முதல் பாகம்

15. தளபதிக்குப் புரியாதது!

     நாராயணன் சேந்தனும், மகாமண்டலேசுவரரும் விளக்கோடு தான் நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பிய போது, 'ஐயோ இப்போது இங்கே இவர்கள் பார்ப்பதைக் காட்டிலும் இந்தச் சுரங்கத்துக் கற்பாறைகள் மேலிருந்து மொத்தமாக இடிந்து விழுந்து என்னை இப்படியே அமுக்கி விட்டாலும் பரவாயில்லையே! அகப்பட்டுக் கொண்டால் மகாமண்டலேசுவரர் என்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்? நான் தான் அவர் முகத்தில் எப்படி விழிப்பேன்? எதற்காக எந்த விதத்தில் இந்தச் சுரங்கப் பாதைக்குள் இறங்க நேர்ந்ததென்று சமாதானம் சொல்லிச் சமாளிப்பேன்? நான் என்ன சொன்னால்தான் என்ன? நம்பவா போகிறார்கள்?' என்று இப்படி எத்தனை எத்தனை எண்ணங்கள் தளபதி வல்லாளதேவனின் மனத்தில் தோன்றின தெரியுமா?

     இவ்வளவு தூரத்துக்கு அவர்கள் நெருங்கி வந்து விட்ட பின் தப்ப முடியுமென்ற நம்பிக்கையே செத்துவிட்டது அவன் மனத்தில். அந்த நிலையிலும் மனிதனுக்கு இயற்கையாக ஏற்படுகின்ற தற்காப்பு உணர்ச்சியையும், பயத்தின் தூண்டுதலும் தருகின்ற சுயபலமும் அவனைக் கைவிட்டு விடவில்லை.

     தன்னையறியாமலே மெல்ல மெல்லப் பின்னுக்கு நகர்ந்து கொண்டிருந்தான் அவன். பத்துப் பன்னிரண்டு பாகதூரம் பின்னுக்கு நகர்ந்த பின் ஒரு பாறை இடுக்கில் வல்லாளதேவன் ஒட்டிப் பதுங்கிக் கொண்டான்.

     சுரங்கப் பாதை திருப்பத்துக்கு வந்ததுமே நாராயணன் சேந்தனும் மகாமண்டலேசுவரரும் நின்றுவிட்டனர். "இந்த இடத்தில்தான் யாரோ நிற்பது போலத் தெரிந்தது. இப்போது பார்த்தால் ஒருவரையும் காணோம். ஒரு வேளை என் கண்களுக்கு மட்டுமே தெரிந்த வெறும் பிரமையோ?" என்றார் இடையாற்றுமங்கலம் நம்பி.

     "சுவாமி! அப்படி நம்மைத் தவிர வேற்றவர் எவரும் இந்த மாளிகையில் நுழைந்திருக்க வழியில்லை!" என்று நாராயணன் சேந்தன் அவருக்குப் பதில் கூறினான்.

     "எனக்கொரு சந்தேகம் சேந்தா! தளபதி வல்லாளதேவனை விருந்தினர் மாளிகைக்குக் கொண்டு போய் தங்கச் செய்தாயே? அவன் நீ அங்கிருக்கும் போதே படுத்து உறங்கத் தொடங்கி விட்டானோ? அல்லது விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தானோ?" என்று இருந்தாற் போலிருந்து எதையோ நினைத்துக் கொண்டு கேட்பவர் போல் கேட்டார் இடையாற்றுமங்கலம் நம்பி.

     "சுவாமி! தளபதி வல்லாளதேவனைப் பற்றி நீங்கள் சிறிதும் சந்தேகப்பட வேண்டாம். அவர் இந்நேரத்தில் விருந்து மாளிகையில் சுகமாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பார்!" என்று நாராயணன் சேந்தன் பதில் கூறிய போது மறைவாகப் பதுங்கியபடி அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த தளபதிக்குச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது.

     "சரி அப்படியானால் இங்கே தளபதி வந்து நிற்பது போல் என் கண்களுக்குத் தென்பட்ட தோற்றம் வெறும் பிரமையாகத்தான் இருக்கும். வீண் மனச் சந்தேகத்தால் ஏற்பட்ட நிழல் உருவம் தான். அப்படியே இங்கே ஆள் வந்திருந்தாலும் அதற்குள் நம் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எங்கே ஓடியிருக்க முடியும்?" என்று கூறிவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு திரும்பி நடந்தார் மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பி.

