10. கடன் தொல்லைகள் "வள்ளியம்மை! உன்னைத்தானே? வாசலில் யாரோ வந்து கூப்பிடுகிறாற் போலிருக்கிறதே? போய் யாரென்று பார்த்துவிட்டு வா." - உள் வீட்டில் சமையற் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்த தாயார் மகளை வாசற்புறம் போய்ப் பார்த்துவிட்டு வரச்சொல்லி அனுப்பினாள். வாசலில் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்த வள்ளியம்மையின் முகத்தில் பதற்றமும், திகைப்பும் தெரிந்தன. "என்னடி பெண்ணே? வந்திருப்பது யார்?" "வட்டிக்கடைப் பன்னீர்ச்செல்வம் பிள்ளை வந்திருக்கிறார் அம்மா!" பெண் சொல்லிய பெயரைக் கேட்டதும் அந்த அம்மாளுக்கு மனத்தில் திக்கென்றது. நெற்றி சுருங்கிக் கவலையைக் காட்டும் மடிப்புக்கள் விழுந்தன. "அவரிடம் என்ன பதில் சொல்லி அனுப்புவது?" - தாயின் திகைப்பைப் புரிந்துகொள்ளாத பெண் அடுத்த கேள்வியைக் கேட்டாள். "நீ என்ன பதிலைப் போய்ச் சொல்லப் போகிறாய்? போ உள்ளே! அடுப்பைப் பார்த்துக்கொள். நான் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பிவிட்டு வருகிறேன்." பெண்ணை உள்ளே அனுப்பிவிட்டு வட்டிக்கடைக்காரருக்குப் பதில் சொல்லி அனுப்புவதற்காக வாசலுக்கு வந்தாள் அந்த அம்மாள். வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த மனிதர் பன்னீர்ச்செல்வத்திற்குத் தப்பித் தவறிக்கூட முகத்தில் சிரிப்போ, மலர்ச்சியோ, உண்டாகாது போலிருந்தது. முகத்தில் அசாதாரணமானதொரு கடுகடுப்பு, சாதாரணமாகவே எந்த நேரத்திலும் அமைந்திருந்தது. ஒருவேளை வட்டிக்கடைக்காரர்களெல்லாம் முகத்தை அப்படித்தான் வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று ஏதாவது இலக்கணம் இருக்கிறதோ, என்னவோ? இயற்கையாகவே, பிறவியிலேயே புலிமுகத்தைப் போலப் பயங்காட்டும் முகம் வாய்த்திருந்தது அவருக்கு. அதில் அரிவாள் நுனிபோல் வளைந்த மீசையும் சேர்ந்துகொண்டது. வட்டி வசூல் செய்யும் மிடுக்குடனே உள்ளேயிருந்து வந்த அந்த அம்மாளை நிமிர்ந்து பார்த்தார் பன்னீர்ச்செல்வம். தோள் புடவையை இழுத்துவிட்டுக் கொண்டே ஒடுங்கிப்போய்க் கதவோரமாக வந்துநின்ற அந்த அம்மாளுக்கு அவர் முகத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. "என்னம்மா? பிள்ளையைக் கொழும்புக்குக் கப்பலேற்றி அனுப்பியிருக்கிறீர்களாமே! போய்ப் பணம் ஏதாவது அனுப்பினானா? வட்டி தலைக்குமேல் ஏறிக்கொண்டே போகிறதே." - முகத்தின் கடுகடுப்புக்குச் சிறிதும் குறைவில்லாத குரல். பேசும்போதே யாரையோ அதட்டுவது போலிருந்தது. "அவன் போய்ச் சேர்ந்தே இன்னும் முழுமையாக ஒரு வாரம் கூட ஆகவில்லையே? அதற்குள் எப்படிப் பணம் அனுப்புவான்? 'சௌக்கியமாகப் போய்ச்சேர்ந்தேன்' என்று அவனிடமிருந்து ஒரு வரி கடுதாசி கூட வரவில்லையே?" பன்னீர்ச்செல்வத்தின் குரலில் எவ்வளவு மிடுக்கும், கடுமையும் இருந்தனவோ, அவ்வளவு தணிவும் பணிவும், அந்த அம்மாளுடைய குரலில் இருந்தன. எங்கும், எப்போதும் கையை உயர்த்தி ஒரு பொருளைக் கொடுத்தவர்கள் அதிகாரம் செய்யலாம்; அதட்டிப் பேசலாம், ஆட்சி செய்யலாம். எதையும் செய்ய முடியும் அவர்களுக்கு. ஆனால், கையேந்தி வாங்கினவர்களும் அப்படி இருக்க முடியுமா? "நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாயிற்று. இரண்டாயிரம் ரூபாய்க்கு நாலுவருட வட்டி ஐநூறு ரூபாய்க்குமேல் ஆகிறது. இந்த நாலு வருடத்தில் ஒருதரமாவது வட்டித் தொகையையும் கொடுக்கவில்லை. இனிமேல் உங்களிடம் கொடுப்பதற்குத்தான் என்ன இருக்கிறது? இடிந்த சுவரும், செங்கல் பெயர்ந்த தரையுமாக இந்த வீடு ஒன்று மீதமிருக்கிறது. இன்றைக்கெல்லாம் கூவிக்கூவி விற்றாலும் எழுநூறு ரூபாய்க்கு மேல் போகாது. பிள்ளையையும் அக்கரைச் சீமைக்கு அனுப்பிவிட்டீர்கள். வட்டியும் முதலுமாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு நான் தலையில் துணியைப் போட்டுக் கொண்டு போக வேண்டும் போலிருக்கிறது." வட்டிக் கடைக்காரரின் பேச்சில் படிப்படியாக அந்தத் தொழிலுக்கே உரிய அழுத்தம் ஏறிக்கொண்டிருந்தது. "அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ஐயா! இனிமேல் மாதா மாதம் அவன் ஏதாவது அனுப்புவான். மொத்தமாக அடைத்துத் தீர்க்க முடியாவிட்டாலும் உங்கள் கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடுகிறோம்." - அந்த அம்மாள் அவரைச் சமாதானப் படுத்திக் கெஞ்சுகிற பாவனையில் பேசினாள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|