இரண்டாம் பாகம் 6. தமையனும் தங்கையும் தென்பாண்டி நாட்டின் வீரத் தளபதி வல்லாளதேவன் இந்தக் கதையின் தொடக்கத்திலிருந்து இதுவரையில் ஓய்வில்லாமல் அலைந்து கொண்டு தான் இருந்தான். அவனுக்கும் அவன் சிந்தனைக்கும் சில நாழிகைப் பொழுதாவது அமைதி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். தன்னையும் தன்னுடையவற்றையும் விடத் தன் கடமைகளைப் பெரிதாகக் கருதும் அந்த உண்மை வீரனுக்கு உடன் பிறந்த தங்கையைச் சந்தித்து மனம் விட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பதற்குக் கூட இதுவரை ஒழியவில்லை. இப்போது கூட அவனுக்கு ஒழியாது தான். கோட்டாற்றுப் படைத்தளத்துக்குப் போய் உடனே படை ஏற்பாடுகளைக் கவனிக்குமாறு அவனுக்கு அவசரக் கட்டளை இட்டிருந்தார் மகாமண்டலேசுவரர். அவருடைய கட்டளையின் அவசரத்தை விட, அவசரமாகத் தன் தங்கை பகவதியையும், ஆபத்துதவிகள் தலைவன் குழைக்காதனையும் சந்திக்க வேண்டியிருந்தது அவனுக்கு.
முதலில் ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதனைக் கண்டு அரண்மனைத் தோட்டத்தின் அடர்த்தியான பகுதி ஒன்றுக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தான். குழைக்காதன், தளபதி அரண்மனைக்கு வருவதற்கு முன் அங்கு நடந்த சில நிகழ்ச்சிகளில் தான் கண்ட சிலவற்றை விவரமாகக் குறிப்பிட்டுச் சொன்னான். "நீங்கள் முன்பு கோட்டாற்றிலிருந்து என்னை அனுப்பிய போது கூறியபடி கூடிய வரை மகாமண்டலேசுவரருடைய கண்ணுக்கு அகப்படாமல் இருக்க முயன்றேன். ஆனால் கடைசியில் அவர் கண்டு பிடித்து விட்டார்." "குழைக்காதரே! நீங்கள் நினைப்பது போல் அந்த மனிதரை அவ்வளவு எளிதாக ஏமாற்றி விட முடியாது. எனக்கே தெரியும். இருந்தாலும் உங்களால் முடிகிறதா இல்லையா என்று சோதிப்பதற்காகவே அப்படிச் சொல்லி அனுப்பினேன். உங்களுக்கும் எனக்கும் இரண்டு கண்கள் இருந்தால் இரண்டின் பார்வை ஆற்றல் தான் இருக்கும். ஆனால் அவருடைய இரண்டு கண்களுக்கு இருபது கண்களின் ஆற்றல் உண்டு. அப்படி இருந்தும் சில சமயங்கள் அவரைப் பலவீனப்படுத்தி விடுகின்றன!" "உண்மை! கூற்றத் தலைவர்கள் கூட்டத்தின் போது அவருடைய ஆற்றலையும், பலவீனத்தையும் சேர்ந்து என்னால் காணமுடிந்தது!" "அது இருக்கட்டும்! இப்போது நீங்கள் எப்படியாவது அந்தப்புரப் பகுதிக்குச் சென்று என்னுடைய தங்கை பகவதியை இங்கே அழைத்து வரவேண்டும்" என்றான் தளபதி. "இப்போதிருக்கிற சூழ்நிலையில் நான் அந்தப்புரத்துக்குள் நுழைந்தால் ஒரு பெரிய கலவரமே உண்டாகிவிடும். அங்கே புவன மோகினி என்று ஒரு வண்ணமகள் என்னை நினைத்து நடுங்கிக் கொண்டிருக்கிறாள். என் தலையை அந்தப்புரத்துக்குள் பார்த்துவிட்டால் வேறு வினையே வேண்டியதில்லை" என்று தொடங்கிப் புவன மோகினியின் மூலம் மகாமண்டலேசுவரர் தன்னைப் பற்றி உளவறிந்த விவரத்தை தளபதிக்கு விளக்கிக் கூறினான் அவன். "அப்படியானால் பகவதியை இப்போது இங்கே வரவழைத்துச் சந்திப்பதற்கு