இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
15 வருடம்
ரூ.1180/-
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது

  புதிய வெளியீடு!11

     கமலக்கண்ணன் அமைச்சராகி விட்டார். நிதி, அறநிலையம் ஆகிய துறைகள் அவர் பொறுப்பில் விடபட்டன. காபினட் வரிசையில் அவர் இரண்டாவதாக வந்துவிட்டார். பட்டியல் வெளியான அன்று வெறும் பெயர் வரிசையில் தான் அவர் நாலாவதாக இருந்தார். பின்பு அவருக்கு நிதியினால் இரண்டாவது இடம் கிடைத்தது. கமலக்கண்ணனே ஆசைப்பட்ட 'இண்ட்ஸ்ட்ரீஸ் அண்ட் லேபர்' அவருக்குக் கிடைக்கவில்லையானாலும் அதைவிட முக்கியமான 'நிதி' கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைந்திருந்தார் அவர். 'நிதியும் தெய்வங்களும் உங்கள் பொறுப்பில் விடப்பட்டிருக்கிறார்கள்' என்று ஒரு நண்பர் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகப் பாராட்டினார். கமலக்கண்ணனின் வழக்கமான முறைகளை இந்த மந்திரி பதவி ஓரளவு மாற்றியது. அவருடைய தொழில் நிறுவனங்களைத் தவிர மந்திரி பதவி வேலைகளை வேறு அவர் கவனிக்க வேண்டியிருந்தது. காலையில் மிகமிகத் தாமதமாகவும் சோம்பேறித்தனமாகவும் எட்டரை மணி, ஒன்பதரை மணிக்குப் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறவர் கண்டிப்பாக இப்போது முன்கூட்டியே எழுந்திருக்க வேண்டியிருந்தது. காலை ஏழு மணியிலிருந்தே பலவிதமானவர்கள் பார்க்க வரத் தொடங்கினார்கள். அவருடைய பழக்க வழக்கங்கள் அவரை 'வைகறைத் துயிலெழ' விடுவதாயில்லை. அவருடைய பங்களா முகப்பில் புதிதாக போலீஸ் 'செண்ட்ரி' கூடாரம் ஒன்று முளைத்தது. வராண்டாவில் விடிந்ததும் பத்துப் பேராவது காத்திருக்கும் கூட்டம் தினசரி இருந்தது. கம்பெனி வேலைகளை வேறு பொறுப்பான ஆட்கள் கைக்கு மாற்றினார். தாம் டைரக்டராகவும், பார்ட்னராகவும் இருந்த தொழில் நிறுவனங்களை மனைவி பேருக்கும், தாயின் பேருக்கும் வேறு நம்பிக்கையான உறவினர் பேருக்குமாக மாற்றினார். பாராட்டுக் கூட்டங்கள் விருந்துகள் ஓய்வதற்கே இரண்டு மாதங்கள் ஆகும் போல் தோன்றியது.

     மந்திரி பதவியை ஏற்ற தினத்தன்று இரவில் அவருக்கு மிகவும் வேண்டிய தொழிலதிபர்கள் யாவரும் சேர்ந்து ஒரு விருந்து கொடுத்தனர். அந்த விருந்துக்கு அவருடைய நெருங்கிய நண்பர்களும், தொழிலதிபர்களும் ஆகிய குமரகிரி டெக்ஸ்டைல்ஸ் குப்புசாமி நாயுடு, அம்பாள் ஆட்டோ மொபைல்ஸ் கன்னையா செட்டியார், கொச்சின் சாமில்ஸ் குமாரசாமி ஐயர், குபேராபேங் சேர்மன் கோபால் செட்டியார் எல்லாரும் வந்திருந்தார்கள். வழக்கமாகவே நெருங்கிய நண்பர்களாகிய அவர்கள் இப்போது தான் புதிதாக மதிக்கத் தொடங்கியவர்களைப் போலக் கமலக்கண்ணனை மதிக்கத் தொடங்கினர். கமலக்கண்ணனுக்குத் திடீரென்று அது செயற்கையாகத் தோன்றியது. இப்படி மரியாதையையும், விருந்தையும், பாராட்டையும் எதிர்கொள்கிற வேளைகளில் எல்லாம்-எருக்கம்பூ மாலையுடன் காந்திராமன் தன் முன் நின்ற அந்த முதல் அவமானம் ஒரு விநாடி அவர் மனத்தில் நினைவு வரத் தவறுவதில்லை.

     அவரிடமே நாலைந்து கார்கள் இருந்தாலும், தேசியக் கொடி பறக்கும் கப்பல் போல் பெரிய வெளி நாட்டுக் கார் - போர்டிகோவில் அரசாங்க சின்னமாக வந்து நின்றது. அதில்தான் அவர் தினசரி செக்ரடேரியட்டுக்குப் போய் வந்தார்.

     நிறையப் பிரசங்கங்களுக்கும், தலைமை வகிக்கவும் போய் வர வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததனால் தமிழ்ப்பண்டிதர் வெண்ணெய்க்கண்ணனாரின் உதவி அதிகமாகத் தேவைப்பட்டது. எந்தக் கூட்டத்திற்காக யார் வந்து கேட்டாலும் மறுக்காமல் ஒப்புக்கொண்டு ஒரு பொதுப் பிரமுகராக உயர ஆசையிருந்தது அவருக்கு. தம்முடைய பெர்ஸனல் செகரெட்டரியை ஒரு நாள் தனியே அறைக்குள் அழைத்துச் சென்று கூச்சமில்லாமல் கீழ்வரும் அறிவுரைகளைக் கூறினார் கமலக்கண்ணன்.

     "எந்தக் கூட்டத்துக்குக் கூப்பிட வந்தாங்கன்னாலும் 'வால் போஸ்டர்' போடுவாங்களான்னு தெரிஞ்சுக்குங்க. 'வால் போஸ்டர் போட வசதி இல்லேன்'னாங்கன்னா 'வால் போஸ்டர் கண்டிப்பாப் போடணும், அப்பத்தான் மந்திரி வர்ரத்துக்கு ஒரு கௌரவமா இருக்கும்'னு வற்புறுத்திச் சொல்லிப்பிடணும். எந்தக் கூட்டம்னாலும் ஐயா தலைமை தாங்கத்தான் ஒத்துக்குவார்னு சொல்லிப்பாருங்க. இல்லாட்டி முக்கியமான ஏதாவது ஒண்ணைச் செய்யற மாதிரி 'ப்ரோகிராம்' மட்டும் ஒத்துக்குங்க. சும்மா 'பட்டாணிக் கடலை'க் கூட்டம்லாம் வேண்டவே வேண்டாம். நாம இப்ப வழக்கப்படி-பழைய ஜஸ்டிஸ் கட்சி சம்பந்தமான ஆட்களும் இங்கே தேடி வருவாங்க-அவங்களையும் முகஞ் சுளிக்காமே திருப்திப்படுத்தி அனுப்பணும்.'

     அந்தரங்கக் காரியதரிசி பெருமாள் கோவில் மாடு மாதிரி தலையை ஆட்டி வைத்தார். தினசரி செக்ரடேரியட் போவதும் பைல் பார்ப்பதும், செகரட்டரி, டெபுடி செகரட்டரிகளை ஆளுவதும் பெருமையாகத்தான் இருந்தன. அந்தப் பெருமைக்கும், பதவியின் புகழுக்கும் இடையே அவர் அஞ்சி நடுங்க வேண்டிய பலவீனங்களும் இருந்தன.

     பதவி ஏற்ற மறு மாதமே புதிய பட்ஜெட்டை அவர் தயாரித்தளிக்க வேண்டியிருந்தது. திறப்பு விழா, தொடக்கவுரை, தலைமையுரை முதலியவற்றுக்காக அலைந்து திரிவதைக் குறைத்துக் கொண்டு பட்ஜெட்டுக்காக அவர் காரியதரிசிகளுடனும் பொருளாதார ஆலோசகர்களுடனும் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்த சமயத்தில்-செக்ரட்டேரியட்டில் இருந்து களைப்பாகவும் அலுப்பாகவும் வீடு திரும்பிய மாலை வேளை ஒன்றிலே முற்றிலும் எதிர்பாராத மூலையிலிருந்து ஒரு பயமுறுத்தல் அவரை நெருங்கியது.

     வரவேற்பு அறையிலே உட்கார்ந்து மாலைத் தினசரி ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார் அவர். வேர்க்க-விறு விறுக்க கலைச்செழியன் எங்கிருந்தோ வந்து சேர்ந்தான். அவன் கையில் ஏதோ இரண்டாக மடித்த பத்திரிகை ஒன்றிருந்தது. முகத்தில் பதற்றமும் பரபரப்பும் தெரிந்தன.

     "என்ன சமாசாரம்? நான் ரொம்ப பிஸி. 'பட்ஜெட்' வேலைகள் ஏராளமா இருக்கு... நீ இன்னொரு நாள் வாயேன்..." என்று அவனைத் தட்டிக் கழிக்க முயன்றார் அவர். இப்போதெல்லாம் அவனைப் பார்த்தாலே எரிச்சலாக இருந்தது அவருக்கு. அவனோ பதறினான். அவன் குரல் கூசிக் கூசி வந்தது.

