![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 24. ‘செய்தி பரவியது’ |
இரண்டாம் பாகம் 3. நெருங்கி வரும் நெடும் போர் அடுத்தடுத்து வந்த பயங்கரச் செய்திகளைக் கேள்விப்பட்டுப் பெரும்பெயர்ச்சாத்தன் பதறிப் போனான். நிலைமையை விவரித்து எழுதிய திருமுகத்துடன் அப்போதுதான் தூதனுப்பியிருந்தான். தூதுவன் புறப்பட்டுப் போன சிறிது நேரத்திற்குள் கொற்கையிலிருந்து அந்தப் புதிய செய்தி வந்தது. "இரவில் ஆயுதபாணிகளான முரட்டு வீரர்கள் சிலர் தீப்பந்தங்களோடு கூட்டமாக வந்தார்கள். முத்துச் சலாபத்துக்கு அண்மையிலிருந்த கூடாரங்களுக்குத் தீ வைத்துவிட்டுக் காவலுக்கு இருந்த நம் வீரர்களோடு போரிட்டனர். குவித்து வைக்கப்பட்டிருந்த சிப்பிக் குவியல்கள் சூறையாடப்பட்டு விட்டன. அந்த முரட்டுக் கூட்டத்தில் யாருமே அகப்படவில்லை. சிலரைத் துரத்திப் பிடிக்க முயன்றும் முடியாமல் போய்விட்டது." கொற்கையிலிருந்து செய்து கொண்டு வந்த ஆள் இப்படிக் கூறிய போது பெரும்பெயர்ச்சாத்தன் திகைத்துப் போய் விட்டான். "தொடர்ந்து முத்துக்குளிப்பு நடைபெறுகிறதோ, இல்லையோ?" "இல்லை! தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முத்து வாணிபத்துக்காக நெடுந்தொலைவிலிருந்து கடல் கடந்து வந்திருந்த வணிகர்களெல்லாம் பயந்து போய்த் திரும்பிச் சென்று விட்டனர்." "என்ன ஆனாலும் முத்துக்குளிப்போ, சலாபத்து வேலைகளோ தடைப்பட்டு நிற்கக்கூடாது. நம்மைப் பலவீனப்படுத்த விரும்புகிறவர்களுக்கு முன் நாம் பலவீனமடைவது போல் காட்டிக் கொள்வது நல்லதல்ல. இந்தத் திருமுகம் கொண்டு வரும் தூதனோடு பொறுக்கி எடுத்த வீரர்களாக நூறு பேர் அனுப்பியிருக்கிறேன். இவர்களைக் காவலுக்கு வைத்துக் கொண்டு தொடர்ந்து முத்துக் குளிப்பை நடத்துங்கள். மற்ற ஏற்பாடுகளை இங்கே நான் கவனித்துக் கொள்கிறேன்" என்று முக்கியமான ஆள் வசம் ஓர் ஓலையையும் நூறு வீரர்களையும் ஒப்படைத்து உடனே கொற்கைக்கு அனுப்பினான் பெரும்பெயர்ச்சாத்தன். பயமும், திகைப்பும், மேலும் மேலும் திடுக்கிடும் செய்திகளும் அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டிருந்தாலும் தன்னைப் பொறுத்தவரையில் உறுதியாக இருந்து காரியங்களைச் செய்து வரவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டிருந்தான் அவன். வடக்கு எல்லைப் பகுதியில் பலமான காவல் ஏற்பாடுகளைச் செய்திருந்த போதிலும் அங்கிருந்தும் சில கலவரச் செய்திகள் காதுக்கு எட்டிக் கொண்டு தான் இருந்தன. எல்லை முடியும் இடத்தில் நடப்பட்டிருந்த கொழுக்குத்துக் கற்கள் (எல்லை பிரியும் இடத்தை விளக்கும் அடையாளக் கற்கள்) இரவோடு இரவாகப் பிடுங்கி எறிந்து உடைக்கப் பட்டிருந்தனவாம். தன்னால் முடிந்த