இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்

4. காம மஞ்சரி

     சிறிது நேரத்திலேயே சிறைப் பட்டிருந்த நால்வரையும் ஒவ்வொருவராக அந்த மந்திராலோசனைக் குழுவினரின் முன் கொண்டுவந்து நிறுத்தினான் பூதபயங்கரப் படைத் தலைவன்.

     முதலில் ஒரு வேங்கைப் புலியை இரும்புச் சங்கிலியிட்டுப் பிணைத்து இழுத்து வருவது போல் தென்னவன் மாறனை இழுத்து வந்தார்கள். அடுத்துக் காண்பவர்களைப் பயமுறுத்தும் பூதாகரமான தோற்றத்தோடு திருமோகூர் அறக்கோட்டத்து மல்லன் இழுத்து வரப் பட்டான். அவனைத் தொடர்ந்து அகநகரில் அவிட்டநாள் விழாவன்று சிறைப்பட்டவர்கள் வந்தனர்.

     அரசகுரு மாவலி முத்தரையர் தம் இருக்கையிலிருந்து எழுந்து சிறையிலிருந்து கொண்டு வந்து நிறுத்தியவர்களை நெருங்கிக் கூர்ந்து கவனிக்கலானார். ஒவ்வொருவராகச் சுற்றிச் சுற்றிப் பார்ப்பது அங்கம் அங்கமாக அளந்தெடுப்பது போல் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி வந்து, தென்னவன் மாறன் அருகிலேயே நிலைத்து நின்று அவனை வைத்தகண் வாங்காமல் உற்றுப் பார்க்கலானார் அவர்.

     “இந்தப் பிள்ளையாண்டானை எங்கே சிறைப் பிடித்தாய்?” என்று மாவலி முத்தரையர் பூதபயங்கரப் படைத் தலைவனைக் கேட்டவுடனே அவன் ஒரு சிறிதும் தயங்காமல், “இவனையும் அதோ அந்த முரட்டு மல்லனையும் திருமோகூர்ப் பெரியகாராளர் வீட்டு முன்றிலில் சிறைப்பிடித்தோம்” என்று மறுமொழி கூறினான்.

     மேலும் சில விநாடிகள் தென்னவன் மாறனின் முகத்தையே ஏதோ வசியம் செய்வதற்குப் பார்க்கிறவர்போல் இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றார் மாவலி முத்தரையர்.

     பின்பு நிதானமாகத் தம்முடைய பாதக் குறடுகள் ஒவ்வொரு முறை அடி பெயர்ந்து வைக்கும் போதும் நடைக்குத் தாளமிடுவது போல் ஒலிக்க நடந்து கலிய மன்னனின் அருகே சென்று கூறலானார்:

     “இந்த நால்வரில் இதோ புலித்தோல் அங்கி அணிந்திருக்கிறானே; இவனிடம் தான் சாமுத்திரிகை இலக்கணத்துக்குப் பொருந்திய சாயல்கள் உள்ளன. இவர்களில் இவன் அரச மரபைச் சேர்ந்தவனாக இருப்பானோ என்பது என் ஐயப்பாடு ஆகும்...”

     “ஆம் என் சந்தேகமும் அதுதான்! இந்த அரண்மனையின் பழமையான ஓவிய மாடத்தில் உள்ள பல பாண்டிய இளவரசர்களின் ஓவியங்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே இவன் தோற்றமும் இருக்கிறது. இவனைச் சிறிதும் தாமதியாமல் சிரச்சேதம் செய்தால் என்ன மாவலி முத்தரையுரே?”

     “கூடவே கூடாது! ஆத்திரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிடாதே கலியா! ‘கைக்காடையை விட்டுக் காட்டுக் காடைகளைப் பிடிக்க வேண்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. இவனை வைத்து இவனோடு சேர்ந்தவர்களையும் இவனைப் போன்று இயங்குகிறவர்களையும் ஒவ்வொருவராகப் பிடிக்க வேண்டும்.”

     “ஆம், அந்த தென்பாண்டி மதுராபதி வித்தகன் உட்பட அனைவரையும் பிடிக்க வேண்டும்.”

     “அவசரப்படாதே கலியா! காடைகளைத்தான் வலையில் பிடிக்கலாம், சிங்கங்களை வலையில் பிடிக்க முடியாது.”

     “நன்மை தருவார் குலத்துக் கிழச் சிங்கம் அவ்வளவு சுலபமாக உனக்குக் கிடைத்து விடாது.” - இதைச் சொல்லும் போது மாவலி முத்தரையரின் குரல் சலனமில்லாத உறுதியுடன் இருந்தது. அவர்கள் பாலியில் பேசிக் கொண்டிருந்தார்கள். பதினாறடி வேங்கை வரிப்புலியை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நிறுத்தியது போல் தென்னவன் மாறன் சீற்றம் கனலும் விழிகளோடு நின்று கொண்டிருந்தான்.