     "தலை போற காரியம் சார்! இப்பவே கவனிக்காமே விட்டோம்னா ஊர் சிரிச்சிப்பிடும்" என்று கையிலிருந்த பத்திரிகையைக் காண்பித்து ஏதோ கூறினான் அவன். அவரோ கோபமாக இரைந்தார்.

     "அப்படி என்ன தலை போற காரியம்! சொல்லித் தொலையேன்..."

     "உள்ளே வாங்க சார்! இங்கே வச்சு-இப்படி இரைஞ்சு பேசற காரியமில்லே-" என்று வரவேற்பு அறையை ஒட்டி அடுத்தாற் போலிருந்த உட்பகுதியைக் காண்பித்து அவரைக் கூப்பிட்டான் அவன். அவருக்கு அவன் மேல் கோபம் அதிகமாகியது.

     "சும்மா தொந்தரவு பண்ணாதே! உனக்கு இப்ப என் நெலைமை தெரியும். முன்னே மாதிரி நேரமில்லே. பதவி, பொறுப்பு எல்லாம் இருக்கு! ஏதாவது செலவுக்கு வேணும்னா வாங்கிட்டுப் போ... நேரமில்லே" -

     இப்போது அவனும் தன் பேச்சில் முறுக்கை ஏற்றினான். ஆத்திரமாகவே அவருக்குப் பதில் வந்தது.

     "சார்! உங்க நன்மைக்காகத்தான் இதை இப்பவே நினைவுபடுத்த வந்தேன். வேணுமானால் கவனிச்சி ஏதாவது செய்வோம். இல்லேன்னா அவன் பாடு உங்க பாடு... பேர் நாற வேணாம்னு பார்க்கிறேன். அப்புறம் உங்க இஷ்டம்."

     "அவன் பாடுன்னா...எவன் பாடு...?"

     "அதுதான் முழுக்க வந்து கேட்க மாட்டேன்கிறீங்களே?"

     வேண்டா வெறுப்பாக அவனோடு உள்ளே எழுந்து சென்றார் அவர். 'உண்மை ஊழியன்' என்ற அந்தப் பத்திரிகையின் முதல் பக்கத்திலே கட்டம் கட்டிய ஓர் அறிவிப்பைப் பிரித்து அவரிடம் காட்டினான் கலைச்செழியன். எடுத்த எடுப்பிலேயே அது ஒரு மஞ்சள் பத்திரிகை என்பதும் 'பிளாக்-மெயில்' செய்வதையே தொழிலாகக் கொண்டது என்பதும் கமலக்கண்ணனுக்குப் புரிந்துவிட்டது. அப்படிப் புரிந்ததனால் விளைந்த கோபாத்தோடும் அருவருப்போடுன் அந்தக் கட்டத்திற்குள் இருந்த அறிவிப்பை ஏறிட்டுப் பார்த்தார் அவர். மீண்டும் இரண்டாவது முறையாகக் கசப்போடு சென்றது அவருடைய பார்வை.

     நடிகை மாயாதேவிக்கும்
     பிரபல தொழிலதிபருக்கும் தொடர்பு


     சுவையான விவரங்கள் அடுத்த
     'உண்மை ஊழியனில்' பாருங்கள்.

     என்று அந்தப் பக்கத்தில் கட்டம் கட்டிய இடத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

     "காலிப்பயல்கள்! என்னைப் பயமுறுத்திப் பணம் பறிக்கலாம் என்று எண்ணிக் கொண்டார்களா என்ன? இப்போதே மானநஷ்ட வழக்குப் போட வக்கீலைக் கூப்பிடுகிறேன் பார்!" என்று சீறினார் கமலக்கண்ணன்.

     "சார்! பதறாதீங்க... அதெல்லாம் ஒண்ணும் பலிக்காது. இப்பவே அப்படி எல்லாம் மானநஷ்ட வழக்குப் போட முடியாது"

     "ஏன்? அதைப்பத்தி உனக்கென்ன தெரியும்?"

     "'பிரபல தொழிலதிபருக்கும்'னு மட்டும் தானே போட்டிருக்கு? அதை வச்சு நீங்களே எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லேன்னு எப்படி வழக்குப் போட முடியும்ன்னேன்? இதெல்லாம் காதோட காது வச்சாப்பில கமுக்கமா முடிக்கணும் சார்... வழக்கு-கிழக்குன்னு போய் மாட்டிக்கப்படாது."

     "'பிரபல தொழிலதிபருக்கும்'னு போட்டிருக்கிறது என்னைக் குறிக்காதில்லே...? பின்னே ஏன் என்கிட்டக் கொண்டாந்து காமிக்கிறே?"

     "அப்படியில்லே சார், உங்களைத் தான் எழுதப்போறானின்னு எனக்குத் தெரியும் சார்! ஆனாலும் சட்டப்படி இந்த அறிவிப்பை வச்சு ஒண்ணும் அவன் மேலே நீங்க கேஸ் போட முடியாதுன்னேன்..."

     "அதெப்படி? அவன் 'எவன்'னு ஒரு வார்த்தை சொல்லு...? இப்பவே கமிஷனருக்கு ஃபோன் பண்ணி உள்ளே தள்ளிப் புடறேன். நீயா என்னைப் பத்தித்தான் அவன் எழுதப் போறான்னு கற்பனை பண்ணிக்கிட்டு வந்தியா? போய் வேற வேலையைப் பாரு" என்று கோபமாக இரைந்தார் கமலக்கண்ணன். கலைச்செழியன் அயர்ந்து விடவில்லை. சிறிது நேரம் மௌனமாக எங்கோ பராக்குப் பார்ப்பது போல் பார்த்து விட்டு, மெல்ல மறுபடி ஆரம்பித்தான்.

     "சேத்துல கல்லை விட்டெறிஞ்சா நம்ம முகத்திலே தான் தெறிக்கும் சார்! பதறப்பிடாது. இந்தத் தகவல் தெரிஞ்சதும் நான் நேரே நம்ம 'தினக்குரல்' ஆபிஸூக்குப் போயி பப்ளிஸிடி பிரகாசம் அண்ணன் கிட்டக் கலந்து பேசினேன். அவரு உங்க பேப்பரிலே இருக்கறதுனாலே இந்தச் சேதியை உங்ககிட்டத் தானே வந்து சொல்லக் கூசினாரு. அது தான் நானே வந்தேன். இதிலே எனக்கொண்ணுமில்லே பார்க்கப்போனா இந்த மாதிரி விசயத்திலே உங்களுக்கு இல்லாத அக்கறை எனக்கு வேண்டியதில்லே... ஆனா உங்ககிட்டப் பழகிட்ட தோஷம்...மனசு கேக்கலே..."

     -கலைச்செழியனின் இந்த அநுதாபம் தோய்ந்த வார்த்தைகள் கமலக்கண்ணனைச் சிறிதளவு மனம் இளகச் செய்திருக்க வேண்டும். அவர் கடுமையாகப் பதில் கூறுவதை விடுத்துச் சற்றே சிந்தனையிலாழ்ந்தாற் போலிருந்தார். அவர் நிலையை நன்கு புரிந்துகொண்ட கலைச்செழியன் மீண்டும் தொடர்ந்தான்.

     "என்ன காரணமோ தெரியலீங்க... ஐயாகிட்ட முதன்முதலாப் பழகினதிலிருந்து எனக்கு மனசு ஒட்டுதலாயிடிச்சு. ஐயா பேருக்கு ஒரு களங்கம் வர்ரதை என்னாலே சகிச்சுக்க முடியலீங்க! அதுவும் இப்ப இருக்கிற ஒரு நெலையிலே இப்படி அவதூறே வரக் கூடாதுங்க... களையெடுக்கிற மாதிரி முதல்லேயே இதுகளைத் தீர்த்துக் கட்டிப்புடணும்..."

     "இப்ப என்னதான் செய்யணுங்கிறே நீ?"

     "ஏதாவது கொடுத்து ஒழியுங்க... இவனுகளுக்கு இது ஒரு பிழைப்பு..."

     "யாரிட்டக் கொடுக்கணும்? எவ்வளவு கொடுக்கணும்..."

     "ஏதோ... கொடுங்க... உங்களுக்குத் தெரியாதுங்களா?"

     "அந்த 'உண்மை ஊழியனை' இங்கேதான் கூட்டிக்கிட்டு வாயேன் நைசா உக்கார வச்சுப் பேசிக்கிட்டே போலீசுக்கு ஃபோன் பண்ணலாம்..." என்றார் கமலக்கண்ணன்.

     "சே!சே! அது கூடாது! அவன் எமகாதகன். கூப்பிட்டால் வரமாட்டான். நமக்குத் தான் வீண்வம்பு. எதையாவது தாறுமாறா எழுதி நாலு பேர் அதை வாங்கியும் பார்த்தாச்சுன்னா அப்புறம் தகவல் காட்டுத்தீப் போலப் பரவி வச்சுடுங்க..."

     "இந்தக் காலிப்பயலோட பேப்பர் ஆபீஸ் எங்கே தானிருக்கு...?"

