும், காமுகனும், மற்றவர்கள் உறங்கும் நேரத்தில் கூட உறங்குவதில்லை என்று காலையில் உங்கள் பாட்டனார் அழகாகச் சொன்னாரே!"

     "அவர்களைக் கண்காணிக்க வேண்டிய நம்மையுமல்லவா உறக்கமிழக்கச் செய்கிறார்கள்?" என்று இளையபாண்டியர் சலிப்பும், கோபமுமாகப் பதிலுரைத்த போது, கபாடத்தின் பக்கமே வைத்த கண் மாறாமல் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த முடிநாகன், "இப்போது பாருங்கள்! அங்கே என்ன நடக்கிறது தெரிகிறதா?" - என்று சுட்டிக் காட்டினான். கொண்டு சென்ற பொதிகளிலிருந்து கபாடத்துக்கு முன்னால் வெண் மேகம் போல் எதையோ கொட்டிக் குவித்தார்கள் அந்த அவுணர்கள்.

     "என்ன அது?"

     "பஞ்சு இழைகள்."

     "பஞ்சைக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் இங்கே?"

     "என்ன செய்கிறார்கள் என்றுதான் பாருங்களேன்?"

     முடிநாகனோடு இளையபாண்டியனும் அவர்களுடைய விசித்திரச் செயலைக் கூர்ந்து கவனிக்கலானான். பொதிகளை எல்லாம் அவிழ்த்து உதறிய பின் கபாடங்களில் கீழிருந்து வரிசை வரிசையாகக் குமிழ்களில் இணைந்து தொங்கிய வெண்கல மணிகளைப் பக்கத்துக்கு இருவர் வீதம் நிமிர்த்திப் பிடித்து உள்புறமிருந்த நாக்குகளையும் மணிகளின் உடல்களையும் நடுவே பஞ்சு இட்டுத் திணித்து ஓசையெழாதபடி செய்தனர் அவர்கள். நாக்குகள் அடித்துக் கொண்டு மணியோசை எழுப்பா வண்ணம் உள்ளே பஞ்சு இட்டுத் திணித்த பின் மணிகள் எவ்வளவு ஆடினாலும் ஒலி எழாது. ஒலி எழாவிட்டால் கதவுகளின் குமிழ்களைப் பற்றிப் பயமின்றி மேலே ஏறி முத்துக்களையோ இரத்தினங்களையோ பெயர்க்கலாம். மிகவும் தந்திரமாக இந்த ஏற்பாட்டைச் செய்யலாயினர் அவுணர்கள்.

     இதைக் கண்டு பரபரப்பும் ஆத்திரமும் அடைந்த இளையபாண்டியன், "இதென்ன முடிநாகா! நாம் ஏன் இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும்? இரண்டு கதவுகளிலும் முதல் வரிசை மணிகளை முழுவதும் பஞ்சிட்டு அடைத்து ஊமையாக்கிவிட்டார்களே? இன்னும் பத்து வரிசையும் இப்படிச் செய்துவிட்டால் சுலபமாகக் கதவில் ஏறி முத்துக்களைப் பெயர்க்கலாமே? இருபது வரிசை பஞ்சு திணித்துவிட்டால் மேலேயிருக்கும் இரத்தினங்களைக்கூடப் பெயர்த்து விடலாம்! இந்த நிலையில் கதவுகளின் அருகேயுள்ள காவல் மாடங்களிலிருக்கும் வீரர்களையாவது நாம் கூக்குரலிட்டு எழுப்பலாமே?" என்று பதறினான். முடிநாகனோ மிகவும் நிதானமாக இளையபாண்டியனுக்கு மறுமொழி கூறினான்.

     "இப்படிப் பலமுறை செய்து தோற்றும் இவர்கள் இதில் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்பதுதான் எனக்கு வியப்பை அளிக்கிறது. கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடித்து விடலாமென்பது போன்ற முயற்சி இது! இதில் அவர்கள் காரியம் ஒருபோதும் நிறைவேறாது" என்ற முடிநாகனின் வார்த்தைகளைக் கேட்டு இளையபாண்டியனுக்கு கோபமே வந்துவிட்டது.



கபாடபுரம் : கதைமுகம்  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/kapadapuram/kapadapuram7.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.