     அவர்கள் அந்தச் சுரங்கப் பாதையின் திருப்பத்திலிருந்து திரும்பி முன்பு நின்று கொண்டிருந்த அந்த இடத்துக்குப் போன போதுதான் அசுர வேகத்தில் அடித்துக் கொண்டிருந்த தளபதியின் நெஞ்சு சுபாவ நிலைக்கு வந்தது. 'இந்த நாராயணன் சேந்தன் நீடூழி வாழ்க! நான் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதாக இவன் மட்டும் சொல்லியிராவிட்டால் மகாமண்டலேசுவரரின் சந்தேகம் இலேசில் அவரை விட்டு நீங்கியிருக்காது. சுரங்கப் பாதை முழுவதும் விளக்கோடு தேடி என்னைக் கண்டிருப்பார்!' என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.

     இப்படி மகிழ்ந்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இன்னொரு சந்தேகமும் பீதியும் அவன் மனத்தில் கிளம்பி அவனைப் பயமுறுத்தத் தொடங்கிவிட்டன. 'இடையாற்றுமங்கலம் நம்பி முதலியவர்கள் இந்தப் பாதாள மண்டபத்திலிருந்து மேலே ஏறிப் போவதற்கு நீ நின்று கொண்டிருக்கும் இதே வழியாகத்தானே திரும்பி வருவார்கள்! அப்போது என்ன செய்வாய்? அதற்குள் நீ வந்த வழியே திரும்பி மேலே போகாவிட்டால் நிச்சயமாக அவர்கள் உன்னைப் பார்த்துவிடப் போகிறார்கள். நீ அவர்களிடம் நிச்சயம் அகப்பட்டுக் கொள்ளத்தான் போகிறாய்' என்று தளபதி வல்லாளதேவனுடைய உள் மனம் அவனை எச்சரித்தது.

     'அடாடா! இதுவரை இந்த யோசனையே நமக்கு ஏற்படவில்லையே. நான் நின்று கொண்டிருக்கும் இடத்துக்கு அவர்கள் திரும்பி வருவதற்குள் நான் மேலே ஏறிப் போய்விட வேண்டும்' என்று எண்ணியவனாய்ப் பதுங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து மெல்ல எழுந்தான் தளபதி வல்லாளதேவன்.

     அவன் அப்படி எழுந்திருந்து திரும்புவதற்குத் தயாரான நிலையில், கடைசி முறையாக அவனுடைய விழிகள் பாதாள மண்டபத்துப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தன. அப்போது சிறிது நேரத்துக்கு முன் தன் மனம் எண்ணியதற்கு மாறாக அவர்கள் வேறோர் புதுப் பாதை வழியே மேலே ஏறிச் சென்று கொண்டிருப்பதை அவன் கண்டான்.

     அவன் நின்று கொண்டிருந்த இடம் பாதாள மண்டபத்தின் கிழக்குக் கோடி மூலை. அந்த மூலையின் மேலே பளிங்கு மேடையில் திருமகள் சிலைக்கருகே கொண்டு போய் விடும் சுரங்கப்பாதை ஆரம்பமாகிறது.

     மறுபக்கம் மேற்குக் கோடி மூலையில் அதே போல் ஒரு படிக்கட்டு சரிவாக மேலே நோக்கி ஏறிச் சென்றது. அந்தப் படியில் நாராயணன் சேந்தன் தீபத்தைப் பிடித்துக் கொண்டு முன்னால் செல்ல, அவனுக்குப் பின் இடையாற்று மங்கலம் நம்பி, குமார பாண்டியர் போல் அவன் கண்களுக்குப் பிரமையளித்த துறவி, அவருக்கு அருகில் சிரித்துப் பேசிக் கொண்டு செல்லும் குழல்மொழி - ஆக நால்வரும் மேலே ஏறிச் சென்று கொண்டிருப்பதைத் தளபதி வல்லாளதேவன் பார்த்தான்.

     மேல் கோடியிலிருந்து உயரச் சொல்லும் அந்தப் படிக்கட்டு வழி எங்கே கொண்டு போய் விடுவதாயிருக்கும் என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை. அந்த ஒரு கணத்தில் அவனுடைய மனம் முழுவதும் நிறைந்திருந்த ஆவல் ஒன்றே ஒன்றுதான். அங்குள்ள மர்மங்களையும் இரகசியங்களையும் ஒரேயடியாகப் புரிந்து கொண்டு விட வேண்டுமென்ற ஆசைதான் அது.

