![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 11 |
முதல் பாகம் 25. நிலவறைக்குள் நிகழ்ந்தவை திருநந்திக்கரையில் தளபதியை ஏமாற்றி விட்டு அவசரமாகக் குறுக்கு வழியில் அரண்மனைக்குத் திரும்பி வந்து விட்டான் நாராயணன் சேந்தன். கோட்டை வாயிலில் நுழையும் போதே குறிப்பாகச் சில காட்சிகளைக் கண்டு காவல் வீரர்கள் இரண்டொருவராகக் கூடி நின்று கொண்டிருந்தனர். தான் ஏறி வந்த குதிரை, கைப்பற்றிக் கொண்டு வந்த தளபதியின் குதிரை இரண்டையுமே கோட்டைச் சுவர்களின் அருகே ஒரு மரத்தடியில் கட்டிவிட்டு அதன் பின்பு தான் கோட்டைக்குள் நுழைந்தான் சேந்தன். அரண்மனையை ஒட்டியே அத்தாணி மண்டபமும், ஆலோசனைக் கூடங்களும், உள்படு கருமக் கோட்டங்களும் சார்பாக இருந்தன. கோட்டையின் முதல் இரண்டு பிரதான வாயில்களைக் கடந்த பின்பே மகாராணியின் அரண்மனை அமைந்திருந்தது. கோட்டையின் ஒவ்வொரு வாயிலும் பாண்டிய மரபின் புகழ்பெற்ற அரசர் ஒருவருடைய பெயரைத் தாங்கிக் கொண்டிருந்தது. முதல் வாயிலாகிய பராந்தகப் பெருவாயிலைக் கடக்கின்றவரை நாராயணன் சேந்தனுக்கு ஒரு தடையும் ஏற்படவில்லை. மதிற் சுவரோரத்தில் சிறு சிறு கும்பல்களாகக் காவல் நின்று கொண்டிருந்த வீரர்கள் கூட அவனை ஒரு பொருட்டாக மதித்துத் தடுக்கவோ விசாரிக்கவோ செய்யாமல் போகவிட்டு, வாயிலை நெருங்கிய போது தான் அன்றைய தினம் கோட்டையிலும் அரண்மனைக்குள்ளும் எவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிய வந்தது. அவனுக்குப் பின்புறம் 'சுரிகை' எனப்படும் பயங்கரமான சுழல் வாளை அணிந்த இரண்டு வீரர்கள் மௌனமாகப் பின் தொடர்ந்தனர். நாராயணன் சேந்தனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கோபத்தோடு பின்புறம் திரும்பித் தன் புறாமுட்டை போன்ற பெரிய கண்களை உருட்டி விழித்து அவர்களைப் பார்த்து, "ஏன் என்னைப் பின் தொடருகிறீர்கள்? நான் மகாமண்டலேசுவரரின் அந்தரங்க ஒற்றன். அவர் இங்கே தங்கியிருக்கும் போது அவரைப் பார்ப்பதற்கு வரவும், போகவும் எனக்கு முழு உரிமை உண்டு. நான் சந்தேகத்துக்குரியவனோ, உளவறிய வந்திருப்பவனோ, அல்லவே?" என்று சீற்றத்தோடு கேட்டான். அப்போது சேந்தனுக்குக் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்துவிட்டன. உதடுகள் துடித்தன. ஆனால் அவனுடைய கேள்விக்கு அவனைப் பின் தொடர்ந்த வீரர்கள் பதிலே சொல்லவில்லை. அவ்வளவேன்? அவனுடைய சினமும், கொதிப்புடன் வெளிப்பட்ட கேள்வியும் அவர்கள் முகங்களில் உணர்ச்சியின் ஒரு சிறிய மாறுதலையாவது தோற்றுவிக்க வேண்டுமே. அது கூட இல்லை. அவர்கள் சிலைபோல் நடந்தனர். அவன் நின்றால் அந்த வீரர்களும் நின்றனர். சேந்தன் திகைத்தான். அவன் மனத்தில் சந்தேகமே வளர்ந்தது. சிறிது திகிலும் எட்டிப் பார்த்தது. அவர்களை அடியிலிருந்து முடிவரை நன்றாகக் கவனித்துப் பார்த்தான். ஆபத்துதவிப் படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாமென்று அவனுக்குத் தோன்றியது. அவர்கள் நடந்து கொண்ட விதமும் அவர்களைப் பற்றி அனுமானிக்க ஏற்றதாகத்தான் இருந்தது. காரணமோ மறுமொழியோ கூறாமல் பாதுகாப்புக்காக எதையும் செய்யும் உரிமை ஆபத்துதவிகளுக்கு மட்டுமே உண்டு. 