     "இதுக்கெல்லாம் ஆபீஸ் ஏதுங்க? எங்கேயாவது கோடம்பாக்கத்திலே ஒரு அட்ரஸ் போட்டு இருக்கும்; அங்கே போனா ஆள் இருக்க மாட்டாங்க... உங்களைப் போலொத்தவங்க அங்கே தேடிட்டுப் போறதும் நல்லா இருக்காது..."

     "பின்ன என்னதான் செய்யிறது?"

     "நான் பார்த்து முடிக்கிறேங்க..."

     "எதை?"

     "ஆக வேண்டியதை...?"

     "என்ன ஆக வேண்டியதை...?"

     "ஒண்ணும் வராமச் செய்திடறேன். எதைக் கொடுக்கணுமோ எங்கிட்டக் கொடுத்தனுப்புங்க... என்னைப் போல இருக்கிறவன் அவமானப்பட்டால் பாதகமில்லை, உங்க பேரு கெடப்பிடாது. அது தான் எனக்குக் கவலை..."

     -கமலக்கண்ணனுக்குக் கோபம் கோபமாக வந்தது. 'துண்டு விழுகிற பட்ஜெட்டை எந்த மறைமுக வரி அல்லது நேர்முக வரியினால் சரிக்கட்டுவது! மக்களிடமும் பொருளாதார எமன்களிடமும் நல்ல பெயரெடுக்கிற மாதிரி எப்படிப் புதிய பட்ஜெட்டைத் தயாரிப்பது?' - என்றெல்லாம் கடந்த சில நாட்களாகக் கவலையிலாழ்ந்திருந்த அவருக்கு இந்தப் புதிய வம்பு திடீரெனப் பெரிய தலைவேதனையாகத் தோன்றியது.

     "நீங்கள் தொழிலதிபர்! அதனால் பெரும் மூலதனத்தைத் தொழிலில் முடக்கியுள்ள பணக்காரர்களைப் பாதிக்கிற 'பட்ஜெட்'டாகப் போட்டாலும் உங்களுக்குக் கெட்ட பெயர். பாமர மக்களைப் பாதிக்கிற 'பட்ஜெட்' போட்டாலோ "அவர் பணக்காரர்-தொழிலதிபர்; அதனால் தனக்குச் சாதகமாக 'பட்ஜெட்'டை போட்டுவிட்டார்" - என்று பத்திரிகைகளும்-மக்களும் பிரசாரம் செய்வார்கள். அதனால் இந்த முதல் பட்ஜெட்டை நீங்கள் மிகக்கவனமாக அமைத்து வெற்றி பெறவேண்டும்" என்று வேண்டிய நண்பர் ஒருவர் எச்சரித்திருந்தார். அது சம்பந்தமான கவலைகளில் அவர் ஆழ்ந்திருந்த போது இந்தப் பாழாய்ப் போன 'உண்மை ஊழியனின்' பிளாக்மெயிலுக்கும் அஞ்ச வேண்டி வந்ததே என்ற வேதனை அவரை வாட்டியது. 'சில சமயங்களில் மனிதனின் பதவிப் பெருமையும், பண பலமும், செல்வாக்கும் அவனுடைய அந்தரங்கமான பேடித் தனத்தை வளர்க்கவே பயன்படுகின்றன' - என்பதற்கு அவர் அப்போது நிதரிசனமான உதாரணமாயிருந்தார்.

     'பணமில்லாதவர்கள் தாங்கள் தைரியமாகவும் நிமிர்ந்து நிற்பவர்களாகவும் - இல்லாமற் போனதற்குத் தங்களிடம் பணமின்மைதான் காரணமோ என்று எண்ணுகிறார்கள். பணமுள்ளவர்களில் சிலரோ அதன் காரணமாகவே நிமிர்ந்து நிற்கவும்-தைரியமாக இருக்கவும் இயலாதவர்களாகத் தவிக்க வேண்டியிருக்கிறது. பணம்-பதவி-செல்வாக்கு எல்லாமே அவற்றோடு சேர்த்துத் தன்னைப் பிரித்துவிடாமல் காக்கும்-பயத்தையும் பேடித்தனமான பாதுகாப்புணர்வையும் தான் மனிதனுக்குள் வளர்க்கின்றன போலும்'

     -இப்படி ஏதேதோ எண்ணியபோது- நிர்ப்பயமாக நேருக்குநேர் மேடையேறி நின்று-'இப்படிப்பட்ட ஒருவரின் வெற்றியைத் தேசிய விரோத நிகழ்ச்சியாகக் கருதி வெறுக்கிறேன் நான்' - என்று கூறித் தனக்கு எருக்கம்பூ மாலையணிவித்த காந்திராமனின் நினைவு ஏனோ அப்போது அவருள் எழுந்தது.

     'அந்தக் காந்திராமனை அப்படிப் பேசத் துணியச்செய்த நெஞ்சின் கனல் எது? தன்னை அப்போதும்-இப்போதும் பேசவிடாமல் செய்த நெஞ்சின் பேடித்தனம் எது?' என்று சிந்தித்து எல்லை காண முடியாமல் ஓரிருவிநாடிகள் உள்ளேயே குழம்பினார் கமலக்கண்ணன். காந்திராமனுக்குள் எரிகிற சுதந்திர-சுதேசியத் தன்மரியாதைக் கனல் தனக்குள் பணம் - பதவி - செல்வாக்கு எல்லாவற்றாலும் அழிக்கப்பட்டு விட்டதோ - என்றெண்ணியபோது அவர் உடல் நடுங்கியது.

     "என்ன யோசிக்கிறீங்க...? நான் சொல்றபடி கேளுங்க... 'பட்ஜெட்' சமயத்திலே நாலு பேரு இந்த நாற்றத்தைக் கையிலே வச்சுகிட்டு வம்பு பேச இடம் கொடுத்துடப்பிடாதுங்க....?"

     என்று கலைச்செழியன் தன் கையிலிருந்து 'உண்மை ஊழியனைக்' காண்பித்து வற்புறுத்தத் தொடங்கினான்.

     பேசாமல் டிராயரைத் திறந்து எண்ணிப் பார்க்காமலே ஒரு கட்டு நோட்டுக்களை அடுக்காகக் கலைச்செழியனிடம் நீட்டினார் கமலக்கண்ணன். அப்படிக் கொடுக்கும்போது தனது கை இப்படிப் பலவீனங்களுக்காகக் கொடுத்துக் கொடுத்து மேலும் பலவீனத்தை அடைவது போல் ஓருணர்வு அவரை உள்ளே அரித்தது.

     கிழிந்த மேல் துண்டு தவிர வேறு ஆஸ்தி இல்லாத அந்தக் கதர்ச்சட்டைக் காந்திராமனை இப்படி யாரும் மிரட்ட முடியாதென்று நினைத்த போது சமூகத்தின் அந்தரங்கமான பலங்களைத் தான் எந்த நிலையில் இழந்திருக்கிறோம் என்பதையும்-அந்தப் பாமரத் தொண்டன் எந்த எல்லையில் எந்த அடிப்படையில் பலப்பட்டிருக்கிறான் என்பதையும் மனத்திற்குள் ஒப்பிட்டுச் சிந்திக்கத் தொடங்கினார் அவர்.

     கமலக்கண்ணன் எண்ணாமல் கொடுத்திருந்தாலும் கலைச்செழியன் பணத்தை அங்கேயே எண்ணத்தொடங்கி விட்டான்.

     "ஏன்? எண்ணி என்ன ஆகப் போகுது? பேசாம எடுத்துக்கிட்டுப் போய் அழு!" - என்று கமலக்கண்ணன் கூறியதையும் கேட்காமலே பொறுமையாக எண்ணி முடித்த அவன்,

     "தவுஸ்ண்ட் இருக்குதுங்க"-என்று தயங்கினான்.

     "இருக்குதில்ல...? கொண்டு போய்க் கொடுத்துக் காரியத்தை முடி" என்றார் அவர்.

     "பத்தாதுங்களே...! அவன் பெரிய விடாக்கண்டனாச்சே... ஒரு டூ தவுஸண்ட் கூட இல்லீன்னா-சரிபடாதே..." என்று கலைச்செழியன் பேச்சை இழுத்தான் - 'உணமையில் யார் பெரிய விடாக்கண்டன்' என்று தெரியாமல் மலைத்தார் கமலக்கண்ணன். கலைச்செழியன் விடாக்கண்டனா அல்லது அவனாலே விடாக்கண்டனாகச் சித்திரிக்கப்படுகிற அந்த யாரோ ஒருவன் விடாக்கண்டனா என்று புரியாமல் அதை அவனிடமே துணிந்து கேட்டுவிடும் அளவுக்கு மன பலமும் இழந்து கையாலாகாத வெறுங் கோபத்தோடு இன்னும் ஒரு கட்டு நோட்டுக்களை எடுத்து மேஜையில் எறிந்தார் கமலக்கண்ணன்.

