இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
15 வருடம்
ரூ.1180/-
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது

  புதிய வெளியீடு!2

     புகழாசை என்பது சூதாடுவதைப் போன்றது. தோற்றால் மறுபடி வெல்கிற வரை ஆசை தணியாது. வென்று விட்டாலோ மேலும் மேலும் வெற்றியின் கடைசி உச்சி வரை ஏறிப் பார்க்க வேண்டுமென்று வெறி உண்டாகும். தெரிந்தோ தெரியாமலோ சாதக பாதகங்களை அறிந்தோ அறியாமலோ கமலக்கண்ணனும் இந்தச் சூதாட்டத்தில் மையல் கொண்டுவிட்டார். பணமில்லாமையினால் மட்டுமே மனிதர்கள் தங்களை ஏழைகளாக நினைத்துக் கொள்வதில்லை. விதம் விதமான ஏழைகள், விதம் விதமான பிரிவுகளில் இவ்வுலகில் இருக்கிறார்கள். பணத்தினால் ஏழைகள், புகழினால் ஏழைகள், அறிவினால் ஏழைகள், அந்தஸ்தினால் ஏழைகள் என்று எத்தனையோ வகைகள் இருக்கின்றன. மனிதனுடைய சுயமான இதயம் இருக்கிறதே; அதைச் சொர்க்கம் என்று புகழப்படுகிற இடத்திற்கு அனுப்பிவைத்தால் கூட அங்கும் அது ஏதாவதொன்றிற்காக ஏழைமைப்பட்டு ஏங்கி நிற்கத்தான் செய்யும். இலட்சாதிபதி கமலக்கண்ணன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? பொது வாழ்வின் முதல்படியாகிய மேடையில் தைரியமாக ஏறுவதென்று முடிவு செய்து விட்டார் அவர். மேடையில் ஏறும் ஆசை வந்து விட்டதென்பதற்காக மேடையைப் பற்றிய பயமும் தயக்கமும் போய்விட்டதென்று கொள்வதற்கில்லை. மேடை சொற்பொழிவு, கைதட்டல், முகஸ்துதி இவைகளுக்கு எல்லாமே முற்றிலும் புதியவனான ஒரு பாமரனுக்கு - ஒரு நல்லவனுக்கு முதலில் இவை எல்லாமே அசட்டுத்தனமாகவும் விளையாட்டுத்தனமாகவும் தோன்றும். நாள் ஆக ஆக இதே அசட்டுத்தனங்களையே பலர் மெச்சும்படி செய்து விடுகிற சாதுரியம் வந்துவிடும். 'தான் மட்டும் அசடனாக இருக்கிறோமோ?' என்று பயந்து தயங்குவது போய்த் தன்னால் எதிரே இருக்கிற அத்தனை பேரையும் அசடர்களாக்க முடியும் என்ற துணிவும் நம்பிக்கையும் வந்துவிட்ட பிறகு முதலில் அசட்டுத்தனங்களாகவும், விளையாட்டுத்தனங்களாகவும் தோன்றிய அதே காரியங்கள் வாழ்க்கை நோக்கங்களாகவும், நாளடைவில் இலட்சியங்களாகவும் மாறிவிடும்.

     கடிதங்களில் எல்லாமே கையெழுத்துப் போட்டு முடித்து விட்டுப் பிரசங்கத்தைத் தயாரித்துக் கொடுப்பதற்காக வரவிருக்கும் தமிழ்ப்பண்டிதர் வெண்ணெய்க் கண்ணனாரை எதிர்பார்த்துக் காத்திருந்தார் கமலக்கண்ணன். வெண்ணெய்க்கண்ணனார் என்ற பெயரைப் பார்த்தவுடன் ஏதோ பொன்விழாக் கொண்டாடும் வயதுக்குத் தலை நரைத்த கிழவரென்று நினைத்து விடக்கூடாது. வயது என்னவோ முப்பது முப்பத்திரண்டு தான் இருக்கும். பெற்றோர்கள் அவருக்குச் சூட்டிய நவநீதகிருஷ்ணன் என்ற பெயரை அளவற்ற தமிழ்ப்பற்றுக் காரணமாக இப்படித் தமிழாக்கிக் கொண்டுவிட்டார். நவநீதம் என்றால் வெண்ணெய், கிருட்டிணன் என்றால் கண்ணன் முதலில் 'நவநீத கிருட்டிணன்' என்று தான் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார் பண்டிதர். 'என்ன இருந்தாலும் வடமொழி வடமொழி தானே?' என்று அவருடைய தனித்தமிழ் நண்பர்கள் இடித்துரைக்கப் புகுந்தபின் 'நவநீதகிருட்டிணன்' வெண்ணெய்க் கண்ணன் ஆகி ஓர் ஆரும் கடைசியில் ஒட்டிக் கொண்டு விட்டது. தமிழ்ப் பண்டிதர்களுக்கு எப்போதுமே பெயருக்குப் பின்னால் 'ஆர்' போட்டுக் கொள்வதில் தனி விருப்பம் உண்டு.