'வந்தது வரட்டும்! இவர்களிடம் கேள்வி கேட்டு கெஞ்சிக் கொண்டு நிற்பதில் பயனில்லை. துணிந்து உள்ளே நுழைகிறேன். முடிந்ததைச் செய்து கொள்ளட்டும்' என்று பின்னால் வருபவர்களைக் கவனிக்காமல் வரகுணன் வாயிலில் நுழைந்தான் அவன். பின்னால் தொடர்ந்து வந்த ஆபத்துதவிகள் வரகுணன் வாயில் வரைதான் அவனைப் பின்பற்றி வந்தனர். அதற்கு மேல் அவர்கள் அவனைப் பின் தொடரவும் இல்லை; உள்ளே போகக் கூடாதென்று தடுக்கவும் இல்லை. பேசாமல் வாயிலுக்கு இந்தப்புறமே ஒதுங்கி நின்று கொண்டனர். ஆனால் வாயிற் காவலுக்கென்றே வழக்கமாக அந்த இடத்தில் அரண்மனையைச் சேர்ந்த வேறு இரு காவலர்கள் இருப்பதுண்டு. அவர்கள், "காலையிலிருந்து அரண்மனையில் கூற்றத் தலைவர்களின் அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. உள்ளே யாரையும் விடுவதற்கு அனுமதி இல்லை" என்று சொல்லி நாராயணன் சேந்தனைத் தடுத்து விட்டனர். தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகி விட்டது. 'ஆபத்துதவிகள் அந்த மட்டில் விட்டார்களே!' என்று மகிழ்ச்சியோடு உள்ளே நுழையப் போக இவர்கள் தடுத்துவிட்டார்களே! என்று தயங்கி நின்றான் சேந்தன். "காவல் வீரர்களே! உங்கள் கடமை உணர்ச்சியைப் பாராட்டுகிறேன். அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கும் போது யாரையும் உள்ளே விடக்கூடாது என்று கட்டுப்பாடு நல்லதுதான். ஆனால் எல்லோரையும் அதற்காகத் தராதரம் பார்க்காமல் தடுத்து நிறுத்தி விடலாமா? நான் இப்போது உடனே மகாமண்டலேசுவரரைச் சந்தித்து ஓர் அவசரச் செய்தியைக் கூறியாக வேண்டுமே! என்னை நீங்கள் இப்படித் தடுத்தால் நான் என்ன செய்வது? உங்களிடம் வாதாடிக் கொண்டிருக்காமல் நான் திரும்பிப் போய் விட்டாலோ, என்னை உள்ளே விட மறுத்த குற்றத்துக்காக நீங்கள் தான் பிறகு மகாமண்டலேசுவரரிடம் திட்டுக் கேட்க நேரிடும். எனக்கென்ன வந்தது? நான் பேசாமல் இப்போதே திரும்பிப் போய்விடுகிறேன்" என்று நாராயணன் சேந்தன் நயத்துடனும், பயமுறுத்தல் போலவும் பேசி உடனே திரும்பிப் போய் விடுகிறவனைப் போல் நடித்தான். அவனுடைய தந்திரமான பேச்சும், நடிப்பும் நல்ல பயனை அளித்தன. "ஐயா! இருங்கள். போய்விடாதீர்கள். எங்களுக்கு எதற்கு வம்பு? உங்கள் பெயரைச் சொல்லுங்கள். உள்ளே போய் மகாமண்டலேசுவரரிடமே சொல்லி அனுமதி பெற்று வந்துவிடுகிறேன். அதுவரையில் இப்படி நில்லுங்கள்" என்றான் காவலர்களில் ஒருவன். உடனே நாராயணன் சேந்தன் மகாமண்டலேசுவரரின் பெயரைக் கூறியதும் காவலன் அடைந்த பரபரப்பைக் கண்டு சிரித்துக் கொண்டே தன் பெயரைக் கூறினான். காவலன் அதைக் கேட்டுக் கொண்டு உள்ளே சென்றான். கோட்டைக்குள் ஆபத்துதவிகள் இரகசியக் காவல் புரிவதையும், காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்திருப்பதையும் பார்த்த போது அன்று ஏதோ சில முக்கிய நிகழ்ச்சிகள் அங்கு நடந்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் நாராயணன் சேந்தன். உள்ளே போனவன் திரும்பி வருகிற வரையில் மற்றவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி ஏதாவது தெரியும் என்று அவன் வாயைக் கிளறி வம்புக்கு இழுத்தான். ஆனால் அந்த மற்றொரு காவலன் சேந்தனின் கேள்விகளுக்கு