     "கோபப்படறீங்களே? பார்க்கப் போனா உங்க பெருமையைக் காப்பாத்தறதைத் தவிர இதுலே எனக்கு வேறெந்த லாபமும் கிடையாதுங்க" என்று அந்த நோட்டுக் கற்றையையும் எடுத்து எண்ணத் தொடங்கினான் கலைச்செழியன். அவன் அதையும் எண்ணத் தொடங்கியபோது இயல்பாகவே அவருடைய பயம் அதிகரித்தது. எங்கே மேலும் கேட்கப் போகிறானோ என்று அவர் உள்ளம் நடுங்கியது. நல்ல வேளையாக அவன் அவரை அப்படியெல்லாம் மேலும் துன்புறுத்தாமல் விட்டு விட்டான்.

     "நான் இதை வச்சு சரிக்கட்டிட்றேனுங்க" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான். போவதற்கு முன், "இந்தாங்க...எதுக்கும் இது இங்கே இருக்கட்டும்" என்று கையோடு மடித்துக் கசக்கிக் கொண்டு வந்திருந்த உண்மை ஊழியனை அவரிடம் நீட்டினான். அதை வாங்கி கோபத்தோடு ஆத்திரம் தீர அவன் முன்னாலேயே கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார் அவர். அவன் பெரிதாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு விடை பெற்றான். அவனுடைய தலை மறைந்ததும் மறுபடி குப்பைத் தொட்டியிலிருந்து அந்த 'உண்மை ஊழியனை' எடுத்திக் கிழிசல்களை ஒட்ட வைத்து ஏதோ ஓர் ஆவலில் படிக்க முயன்றார் கமலக்கண்ணன். அப்போது அறைவாசலில் மனைவியின் தலை தெரிந்தது. மறுபடியும் அதைக் கசக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டார்.

     "என்னங்க... இது? ஏன் என்னவோ போலிருக்கீங்க..."

     "ஒண்ணுமில்லே! 'புது பட்ஜெட்' வரணும்... அது தான் ஒரே யோசனை..."

     "சாப்பிட்டுட்டு யோசிக்கலாம்... வாங்க... டைனிங் டேபிளிலே குழந்தைகளும் காத்துக்கிட்டிருக்காங்க..."

     அவர் சாப்பிடப் போனார். சாப்பாட்டுக்குப் பின்னும் இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் அறையில் உட்கார்ந்து கொண்டு யோசித்தபடி இருந்தார் அவர். கலைச்செழியன் எப்போதோ தான் மாயாவுக்கு நெக்லஸ் கொடுக்கும் போது எடுத்த புகைப்படங்களை ஒவ்வொன்றாகக் காட்டி மிரட்டுவது போல் ஒரு காட்சியைத் தாமாகக் கற்பித்துக் கொண்டு அஞ்சினார் கமலக்கண்ணன். இரவு முழுவதும் பலவீனங்களால் வந்த பயமே அவரை வாட்டியது. அதிகாலையில் தான் சிறிது கண்ணயர முடிந்தது. மறுநாள் காலையில் கடம்பவனேசுவரர் கோயில் திருப்பணியின் செயற்குழுக் கூட்டத்தைத் தம் வீட்டிலேயே கூட்ட ஏற்பாடு செய்திருந்தார் அவர். எல்லாரும் வந்து ஹாலில் கூடிவிட்டார்கள். அவரோ ஒன்பது மணிக்குத்தான் எழுந்திருந்தார்.

     அதுவரை எல்லாரும் காத்திருந்தார்கள். அப்படிக் காத்திருந்தவர்களில் பழைய அறநிலைய மந்திரி விருத்தகிரீசுவரனும் ஒருவர். அப்படி அவர்களைக் காக்க வைத்ததற்காக ஒரு முறை கருதி மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரானாலும் - உள்ளூர மந்திரி விருத்தகிரீசுவரனைக் காக்க வைத்ததில் பழி தீர்த்த மகிழ்ச்சி இருந்தது அவருக்கு. ஒன்பதரையிலிருந்து பத்து வரை கடம்பவனேசுவரர் திருப்பணிக் கூட்டம் நடந்தது. பத்து மணிக்கு அவசர அவசரமாக ஒரு வாய் சாப்பிட்டு விட்டு அவர் செகரெட்டேரியட் புறப்பட்டார். பதினொரு மணிக்கு மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் குழு ஒன்றிற்குப் பேட்டியளிக்க வேண்டுமென்ற செய்தியைக் காரில் போகும் போதே நினைவுபடுத்தினார் காரியதரிசி. முதல் நாள் மாலைச் சம்பவம் உள்ளூர உண்டாக்கியிருந்த பலவீனத்தாலும் மன நலிவினாலும் யாரைச் சந்தித்தாலும் எவரோடு பேசினாலும் ஒரு தாழ்வு மனப்பான்மை அவருள் நிலவியது. எல்லாரும் தன்னைத் தாழ்வாக நோக்கி அந்தரங்கமாக எள்ளி நகையாடிக் கொண்டே புறக் கோலமாக மரியாதையுடன் வணங்கினாற்போல் பாவிப்பதாகத் தோன்றியது அவருக்கு.

     பன்னிரண்டரை மணிக்குத் தூதுக்குழுவினர் 'தொழில் தவணைக்கடன் உதவி'-பற்றிய தங்கள் முறையீடுகளை எல்லாம் அமைச்சரிடம் கூறிவிட்டு வெளியேறினர். 'லஞ்ச்' ஓய்வு என்ற பேரில் அரைமணி கழித்துக் கொள்ள முடிந்தது. ஒன்றேகால் மணிக்குப் பத்துப் பதினைந்து பத்திரிகை நிருபர்கள் பார்க்க வரப்போவதாகவும்-அங்கேயே ஒரு சிறிய பிரஸ் கான்பரன்ஸூக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் காரியதரிசி வந்து தகவல் தெரிவித்தார். முன்பே செய்துவிட்ட ஏற்பாட்டை மறுத்துப் பத்திரிகைக்காரர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாதென்ற ஒரே காரணத்திற்காக மனம் தளர்ந்திருந்தும் அவர் அதற்கு இணங்க வேண்டியதாயிற்று.

     நிருபர்கள் 'பட்ஜெட் ஹேஷ்யமாக' ஏதாவது வெளியிட அவர் வாயைக் கிளறிப் பார்த்தார்கள். ஒரு நிருபர் அவரையும் வம்புக்கே இழுத்தார்.

     "மதுவிலக்கில் உங்களுக்கு நம்பிக்கை இருக்க முடியாது..."

     "ஏன் முடியாது?'

     "அதற்கில்லை...நீங்கள் நேஷனல் மூவ்மெண்ட் பீரியடில் இதையெல்லாம் கேலி செய்து நண்பர்களிடம் பேசியிருக்கிறீர்கள். ஆகவே ஒரு வேளை மதுவிலக்கை எடுப்பதன் மூல கிடைக்கிற லாபத்தை பட்ஜெட்டுக்குப் பயன்படுத்தக் கூடுமல்லவா? மன்னிக்கவும்... உங்களிடம் அப்படி எதிர்பார்க்கிறார்கள் என்பது என் பணிவான் அபிப்பிராயம்"

     "ஹவ் டூ யூ லைக் தட்" - என்று அந்த நிருபரிடம் கோபமாக இரைந்தார் கமலக்கண்ணன்.

     "தான் குடிப்பழக்கமுள்ளவன்" - என்று அந்தக் கேள்வியின் மூலம் அந்த நிருபர் தனக்குச் சுட்டிக்காட்டுவது போல் உணர்ந்தார் அவர். அதனால் தான் அவருக்குக் கோபம் வந்தது. அப்போதிருந்த அவருடைய மனநிலையில் தன்னைக் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் தன்னை மட்டம் தட்டுவதற்கே என்ற உணர்வு அவருள் ஏற்பட்டிருந்தது.

     "டோண்ட் கிவ் மச் இம்பார்ட்டன்ஸ் தட் க்வஸ்டின் எலோன், தட் இஸ் ஆன் ஆர்டினரி க்வஸ்டின் வித் ஆர்டினரி பேக்ரவுண்ட்ஸ்..." என்று அந்த நிருபர் எவ்வளவோ வற்புறுத்தியும் அது குத்தலான் கேள்வியாகவே அவருக்குத் தோன்றியது. ஒவ்வொருவரும் வேண்டுமென்றே சதி செய்து காந்திராமன் செய்தது போலவே தன்னை ஒரு போலித் தேசியவாதியாக நிரூபிக்க முயன்று சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருப்பது போல் அவருக்குப் பிரமை தட்டியது. ஒரு பலவீனம் இரகசியமாகப் பயமுறுத்தப்பட்டதன் காரணமாக எல்லாப் பலவீனங்களையும் எல்லாருமே நினைவு வைத்துக் கொண்டு தன்னைக் குத்தலாகவும், கபடமாகவும் கேள்விகள் கேட்பது போல் அவருக்குத் தோன்றியது.

     -ஒரு வழியாக பிரஸ் கான்பரன்ஸ் முடிந்தது. மூன்று மணிக்குத் தற்செயலாக ஒரு இன்விடேஷனை மார்க் செய்து டேபிளில் கொண்டு வந்து வைத்தார் காரியதரிசி.