     திடீரென்று பூதபயங்கரப் படைத் தலைவனை நோக்கி “அந்தப் புலித்தோல் அங்கியைக் கிழித்தெறி! சிறைப் பட்டிருப்பவனுக்கு அங்கி என்ன கேடு” என்பதாக இடி முழங்கும் குரலில் இரைந்தான் கலியமன்னன்.

     அந்தக் காட்டு வேங்கையை நெருங்கவே பயமாயிருந்தாலும் அதன் கைகளும், கால்களும் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டதால் நீங்கிய பயத்தோடு அங்கே நெருங்கித் தன் வாளால் அங்கியை அகற்றினான் பூதபயங்கரப் படைத்தலைவன். அங்கி கீழே விழுந்தபோது அந்த வீரனின் பரந்த மார்பில் வாள் சற்றே அளவுக்கு மீறிப் பதிந்து விட்டதால் குறுக்கே ஒரு செங்கோடு இழுத்தது போல் இரத்தக் கீறல் தெரிந்தது.

     இரண்டு தினங்களாக உண்ணாததால் தளர்ந்திருந்த தென்னவன் மாறனுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. நடுமார்பில் இரத்தக் கீறலும், கால்களிலும், கைகளிலும் இரும்புச் சங்கிலிகளின் கனமுமாக அவனை நெடுநேரம் நிற்கவிடாமல் செய்ததோடு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.

     அந்த நிலையில் அரசனருகே நின்றிருந்த மாவலி முத்தரையர் கீழே நின்றிருந்த தென்னவன் மாறனிடம் ஏதோ காணாததைக் கண்டுவிட்டதைப் போன்று விரைந்து வந்தார். அவர் அவனருகே வந்து அவனுடைய வலது தோளின் மேற்பகுதியின் பொன்நிறச் சருமத்தில் முத்திரையிட்டது போல் அழகாகத் தெரிந்த அந்தச் சங்கு இலச்சினையைத் தொட முயன்ற போது கடுங்கோபத்துடன் அவரை மோதி கீழே தள்ளி விடுகிறவன் போல் அவர் மேல் பாய்ந்தான் தென்னவன்மாறன். ஆத்திரமடைந்த மாவலி முத்தரையர் வலது முஷ்டியை மடக்கி அவன் நடுமார்பில் ஒரு குத்துக் குத்தினார். ஒரு துறவியின் கரம் இப்படி இரும்பிற் செய்ததுபோல் இருக்கும் என்று அவன் கனவிலும் எதிர் பார்க்கவில்லை. ஏற்கெனவே தளர்ந்திருந்த தென்னவன் மாறன், மாவலி முத்தரையரின் இரும்புக் கரத் தாக்குதலையும் பொறுக்க முடியாமல் நினைவிழந்து கீழே விழுவதுபோல் தள்ளாடினான். பிரக்ஞை தவறியது. அவ்வளவில் அவன் கீழே விழுந்து விடாமல் யாரோ அவனைத் தாங்குவதை அவனே உணர்ந்தான். அதற்கு மேல் எதையும் உணர அவனுக்கு நினைவில்லை.

*****

     தென்னவன் மாறனுக்கு மறுபடி விழிப்பு வந்தபோது தன்தலை சுகமான பட்டு மெத்தையில் சில்லென்ற உணர்வும், வாசனைகளும் தெரியச் சயனித்திருப்பதை அறிய முடிந்தது. யாருடைய வெப்பமான மூச்சுக்காற்றோ அவன் முகத்தருகே சுட்டது. மல்லிகைப் பூக்களின் கிறங்க வைக்கும் வாசனையையும், அதே மல்லிகைப் புதரருகே மூச்சு விட்டுச் சீறும் ஒரு நாகசர்ப்பத்தின் சூடான உயிர்ப்பையும் ஒருங்கே சேர்த்து உணர்வது போன்ற நிலையில் அப்போது அவன் இருந்தான்.

     கண் விழித்துப் பார்த்தவுடன் கூச்சத்தால் துணுக்குற்று எழ முயன்ற அவனை அந்தப் பூங்கரம் எழுவதற்கு விடவில்லை. ‘அந்தப் பேரழகி யார்? தான் எப்படி அவள் மடியில் தலை வைத்துப் படுத்திருக்க நேர்ந்தது? தன் உடலைப் பிணித்திருந்த சங்கிலிகள் எங்கே?’ என்பதெல்லாம் அலையலையாய் அவன் மனத்தில் வினாக்களாக எழுந்தன. அந்தப் பெண்ணின் செழுமையான உடற்கட்டு, அடர்ந்த புருவம், துறுதுறுவென்ற கண்கள், மறைக்காமல் அழகை உதறிக் காண்பிப்பன போன்ற அங்கங்கள், பெரிதாக முடிந்த அளகபாரம் யாவும் சேர்ந்து அவளைக் களப்பிரயினத்தினள் என்று அவன் புரிந்து கொள்ளத் துணை செய்தன. அவளுடைய செழுமையான வளை ஒலிக்கும் கைகளை விலக்கித் தள்ளிவிட்டு அவன் துள்ளி எழுந்திருந்தான். எழுந்த வேகத்தில் விலகி நின்றுகொண்டு அவன் அவளை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுத்தான்:

     “பெண்ணே, நீ யார்? சிறைக்கோட்டத்திலிருந்து நான் இங்கே எப்படி வந்தேன்? யாருடைய கட்டளையின் பேரில் நீ இந்தப் பணிவிடைகளை எல்லாம் இங்கு எனக்குச் செய் கிறாய்?”

     இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்ட பின் முதலில் ஒருகணம் வாயால் மறுமொழி எதுவும் கூறாமல் அவனை விழுங்கி விடுவதுபோல் பார்த்து நகைத்தாள் அவள். அந்தக் கண்களும், அந்தப் புன்னகையும், குருதி பூத்தது போன்ற அந்தச் செவ்விதழும், உறை நெகிழ்ந்த பொன்வீணை போன்ற அந்த உடலும் எதிர்ப்படுவோரை மயக்கி ஆட் படுத்துவதற்கென்றே படைக்கப்பட்டவை போலிருந்தன. அவனுடைய கேள்விகளுக்கு மறுமொழி கூறாததோடு தன்னுடைய வசீகரம் என்னும் மதுவினால் அவனுள் வெறியேற்ற முயன்று, அவன் மனத்தையே ஒரு கேள்வியாக வளைக்க முயன்றாள். அவள் விழிகளால் அவனுடைய உறுதியான உணர்வுகளைச் சுருட்ட முயன்று கொண்டே அழைப்பது போன்ற சிரிப்பும், சிரிப்பது போன்ற அழைப்புமாக நோக்கும் அவளை மீண்டும் அவனுடைய இடிமுழக்கக் குரல் நினைவுலகிற்கு கொணர்ந்தது.

     “பெண்ணே, நீ யார்? வெட்கமும் கூச்சமுமில்லாமல் வெறும் இச்சை மட்டுமே உடைய முதற் பெண்ணை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.”

     “வெட்கமும் கூச்சமும் எல்லாம் வெறும் போர்வைகள்! என் போன்ற அழகின் அரசிகளுக்கு அவை தேவை இல்லை!”

     அவள் குரல் இனிமையாக இருந்தாலும் களப்பிரர் பேசும் தமிழின் முதிராத மழலைத்தன்மை அதில் இருப்பதைத் தென்னவன் மாறன் கண்டான். அவனுக்குக் கோபம் மூண்டாலும் அதை அடக்கிக்கொண்டு -

     “அம்மா, அழகின் அரசியே! உன் பெயர் என்ன என்று நான் அறியலாமா?”

     “காம மஞ்சரி.”

     “உன்னைப் பொறுத்தவரை முற்றிலும் பொருத்தமான பெயர்தான். உன்னிடம் காமம் மட்டும்தான் ஒன்று சேர்ந்து இணைந்திருக்கிறது. பெண்ணை நான் தாயாகப் பார்த்திருக்கிறேன். இன்றுதான் முதன் முதலாக வெறும் காமமாகப் பார்க்கிறேன்.”

     “ஒரு தமிழன்தான் இப்படிப் பஞ்சணையிலும் வேதாந்தம் பேச முடியும்!”

     “ஒரு களப்பிரப் பெண்தான் இப்படி முன்பின் தெரியாதவனிடமே பார்த்த மறுகணம் பஞ்சணையைப் பற்றிப் பேச முடியும்...”

     இதற்கு மறுமொழி கூறாமல் எழுந்து அவனருகே ஒவியம் நடப்பதுபோல் நடந்து வந்து தழுவிக்கொள்வது போல் நெருங்கிய அவளை அருகே நெருங்கவிடாமல் தடுத்தான் அவன்:

     “பெண்ணே! என்னை நீ மிக எளிமையாக ஏமாற்றிவிட முடியாது. நான் கோநகரங்களின் மிருதுவான சுபாவங்களை உடைய மென்மையான மனத்தினன் இல்லை. காட்டு மனிதன். அழகு, வசீகரம், மயக்கம் போன்ற மெல்லிய உணர்ச்சிகளால் என்னை வசப்படுத்தி ஒற்றறிய உங்கள் அரசரோ, மற்றவர்களோ உன்னிடம் என்னை விட்டிருந்தார்களானால் அவர்களுக்காக நான் பரிதாபப்படவே செய்வேன்.”

     “வலிமையும் அழகும் உள்ள ஆண் மகன் பெண்ணிடம் அன்பு செய்யவேண்டுமே தவிர, பரிதாபப்பட்டுக் கொண்டி ருக்கக்கூடாது.”

     “அன்பு என்பது தானாக நெகிழ்வது! அது வலிந்து யாரிடமும் செய்யப்படுவது அல்ல.”

     மீண்டும் அந்தக் கொல்கின்ற காம விழிகள் அவனைச் சுருட்ட முயன்றன. அவன் அவளைப் பயமுறுத்தினான்:

     “பெண்ணே! நான் மிகவும் பொல்லாதவன். முதலில் இதிலுள்ள சதி என்ன என்று என்னிடம் சொல் இல்லா விட்டால் நீ என்னிடம் இருந்து உயிர் தப்ப முடியாது.”