     இவரை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தபோது இவருடைய விநோதமான பெயரை எண்ணித் தனக்குத்தானே சிரித்துக் கொண்டார் கமலக்கண்ணன். டெலிபோன் மணி அடித்தது. "தமிழ்ப் பண்டிதர் வந்திருக்கிறார். உள்ளே அனுப்பட்டுமா?" என்று டெலிபோன் ஆபரேடரின் குரல் ஒலித்தது.

     "உடனே அனுப்பிவை..." என்றார் கமலக்கண்ணன். சொல்லி விட்டு டெலிபோனை வைத்த சூட்டோடு பிரசங்கத்தை எழுதிக் கொள்வதற்கான தாள்களையும் பேனாவையும் மேஜைமேல் தயாராக எடுத்து வைத்து ஆயத்தம் செய்து கொண்டார்.

     தமிழ்ப் பண்டிதர் வெண்ணெய்க்கண்ணனார் எனப்படும் நவநீதகிருட்டிணன் அவர்களுக்கு அந்தக் கட்டிடம் ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே பலமுறை நிதி வசூல்களுக்காகவும், நன்கொடை திரட்டுவதற்காகவும் வந்திருந்தும், காத்திருந்தும் பழக்கமான இடம்தான். ஆனால் இப்போது மட்டும் ஒரு வித்தியாசம். நன்கொடைக்காகவும் நிதிக்காகவும் அவராகத் தேடி வரும்போது கமலக்கண்ணனை வந்த உடனே பார்த்து விடமுடியாது. காத்திருந்து ஆட்களிடம் பலமுறை சொல்லி அனுப்பிய பின்புதான் அவரைப் பார்க்கமுடியும்.

     இன்றோ கமலக்கண்ணனே வரச்சொல்லிக் கூப்பிட்டனுப்பியிருந்ததனால் நேரே உள்ளே போக முடிந்தது. கமலக்கண்ணனின் ஏர்கண்டிஷன் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு எதிரே அவர் சுட்டிக்காட்டிய நாற்காலியில் அமர்ந்ததும் இருந்தாற்போலிருந்து, 'ஏர்கண்டிஷன்' என்பதை எப்படித் தனித் தமிழில் சொல்லுவதென்று ஒரு சந்தேகம் வந்தது பண்டிதருக்கு. இப்போதெல்லாம் இப்படிச் சந்தேகங்கள் வருவது அவரைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது. எதைப் பார்த்தாலும் அதற்குத் தனித்தமிழ் என்ன என்று சிந்திப்பதிலேயே அவருடைய பெரும்பாலான நேரம் கழிந்து போய்க் கொண்டிருந்தது. தெருவிலே, ஓட்டலிலே, பொது இடங்களிலே பார்க்கிற விளம்பரப் பலகைகளில் உள்ள பெயர்களை எல்லாம் தமிழாக்கிப் பார்த்து உள்ளூர மகிழ்கிற சுபாவம் அவருக்கு. 'ஏர்கண்டிஷன் ரூம்' என்பதைக் குளிர் அறை என்று கூறலாமா, 'தண்ணறை' என்று கூறலாமா? என்றெல்லாம் சிந்தித்து இரண்டிலும் கடுமையானது 'தண்ணறை' என்பதே. ஆகையால் அப்படியே கூறவேண்டும் என மனதுக்குள்ளே ஒரு முடிவுக்கு வந்தார் அவர். அந்த நேரம் பார்த்துக் கமலக்கண்ணன் குறுக்கிட்டு வினவினார்.

     "என்ன ஐயா புலவரே! என்ன யோசிக்கிறீர்? காபி டீ ஏதாவது குடிக்கிறீரா?"

     "நான் காபி, டீ எதுவும் அருந்துவதில்லை. பால் இருந்தால் பருகலாம்..." என்று கூறியவாறே ஒரே சமயத்தில் கமலக்கண்ணனுடைய வாக்கியங்களில் இரண்டு மூன்று வேற்றுமொழிச் சொற்கள் வந்து விட்டதாக உள்ளூர வருந்தி இருந்தார் வெ.கண்ணனார்.

     "காண்டீனிலிருந்து ஒரு கப் பால் கொண்டுவரச் சொல்" என்று டெலிபோனை எடுத்து உத்தரவு பிறப்பித்தார் கமலக்கண்ணன். பால் வந்தது. புலவர் பாலை எடுத்துப் பருகியபின் கமலக்கண்ணன் அவரிடம் தமக்காக அவர் சொல்லித் தர வேண்டிய பிரசங்கம் எப்படி அமைய வேண்டும் என்பதை விவரிக்கத் தொடங்கினார்.

     "இங்கேயிருந்து எழுபது எண்பது மைலுக்கப்பாலே ஒரு சின்ன கிராமத்திலே 'காந்திய சமதர்ம சேவா சங்கம்'னு ஒரு சங்கம் இருக்குது. அதனோட அனிவர்ஸரிலே பேசணும். இனிமே இது மாதிரி நம்மைப் பேசக் கூப்பிடற இடங்களுக்கெல்லாம் நானும் பேசப் போகலாம்னு நினைக்கிறேன்... அதுக்கெல்லாம் உங்க உதவி ரொம்பத் தேவைப்படும்... நான் செய்ய வேண்டிய பிரசங்கத்தை நீங்க டிக்டேட் செய்தீங்கன்னா, அப்படியே எழுதிக்குவேன், ஒரு தரம் எழுதிக்கிட்டா எழுதறப்பவே எனக்குப் பாதி மனப்பாடம் ஆயிடும்..."