     'மாயாதேவியின் குறவஞ்சி நாட்டிய அரங்கேற்றம்...' என்ற அந்த அழைப்பிதழைப் பார்த்ததும் சீறி விழுந்தார் அவர்.

     "பட்ஜெட் பிரிபரேஷன். வேலை உயிர் போகுது. இதையேன் என் டேபிளில் கொண்டாந்து வைக்கிறே? நாட்டியமும், நாடகமும் பார்க்க நேரமேது எனக்கு? தூர எறி" என்று அந்த இன்விடேஷனைத் தூக்கிக் கிழித்தெறிந்தார் கமலக்கண்ணன். தன்னை ஒரு ஸீரியஸ்ஸான பதவிப் பொறுப்புள்ள மந்திரியாக எடுத்துக் கொள்ளாமல் எல்லாருமே வெறும் உல்லாசப் பேர்வழியாக பழைய கமலக்கண்ணனாகவே நினைக்கிறார்களோ? என்ற சந்தேகமும்-இந்தச் சந்தேகத்தின் விளைவான ஆத்திரமும் அவருள் புகுந்து பேயாய் ஆட்டின. காரியதரிசி அவருடைய கோபத்தைக் கண்டு மிரண்டு போனார்.

     -மூன்றரை மணிக்கு பட்ஜெட் விஷயமாக ஒரு உயர்தர அதிகாரி-பழைய ஸிவில் சர்வீஸில் நீண்ட நாள் ஆபீஸராக இருந்து பழக்கப்பட்டவர் - கமலக்கண்ணனைப் பார்க்க வந்தபோது, "சார்! மினிஸ்டர் கோபமாக இருக்கிறார். தயவுசெய்து அப்புறமா வாருங்களேன்"னு காரியதரிசி அவரைக் கெஞ்சினான். அவரோ கமலக்கண்ணனை விடக் கோபக்காரராக இருந்தார்.

     "நான் ஒண்ணும் எடுபிடி வேலைக்காரனில்லே கோப தாபம் பார்த்துக் கூழைக் கும்பிடு போட்டு பக்ஷிஸ் கேக்க இங்கே வரலே. பேப்பர்கள் டிஸ்போஸ் ஆகாமே கிடக்குது கேட்கணும். எனக்கென்ன? நான் போறேன். எலெக்ஷன்லே யார் யாரோ மந்திரியா வந்துடறாங்க... கிரகசாரம்..." என்று சாடிவிட்டுப் போனார்.

     உடனே அவரைக் காலில் விழாக் குறையாக உபசரித்து உட்கார வைத்து விட்டு, உள்ளே மந்திரியைப் பார்த்து, அவர் வரவைக் கூறுவதற்கு விரைந்தார் காரியதரிசி. மந்திரியோ உள்ளே டேபிளில் தலை சாய்த்துக் கவலையில் ஆழ்ந்திருந்தார். காரியதரிசி என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கினார்.

     கடைசியில் தன் மேல் கோபப்பட்டுச் சீறி விழுந்தாலும் விழட்டும் என்று, மேஜை மேல் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த மந்திரி கமலக்கண்ணனை எழுப்பி வெளியே ஐ.சி.எஸ். அதிகாரி வந்து காத்திருப்பதாகக் கூறினார் காரியதரிசி. அவரை வரச்சொல்லுமாறு கூறிவிட்டுக் கமலக்கண்ணன் அவசர அவசரமாக முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு ஐ.சி.எஸ். அதிகாரியை வரவேற்பதற்குத் தயாரானார். மனநிலை வேறு தெளிவாக இல்லை. 'உண்மை ஊழியனின்' பயமுறுத்தல், அதை வைத்துக் கலைச்செழியன் தன்னை 'பிளாக் மெயில்' செய்து பணம் பறித்தது, எல்லாம் சேர்ந்து மனத்தைக் குழப்பியிருந்தன.

     அதிகாரியிடம் முறையைக் கழிப்பது போல் ஒரு மன்னிப்புக் கேட்டுவிட்டு வரவேற்றுப் பேசினார். அதிகாரியும் தம்முடைய மன எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல் ஏதோ பேச வேண்டியதைப் பேசிவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.

     சிறிது நேரத்திற்கு யாரையும் உள்ளே அனுப்ப வேண்டாமென்று காரியதரிசியிடம் கூறிவிட்டு மீண்டும் சிந்தனையிலாழ்ந்தார் கமலக்கண்ணன். மந்திரியாக வந்ததிலிருந்து தமது தொழில் நிறுவனங்களின் நிலை என்ன என்பதை அன்றன்று அறிய முடியாமலிருப்பதை எண்ணியும் அவர் கவலைப்பட்டார். தம்முடைய அன்றாட வாழ்க்கையின் உல்லாசங்கள் பலவற்றை இந்தப் பதவி காரணமாகத் தாம் இழக்க நேர்ந்திருப்பதையும் அவர் சிந்தித்தார். நண்பர்கள் சந்திப்பு, 'கிளப்'பில் சீட்டாட்டம், ரோடரி மீட்டிங், டென்னிஸ் விளையாட்டு, வீக் எண்ட் பயணம், எல்லாம் போயிருப்பதையும், உணர முடிந்தது. ஆனாலும் தங்களுக்காகத் தாங்களே நியமித்துக் கொண்ட தெய்வங்களை வழிபடுவது போல் மக்கள் மந்திரிகளை வழிபடுவதினால் கிடைக்கிற பதவியின் சுகம் நினைவுக்கு வந்து ஆறுதலளித்தது. ஜனநாயகத்தில் வாக்களிக்கின்றவன் சுதந்திரத்தை ஒரே ஒரு நாளிலும், வாக்களிக்கப்பட்டவன் பதவிக் காலம் முடிகிறவரை பல நாட்களும் அடைய முடியும் என்பது ஞாபகம் வந்தது. அந்த நினைவு இதமாக இருந்தது.

     டெலிபோன் மணி அடித்தது. கமலக்கண்ணன் தமது சிந்தனையைக் கலைந்து டெலிபோனை எடுத்தார். முதலமைச்சர் அவருடைய அறையிலிருந்து டெலிபோனில் பேசினார். "டெல்லி மந்திரி ஒருத்தர் வருகிறார். நம்ம அரசாங்க சார்பிலே நீங்க தான் ஏர்ப்போர்ட்டிலே போய் ரெஸீவ் பண்ணனும்."

     "ஓ! எஸ்... அப்படியே செய்யறேன் சார்..."

     "அது மட்டுமில்லே! 'பிளானிங்' அது-இது எல்லாம் வர்ரவரோட கையிலேதான் இருக்கு. ராஜ்பவனுக்கோ, சென்ட்ரல் கெஸ்ட் ஹவுஸுக்கோ எங்கே போனாலும், அவர் கூடவே போய்க் கனிவாகப் பேசி நம்ம ஸ்டேட்டுக்கு ஆக வேண்டிய நல்ல காரியங்களை மெல்ல அவர் மனசிலே பதிய வச்சுடணும். சீக்கிரம் புறப்படுங்க... இன்னிக்கு டில்லி பிளேன் லேட்... ஆனாலும் அரை மணி முன்னாலே ஏர்ப்போர்ட் போயிடறது நல்லது."

     "நான் பார்த்துக் கவனிச்சுக்கிறேன் சார்!"

     "அப்படியே நாளை-நாளன்னிக்கு உங்க பிஸினஸ் பீப்பிள்ட்ட எல்லாம் சொல்லி சேம்பர் ஆஃப் காமர்ஸ், எண்டர்பிரைஸர்ஸ் அசோசியேஷன்ஸ், எல்லாம் ஒரொரு மீட்டிங் போட்டு அந்த மந்திரியைப் பேச வச்சாக்கூட நல்லது... எல்லாம் கவனிச்சுச் செய்யுங்க... நான் இதோ... இப்பவே முதல் டிரெயின்ல மதுரை புறப்பட்டுக்கிட்டிருக்கேன்..."

     "நீங்க போயிட்டு வாங்க சார்! நான் கவனிச்சுக்கிறேன்..." என்றார் கமலக் கண்ணன்.

     உடனே காரியதரிசியைக் கூப்பிட்டு, "நீ அவசரமாப் பூக்கடைக்குப் போயி ஜீப்பிலே மாலை வாங்கிட்டு ஏர்ப்போர்ட்டுக்கு வா!... நான் இப்பவே புறப்படறேன்... நேரமாக்கிடாதே... பிளேன் வந்துடும்... ஜல்தி" என்று விரட்டி விட்டுப் புறப்பட்டார் கமலக்கண்ணன். இடைவழியில் வீட்டில் முகம் கழுவி உடைமாற்றிக் கொள்ள ஐந்து நிமிடங்கள் ஆயின. விமான நிலையத்திற்குக் கால்மணி முன்னாலேயே போய் விட்டார் அவர்.