அமுத்தலாக இரண்டொரு சொற்களில் பதில் சொல்லி முடித்துவிட்டான். அவனிடமிருந்து தான் எதிர்பார்த்த எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை சேந்தனுக்கு. அதற்குள் உள்ளே சென்றவன் திரும்பி வந்தான். "மகாமண்டலேசுவரர் உங்களை அழைத்து வரச் சொன்னார்." "நானே போய்க் கொள்வேன். நீ ஒன்றும் என்னை அழைத்துச் செல்ல வேண்டாம்" என்று கூறிவிட்டு வரகுணன் வாயிலைக் கடந்து உள்ளே சென்றான் நாராயணன் சேந்தன். அரண்மனையில் கொலுமண்டபத்தின் வடக்குப் புறத்தில் புலவர்கள் வாதிடும் இடமான அரசவைப் பட்டிமண்டபத்தில் கூற்றத் தலைவர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. 'அந்தரங்க மந்திராலோசனைக் கென்றே தனி மண்டபம் இருக்கும் போது அரசவை பட்டிமண்டபத்தில் ஏன் கூடியிருக்கிறார்கள்?' என்ற கேள்வி சேந்தன் மனத்தில் உண்டாயிற்று. பட்டிமண்டபத்தின் வெளிப்புறத்திலேயே மகாமண்டலேசுவரருக்காகக் காத்துக் கொண்டு நின்றான் அவன். சிறிது நேரத்தில் அவர் வெளியே வந்தார். "என்ன செய்தி? இப்பொழுதுதான் வருகிறாயா?" என்று மலர்ந்த முகத்தோடு தம் அந்தரங்க ஒற்றனை வரவேற்றார். "சுவாமீ! தளபதியைத் திருநந்திக்கரை வரைக்கும் இழுத்தடித்து உரிய காலத்தில் கூட்டத்துக்கு வரமுடியாமல் ஏமாற்றி விட்டேன்" என்று அவர் காதருகில் வந்து கூறினான் சேந்தன். "அதெல்லாம் சரிதான் சேந்தா! இப்போது வேறொரு திறமையான செயலை உன் கைகளில் ஒப்படைக்கப் போகிறேன். மந்திராலோசனை மண்டபத்தின் பின்புறமுள்ள நிலவறையின் கதவை வெளிப்புறமாக அடைத்துத் தாழ் போடச் செய்திருக்கிறேன். நீதான் நிலவறைக்குள் போய் அங்கு ஒளிந்திருப்பவனை யாருக்கும் தெரியாமல் வெளியே இழுத்துக் கொண்டு வர வேண்டும். என்ன சொல்கிறாய்? உன்னால் முடியுமா? முடியாதா?" என்று மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார் அவர். 'ஐயோ! நான் மட்டும் தனியாகவா?' என்ற சொற்கள் சேந்தனுடைய நாக்கு நுனி வரை வந்து விட்டன. அவரிடம் தனக்கிருந்த பயம், மரியாதைகளை எண்ணி அவற்றைக் கூறிவிடாமல் 'ஆகட்டும்' என்பது போல் தலையை ஆட்டினான். "போ! முதலில் அதைக் கவனி! வேறு யாரையும் உன்னோடு துணைக்குக் கூப்பிடாதே! நீ மட்டும் தனியாகவே போ!" என்று துரத்தினார் மகாமண்டலேசுவரர். "சுவாமி! இன்னொரு இரகசியம். உங்களிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன்" என்றான் சேந்தன். "என்ன சொல்லேன்?" "அரண்மனையில் ஆபத்துதவிகள் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?" "அது எனக்கு முன்பே தெரியும்! நீ போய் உன் காரியத்தைப் பார்." சேந்தன் நிலவறையை நோக்கிப் புறப்பட்டான். இருட்குகையாக, அந்தகாரக் களஞ்சியமாக இருக்கும் நிலவறையில் தனியாக நுழைய வேண்டுமென்பதை நினைத்த போதே துணிவு மிகுந்தவனான நாராயணன் சேந்தனுக்கே பாதாதிகேச பரியந்தம் நடுங்கியது. ஒரு நாழிகை இரண்டு நாழிகையில் சுற்றித் தேடிப் பார்த்து விடக்கூடிய நிலவறையா அது? விடிய விடியத் தேடினாலும் அங்கு ஆள் ஒளிந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியாதே! வேறு யாராவது வந்து அவனிடம் அந்த வேலையைச் செய்யும்படி கூறியிருந்தால் முடியாது என்று