     "அதற்கென்ன? தங்கள் சொற்பொழிவை உருவாக்கிக் கொடுப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சியே."

     "அது சரி! உங்களைப் போலத் தமிழ் வாத்திகள்ளாம் மேடை மேலே மூச்சுவிடக்கூட இடைவெளி இல்லாமச் சரமாரியாப் பொழியுறாங்களே? அது எப்படி முடியுது? எங்களுக்கெல்லாம் ரெண்டு வார்த்தை சேர்த்துப் பேசறதுக்குள்ள கை பதறுது, கால் நடுங்குது, நாக்கு வறளுது... என்னென்னமோ செய்யுதே..."

     "பயிற்சியும், பயிற்சியின்மையுமே காரணம்..."

     "பயிற்சின்னா... எக்ஸ்பீரியன்ஸ்... அதைத்தானே சொல்றீங்க நீங்க..."

     "ஆம்! அதனையே குறிப்பிட்டேன். பயிற்சியால் ஆகாததொன்றில்லை. சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்."

     "பிரசங்கத்தைச் சொல்றீங்களா? எழுதிக்கிறேன்..."

     "தொடங்கலாமா?..."

     "சும்மா சொல்லுங்க...நேரமாகுது..."

     "முதற்கண்..."

     "அதென்ன முதல்கண்ணு ரெண்டாங்கண்ணுன்னு?"

     "அல்ல! அல்ல! 'முதற்கண்' என்றால் முதலில் என்று தான் பொருள்... எழுதுங்கள்..."

     "ஓய் பண்டிதரே! இதோ பாரும்...! முதல்லே ஒரு சங்கதியைத் தெளிவா நீரு தெரிஞ்சுக்கணும். நீர் எனக்குத் தயாரிச்சுக் கொடுக்கிற பிரசங்கம் நான் பேசினா எப்படி இருக்குமோ அப்படியிருக்கணுமே ஒழிய நீர் பேசினா எப்படியிருக்குமோ அப்படியிருக்கப்படாது. நீருபாட்டுக்கு 'முதற்கண்' அது இதுன்னு கடுந்தமிழா அடுக்கிட்டீருன்னா கேக்கறவனுக்கு உம்மைப்போல ஒரு புலவர் தான் பிரசங்கத்தைத் தயாரிச்சுக் கொடுத்திருக்கணும்னு புரிஞ்சு போயிடும். இதெல்லாம் ரொம்ப நாசூக்காகச் செய்து கொடுக்கணும் நீர்! நான் சொல்லுறது மனசிலே ஆகுதா? இல்லையா?"

     புலவர் பயந்த படியே தலை அசைத்தார்.

     "முதல்லே உங்களுக்கெல்லாம் என் வணக்கம்னு போட்டுக்கறேன்..."

     "அப்புறம் என்ன பேசமலாம்னு சொல்லும்..."

     "இச்சிற்றூரில் கடந்த சில ஆண்டுகளாக இக்கழகம் சீரிய பணிகள் பல ஆற்றி வருகிறதென்று நான் பலர் வாயிலாகக் கேள்விப்பட்டுள்ளேன்..."

     "அது சரி; நான் அப்படியெல்லாம் ஒண்ணும் கேள்விப்படலியே ஐயா?"

     "படவில்லையெனினும் இங்ஙனம் சொல்லித் தொடங்குதல் ஒரு மரபு..."

     "மரபுன்னா என்னாய்யா?"

     "தொன்று தொட்டு வரும் முறைமை."

     "இப்ப நீர் சொல்ற இந்த அர்த்தம் மரபுங்கிறதை விட இன்னுமில்ல கடுமையாயிருக்கு..?"

     "எதற்கும் தாங்கள் தமிழ்க் கையகராதி ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுதல் நல்லது. இது போன்ற நேரங்களில் பெரிதும் பயன்படும்..."

     "இப்பவே வாங்கியாரச் சொல்றேன்! அது எங்கே கிடைக்கும்னு மட்டும் சொல்லுங்க" - என்று உற்சாகத்தோடு உடனே கேட்டார் கமலக்கண்ணன். வெண்ணெய்க்கண்ணனார் உடனே அந்த இடத்திலிருந்து மிக அருகிலுள்ள ஒரு புத்தகக் கடையின் பெயரைக் கூறவே, கமலக்கண்ணன் டெலிபோனை எடுத்துப் புத்தகத்தை வாங்கிவர உத்தரவிட்டார். பத்தே நிமிடங்களில் ஒரு புதிய தமிழகராதி அவருடைய மேஜைக்கு வந்து விட்டது.

     "இதோ இப்ப உம்ம முன்னாடியே நீ சொன்ன வார்த்தைகளில் எனக்குப் புரியாததுக்கு உடனே இந்த அகராதியிலே அர்த்தம் பார்க்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே கமலக்கண்னன் ஒரு நிமிசம் யோசித்துத் தயங்கிய பின் "என்ன சொன்னீரு? மறந்தில்ல போச்சு? அதை இன்னொரு தரம் சொல்லுமேன் பார்க்கலாம்..." என்றார்.