வேறு வழி?" தளபதியின் கேள்விக்கு வழி சொல்ல வகையறியாமல் விழித்தான் குழைக்காதன். அவர்கள் இருவரும் தோட்டத்தில் எந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்களோ, அந்த இடமே அந்தப்புரத்துச் சுவரோரமாகத்தான் இருந்தது. மேல் மாடத்தில் தான் பகவதி, விலாசினி முதலிய பெண்கள் தங்கியிருந்தார்கள். மேன்மாடத்திலிருந்த அந்த அறை அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து நான்காள் உயரத்தில் இருந்தது. மேலே இருந்த அந்தப்புரத்து அறைகள் ஒவ்வொன்றின் நிலைக்கு மேலேயும் ஒரு சிறிய வெண்கல மணி தொங்கிக் கொண்டிருந்தது. "எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. செய்து பார்க்கிறேன். நான் நினைக்கிறபடி நடந்தாலும் நடக்கலாம். வேறு மாதிரி ஆகிவிட்டால் ஏமாற்றம் தான்" என்று முகம் மலர்ந்து கூறினான் மகர நெடுங்குழைக்காதன். "என்ன வழி அது?" தளபதியின் வினாவில் ஆவல் துள்ளி நின்றது. "இருங்கள், இதோ செய்து பார்க்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே தலைக்கு மேலிருந்த மாமரத்தில் கைக்கெட்டுவது போல் சரம் சரமாகத் தொங்கிக் கொண்டிருந்த மாவடுக்களில் நாலைந்தைப் பறித்தான். மேலே பார்த்து குறி வைத்து ஒவ்வொரு மாவடுவாக எறிந்தான். அவன் எறிந்த மூன்றாவது மாவடு அறையின் வாசலில் தொங்கிய மணியின் நாக்கில் பட்டு அசைந்தது. அடுத்த கணம் கணீரென்று மணியின் ஓசை ஒலித்தது. எதை எதிர்பார்த்து அவன் அப்படிச் செய்தானோ, அது உடனே நடந்தது. அந்த மணியோசை எழுந்ததுமே, "யாரது?" என்று அதட்டிக் கேட்டுக் கொண்டே பகவதி அறைவாசலுக்கு வந்தாள். கீழே குனிந்து மாவடு எறியப்பட்ட திசையைப் பார்த்தாள். மறுகணமே அவள் கோபம் மலர்ந்த சிரிப்பாக மாறியது. கீழே அவள் தமையன் வல்லாளதேவன் மாமரத்து அடர்த்தியிலிருந்து தலை நீட்டிச் சைகை செய்து அவளைக் கூப்பிட்டான். அவள் 'வருகிறேன்' என்பதற்கு அடையாளமாகப் பதில் குறிப்புக் காட்டிவிட்டுக் கீழே இறங்கினாள். "நல்ல வேளை! அறைக்குள் உங்கள் தங்கையே இருந்ததனால் என் தந்திரம் பலித்தது! இல்லாவிட்டால் வம்பாகியிருக்கும்" என்றான் மகர நெடுங்குழைக்காதன். "குழைக்காதரே! இப்போதுதான் 'ஆபத்துதவி' என்ற உம்முடைய பெயருக்குச் சரியான செயலைச் செய்து விளக்கினீர். பிரமாதமான தந்திரம். அபூர்வமான யோசனை, அபாரமான குறி" எனப் பாராட்டினான் தளபதி வல்லாளதேவன். "என்ன அண்ணா இது?என்னைச் சந்திக்க வேண்டுமென்றால் அந்தப்புரத்துக்குள் வந்து உரிமையோடு சந்திக்கலாமே? தோட்டத்தில் நின்று இப்படியெல்லாம் தந்திரம் செய்வானேன்?" என்று கேட்டுக் கொண்டே பகவதி அங்கு வந்து சேர்ந்தாள். "தந்திரம் என்னுடையதல்ல, பகவதி! நம் குழைக்காதருடையது!" என்று சொல்லிச் சிரித்தான் தளபதி. "நினைத்தேன்! அவருடையதாகத்தான் இருக்க வேண்டுமென்று. குறி தவறாமல் எறிகிறாரே!" "என் குறி கூடச் சில சமயங்களில் தவறி விடுகிறது அம்மணி!" எதையோ உட்பொருளாக அடக்கி வைத்துப் பேசினான் ஆபத்துதவிகள் தலைவன். அவனுடைய அந்தச் சிலேடைப் பேச்சு தளபதி வல்லாளதேவனுக்குச் சிரிப்பை உண்டாக்கிற்று. "குழைக்காதரே! நீங்கள் போய் உங்கள் வேலைகளைக் கவனிக்கலாம். நானும் பகவதியும் தனிமையாகப் பேச வேண்டியிருக்கிறது. உங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய முக்கியமான செய்திகள் எவையேனும் இருந்தால் பகவதியிடம் சொல்லிவிட்டுப் போகிறேன். அவள் உங்களுக்குத் தெரிவிப்பாள் இப்போது நீங்கள் போகலாம்" என்று தளபதி கூறினான். "நல்லது, வணக்கம்! நான் விடைபெற்றுக் கொள்கிறேன்" என்று வணங்கி புறப்பட்டான் குழைக்காதன். தோட்டத்துப் புதர்கள், பதுங்கிப் பதுங்கித் தன்னை மறைத்துக் கொண்டு வெளியேற அவனுக்கு ஒத்துழைத்தன. "அண்ணா! நீங்கள் அரண்மனையிலிருந்து வெளியேறிச் செல்லுவதற்கு முன் உங்களை எப்படியாவது ஒருமுறை சந்தித்துவிட வேண்டுமென்று நானே நினைத்துக் கொண்டு தானிருந்தேன்" என்றாள் பகவதி. "பகவதி! இப்போது இந்த அரண்மனையில் நிலவும் சூழ்நிலையில் அண்ணனும் தங்கையும் தனியே சந்தித்துப் பேசினால் கூட மிகப் பெரிய அரசியல் இரகசியங்களைப் பேசிக் கொள்வதாக எண்ணிக் கொள்வார்கள்." "மற்றவர்கள் என்னென்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் உலகத்தில் எந்தக் காரியத்தையுமே செய்ய முடியாது. அண்ணா! நீங்கள் என்னைக் கூப்பிட்ட காரியத்தைப் பேசுங்கள். நேரம் ஆகிறது" என்று அவனைத் துரிதப்படுத்தினாள் அவன் தங்கை. "பகவதி! சிறு வயதில் உனக்கு நான் வேடிக்கையாக ஒரு கதையை அடிக்கடி சொல்வேன், அது நினைவிருக்கிறதா?" "ஏழை வேளான் ஒருவனுக்கு மண் சுவரின் மேல் கூரையால் வேய்ந்த குடிசை தான் வீடு. விடாத அடைமழையால் சுவர்கள் விழுந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டிய சமயத்தில் குடிசைக்குள் மாடு கன்று போட்டு விடுகிறது. நிறை மாதத்தோடு பிள்ளைப் பேற்றுக்குத் தயாராயிருந்த அந்த ஏழையின் மனைவிக்கு அதே சமயத்தில் இடுப்பில் வலி கண்டது. இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்து விடுமோ என்று பரபரப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் குடிசையின் ஒரு பக்கத்து மண் சுவர் ஈரம் தாங்காமல் விழுந்து விட்டது. அந்த வீட்டில் வேலை பார்த்து வந்த அடிமைச் சிறுவன் ஒருவன் இறந்து போனான். வயல்கள் ஈரப்பதமாகவே இருக்கும் போதே விதை விதைத்துவிட வேண்டுமே என்று வீட்டுத் தலைவன் வயலுக்கு ஓடினான். வழியிலே அவனுக்குக் கடன் கொடுத்தவர் அவனை மறித்துக் கொண்டார். அந்தச் சமயம் பார்த்துப் பக்கத்து ஊரில் அவன் உறவினர் ஒருவர் இறந்து போனதாக இழவு ஓலை கொண்டு வந்தான் ஒருவன். என்ன செய்வதென்றே புரியாமல் அவன் திகைத்துக் கொண்டிருந்த போது தள்ளமுடியாத விருந்தினர்கள் இரண்டு பேர்கள் அவன் குடிசையைத் தேடிக் கொண்டு வந்தார்கள். அப்போது குடிசையின் பின்புறமிருந்து அவனுடைய