     ஏற்கெனவே அங்கே வழக்கமாக இம்மாதிரி வரவேற்புக்களுக்கு வரும் நகர மேயர், ஷெரீப், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத் தலைமைக் காரியதரிசி, போலீஸ் அதிகாரிகள், இரண்டு மூன்று எம்.எல்.ஏக்கள் எல்லோரும் வந்திருந்தனர். பத்திரிக்கை நிருபர்கள் கூட்டம் ஒரு பக்கம் அலட்சியமாகவும், உல்லாசமாகவும் பேசிச் சிரித்தபடியும் காத்திருந்தது. ஏர்ப்போர்ட் லவுன்ச்சில் இருந்த பிரமுகர்கள் கமலக்கண்ணனைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றனர். கமலக்கண்ணனும் அவர்களிடையே சென்று அமர்ந்தார்.

     "சீஃப் மினிஸ்டர் முதல் டிரெயின்லே மதுரை போறார். நீங்க போய் ரெஸீவ் பண்ணுங்கன்னார். அதான் இப்படி அவசரமா வரவேண்டியதாச்சு. வர வர டெல்லி பிளேன்... மணிக்கணக்கா நாட்கணக்கா லேட்டாகுது போங்க..." என்று சம்பிரதாயமாகவும் பெரிய வியாபாரிக்குரிய அவசரத்துடனும், அலட்சியத்துடனும் பேச்சை ஆரம்பித்தார் கமலக்கண்ணன்.

     "உலகத்திலே ஒவ்வொரு நாட்டுக்காரன் எதெதுலேயோ வளர்ச்சியடையறான்னா நாம லேட்டாறதுலேயாவது வளர்ச்சியடையப்பிடாதா, என்ன?" - என்று அசெம்பிளிக்கு வெளியே வந்தும் மறக்காமல் எதிர்க்கட்சிக்கேயுரிய குத்தல் மனப்பான்மையோடு கமலக்கண்ணனிடம் ஜோக் செய்தார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்.

     டில்லி விமானம் லாண்ட் ஆகி ரன்-வேயில் சீறிப்பாய்ந்து வந்து நின்றது. கமலக்கண்ணன் மாலையோடு விமானத்தை நெருங்கினார். பிரமுகர்களும் பின் தொடர்ந்தனர் மாலையிட்டு அறிமுகங்கள் முடிந்த பின், விமான நிலைய வி.ஐ.பி. லவுன்ச்சில் பத்திரிக்கை நிருபர்கள் டில்லி மந்திரியை வளைத்துக் கொண்டனர். அவர்களுடைய பிரஸ் கான்பரன்ஸ் முடிந்ததும்-தம் காரைப் பின் தொடருமாறு கூறிவிட்டு டில்லி மந்திரியுடன் ராஜ்பவன் சென்றார் கமலக்கண்ணன்.

     சேது சமுத்திரத் திட்டம், உருக்காலைத் திட்டம் பற்றி எல்லாம் டில்லி மந்திரி ஏதாவது பேசினால் பதிலுக்குக் கூறுவதற்குப் புள்ளி விவரங்களை எல்லாம் அன்று சிரமப்பட்டுச் சிந்தித்து வைத்துக் கொண்டிருந்தார் கமலக்கண்ணன். எந்த விநாடியிலும் டில்லி மந்திரி சர்தார் ரமேஷ்சிங் ஜீ அவற்றைப் பற்றித் தன்னிடம் பேசத் தொடங்கலாம் என்ற பயம் காரில் போகும் போதே கமலக்கண்ணன் மனத்தில் இருந்தது. ஆனால் டில்லி மந்திரி ரமேஷ்சிங் ஒரே ஒரு தடவைதான் கமலக்கண்ணனுடன் ராஜ்பவன் போவதற்குள் பேசினார்.

     "மிஸ்டர் கமலக்கண்ணன்! பிஃபோர் லீவிங் மெட்ராஸ் ஐவுட் லைக் டூ ஸீ அட்லிஸ்ட் ஒன் பரதநாட்யம் ஃபெர்பாமன்ஸ் ஹியர்... கேன் யூ அரேஞ் ஃபார் மீ..." என்று மத்திய மந்திரி பரத நாட்டியம் பார்க்க ஆசை தெரிவித்த போது கமலக்கண்ணன் உருக்காலை, துறைமுகம் பற்றிய புள்ளி விவரங்களை அவசர அவசரமாக மறந்து - பரத நாட்டிய நாரீமணிகளை ஏற்பாடு செய்வது பற்றி நினைக்கத் தொடங்கினார்.

     "யெஸ்! ஐ கேன் அரேன்ஜ்..." - என்று உடனே இணங்கியதுமன்றி உருக்காலை, சேது சமுத்திரம் - போன்ற சிரம சாத்தியமான சிந்தனைகளை மறக்க உதவி செய்ததற்காக மத்திய மந்திரிக்கு மனப்பூர்வமாக உள்ளே நன்றியும் செலுத்தினார் கமலக்கண்ணன்.

     ராஜ்பவனில் டெல்லி மந்திரி கவர்னரோடு டீ அருந்தி விட்டுப் பேசிக் கொண்டிருக்கும் போதே கமலக்கண்ணன் டெலிபோனில் ஃபிலிம் எண்டர் பிரைஸர்ஸ் அசோசியேஷன் காரியதரிசியைக் கூப்பிட்டு, "டெல்லி மந்திரி ரமேஷ்சிங் இன்னும் நாலு நாள் இங்கே தங்கறார். அவர் இங்கே இருக்கறப்ப ஒரு பரதநாட்டியம் பார்க்கணுமாம், ஒரு ஈவினிங் உங்க அசோசியேஷன் சார்பிலே பார்ட்டி ஒண்ணும் கொடுத்து நாட்டியத்துக்கும் ஏற்பாடு பண்ணினா நல்லது. செய்வீங்களா?" என்றார் கமலக்கண்ணன்.

     "கட்டாயம் செய்யறோம் சார்! இப்படி ஒரு மகத்தான சந்தர்ப்பத்தை எங்களுக்கு அளிச்சதுக்காக நாங்க உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கோம் சார்!" - என்று ஃபோனில் எதிர்ப்புறமிருந்து வெல்லப் பாகாய் உருகினார் ஃபிலிம் வர்த்தகசபைக் காரியதரிசி.

     "அப்ப நாளன்னிக்குச் சாயங்காலம் என்கேஜ்மெண்ட் பிக்ஸ்ட்..." என்று முடித்தார் உள்ளூர் மந்திரி கமலக்கண்ணன். எதிர்ப்புறம் ஃபிலிம் வர்த்தகசபைக் காரியதரிசி ஆயிரம் நன்றிகளை அவசர அவசரமாகத் தெரிவித்துவிட்டு ஃபோனை வைத்தார்.

     டெல்லி மந்திரி ராஜ்பவனிலிருந்து கெஸ்ட் ஹவுஸுக்குக் காரில் வரும்போது உடன் வந்த கமலக்கண்ணன் 'நாட்டியத்துக்கு ஏற்பாடு செய்தாயிற்று' என்பதை அவரிடம் தெரிவித்தார். அவரும் அதற்காக மகிழ்ந்து உடனே கமலக்கண்ணனுக்கு நன்றி தெரிவித்தார்.

     இரவு டின்னருக்கு புகழ்பெற்ற தென்னிந்திய இட்லி, சாம்பார் இரண்டும் சூடாக இருந்தால் நல்லது என்று ரமேஷ்சிங் அபிப்பிராயப்படவே... நகரத்திலேயே இட்லி தயாரிப்பதில் பெயர் பெற்ற ஹோட்டல் ஒன்றிற்குத் தகவல் சொல்லி ஜீப்பில் ஆளனுப்பினார் கமலக்கண்ணன். இட்லி சாம்பார் வந்தது. டெல்லி மந்திரி மூன்றே மூன்று இட்லிகளை ஆறு பிளேட் சாம்பாரில் கரைத்துக் குடித்தார். சாம்பாரை மட்டுமே அவர் அதிகம் சுவைப்பதாகத் தெரிந்தது. சாம்பாருக்குத் தொட்டுக் கொள்ளவே இட்லியை அவர் பயன்படுத்தினார். கமலக்கண்ணனுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. 'இந்த டில்லி மந்திரியை ஒரு நாள் பகல் தன் வீட்டில் லஞ்சிற்கு அழைத்து... உள்ளூர் இண்டஸ்டிரியலிஸ்டுகளையும், பாங்கர்களையும், மந்திரிகளையும் கூப்பிட்டு ஒரு தடபுடல் செய்தால் என்ன?..' என்று எண்ணினார். உடனே ரமேஷ்சிங்கிடம் தன் ஆசையை மெல்ல வெளியிட்டார் கமலக்கண்ணன்.

     "ஓ எஸ் வித் பிளஷர்" - என்று புன்னகையோடு இணங்கினார் டெல்லி மந்திரி. உடனே மனைவிக்கு ஃபோன் செய்து சமையல் ஏற்பாடுகள்-மெனு பற்றி விவரித்தார். காரியதரிசிக்கு... அழைப்பு அனுப்ப வேண்டிய ஆட்கள் பற்றி உத்தரவுகள் பிறப்பித்தார். நண்பர்களுக்கும் அட்டகாசமாக ஃபோன் செய்தார்.