     "இச்சிற்றூரில் கடந்த சில ஆண்டுகளாக இக்கழகம் சீரிய பணிகள் பல ஆற்றி வருகிறது என்று நான் பலர் வாயிலாகக் கேள்விப்பட்டுள்ளேன்..." எனக் கிளிப்பிள்ளைபோல் மறுபடியும் அந்த வாக்கியத்தைச் சொன்னார் புலவர். அதை ஒவ்வொரு வார்த்தையாக உற்றுக் கேட்ட பின்,

     "இதிலே கழகம்கிற வார்த்தைக்கும் சீரியங்கிற வார்த்தைக்கும் எனக்கு அர்த்தம் புரியலே. அதை இதிலே பார்க்கிறேன்" - என்று கூறியபடியே அகராதியின் பக்கங்களைப் புரட்டலானார் கமலக்கண்ணன். வேண்டிய பக்கம் உடனே கிடைக்காததனால் தமிழ் அகராதியின் மேலேயே கோபம் கோபமாக வந்தது அதிகம் பொறுமையில்லாத அந்த வியாபாரிக்கு. கடைசியாகக் 'கழகம்' என்ற வார்த்தை இருந்த பக்கத்தைக் கண்டுபிடித்து விட்டார் அவர், அர்த்தத்தையும் பார்த்துக் கொண்டார். ஆனால் தாம் பார்த்த அர்த்தத்தை உடனே வாய்விட்டுப் படித்து விடாமல் 'கழகம்' என்றால் என்ன ஐயா அர்த்தம்? நீரேதான் சொல்லுமே; பார்க்கலாம்?" - என்று வெண்ணெய்க் கண்ணனாருக்கே ஒரு பரீட்சை வைப்பது போல் அவரைக் கேட்டார் கமலக்கண்ணன்.

     "கழகம் என்றால் சங்கம், மன்றம் என்று பொருள்படும். காந்திய சமதர்ம சேவா சங்கத்தில் வருகிற சங்கம் என்ற பதத்தையே தனித்தமிழிலில் அவ்வாறு 'கழகம்' என்று குறித்தேன்..."

     "தப்பு ஐயா! இதிலே பாரும்... கழகம் என்பதற்கு நேரே சூதாடுமிடம்' என்று அர்த்தம் போட்டு சாட்சிக்குத் 'திருக்குறள் 935ஐப் பார்க்க'ன்னு வேறே போட்டிருக்கான். என்னய்யா தமிழ் பெரிய வம்பா இருக்குதே? நான் அந்தச் சங்கத்தைக் கழகம்'னு சொல்லி அவனும் அதை இந்த அகராதியிலே போட்டிருக்கிற மாதிரி அர்த்ததிலே புரிஞ்சுக்கிட்டான்னா என்ன ஆகும்? எவ்வளவு அனர்த்தமா முடியும்?" - என்று வெண்ணெய்க் கண்ணனாரை நோக்கிக் கூப்பாடு போடத் தொடங்கிவிட்டார் கமலக்கண்ணன். வெண்ணெய்க் கண்ணனாருக்கோ அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று பயமாகப் போயிற்று. மென்று விழுங்கித் தயங்கித் தயங்கிப் பேசினார் அவர்.

     "ஒரு காலத்தில் அச்சொல்லுக்கு அப்பொருள் இருந்திருக்கலாம். இன்று அப்படியில்லை."

     "அதெப்படி? நீர் சொல்லிவிட்டாப்பில ஆச்சா அகராதிக்காரன் கொட்டை எழுத்திலே 'சூதாடுமிடம்'னு போட்டிருக்கானே?"

     "சரி! நீங்கள் தயங்கினால் வேண்டாம்! அந்த இடத்தில் கழகம் என்ற வார்த்தைக்குப் பதில் சங்கம் என்றே போட்டுக் கொள்ளுங்களேன்..."

     "'சிற்றூர்'னும் வேண்டாம் ஐயா! அதையும் கிராமம் என்று மாத்திக்கிறேன்..."

     "சரி, உங்கள் விருப்பம்..."

     "சீரிய பணிகள்'ங்கிறத்துக்குப் பதிலா என்ன போடலாம்?"

     "அதிலே ஒன்றும் தவறோ பொருட்பிறழ்ச்சியோ இல்லையே? அது அப்படியே இருக்கலாமே?"

     "எதுக்கு வம்பு? தெளிவா எனக்குப் புரியற மாதிரி மாத்திப்பிடுவமே?"

     "நல்ல பணிகள் என்று வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்களேன்."

     "சபாஷ்! அப்படிச் சொல்லும்! அது நல்லாப் புரியிற வார்த்தையாயிருக்கு" - இப்படியே பண்டிதர் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் கமலக்கண்ணன் திருத்த; கமலக்கண்ணன் திருத்திய ஒவ்வொரு வார்த்தையும் கொச்சையாயிருக்கிறதே என்பதற்காகப் பண்டிதர் வாதிட்டு வருந்த, அந்தப் பத்து நிமிஷப் பிரசங்கத்தைத் தயாரித்து முடிக்க இரவு 8 மணிவரை ஆகிவிட்டது. அலுவலகத்தில் கமலக்கண்ணனின் ஸ்டெனோவும் காரிய தரிசியும் தவிர மற்றவர்கள் எல்லாம் வீட்டுக்குப் போயிருந்தார்கள். நிறைய நாற்காலிகளும், மேஜையுமாக ஹால் வெறிச் சென்றது. குளுமையாக ஒளி பொழியும் டியூப் விளக்குகள் எல்லாம் எரிந்து கொண்டிருந்தன. ஓடாமல் தெரிந்த மின் விசிறிகள் அவ்வளவும் தனிமைக்குச் சுருதி கூட்டுவது போல் அவ்வளவு பெரிய ஹாலில் கோரமாகக் காட்சியளித்தன.