காவல் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அரண்மனைக்குச் செய்தி கொண்டு போன மானகவசன் திரும்ப வருவதை எதிர்பார்த்திருந்தான் பெரும்பெயர்ச்சாத்தன். ஏற்கெனவே சந்தேகத்தின் பேரில் சிறைபிடிக்கப்பட்டிருந்த வடதிசை ஒற்றர்கள் சிலரைப் பயமுறுத்தியும், துன்புறுத்தியும் அவர்களிடமிருந்து ஒரு சில உண்மைகளை அறிய முடிந்திருந்தது. படையெடுக்க முனைந்திருப்பவர்களை யார் யாரென்றும், அவர்களுடைய நோக்கங்கள் என்னென்னவென்றும் பெரும்பெயர்ச்சாத்தன் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தான். அரண்மனைக்கு அனுப்பிய திருமுகத்திலும் அதைக் குறிப்பிட்டிருந்தான். கரவந்தபுரத்துக் கோட்டை சிறந்த பாதுகாவல் அமைப்புக்களைக் கொண்டது. பராந்தக பாண்டியரும், பெரும்பெயர்ச்சாத்தனின் தந்தை உக்கிரனும் அவர்கள் காலத்தில் வடக்கு எல்லைப் பாதுகாப்பையும் வேறு சில வசதிகளையும் எண்ணித் திட்டமிட்டு உருவாக்கிய கோட்டை அது. ஆழமான அகன்ற அகழி. எந்திரப் பொறிகளும் தந்திரச் செயல்களும் மிக்க உயரமான மதிற்சுவர். சிலப்பதிகாரத்து மதுரைக் கோட்டையை மனத்தில் கொண்டு கட்டப்பட்டிருந்தது கரவந்தபுரத்துக் கோட்டை. கோட்டைக் கதவுகளை அடைத்து, முட்டுக் கொடுப்பதற்கு மூன்று பெரிய கணைய மரங்கள் தேவையென்றால் அதன் பெருமையை வேறு எப்படிக் கூற முடியும்? இப்படியெல்லாம் இருந்தும் பாதுகாப்புக்காக மேலும் கவலை எடுத்துக் கொண்டான் அந்தக் கோட்டையின் சிற்றரசன். மகாமண்டலேசுவரரிடமிருந்தும் மகாராணியிடமிருந்தும் மறுமொழி கிடைப்பதற்கு முன்னால் தன்னால் ஆனவற்றையெல்லாம் தயங்காமல், மயங்காமல் செய்ய வேண்டுமென்ற துடிதுடிப்பு அவனுக்கு இருந்தது. அன்று மாலைக்குள் மானகவசன் மறுமொழி ஓலையோடு திரும்பி விடுவான் என்று அவன் ஒவ்வொரு விநாடியும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மானகவசன் அன்று மாலை மட்டுமல்ல மறுநாள் காலை வரையில் வரவே இல்லை. வேறு சில செய்திகள் பராபரியாக அவனுக்குத் தெரிந்தன. கன்னியாகுமரிக் கோவிலில் யாரோ மகாராணியார் மேல் வேல் எறிந்து கொல்ல முயன்ற செய்தியைக் கேட்ட போதே அவன் மிகவும் கலங்கினான். அதன்பின் கூற்றத் தலைவர்கள் அரண்மனையில் ஒன்று கூடித் தென்பாண்டி நாட்டின் எதிர்காலம் பற்றி விவாதிக்கப் போவதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், 'இடையாற்று மங்கலம் மாளிகையில் அந்நியர் அடிச்சுவடு படமுடியாத பாதுகாப்பான இடத்திலிருந்து பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீர வாளும், பொற் சிம்மாசனமும் கொள்ளை போய்விட்டன' - என்ற புதுச்செய்தியை அறிந்த போது அவன் அடைந்த அதிர்ச்சி அவன் வாழ்நாளிலேயே பேரதிர்ச்சி. 