மறுத்திருப்பான். அல்லது செய்வதாக ஒப்புக் கொண்டு செய்யாமல் இருந்திருப்பான். மகாமண்டலேசுவரரே கட்டளையிட்டிருக்கும் போது அலட்சியமாக இருக்க முடியுமா? வெளிப்புறம் இழுத்து அடைத்திருந்த மரக்கதவைத் திறந்து கொண்டு நிலவறையின் இருண்ட படிகளில் இறங்கினான் சேந்தன். எந்த விநாடியும் அந்த இருள் பரப்பின் எந்த மூலையிலிருந்தும், எதிரி ஒருவரின் முரட்டுக் கைகள் தன் கழுத்திலோ, பிடரியிலோ பாய்ந்து அழுத்தலாம் என்ற முன் எச்சரிக்கை அவன் மனத்தில் இருந்தது. படிகளைக் கடந்து நிலவறைக்குள் இறங்கியாயிற்று. நின்ற இடத்திலிருந்து மிரண்ட விழிகளால் நான்கு புறமும் பார்த்தான். வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வந்திருந்த அவன் கண்களுக்கு அந்த இருள் பழகுவதற்குச் சில கணங்கள் ஆயின. இருளை ஓரளவு ஊடுருவும் கூர்மை கண்களுக்கு வந்த பின் சுற்றிலும் நிறைந்திருந்த பொருள்கள் மங்கலாகத் தெரிவதைக் கண்டான். வலது புறச் சுவர் முழுவதும் மனிதர்கள் தலையிழந்த முண்டங்களாய்த் தொங்குவது போல் செப்புக் கவசங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. இன்னொரு புறம் மின்னல் துண்டங்களைச் சுவரில் பிடித்துப் பதிப்பித்து வைத்திருந்தது போல் வீர வாள்கள் வரிசையாக விளங்கின. மூலைக்கு மூலை பழைய நாணயங்கள் குவிந்திருந்தன. ஒரு காலத்தில் பாண்டி மண்டலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த இப்போது பயன்படாமல் போன அந்த நாணயங்கள் தன் கால்களில் இடறிய போது, 'காசு எத்தனை பேர்க் காலை இடறி விடுகிறது? நான் இப்போது காசை இடறிவிடுகிறேன்' என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டான் சேந்தன். நிலவறையில் தன்னைச் சுற்றிலும் சிறிதும் பெரிதுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிலைகள் யாரோ உயிருடன் கூடிய மனிதர்கள் தன்னைப் போல் பயந்து ஒடுங்கி மௌனமாக அந்த இருளில் நின்று கொண்டிருப்பது போல் அவன் கண்களுக்குத் தோன்றின. வலது கையில் தாமரை மலரை ஏந்தி அபிநயம் பிடிப்பது போன்ற பாவனையில் ஒரு நடன மங்கையின் சிலை, வட்டக் கண்ணாடியால் தன் முகத்தை அழகு பார்த்துக் கொண்டே நெற்றிக்குத் திலகமிடும் கோலத்தில் ஒரு குமரிப் பெண்ணின் உயிரும் உணர்வும் துடிக்கும் உருவம், கைகளில் விளக்குத் தாங்கி நிற்கும் விளக்குப் பாவைகளின் வெண்கலச் சிலைகள், பாண்டிய அரச பரம்பரையைச் சேர்ந்த மன்னர்களின் சிற்பங்கள் எல்லாம் அங்கு இருந்தன. சுவரின் உச்சியில் ஒளியும் காற்றும் சிறிது நுழைந்து விட்டுப் போகட்டுமென்று அவ்விடத்தில் பக்கத்திற்கு ஒன்றாக இரு சிறு வட்டத் துவாரங்கள் அமைத்திருந்தார்கள். அந்த உயிரற்ற சிலைகளுக்கும் பொருள்களுக்கும் நடுவே உயிருள்ள ஒரு மனிதன் ஒளிந்து கொண்டிருந்தால் அவனை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? சேந்தனுக்கு தலைசுற்றி மயக்கம் வந்துவிடும் போலிருந்தது. அப்போது இருந்தாற் போலிருந்து நடன மங்கை சிலைக்கு அருகில் நிழல் அசைவது போல் கருப்பாக ஏதோ அசைந்தது. "நில் அங்கேயே! ஓர் அடி நகர்ந்தாலும் உன் உயிர் உனக்குச் சொந்தமில்லை" என்று கையிலிருந்த வாளை ஓங்கியவாறு கத்திக் கொண்டே பாய்ந்தான் சேந்தன். அவன் கையில் இருந்த வாள் நடன மங்கையின் வெண்கலச் சிலையில் மோதி மணி அடித்தாற் போன்ற பெரிய ஓசையையும் எதிரொலியையும் உண்டாக்கிவிட்டு இரண்டாக முறிந்து கீழே விழுந்தது. 