     தமிழ்ப்புலவர் வெண்ணெய்க்கண்ணனார் ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு எழுந்து நின்றார். 'புறப்படதயாராகி விட்டேன்' - என்பது அந்தக் கனைப்பின் பொருள். கமலக்கண்ணனும் இருக்கையிலிருந்து எழுந்து அவரை வழியனுப்ப உடன் வருகிறவர் போல் அறையிலிருந்து வெளியே வந்தார். வெளியே வந்ததும் அங்கே தயாராக நின்று கொண்டிருந்த தம்முடைய காரியதரிசிக்குக் கமலக்கண்ணன் ஏதோ ஜாடை காட்டினார். உடனே காரியதரிசி ஒரு கவரை எடுத்துக் கொண்டுவந்து கமலக்கண்ணனிடம் கொடுத்தார். அதைக் கையில் வாங்கி கொண்ட கமலக்கண்ணன் புலவருக்கு விடை கொடுக்கிற தோரணையில் முகம் மலர்ந்தார். ஒருவரை வரவேற்கும் போது இப்படி முகம் மலர வேண்டும். வியாபாரியாயிருந்தால் இப்படி, உறவினராயிருந்தால் இப்படி, விரோதியாயிருந்தால் இப்படி என்றெல்லாம் பழக்கத்தில் கச்சிதமாக தேர்ந்திருந்தார் அவர்.

     கையில் இருந்த உறையைப் புலவரிடம் கொடுக்கப் போனவர் ஒரு விநாடி தயங்கிவிட்டு, "புலவரே! ஒரு நிமிஷம் இப்படி உள்ளே வாரும், தனியாக உம்மிடம் ஒரு விஷயம் சொல்லணும்" என்ரு அவரை மீண்டும் அறைக்குள் அழைத்துக் கொண்டு போனார் கமலக்கண்ணன்.

     "எனக்குப் பிரசங்கம் எழுதிக் கொடுத்தேனின்னோ, சொல்லிக் கொடுத்தேனின்னோ, வெளியிலே யாரிடமும் சொல்லப்படாது. பெரிய இடத்திலே பழகறப்போ நடந்துக்க வேண்டிய இங்கிதம்லாம் உமக்கேத் தெரியும்னு நினைக்கிறேன். நான் இதெல்லாம் சொல்லாமலே உமக்குத் தெரியணும். எதுக்கும் இப்ப உமக்கு ஞாபகப்படுத்தி வைக்கிறேன் இந்தாரும்! இதை வச்சுகோரும். அப்பப்போ என்னால் இப்படி முடிஞ்சதைச் செய்யறேன்" என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் அதே ரெடிமேட் புன்முறுவலோடு உறையைப் புலவரிடம் நீட்டினார் கமலக்கண்ணன்.

     இதைக் கேட்டுப் புலவர் நாணிக் கோணியபடியே உறையை வாங்கிக்கொள்ளத் தயங்கியவர் போல் நடித்துக் கொண்டே,

     "இதெல்லாம் எதற்கு? உங்களுக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன்" என்று குழைந்தார். ஆனால் கைகள் என்னவோ பழக்கத்தால் தாமாகவே முன் நீண்டு உறையை வாங்கிக் கொண்டன.

     "இந்தாப்பா! இவரைச் சின்ன வண்டிலே கொண்டுபோய் 'டிராப்' பண்ணிடச் சொல்லு" என்று காரியதரிசிக்கு அடுத்த உத்தரவைப் போட்டார் கமலக்கண்ணன்.

     புலவர் முகமெல்லாம் பல்லாகச் சிரித்துக் கொண்டே கமலக்கண்ணனை நோக்கிக் கை கூப்பினார்.

     "சரி! அப்புறம் பார்க்கலாம். நான் சொன்னது மட்டும் ஞாபகமிருக்கட்டும்" என்று மறுபடியும் எச்சரிப்பது போல் கூறினார் கமலக்கண்ணன். புலவர் புறப்பட்டார். கம்பெனி கார் டிரைவர் வந்து அவரை வண்டி நின்று கொண்டிருந்த இடத்துக்கு அழைத்துக் கொண்டுபோய்க் கதவைத் திறந்துவிட்டு மரியாதையாக உள்ளே ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். கார் புறப்பட்டதும் காருக்குள் இருந்தபடியே அவசர அவசரமாக தனது ஜிப்பா பையிலிருந்து உறையை எடுத்துப் பிரித்துப் பார்த்தார் புலவர். புதிதாகப் பத்து ஐந்து ரூபாய் நோட்டுக்கள் உறைக்குள் புத்தம் புதிதாக வெளுத்தது போல மின்னின. 'ஐம்பது வெண் பொற்காசுகள்!' என்று தனக்குத்தானே அந்த வெகுமதியைத் தனித்தமிழில் சொல்லிப்பார்த்துப் பெருமைப்பட்டுக் கொண்டார் புலவர் வெண்ணெய்க்கண்ணனார். இடையிடையே டிராபிக் ஸிக்னலுக்காகக் கார் நின்ற இடங்களில் அவருக்குத் தெரிந்தவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பெயர் சொல்லி உரத்தக் குரலில் கூப்பிட்டுத் தாம் அமர்ந்திருந்த காரின் அருகே வரவழைத்து வணக்கம் தெரிவித்தார் புலவர் வெண்ணெய்க்கண்ணனார். அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்பதைவிட முக்கியமாக அப்படி பளீரென்ற கார் ஒன்றில் தாம் தனியே அமர்ந்து கம்பீரமாகச் சவாரி செய்வதை அவர்கள் எல்லாரும் பார்க்கும்படியாகச் செய்து விடவேண்டும் என்பதே அவருடைய நோக்கமாயிருந்தது.

     சிலரிடம், "கமலக்கண்ணன் ஒரு முக்கிய காரியமாக வண்டி அனுப்பிக் கூப்பிட்டார். போய்விட்டு வருகிறேன்..." என்றும், இன்னும் சிலரிடம், "ஒரு காரியமாகப் போகிறேன். அப்புறம் பார்க்கலாமே" என்றும் கூறினார் வெண்ணெய்க்கண்ணனார்.

     கார் டிரைவர் தனக்குள் சிரித்துக் கொண்டான். ஏறுவதற்கோ இறங்குவதற்கோ கார்க் கதவைத் திறப்பதற்குக் கூடத் தெரியாத இந்தத் தமிழ்ப் பண்டிதர் செய்கிற ஜபர்தஸ்தைப் பார்த்து அவனுக்குச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது. அவரைக் கொண்டு போய் இறக்க வேண்டிய இடம் புரசைவாக்கத்தில் ஒரு சிறிய சந்து. சந்தின் முனையை நெருங்கிய போது தான் அது 'நோ எண்ட்ரி' என்று தெரிந்தது. சந்தின் மறுமுனை 'எண்ட்ரி' ஆக இருக்க வேண்டும். இந்த நிலைமையில், "ஐயாவுக்கு இந்தச் சந்திலே எத்தினியாவது வீடு?" என்று காரை நிறுத்திக் கொண்டு மெதுவாகக் கேட்டான் டிரைவர்.

     "இந்தச் சந்திலே கீழ் வரிசையிலே ஐந்தாவது வீடு! வாசலிலேயே பெயர்ப்பலகை மாட்டியிருக்கும் 'தொல்காப்பியர் இல்லம்'னு" என்றார் வெண்ணெய்க்கண்ணனார். தான் சொல்கிற குறிப்பை நாசூக்காகப் புரிந்து கொள்ளத் தெரியாத அந்தப் புலவர் மேல் கோபம் கோபமாக வந்தது டிரைவருக்கு. புத்திக் கூர்மையும் சந்தர்ப்ப ஞானமும் உள்ள பாமரனுக்கு அவை சிறிதுமில்லாத மரத்துப்போன அறிவாளியின் மேல் உண்டாகிற ஆத்திரம் அது. சமயோசிதமில்லாத மேதையின் மேல் சமயோசிதமும் குறிப்புணரும் திறனுமுள்ள சாதாரண மனிதனுக்குச் சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாமலும் தடுக்க முடியாமலும் ஏற்படுகிற ஆத்திரத்தின் வகையைச் சேர்ந்தது அது.

     புலவரோ தம் வீட்டிலுள்ளார் அனைவரும் காண அண்டை வீட்டிலுள்ளோர் அனைவரும் காண, அண்டை அயல் வீட்டிலுள்ளோர் யாவரும் வியக்க, தம் வீட்டின் வாயிற்படிக்கு ஒரு அங்குலம் கூட அந்தப் பக்கம் இந்தப்பக்கம் விலகிவிடாமல் நூலிழை பிடித்தாற்போல் போய்க் கார் நிற்க வேண்டுமென்று அந்தரங்கமாக ஆசைப்படுவது தெரிந்தது.

     "நோ எண்ட்ரி போட்டிருக்கானே? இங்கேயே விட்டிடறேன். தயவுசெஞ்சு சிரமத்தைப் பார்க்காமே நடந்து போயிடறீங்களா ஐயா?" என்று விநயமாகச் சொல்லிப் பார்த்தான் டிரைவர். அதையும் புலவர் செவியுற்றுக் கேட்டதாகத் தெரியவில்லை.

     "சந்துமுனை ஒரே சேரும் சகதியுமாக இருக்கும். நான் வழக்கமாகவே இப்பகுதியில் நடந்தே செல்வதில்லை. ரிக்‌ஷாவில் தான் செல்லுவேன்" என்று நிர்த்தாட்சண்யமாகப் புலவரிடமிருந்து பதில் வந்தது.