     அவர்கள் கண்பார்வைக்கு மறைகின்ற வரையில் பொறுத்திருந்துவிட்டு அடக்க முடியாத ஆசையுடன் பாதாள மண்டபத்துக்குள் அடியெடுத்து வைத்தான் அவன். ஆனால் அவன் நினைத்தபடி அப்போது அங்கே எதையும் பார்க்க முடியவில்லை. அங்கே இருந்த ஒரே ஒரு தீபத்தையும் நாராயணன் சேந்தன் போகும் போது மேலே எடுத்துக் கொண்டு போய் விட்டதனால் மண்டபம், அதிலிருந்து கிழக்கேயும் மேற்கேயும் செல்லும் வழிகள் யாவும் பழையபடி பயங்கர அந்தகாரப் போர்வையில் மூழ்கிவிட்டிருந்தன.

     'இந்த மகாமண்டலேசுவரர் மாளிகையில் வந்து என்னுடைய மூளையே குழம்பிப் போய்விட்டதா? முன் யோசனையோ, விளைவோ தெரியாமலே ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டு போகிறேனே! பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காக அல்லவா முடிந்து விட்டது? வெளியேறுவதற்கு வழிகூடத் தெரியாத மையிருட்டில் இந்த மண்டபத்துக்குள் நுழைந்து மாட்டிக் கொண்டேனே' என்ற மனத்தவிப்புடன் இருட்டைத் துழாவினான் வல்லாளதேவன்.

     ஒருமுறை அங்கே குவிந்திருந்த கேடயங்களின் குவியலில் மோதி நிலை குலைந்து தடுமாறினான் அவன். அப்போது நூறு வெண்கலக் கடைகளில் ஆயிரமாயிரம் மத யானைகள் புகுந்து அமளி செய்தாற் போன்ற அவ்வளவு ஒலியும் எதிரொலியும் அங்கே உண்டாயின. தளபதி நடுங்கிப் போனான். இவ்வளவு பெரிய ஓசை மேலே இருப்பவர்களுக்குக் கேட்காமலா போகும்? அவன் மனக்கண்களுக்கு முன்னால் அவனாகவே ஒரு காட்சியைக் கற்பனை செய்து கொண்டு பார்த்தான்.

     அந்த ஓசையைக் கேட்டு நாராயணன் சேந்தனும் எமகிங்கரர்களைப் போன்ற நாலைந்து வீரர்களும் கையில் உருவிய வாள்களோடு சுரங்கத்துக்குள் இறங்கி ஒடிவருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும், 'ஐயோ! நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. தெரியாமல் இதற்குள் இறங்கி வந்து விட்டேன். தயவு செய்து இது மகாமண்டலேசுவரருக்குத் தெரிய வேண்டாம்!' என்று நாராயணன் சேந்தனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அபயக் குரலில் கெஞ்சுகிறான் அவன்.

     குட்டைக் கரும் பேய் போல் குரூரமாகத் தன் பெரிய கண்களை விழித்துப் பார்க்கும் நாராயணன் சேந்தன், 'அதெல்லாம் முடியாது! தளபதியாயிருந்தால் என்ன? யாராயிருந்தால் என்ன? உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி, இங்கிருந்து உயிரோடு தப்ப விடுகிற வழக்கம் எங்கள் மகாமண்டலேசுவரரிடம் கிடையவே கிடையாது!' என்று நிர்த்தாட்சண்யமான கடுமை நிறைந்த குரலில் பதில் சொல்லுகிறான். இந்தக் கற்பனையை நினைக்கும் போதே பயமாக இருந்தது தளபதிக்கு.

     அந்தப் பாதாள மண்டபத்தில் ஊசி நுனி இடமும் விடாமல் சுற்றிப் பார்த்து எல்லா மர்மங்களையும் தெரிந்து கொண்டு விட வேண்டுமென்று அவன் மனத்தில் பொங்கி எழுந்த ஆவல் இப்போது இருந்த இடம் தெரியாமல் வற்றிப் போய்விட்டது.

     ஆனால் என்ன துரதிர்ஷ்டம்? அந்த வழியின் படிக்கட்டு இருந்த திசை புரியாமல் மண்டபத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான் அவன். 'சரி! விடிகிற வரை இப்படியே சுற்றி அலைக்கழிந்து கொண்டிருக்க வேண்டியதுதான்! விடிந்தால் மட்டும் என்ன? இதற்குள் வெளிச்சமா வரப்போகிறது. இதற்குள் பகலானாலும், இரவானாலும் ஒரே மாதிரிதான் இருக்கப் போகிறது' - என்று எண்ணிப் பரிதவிப்பின் எல்லைக்கு அவன் மனம் வந்துவிட்ட போது அந்த வழி அவன் கால்களில் இடறியது. 'அப்பா! பிழைத்தோம்!' என்று எண்ணி மேலே ஏறிச் சென்றான்.