'வெறும் பிரமைதானோ?' என்று திகைத்து நின்றான். யாரோ மெல்லச் சிரிக்கின்ற ஒலி அவனுக்கு அருகில் மிகமிக அருகில் கேட்டது. "யார் அது சிரிப்பது? மானமுள்ள ஆண்பிள்ளையானால் நேருக்கு நேர் வந்து நிற்க வேண்டும்." பயத்தையும் நடுக்கத்தையும் மறைத்துக் கொண்டு தன் முழு மூச்சையும் அடக்கி இரைந்து கத்தினான் அவன். அவன் குரல் ஆயிரம் பதினாயிரம் எதிரொலிக் குரல்களாக மாறி அந்த நிலவறைக்குள் ஒலித்து அவனையே பயமுறுத்தின. எதிரொலி ஓய்ந்ததும் முன்பு கேட்ட அதே சிரிப்பொலி முன்னிலும் பலமாகக் கேட்டது. சேந்தன் இரண்டு கைகளாலும் இருளைத் துழாவிக் கொண்டு முன்னால் பாய்ந்தான். பிறந்த மேனியராய்ப் பல கன்னிப் பெண்கள் இருளில் நின்று கொண்டு இருப்பது போல் அவனைச் சுற்றிலும் அவன் உயரத்துக்குச் சரியாக சிலைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளாமல் இருட்டில் பார்த்து நடக்க வேண்டியிருந்தது. அவன் முன்னால் நடக்க நடக்க அந்தச் சிரிப்பொலியும் அவனைவிட்டுத் தள்ளிச் சென்று கொண்டே இருந்தது. திடீரென்று ஒரு பெரிய வௌவால் வேகமாகப் பறந்து வந்து சேந்தன் முகத்தில் மோதியது. அப்போது சேந்தனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் யாரோ முகத்தில் ஓங்கி அடித்து விட்ட மாதிரி இருந்தது. கையிலிருந்த ஒரே ஒரு பாதுகாப்புக் கருவியான வாளும் சிலையில் மோதி முறிந்துவிட்டது. உயிரின் மேலுள்ள இயற்கையான ஆசையும், பயமும் சேந்தனைக் கட்டுப்படுத்தி நிறுத்தின. சுவரில் வரிசையாகக் கட்டப்பட்டுத் தொங்கும் வாள்களின் வரிசையிலிருந்து ஒன்றை உருவிக் கையில் எடுத்துக் கொண்டு அப்புறம் அந்த நிலவறை முழுவதும் சுற்றலாமென்று எண்ணினான் அவன். பயம் அந்த முன்னெச்சரிக்கையை அவன் மனத்தில் எழுப்பி விட்டிருந்தது. பதற்றமும் அவசரமும் உந்தித் தள்ளச் சுவர் அருகில் சென்று ஒரு வாளின் நுனியைப் பிடித்து இழுத்தான். அது மேற்புறம் நன்றாக இறுக்கிக் கட்டப்பட்டிருந்ததால் அவ்வளவு லேசாக அவன் இழுத்த மாத்திரத்தில் கைக்கு வந்துவிடவில்லை. எனவே பக்கத்தில் சென்று இரண்டு கைகளாலும் பலங்கொண்ட மட்டும் அதைப் பிடித்து இழுத்தான். அடுத்த விநாடி நூற்றுக்கணக்கான வெண்கல மணிகளை ஒரே சமயத்தில் யாரோ தாறுமாறாக அடித்தது போன்று ஓர் ஒலிக் குழப்பம் அங்கு உண்டாயிற்று. மடமடவென்று சுவரிலிருந்த அத்தனை வாள்களும், கேடயங்களும் சரிந்து உதிர்ந்தன. நாராயணன் சேந்தன் பின்னுக்கு விலகி நின்று கொண்டான். அவன் எதிர்பாராதது நடந்து விட்டது. அந்தச் சுவரில் கட்டப்பட்டிருந்த எல்லா வாள்களும் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரை ஒரே நீளக் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தன. அவன் இழுத்த வேகத்தில் கயிறு அறுந்து விட்டது. அந்த எதிர்பாராத நிகழ்ச்சியால் அவன் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே நிலவறையிலிருந்து வெளியேறும் படியில் மேலே யாரோ ஏறி ஓடும் காலடியோசை கேட்டது. |