     "சரிதான் இறங்கி நடய்யா" என்று ஆத்திரம் தீரக் கத்தி விடலாம் போல எரிச்சலாயிருந்தது அவனுக்கு. திரும்பிப் போனால் ஐயா கோபித்துக் கொள்வாரே என்றும் பயமாயிருந்தது. அக்கம் பக்கத்தில் ஒருமுறை பார்த்து விட்டு 'நோ எண்ட்ரி' யாக இருந்தாலும் பாதகமில்லை என்று வண்டியைத் திருப்பி 'ரிவர்ஸில்' உள்ளே விட்டுப் புலவர் வீட்டுவாயிலில் அவரை இறங்கச் சொல்லித் துரிதப்படுத்தினான் டிரைவர். புலவருக்கோ ஒரே வருத்தம். காரைத் தமது 'தொல்காப்பியர் இல்லம்' வரை விடுத்த டிரைவன் (டிரைவருக்கு அவர் கண்டு பிடித்த ஒருமை) முன் முகமாக விடுக்காமல் பின் முகமாக விடுத்ததும் அண்டை அயலார் தான் அத்தகு காரொன்றிலிருந்து இறங்கும் சீர்மையைக் காண முடியாது விரைந்து இறங்கச் சொல்லித் துரிதப்படுத்துகிறானே என்பதும் அவரை அதிருப்திக்குள்ளாக்கிவிட்டன. அதிருப்தியுடன் தான் அவர் உள்ளே இறங்கிச் சென்றார். 'விட்டது சனி' என்பதுபோல் சொல்லிக் கொள்ளாமல் கூடக் காரை விட்டுக்கொண்டு ஓட்டமெடுத்தான் டிரைவர். கார்க்கதவைப் பயந்து கொண்டே அடைத்திருந்தார் புலவர். அதை மறுபடியும் திறந்து நன்றாக அடைத்துக் கொள்கிற சாக்கில் படீரென்று அறைந்து அடைத்தான் டிரைவர். புலவருக்கோ அப்படிச் செய்ததன் மூலம் அவன் கோபமாகத் தன் முகத்திலறைவது போலிருந்தது. அவருக்கு டிரைவர் மேல் கோபம் கூட வந்தது. சமயம் வாய்க்கும் போது அந்த 'டிரைவனை'ப் பற்றிக் கமலக்கண்ணனிடம் ஒரு வார்த்தை போட்டுவைக்க வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டார் புலவர்.

     டிரைவர் புலவரை இறக்கி விட்டுப் புறப்பட்ட இடமாகிய கம்பெனி அலுவலகத்துக்குப் போகாமல் இராயப்பேட்டையிலிருந்த கமலக்கண்ணனின் பங்களாவுக்குத் திரும்பிப் போனான். கமலக்கண்ணன் பெரிய காரில் கம்பெனியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தார். அலுவலக உடைகளை எல்லாம் கழற்றிவிட்டு ஒரு சாதாரண வேஷ்டி ஜிப்பா அணிந்து முன் ஹாலில் உட்கார்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார் கமலக்கண்ணன். அவருடைய இன்னொரு கையில் அந்தப் பிரசங்கம் எழுதிய தாள்களின் கத்தை இருந்தது.

     பள்ளிக்கூடத்தில் சேரப்போகும் நாளை எண்ணும் ஒரு சிறு குழந்தை அல்லது திருமண நாளை கற்பனைச் செய்யும் ஒரு பட்டிக்காட்டு மணப்பெண்ணைப் போன்ற மனநிலையில் தமது முதற் பிரசங்கம் பற்றிய சிரத்தையான தயாரிப்புக்களில் ஈடுபட்டிருந்தார் அந்த வியாபாரி. நவநாகரிகப் பெண்மணியும் தோற்றத்தில் அவருடைய மகளைப் போன்ற அவ்வளவு இளமையுடையவளுமான அவர் மனைவி எதிரே இன்னொரு சோபாவில் அமர்ந்து புதிதாக வந்திருந்த 'பெர்ரிமேஸனை'ப் படித்துக் கொண்டிருந்தாள்.

     புலவர் வீட்டிலிருந்து திரும்பிய டிரைவர் வண்டியைப் போர்டிகோவில் விட்டுவிட்டுத் தயங்கித் தயங்கி உள்ளே வந்து ஹால் கதவோரமாக நின்று தலையைச் சொரிந்தான்.

     "அவரைக் கொண்டு போய் விட்டாச்சுங்க..."

     "ரொம்ப சரி! வீடு இருக்கிற இடத்தை நல்லா ஞாபகம் வச்சிக்கோ முனிசாமி! அடிக்கடி நீதான் அவரைப் போய் கூட்டிக்கிட்டு வரவேண்டியிருக்கும்..." என்றார் கமலக்கண்ணன்.

     "சரிங்க... எனக்கு நல்லா நினைவிருக்கு. கெல்லீஸ் போற வழிலே ஒரு சந்திலே இருக்காருங்க..." என்று மீண்டும் தலையைச் சொரிந்தான் டிரைவர்.