மூத்த புதல்வனின் அலறல் கேட்டது. அவன் ஓடிப் போய்ப் பார்த்தான். அங்கே அவன் புதல்வனைப் பாம்பு தீண்டியிருந்தது. அவன் 'கோ'வென்று கதறி அழுதான். அந்தச் சமயத்தில் ஊர்க்கணக்கர் வந்து அவன் நிலவரி செலுத்தவில்லை என்பதை நினைவுபடுத்தினார். அவனுடைய குலகுருவும் அந்த நேரம் பார்த்து அங்கே வந்து 'தட்சிணையைக் கீழே வைத்துவிட்டு மறு வேலை பார்' என்று கேட்க ஆரம்பித்தார்..." "கதையில்லை! தென்பாண்டி நாட்டின் இப்போதைய சூழ்நிலை ஏறக்குறைய இதுதான். கதையில் அத்தனை துன்பங்களுக்கும் ஒரு மனிதன் இலக்கு. இங்கே ஒரு நாடு இலக்கு." "கதையா அது? தாங்க முடியாத வறுமைத் தொல்லைகளை அனுபவித்த எவனோ ஒரு புலவன் திரித்த பொய்!" "கதை பொய்யாகவே இருக்கட்டுமே! இப்போது நம்மைச் சுற்றி நடப்பவைகள் பொய்களல்ல. பாண்டிநாட்டுக் கதவைத் தட்டிக் கூப்பிடும் கவலைகள் கனவுகள் அல்ல!" "அண்ணா! கதையும் எடுத்துக் காட்டும் சொல்லி உண்மைகளைப் புரியவைப்பதற்கு நான் இன்னும் சிறு குழந்தையா என்ன? சொல்ல வந்ததை நேரடியாகவே சொல்லுங்கள்!" "பகவதி! நீ என்னுடைய தங்கை! இந்தச் சூழ்நிலையில் என்னுடைய தங்கையிடமிருந்து நான் சில வீரச் செயல்களை எதிர்பார்க்கிறேன்!" - பொருள் புரிய நிறுத்தி இடைவெளி விட்டு ஒவ்வொரு சொல்லாகச் சொன்ன பின் புருவங்கள் ஒன்று கூடுமிடத்திற்கு மேல் உணர்ச்சி மேடாகிய அந்த அழகு நெற்றியை இமையாமல் பார்த்தான் தளபதி. "என்ன அண்ணா, அப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் தங்கை மேல் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?" "நம்பிக்கைக்கு ஒன்றும் குறைவில்லை! இப்போது உன்னிடம் மனம் திறந்து உரிமையோடு பேசுகிறேன். நான் உடன் பிறந்தவன் என்ற முறையில் இதுநாள் வரை உனக்கு ஒரு குறைவும் வைக்கவில்லை. நம் அன்னையும் தந்தையும் பிரிந்த நாளிலிருந்து நீ என் கண்காண வளர்ந்திருக்கிறாய், பகவதி. என்னுடைய போர்த் தொழிலுக்குப் பயன்படும் சில வீரக் கலைகளிலிருந்து யாழ், இசை முதலிய நளினக் கலைகள் வரை கற்றுக் கொண்டிருக்கும் நீ இதுவரை அரசியல் சூழ்ச்சிக் கலைகளை அதிகம் அறிந்து கொள்ள வாய்த்ததில்லை. நானும் அதற்கு உன்னை விடவில்லை. பவழக்கனிவாயரிடம் நளினக் கலைகளைக் கற்றாய்! ஆசிரியர் பிரானிடம் இலக்கிய அறிவு பெற்றாய்! நான் இப்போது கடைசியாகக் குறிப்பிட்ட கலையை என் மூலமாக எனக்காக நீ கற்றுக் கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது!" "என்ன அண்ணா! புதிர் போடுகிறீர்கள்?" என்றாள் பகவதி. "இப்போதைக்கு அது புதிர்தான்! புதிரை விளங்கிக் கொண்டு வரத்தான் நீ உடனடியாகப் புறப்பட வேண்டும். மிகப் பெரிய அந்தரங்களெல்லாம் இந்தப் புதிருக்குள் தான் அடங்கிப் போயிருக்கின்றன!" அந்தப் பேச்சிலிருந்து எதுவும் விளங்கிக் கொள்ள முடியாமல் குழப்பத்தோடு அண்ணன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பகவதி. அவனுடைய