'அடாடா! வலிமையான தலைமையற்றிருக்கும் இந்த நாட்டுக்குத்தான் ஒரே சமயத்தில் எத்தனை சோதனைகள்? பட்டகாலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல் அடுத்தடுத்து வரும் இந்தத் துன்பங்களையெல்லாம் மகாராணியார் எப்படித்தான் தாங்கிக் கொள்ளப் போகிறாரோ? கணவனை இழந்த கைம்மை நிலை, குமாரபாண்டியர் காணாமற் போன துயரம், பகைவர்களின் பலம் வாய்ந்த தொல்லைகள், அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போன அவலம். ஐயோ இந்தச் சமயத்திலா நான் போர்ச் செய்தியை பற்றிய திருமுகத்தைக் கொடுத்தனுப்ப வேண்டும்? இதை வேறு கேள்விப்பட்டால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும்? தெய்வத்துக்குச் சமமான மகாராணியாரின் நெஞ்சம் இந்நாட்டையும், தம் புதல்வனையும், எதிர்கால ஆட்சியையும் பற்றி எத்தனை எத்தனை உயர்ந்த எண்ணங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது? ஐயோ! ஊழ்வினையே! எங்கள் மகாராணி 'பாண்டிமாதேவி'யின் எண்ணங்களுக்கு நீ என்ன முடிவு வகுத்து வைத்திருக்கிறாயோ?' இவ்வாறு எண்ணி நெடுமூச்செறிந்த பெரும்பெயர்ச்சாத்தனின் மனக்கண்களுக்கு முன்னால் ஒரு கணம் பாண்டிமாதேவியின் சாந்தம் தவழும் தெய்விக முகமண்டலம் தோன்றி மறைந்தது. ஏனோ, மகாராணி பாண்டிமாதேவியின் திருமுகம் தோன்றிய மறுகணமே அதை ஒட்டித் தோன்றினாற் போல், மணத்தை நுகர்ந்த அளவில் பூவின் உருவை மனம் உரு வெளியில் கற்பித்துக் காண முயலுமே, அப்படிப்பட்ட ஓர் இயல்பு அது. பெரும்பெயர்ச்சாத்தன் அவன் தந்தையைப் போலவே அஞ்சா நெஞ்சம் படைத்த வீரன். அவன் தந்தை உக்கிரன் மகாமன்னரான பராந்தக பாண்டியரையே பல முறைகள் எதிர்த்துப் போரிட்டு அதன் பின்னே அவருக்குப் பணிந்து நண்பனானான். அத்தகைய திடமான வீரப் பரம்பரையில் பிறந்திருந்தும் நல்லவர்களுக்கு வரும் துன்பங்களைக் காணும் போது அவன் மனம் நெகிழ்ந்து விடுகிறது. ஒருபுறம் நாட்டின் சூழ்நிலைகளைப் பற்றிய தவிப்பு. மறுபுறம் தூது போன மானகவசன் இன்னும் ஏன் திரும்பி வரவில்லை என்ற கவலை. இரண்டும் பெரும்பெயர்ச்சாத்தனைப் பற்றிக் கொண்டு அவன் அமைதியைக் குலைத்தன. 'எதற்கும் இன்னொரு தூதனை அனுப்பிவிட்டால் நல்லது. காரியம் பெரிது. மெத்தனமாக இருந்து விடக்கூடாது. மானகவசன் போய்ச் சேர்ந்தானோ, போகவில்லையோ?' என்று நினைத்துப் பார்க்குங்கால் பற்பல விதமான ஐயப்பாடுகள் அவனுக்கு உண்டாயின. உடனே மற்றொரு தூதனிடம் கொற்கையில் நடந்த குழப்பம், வட எல்லையில் கொழுக்குத்துக் கற்கள் உடைபட்ட விவரம் எல்லாவற்றையும் விவரித்து மற்றொரு திருமுகத்தை எழுதிக் கொடுத்து அனுப்பினான். அப்புறமும் பெயர்ச்சாத்தனின் மனத்தில் நிம்மதி ஏற்படவில்லை. எண்ணங்களிலிருந்து விடுபட்டுச் சிந்தனைகளைத் தவிர்க்க முயன்றாலும் மறுபடியும் அவன் மனம் வலுவில் சிந்தனைகளிலேயே போய் ஆழ்ந்தது. கொற்கையில் புகுந்து குழப்பம் செய்தது போல் இடையாற்று மங்கலத்தில் நடந்த கொள்ளைக்கும் எதிரிகள் தான் காரணமோ என்று நினைத்தது அவன் மனம். 