     "யாரு - குமரகிரி டெக்ஸ்டைல்ஸ் நாயுடுகாருவா? நீங்க இல்லாம நம்ம வீட்டிலே எந்த விருந்தும் நடக்காது. நடக்கவும் கூடாது. நாளை மறுநாள் சென்ட்ரல் மினிஸ்டருக்கு ஒரு லன்ச் அரேன்ஜ் பண்ணியிருக்கேன்! பெரிசா ஒண்ணுமில்லே எல்லா லீடிங் இண்டஸ்டிரியலிஸ்டா மட்டுமே கூப்பிட்டிருக்கேன். மந்திரியையும் பார்த்துப் பேசினாப்பிலே இருக்கும். கட்டாயம் வந்திடுங்க" என்கிற பாணியில் அழைப்புக்களை அடுத்தடுத்து விடுத்தார். அரைமணி நேரத்திற்குள் நகரின் முக்கியஸ்தர்களுக்கும் பிரமுகர்களுக்கும் ஃபோன் செய்து தெரிவித்துவிட்டார் கமலக்கண்ணன்.

     -மறுநாள் காலையில் வெளியான ஆங்கில தமிழ் தினசரிகளில் எல்லாம் முதல்நாள் மாலை கமலக்கண்ணன் விமான நிலையத்தில் ரமேஷ்சிங்குக்கு மாலை போட்டு வரவேற்ற புகைப்படம் வெளியாகியிருந்தது. வீட்டிலிருந்தே கெஸ்ட் ஹவுஸ் ஆட்களுக்கு ஃபோன் செய்து ரமேஷ்சிங் எழுந்திருந்ததும் பத்திரிகைகளை அவருக்கு அனுப்புமாறும்... 'தினக்குரல்' தமிழ் பத்திரிகையைக் காட்டி, 'இதை எங்கள் ஸ்டேட் மந்திரி கமலக்கண்ணன் ஆதரவுடன் நடத்துகிறார்கள்' - என்பதையும் தெரிவிக்குமாறும் கூறினார் கமலக்கண்ணன்.

     -அன்று மாலை... அதாவது டெல்லி மந்திரி வந்த இரண்டாவது நாள் மாலை... கட்சி அலுவலகத்திலே அவருக்கு ஒரு கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்திற்குப் போனால் மறுபடி காந்திராமனைச் சந்திக்க வேண்டி நேருமோ என்று கமலக்கண்ணன் தயங்கினார். ஆனால் போகாமலும் இருக்கமுடியாதென்று தோன்றியது. வந்ததிலிருந்து கூடவே இருந்துவிட்டுக் கட்சிக் கூட்டத்துக்கு மட்டும் போகவில்லை என்றால் அதை யாராவது கவனித்து வம்பு பேசுவார்கள் என்றாலும் காந்திராமனின் முகம் எருக்கம்பூ மாலை, எல்லாம் நினைவு வந்து அந்த இடத்திற்குப் போவதற்கே பயத்தையும், தயக்கத்தையும் உண்டாக்கின. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு வீட்டிலிருந்து தனியே போகாமல் கெஸ்ட் ஹவுஸிலிருந்து மந்திரியுடனேயே புறப்பட்டுவிட்டார். கட்சி அலுவலகத்தில் கூட்டம் அமைதியாகவே நடந்தது. ரமேஷ்சிங்கிற்கு நன்றாக ஆங்கிலம் தெரிந்திருந்தும் பிடிவாதமாக 'இந்தியில் தான் பேசுவேன்' என்று அங்கே இந்தியில் பேசினார். அந்தப் பேச்சை அவர் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் பலருக்குப் புரிந்திருக்கும். அங்கு வந்திருந்த பெரும்பாலோருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். மொத்தத்தில் இரண்டொருவருக்கே இந்தி தெரியும். எனவே பேச்சும், கூட்டத்தில் அதற்கிருந்த வரவேற்பும் மந்தமாகவே இருந்தன. டில்லி மந்திரியின் இந்திப் பேச்சை யாரோ ஒரு நரைத்தலை மனிதர் தமிழிலே மொழிபெயர்த்துக் கூறினார். கூட்டம் மந்தமாக நடந்து முடிந்தது. முன்னால் கமலக்கண்னன் நினைத்துப் பயந்தபடி காந்திராமன் அந்தக் கூட்டத்திற்கே வரவில்லை.

     கூட்டம் முடிந்ததும் ஆர்வமும் உற்சாகமும் நிறைந்த இளந்தலைமுறைப் பத்திரிகை நிருபர் ஒருவர் டில்லி மந்திரியை வழிமறித்துப் பேசத் தொடங்கிவிட்டார்.

     "நீங்கள் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் இங்கிருந்தவர்களில் பலருக்குப் புரிந்திருக்கும்."

     "ஆங்கிலம்! பல ஆண்டுகளாக இந்த நாட்டு மொழிகளில் ஒன்றாக நம்மோடு இணைந்திருக்கிறது ஆங்கிலம். உலக ஒற்றுமைக்கே வழிவகுக்கிறது ஆங்கிலம். மற்ற மொழிகளோ ஒரு மாநில ஒற்றுமைக்கே துணை செய்வதில்லை. உதாரணமாக உங்களையே எடுத்துக் கொள்ளுவோம். தனிப்பட்ட முறையிலும், சொந்தமாகவும் உங்களிடம் யார் பேசினாலும் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுகிறீர்கள். ஆனால் கூட்டங்களில் மட்டும் வறட்டுப் பிடிவாதத்தோடு இந்தியில் பேசுகிறீர்கள்..."

     "யூர் ஆர் டாக்கிங் டூ மச்! கீப் யுவர் லிமிட்ஸ்" ... என்று உணர்ச்சிவசப்பட்டு நிருபரை கோபித்துக் கொண்டார் ரமேஷ்சிங். என்ன காரணத்தாலோ அந்த இளம் நிருபர் டெல்லி மந்திரியை மடக்கியதை விரும்பி உள்ளூர மகிழ்ந்தார் கமலக்கண்ணன். டெல்லி மந்திரியின் மொழி வெறி அவருக்குப் பிடிக்கவில்லை. இந்தியாவின் ஒற்றுமைக்கு வட இந்தியர்கள் தங்கள் மொழி வெறியாலேயே உலை வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அருவருப்பாக இருந்தது அவருக்கு. ஆனால் வெளிப்படையாக அப்படிச் சொல்லித் தமக்குப் பதவி கொடுத்திருக்கும் கட்சியைப் பகைத்துக் கொள்ளவும் கமலக்கண்ணன் தயாரில்லை.

     டெல்லி மந்திரியிடம் தனியே பரஸ்பரம் குடும்ப சௌக்கியங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கமலக்கண்ணனிடம் கூறினார்:-

     "எனக்கு இரண்டு பையன்கள்! ஒருத்தன் இங்கிலாந்துலேயும், இன்னொருத்தன் அமெரிக்காவிலே மிச்சிகன் யூனிவர்சிடியிலும் படிக்கிறார்கள். யூ நோ... இண்டியன் எஜூகேஷன் ஸ்டாண்டர்ட் இஸ் வெரி வெரி புவர்..."

     தன் குழந்தைகளைக் கவனமாக வெளி நாட்டில் ஆங்கிலச் சூழ்நிலையில் படிக்க வைக்கும் இதே மந்திரி 'பாமர இந்தியர்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன' என்ற மனோபாவத்தோடு இந்தி வெறியுடனிருப்பதை உணர்ந்தார் கமலக்கண்ணன். ஒரு கோமாளி போல் அபிப்பிராயங்களை உதிர்க்கும் அந்த டெல்லி மந்திரி - திறமை வாய்ந்த தென்னிந்தியப் பத்திரிக்கை நிருபர்களிடம் மாட்டிக் கொண்டு விழிப்பதைக் காண வேடிக்கையாயிருந்தது கமலக்கண்ணனுக்கு.

     மறுநாள் பகலில் கமலக்கண்ணன் பங்களாவில் ஒரு நவீன பஃபே முறை லஞ்சுக்கு ஏற்பாடாகியிருந்தது. மந்திரி ரமேஷ்சிங்குக்காகவே சூடாக நாலு பிளேட் சாம்பார் தனியே எடுத்து வைக்கச் சொல்லி சமையற்காரரிடம் கூறிவிட்டார் கமலக்கண்ணன். இந்தியின் மேலிருந்த காதலை விட டில்லி மந்திரிக்குத் தென்னிந்திய சாம்பார் மேல் அதிகமான காதல் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் கமலக்கண்ணன் இரண்டு தினங்களாகவே அவரோடு கூட இருந்து கண்டுபிடித்தார்.