     "அதோட இன்னோரு விஷயம் முனிசாமி! திண்டிவனத்துக்குப் பக்கத்திலே ஒரு சின்னக் கிராமத்திலே அடுத்த வாரம் ஒரு ஆண்டுவிழா இருக்கு. அந்த ஊருக்கு மெயின் ரோடிலே இருந்து விலகிப் பக்கத்திலே சின்ன ரோடிலே போகவேண்டியிருக்கும் போலிருக்கு. அதுனாலே நீதான் சின்னக்காரை எடுத்துக்கிட்டு எங்கூடவரணும்" - என்றார் கமலக்கண்ணன். அப்படிச் சொல்லியதன் மூலம் அவர் நினைவில் இடைவிடாமல் அந்தக் காந்திய சமதர்ம சேவா சங்கமும் அதனுடைய ஆண்டுவிழாவும், அந்த ஆண்டுவிழாவில் தாம் தலைமை வகித்துப் பேச இருப்பதையும், அந்தப் பேச்சைத் தாம் தயாரித்திருக்கும் விதத்தையும் அது மேடையில் பேசப்படும் போது பலர் கைதட்டப் போவதையும் எண்ணி எண்ணிக் கற்பனைகளிலும் சுகங்களிலும் மூழ்கிக் கொள்ளும் நிலைமை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

     "நீங்களா? மேடையிலே தமிழிலே பேசப்போறீங்க?"

     என்று ஒரு விநாடி பெர்ரிமேஸனிலிருந்து தலையை நீட்டி விசாரித்தாள் மிஸஸ் கமலக்கண்ணன்.

     "ஏன்? அதிலென்ன சந்தேகம்? நான் தான் பேசப்போகிறேன். நீயும் கூட வாயேன். மிஸஸ் கமலக்கண்ணனும் இந்தக் கூட்டத்திற்கு வந்து சிறப்பித்ததற்காக எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" - என்று உனக்கும் சேர்த்துக் கூட அந்தக் கூட்டத்தில் நன்றி கூறுவார்கள். நான் இனிமே தலைமை தாங்கல், சொற்பொழிவு செய்வது எல்லாத்துக்கும் ஒப்புக் கொள்ளலாம்னு நினைக்கிறேன். நீயும் கூட அதுக்கு ஒத்துழைக்கணும். நான் பிரமுகராகறாதுன்னா அதற்கு நீயும் உதவி செய்தால் தான் முடியும். 'மிஸஸ் கமலக்கண்ணன் பரிசு வழங்குவார்' - என்று நிகழ்ச்சி நிரலில் உன் பெயரைப் போட்டால் நீயும் வந்து கூட்டங்களில் கலந்துகொண்டு பரிசு வழங்கணும்" - என்றார்.

     அவர் இப்படிக் கூறியவுடன் மறுபடியும் பெர்ரிமேஸன் முகத்திலிருந்து விலகியது. அந்த அம்மாள் ஒரு விநாடி தலை நிமிர்ந்து, "அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா! மீசை முளைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்" - என்று சிரித்துக் கொண்டே கூறியது அவருடைய இந்தப் புதிய நைப்பாசையைக் கொஞ்சம் கேலி செய்வது போல் கூட இருந்தது.

     அந்தக் கேலியைக் காதில் வாங்கிக் கொள்ளாதவர் போல் மௌனமாக இருந்துவிட்டார் அவர். கூட்டம், பிரசங்கம் என்றாலே காதவழி பயந்து ஓடும் தன் கணவனுக்கு இப்போது அவற்றில் எல்லாம் ஆசையும், பற்றுதலும் வந்திருப்பதை அந்த அம்மாளால் உடனே அங்கீகரித்து விட முடியவில்லை. அவள் அங்கீகரிக்காமல் கேலி செய்ததை அவரும் அப்போது பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் அவள் தன்னோடு காந்திய சமதர்ம சேவா சங்கத்துக்கு வரமாட்டேனென்றது மட்டும் அவருக்குப் பிடிக்கவில்லை. அவள் வர இணங்குவாள் என்றே எதிர்பார்த்தார் அவர். அவள் வரமாட்டேனென்றதை மட்டும் அவரால் இரசிக்க முடியவில்லை.


நெஞ்சக்கனல் : கொடி ஏற்றம் காப்பு 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்


ஆரம்பம் ஐம்பது காசு
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

எளிய தமிழில் சித்தர் தத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

துயில்
இருப்பு உள்ளது
ரூ.475.00
Buy

மூலிகை மந்திரம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

ரமணர் ஆயிரம்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

மனசு போல வாழ்க்கை 2.0
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

Power And Protocol For Getting To The Top
Stock Available
ரூ.270.00
Buy

மேன்மைக்கான வழிகாட்டி 1
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

நிஜமாகா நிழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

உடம்பு சரியில்லையா?
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

The Miracle of Positive Thinking
Stock Available
ரூ.225.00
Buy

Discover Your Destiny
Stock Available
ரூ.270.00
Buy

நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

சாமானியனின் முகம்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

ரயில் நிலையங்களின் தோழமை
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

உறுபசி
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

அதிர்ந்த இந்தியா
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

கூண்டுக்கு வெளியே
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

நாட்டுக் கணக்கு – 2
இருப்பு உள்ளது
ரூ.260.00
Buy

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


விடுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.10.00
Buy

பொது அறிவுத் துளிகள்
இருப்பு உள்ளது
ரூ.35.00
Buy

ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)