'இவ்வளவெல்லாம் இங்கே குழப்பங்கள், சூழ்ச்சிகள் நடக்கின்றன. குமாரபாண்டியர் எங்கிருந்தால் தான் என்ன? ஏதாவது ஒரு குறிப்புக் கூடவா அவர் காதுக்கு எட்டாமல் இருக்கும்? தளபதி வல்லாளதேவனின் படைத்திறனும், இடையாற்று மங்கலம் நம்பியின் இணையற்ற சாமர்த்தியமும் எங்கே போய்விட்டன?' மகாமண்டலேசுவரரை அவன் என்றும் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. புரிந்து கொள்கிற அளவுக்கு அவனை அவர் நெருங்க விட்டதும் இல்லை. சாமர்த்தியமே உருவான ஒரு பெரும் புதிர் என்று அவரைப் பற்றி அவன் முடிவு செய்து வைத்திருந்தான். தளபதி வல்லாளதேவன் கடமையில் கருத்துள்ளவன். சிறிது உணர்ச்சித் துடிப்பு மிகுந்தவன் என்பதும் அவன் அறிந்த விவரமே. மகாராணியாரையும், குமாரபாண்டியரையும் பொறுத்தமட்டில் அவனுக்கு ஒரே விதமான எண்ணம்தான். 'வணக்கத்துக்குரியவர்கள். அன்பும், அனுதாபமும் செலுத்தத் தக்கவர்கள்'... தன் உயிரின் இறுதித் துடிப்பு வரை அந்தப் பேரரசின் வாழ்வுக்குக் கட்டுப்பட்டு உதவ வேண்டுமென்ற அவன் எண்ணத்தை ஊழி பெயரினும் மாற்ற இயலாது. இல்லையானால் அவனைத் தங்களுடையவனாக்கிக் கொள்ள வடதிசை அரசர் பலமுறைகள் முயன்றும் அவன் மறுத்திருக்க மாட்டான். மனத்தின் தெளிவற்ற நிலையைச் சரி செய்து கொள்வதற்கு எங்கேயாவது திறந்த வெளியில் காற்றுப் படும்படி உலாவ வேண்டும் போலிருந்தது. "மானகவசனோ, வேறு ஆட்களோ வந்தால் என்னிடம் அனுப்புங்கள்" என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மேல் மாடத்துத் திறந்த வெளி முற்றத்துக்குச் சென்றான் அவன். மேல் மாடத்தில் அந்த மலைக்காற்று சிலுசிலுவென்று வீசியது. 'காலத்தால் அழிக்க முடியாத பேருண்மை நான்' என்று கூறுவது போல் வடமேற்கே பொதியமலை பரந்து கிடந்தது. ஆகாயப் பெருங்குடையை அணைய முயலும் அந்த எழில் நீலப் பேரெழுச்சியை - காலத்தை வென்று கொண்டு நிற்கும் கல்லின் எழுச்சியைத் திறந்த வெளியிடையே பார்க்கும் போது நம்பிக்கை பிறப்பது போல் இருந்தது பெரும்பெயர்ச்சாத்தனுக்கு. 'தன் பக்கத்தில் வடக்கு எல்லையில் போர் நெருங்கி வந்து கொண்டிருக்கிறதே' என்பதைப் பற்றி இந்த மலைக்குச் சிறிதும் வாட்டமிருப்பதாகத் தெரியவில்லையே என்று வேடிக்கையாக நினைத்தான். மேல் மாடத்துப் படிகளில் யாரோ வேகமாக ஏறிவரும் காலடியோசை கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். ஒரு சாதாரண வீரன் வந்து வணங்கி நின்றான். "என்ன?" "தூதன் மானகவசன் திரும்பி வந்திருக்கிறான்... ஆனால்..." வந்த வீரன் பதில் சொல்வதற்குத் தயங்குவது போல் தெரிந்தது. |