     நகரத்தின் பெரிய பெரிய தொழிலதிபர்களும் பாங்குகளின் டைரக்டர் போர்டுத் தலைவர்களும் கமலக்கண்ணன் வீட்டு விருந்துக்கு வந்திருந்தார்கள். ஒவ்வொருவரையும் கவனமாக மறந்து விடாமல் மந்திரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் கமலக்கண்ணன். எல்லாருடனும் மந்திரி கலகலப்பாகப் பழகினார். பேர்தான் 'பஃபே' என்றாலும் ஏராளமான வகைகள் டேபிளில் இருந்தன. எல்லாம் பிரமாதமான தயாரிப்புக்கள். 'வெஜிடேரியன் டேபிள்', 'நான் வெஜிடெரியன் டேபிள்'... என்று இரண்டும் தனித்தனியாக இருந்தன. இரண்டிலும் ஏராளமான பதார்த்த வகைகள் இருந்தாலும் எல்லாரும் பேசிக் கொண்டும், உலாவிக் கொண்டும் சாப்பிட்டதாலும் விருந்து முடியப் பகல் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. மாலையில் ஃபிலிம் எண்டர்பிரைசர்ஸ் அசோசியேஷன் கூட்டம் இருந்ததனால் மந்திரி ஓய்வு கொள்வதற்காக 'கெஸ்ட் ஹவுஸ்' போய்விட்டார். கமலக்கண்ணன் மாலை ஆறு மணிக்குக் கெஸ்ட் ஹவுஸ் சென்று டில்லி மந்திரியை அழைத்துக் கொண்டு ஃபிலிம் வர்த்தகசபைக் கூட்டத்திற்குப் போவதென்று திட்டமிட்டிருந்தார். ஃபிலிம் வர்த்தக சபைக்காரர்கள் பிரமாதமாகக் கண்ணாடித்தாளில் அழைப்பிதழ்கள் அச்சிட்டு அனுப்பியிருந்தனர். பரத நாட்டியத்துக்குக் கூட மாயாதேவியைத்தான் ஏற்பாடு செய்திருந்தனர். தற்செயலாக அவர்கள் அப்படி ஏற்பாடு செய்திருந்தார்களா அல்லது தனக்கு மாயாதேவியை ஏற்பாடு செய்தால் தான் பிடிக்கும் என்று அவர்களாகவே அநுமானித்துக் கொண்டு ஏற்பாடு செய்தார்களா என்பது கமலக்கண்ணனுக்குத் தெரியவில்லை. ஃபிலிம் வர்த்தக சபைக்காரர்கள் மேல் அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. தர்மசங்கடமான நிலைமையில் அவர் இருந்தார். மாயாதேவியைக் கண்டும் காணாமலும் பழகிக் கொள்ளலாம் என்று அவர் நினைத்திருந்த நினைப்பில் மண்ணைப் போட்டு விட்டு அவர் தலைமையிலேயே மத்திய மந்திரிக்கு நடக்கும் ஒரு விருந்தில் மாயாதேவியின் நடனத்தையும் அதிகாரப் பூர்வமான அறிவிப்புடன் சேர்த்துப் போட்டுவிட்டதை அவ்வளவாக அவரால் இரசிக்க முடியவில்லை. தனக்கும் மாயாதேவிக்கும் இடையே உள்ள நட்பு நகரப் பிரமுகர்கள் வட்டாரத்தில் ஓரளவு தெரியுமாகையினால் யாராவது இதை வைத்து வம்பு பேசப் போகிறார்களோ என்று பயந்தார் அவர். கூட்டங்களில் அல்லது பொது நிகழ்ச்சிகளில் பலர் நடுவே மந்திரி என்ற அந்தஸ்தோடு தான் தலை நிமிர்ந்து நிற்கிற வேளைகளில் மாயா எதிர்ப்பட்டுத் தன்னை வணங்குவதையோ, நெருக்கம் தெரிகிற பாவனையில் புன்னகை பூப்பதையோ அவர் பலமுறை தவிர்க்க முயன்றிருக்கிறார். இப்போதோ இந்த டில்லி மந்திரி ரமேஷ்சிங் விஷயத்தில் இது மாதிரி ஆகிவிட்டது. நிகழ்ச்சி நிரல் எல்லாம் அச்சாகி யாவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டதனாலும், பத்திரிகைகளில் வெளிவந்து பரவிவிட்டதனாலும் இனி மாயாதேவியை அந்த நிகழ்ச்சியிலிருந்து விலக்குவதென்பது முடியாத நிலை ஆகியிருந்தது கமலக்கண்ணனுக்கு. ஆகவே தர்மசங்கடத்தோடும், பயத்தோடும், தயக்கத்துடனும் தான் அந்த விருந்துக்கு டில்லி மந்திரியோடு போனார் கமலக்கண்ணன்.

     ஃபிலிம் வர்த்தக சபை விருந்தில் டில்லி மந்திரி ஆங்கிலத்தில் தான் பேசினார். இந்தியில் பேசினால் ஒரு வேளை அங்கு வந்திருந்த அழகிய பெண்களும் இளம் எக்ஸ்ட்ராக்களும், தன்னுடைய ஹாஸ்யங்களுக்குச் சிரிக்க முடியாமல் போய் விடுமோ என்று பயந்துதான் அப்படிப் பேசுகிறார் என்பதைக் கமலக்கண்ணன் புரிந்து கொண்டார்.

     நடிகை மாயாதேவியின் பரதநாட்டியம் நடந்தபோது டெல்லி மந்திரி 'வாஹ்' என்று நிமிஷத்துக்கு ஒரு தரம் தலையாட்டிக் கொண்டிருந்தார். மந்திரியின் ஒரு பக்கம் கமலக்கண்ணனும், மறுபக்கம் ஃபிலிம் வர்த்தக சங்கத் தலைவரும் அமர்ந்திருந்தனர். டெல்லி மந்திரி தற்செயலாகப் பேசிக் கொண்டிருந்தபோது மாயாவைப்பற்றிக் கமலக்கண்ணனிடம் ஏதோ கூறத் தொடங்கவே ஃபிலிம் சங்கத் தலைவர் குறுக்கிட்டு, "அவருக்குத் தெரியாதுங்களா? ஹீ... இஸ்... ஆல்ரெடி..." என்று ஏதோ டெல்லி மந்திரியிடம் சொல்லத் தொடங்கிய அந்த வேளையில் கமலக்கண்ணனின் முகம் போன போக்கைப் பார்த்து மேலே ஒன்றும் சொல்லாமல் நிறுத்திக் கொண்டார். இதையெல்லாம் சாதாரணமாகச் செய்துவிடுவது போல் நாட்டியம் முடிந்ததும் ஒரு சம்பவம் நடந்தது. டெல்லி மந்திரியைச் சந்திப்பதற்காக மாயா அவசர அவசரமாக மேக்-அப்பைக் கலைத்து விட்டு மேடையிலிருந்து வந்தாள். கைகூப்பியவளைக் கமலக்கண்ணன் - டெல்லி மந்திரிக்கு அறிமுகம் செய்திருக்க வேண்டும். கமலக்கண்ணன் தயங்கியபடி சும்மா இருக்கவே மற்றொருபுறம் அமர்ந்திருந்த ஃபிலிம் வர்த்தக சங்கத் தலைவர் அறிமுகப்படுத்தினார். ஆனால் மாயாவோ டெல்லி மந்திரியிடம் பேசிவிட்டுக் கமலக்கண்ணனை விசேஷப் புன்னகைகளோடு அணுகி, "என்ன? பார்த்து ரொம்ப நாளாச்சே?" என்று தமிழில் குழைந்த போது கமலக்கண்ணனுக்கு - ஒன்றுமே பதில் சொல்ல வரவில்லை. அசடு வழியச் சிரித்தார். ஃபிலிம் சங்கத் தலைவருக்கு கமலக்கண்ணனின் நிலைபுரிந்தது. ஆனால் டெல்லி மந்திரி ஆங்கிலத்தில் மாயாவிடம் கமலக்கண்ணனைப் பற்றி ஏதோ கூறத் தொடங்கவே, "வாட் இஸ் திஸ்.. யூ நீட் நாட் டெல் மீ எபௌட் ஹிம், ஐ நோ ஹிம் ஃபுல்லி வெல்..." என்று மாயாவே உற்சாகமாகப் பதில் கூறினாள். கமலக்கண்ணன் மேலும் அசடுவழிந்தார். மாயாதேவி தன்னை மிக மிகத் தர்மசங்கடமான நிலையில் வைப்பதாகக் கருதி அவள் மேல் கடுங்கோபம் குமுறிப் பொங்கியது அவருள்ளே.


நெஞ்சக்கனல் : கொடி ஏற்றம் காப்பு 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்


தரை தொடாத மழைத்துளி
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
இருப்பு உள்ளது
ரூ.900.00
Buy

கரிப்பு மணிகள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

சென்னையின் கதை
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

பட்டத்து யானை
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

சின்னஞ்சிறு பழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

தன்னம்பிக்கை
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

சேரமான் காதலி
இருப்பு உள்ளது
ரூ.300.00
Buy

வியாபார வியூகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

நாயுருவி
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

உப்பு நாய்கள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

உடல் - மனம் - புத்தி
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

சபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

சிக்கனம் சேமிப்பு முதலீடு
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

நரேந்திர மோடி
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

மகாநதி
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

காசி யாத்திரை
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

இன்னொரு பறத்தல்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

இது நீ இருக்கும் நெஞ்சமடி
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

என் சீஸை நகர்த்தியது யார்?
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


பொது அறிவுத் துளிகள்
இருப்பு உள்ளது
ரூ.35.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)