     அந்தச் சுரங்கப் பாதையில் தவித்துத் தடுமாறி இறுதியாக வசந்த மண்டபத்துத் தோட்டத்திலுள்ள இடிபாடடைந்த கோவிலுக்குள் வந்து நின்றான். அந்த வழி அவனை அங்கேதான் கொண்டு வந்து விட்டது.

     தனக்கு முன்னால் மகாமண்டலேசுவரர், சேந்தன் ஆகியோர் ஏறி வந்த வழி அதுதானா? அல்லது அவர்கள் ஏறிச் சென்ற வழி வேறொன்றா? என்று சந்தேகமாயிருந்தது அவனுக்கு. அங்கு நின்று சிந்தனையில் லயித்துத் தடுமாறியது அவன் உள்ளம்.

     'எதற்காக இந்த ஏற்பாடுகள்? இவ்வளவு மறைவாக ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் மகாமண்டலேசுவரர் சேகரித்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? தென்பாண்டி நாட்டுக் கூற்றத் தலைவர்களுக்கும், படைகளுக்கும் பொறுப்பாளியாக இருக்கும் எனக்கும், மகாராணியாரைப் போன்று நாட்டின் உரிமையைச் சொந்தமாகக் கொண்டிருப்பவருக்கும் தெரியாமல் இவ்வளவு மறைவான காரியங்களை எந்த ஒரு அந்தரங்க நோக்கத்துடன் இவர் செய்து கொண்டிருக்க முடியும்? இவைதான் போகட்டும்! இவற்றுக்காகவெல்லாம் கூட இந்த மனிதரை மகாராணி வானவன்மாதேவியாரின் பெருந்தன்மை மிகுந்த உள்ளம் மன்னித்து விடுவதற்கு தயங்காது.

     'ஆனால் மகாராணியாரின் உயிருக்குயிரான புதல்வராகவும் எதிர்காலத்தில் முடிசூடி இந்த நாட்டை ஆளவேண்டியவராகவும் இருக்கும் குமார பாண்டியர் ஈழத் தீவுக்குள் ஓடிவிட்டதாகப் பொய்ச் செய்தியைப் பரவவிட்டு அதைத் தாமும் நம்புவது போல் நடித்துக் கொண்டிருக்கும் இந்த மனிதர் அதே இளவரசரைப் போல் தோன்றும் ஒரு துறவியை உலகத்துக்குத் தெரியாமல் தம்முடன் வைத்திருக்கும் மர்மம் என்ன? துறவி மகாமண்டலேசுவரருக்குக் கட்டுப்பட்டு விருப்பத்தோடு இங்கே தங்கியிருக்கிறாரா? அல்லது பயந்த சுபாவமுடையவராக இருந்து பயமுறுத்திச் சிறைப்படுத்தி வைத்திருப்பது போல் இவர் தம்முடைய வசந்த மண்டபத்திலும் பாதாள மண்டபத்திலும் அடைத்து வெளியேற விடாமல் தடுத்திருக்கிறாரோ? உண்மை எதுவோ?

     'ஐயோ! வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் இயல்புடையவராகிய நம் மகாராணியார் இந்த இடையாற்றுமங்கலம் நம்பியின் மேல் எவ்வளவு நம்பிக்கையும், பயபக்தி விசுவாசமும் கொண்டிருக்கிறார்? இவரோ, உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைக்கிறாரே! இவரையே நம்பியிருக்கும் மகாராணியாருக்கு இவர் செய்து கொண்டிருக்கிற துரோகம் எவ்வளவு பெரியது? இது தெரிந்தால் மகாராணியின் மனம் என்ன பாடுபடும்? எவ்வளவு வேதனை ஏற்படும்? என்னுடைய மனமே இந்தப் பாடுபடுகின்றதே?

     'ஆகா பசுத்தோல் போர்த்துக் கொண்டு திரியும் வேங்கையைப் போல் இந்த மகாராணியாரைப் புறத்தாய நாட்டுக் கோட்டைக்கு அழைத்து வந்ததும், ஆதரவளித்ததும் இதற்குத்தானா? இது தெரியாமல் ஊர் உலகமெல்லாம் இது இவருடைய ராஜபக்தியைக் குறிப்பதாக எண்ணிப் பெருமை கொண்டாடுகிறதே? பேருக்கு மகாராணியைப் 'பாண்டிமாதேவி' என்று இங்கே கொண்டு வந்து உட்கார்த்தி விட்டு ஈழத் தீவுக்கு ஓடிவிட்டதாக நாட்டிலுள்ளவர்கள் எண்ணிக் கொள்ளும்படி செய்த குமாரபாண்டியனைப் பயமுறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். வடதிசைப் பேரரசர்களுக்கு உதவி செய்து இந்தத் தென்பாண்டி நாட்டையும் அவர்களிடம் பறித்துக் கொடுத்து விட்டு அவர்கள் தயவால் தாமே இந்நாட்டுக்கு மன்னராகி விடலாம் என்று இவர் கனவு காண்கிறாரோ?'