கண்களில் துணிவின் ஒளி, உறுதியின் சாயை இரண்டையும் அவள் கண்டாள். செய்தே தீர வேண்டிய செயல்களைப் பற்றிப் பிடிவாதமாகப் பேசும் போது அண்ணனுடைய கண்களில் அந்த ஒளியை அவள் கண்டிருக்கிறாள். "மென்மையான உன்னுடைய கைகளிலிருந்து வன்மையான செயல்களை எதிர்பார்க்கிறேன், பகவதி! வளை சுமக்கும் கைகளில் பொறுப்பைச் சுமத்த முடியுமா என்று தயங்குகிறேன்!" "உங்கள் தங்கையின் கைகள் அதற்குத் தயங்கப் போவதில்லை, அண்ணா!" "இந்த வார்த்தைகளை உன்னிடமிருந்து வரவழைப்பதற்குத்தான் இத்தனைப் பேச்சும் பேச வேண்டியிருந்தது. இனிமேல் கவலை இல்லை." இவ்வாறு கூறிவிட்டுத் தன் தங்கைக்கு மிக அருகில் நெருங்கிக் காதோடு காதாக மெல்லிய குரலில் ஏதோ கூறத் தொடங்கினான் தளபதி வல்லாளதேவன். அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த போதே அவள் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளின் நிழல்கள் படிந்து மறைந்தன. நெடுநேரமாக அவள் காதருகில் அவனுடைய உதடுகள் அசைந்து கொண்டிருந்தன. வண்டு பூவைக் குடையும் ஓசையை விட மிக மெல்லிய ஓசையில் பேசுவதற்குத் தென்பாண்டி நாட்டுத் தளபதி எங்கே கற்றுக் கொண்டிருந்தானோ? பகவதியின் முக பாவங்கள் விநாடிக்கு விநாடி அவன் சொற்களைப் புரிந்து கொண்டதற்கு ஏற்ப மாறுபடும் போது எத்தனை எத்தனை உணர்ச்சிக் குழப்பங்களை அந்த வனப்பு மிக்க நெற்றியில் காண முடிகிறது? பிறைச் சந்திரனைக் கவிழ்த்து வைத்தாற் போன்ற நெற்றி அது. தன் தங்கையிடம் அற்புதமான அழகும், வனப்பும் அமைந்திருப்பதாகப் பெருமைப்பட்டதைக் காட்டிலும், துணிவும் சாமர்த்தியமும் பெருக வேண்டுமென்பதற்காகத்தான் அதிகக் கவலைப் பட்டிருக்கிறான் வல்லாளதேவன். அந்தக் கவலையும் அவன் இப்போது கூறிய செயலைச் செய்ய அவள் ஒப்புக் கொண்டதால் அகன்றுவிட்டது. எல்லாவற்றையும் அவள் காதில் இரகசியமாகக் கூறி விட்டுத் தலை நிமிர்ந்த போது, மேலேயிருந்து சற்றுப் பெரிதான மாவடு ஒன்று தளபதியின் நெற்றிப் பொட்டில் விழுந்தது. விண்ணென்று தெரித்து விழுந்த அது உண்டாக்கிய வலியில் ஒரு கணம் கண் கலங்கிவிட்டது அவனுக்கு. "ஐயோ, அண்ணா! 'வடு'ப் பட்டுவிட்டதே?" என்று அவன் நெற்றியைத் தடவ நெருங்கினாள் பகவதி. "அதனாலென்ன? இங்கே வடுப்பட்டால் கவலை இல்லை. நீ போகிற காரியம் வடுப்படாமல் பார்த்துக் கொள் பகவதி!" என்று கூறிவிட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான் அவன். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
நகுலன் வீட்டில் யாருமில்லை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : சிறுகதை ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன. மிகக் கூர்மையான அங்கதத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் மரபான நம்பிக்கைகள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவிரமான பிரக்ஞையைக் கொண்டிருக்கின்றன. நேரடியாக வாங்க : +91-94440-86888
|