     'இல்லையானால் இவர் செயல்களுக்கு என்னதான் பொருள்? இவர் தான் மர்மமாக இருக்கிறார் என்றால் இவரிடம் வருகிற ஆட்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். நம்மோடு படகில் வந்தானே, அந்தத் துறவி, அந்த மனிதன் வாய்திறந்து பேசிவிடாதபடி அவனைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது கூட மகாமண்டலேசுவரரின் சாகஸம்தான். எனக்கு உண்டாகும் பிரமையின்படி அவன் குமாரபாண்டியனாக இல்லாத பட்சத்தில் அந்தத் துறவி யாராவது ஒற்றனோ, வடதிசை மூவரசரால் இவருக்கு தூதனுப்பப்பட்ட கபட சந்நியாசியோ? அவன் எவ்வளவு அழுத்தமான ஆள்! சிரித்துச் சிரித்துக் கழுத்தை அறுத்தானே ஒழிய ஒரு வார்த்தையாவது பேசினானா? உண்மையில் அவன் யாரோ முக்கியமான ஆளாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கன்னிகைப் பருவத்துப் பெண்ணான தம் புதல்வியிடம் அவ்வளவு நெருங்கிப் பழக அனுமதிப்பாரா! அடடே! அவன் கூட இந்த வசந்த மண்டபத்தில்தானே தங்கப் போவதாகச் சொன்னார்? இங்கே அவன் எப்பகுதியில் தங்கியிருக்கிறானோ தெரியவில்லையே? பார்க்கலாம்' என்று வெகுநேரமாக அந்தப் பாழுங் கோவில் வாசலில் நின்று இவ்வளவு சிந்தித்த தளபதி வல்லாளதேவன் வசந்த மண்டபத்தின் உட்பகுதி நோக்கி விரைந்து நடந்தான்.

     அவன் மனத்தில் புதிய தெம்பும், எல்லா உண்மைகளையும் உடைத்துத் தெரிந்து கொண்டுவிடும் ஆத்திரமும் உண்டாகியிருந்தன. மலைச்சிகரம் போல் பெருமிதமாக யாரைப் பற்றி எண்ணி வந்தானோ அந்த இடையாற்றுமங்கலம் நம்பி இப்போது அவனுக்கு ஒரு குரூரமான சூழ்ச்சியோடு கூடிய சுயநலவாதியாகத் தோன்றினார். எத்தனையோ ஆண்டுகளாக எண்ணி வந்த மதிப்பான எண்ணத்தைச் சில நாழிகை நேரத்துச் சம்பவங்கள் மிகவும் எளிதாக மாற்றி வைத்து விட்டன.

     சிற்பங்களும் ஓவியங்களும் செய்குன்றங்களும் பூங்கொடிப் பந்தல்களும் நிறைந்த அழகான வசந்த மண்டபம் இரவின் நிலா ஒளியில் மயன் சமைத்த வித்தியாதர உலகத்து மணி மண்டபம் போலக் காட்சியளித்தது. அதற்குள் நுழைந்த வல்லாளதேவன் நடு மையத்தில் இருந்த அலங்காரக் கிருகத்துக்குள்ளேயிருந்து தீப ஒளி தெரிவதைக் கவனித்தான். தூபப் புகையின் நறுமணமும் காற்றில் கலந்து வந்தது. அவன் மெதுவாக நடந்து சென்று அலங்காரக் கிருகத்தில் பலகணி வழியே உள்ளே எட்டிப் பார்த்தான்.

     பொன் தகடுகள் பதிக்கப்பெற்று ஒளி நிறைந்த முத்துச் சர விதானமும் பட்டு மெத்தையுமாக விளங்கிய சப்ரமஞ்சக் கட்டில் ஒன்றில் அந்த இளம் துறவி நிம்மதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். தலைப்பக்கத்தில் வைரக்கற்கள் இழைத்த பிடியோடு கூடிய கவரி, ஆலவட்டம், தண்ணீர்க்குடம் முதலியன இருந்தன.

     'சந்நியாசிக்கு இவ்வளவு சுகம் கேட்கிறதா?' என்று எண்ணிய தளபதி வல்லாளதேவனின் மனத்துக்கு அந்தத் துறவியைப் பற்றிப் பூரணமாக எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.