|
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த: (Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS) (நன்கொடையாளர்கள் விவரம்)
|
புதிய வெளியீடு! |
17. நிம்மதியை நாடி...
கழனியா பௌத்த ஆலயத்தில் அன்று மாலை சபாரத்தினம் கூறிய இரகசியங்களை மனத்தில் ஏற்றுக்கொண்ட விநாடியிலிருந்து அழகியநம்பியின் மனத்தில் அமைதி இல்லை; நிம்மதி இல்லை, நம்பிக்கையுமில்லை. சபாரத்தினம் உடனிருந்தது நல்லதாகப் போயிற்று. இல்லையானால், அன்று மாலை கழனியாவிலிருந்து எப்படியும் வற்புறுத்தித் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டே போயிருப்பாள் பூர்ணா. அழகியநம்பியும் அவள் அழைப்பை மறுத்து மீற முடியாமல் போய் மாட்டிக் கொண்டிருப்பான். சபாரத்தினம் உடனிருந்ததால் சரியான சமயத்தில் பூர்ணா என்னும் தூண்டிலின் கூர்மையான கொக்கியில் சிக்காமல் காப்பாற்றப்பட்டான் அவன்.
"இல்லை! இன்று இவரை நீங்கள் கூப்பிடாதீர்கள். எங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகிறேன் நான். இன்னொரு நாள் உங்கள் வீட்டுக்கு வருவார்" - சபாரத்தினம் கீழே உட்கார்ந்து கொண்டிருந்தவர் எழுந்திருந்து பூர்ணாவிடம் பேசினார். "ஓ! உங்கள் வேலைதானா இதெல்லாம்?" - பூர்ணா சபாரத்தினத்தை நோக்கி வெடுக்கென்று இப்படிக் கேட்டாள். அந்தக் கேள்வியில் சிலேடையாக இரண்டு பொருள்கள் தொனித்ததைச் சபாரத்தினம் நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டார். அழகியநம்பி அதைக் கவனித்திருக்க நியாயமில்லை. கவனித்திருந்தாலும் அவனுக்கு அது புரிந்திருக்காது. "சரி! நீங்கள் என் வீட்டிற்கு வரவிரும்பவில்லை போலிருக்கிறது" - அழகியநம்பியைப் பார்த்துச் சொல்லிவிட்டு விறுட்டென்று திரும்பிச் சென்றுவிட்டாள் பூர்ணா. அவன் ஏதோ பதில் சொல்வதற்காக வாயைத் திறந்தான். ஆனால், அதைக் கேட்பதற்கு அவள் அங்கே நின்று கொண்டிருக்கவில்லை. அவளுடனே வந்திருந்த மற்றொரு பெண் மட்டும் போகிறபோக்கில் அவர்கள் இருவரையும் ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டுப் போனாள். "உங்களைப் புத்தர் பெருமான் தான் காப்பாற்றினார். நல்ல வேளை! வந்துதானாக வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்காமல் என்னோடு விட்டுவிட்டுப் போய்விட்டாள்" - பூர்ணாவின் தலை மறைந்ததும் சபாரத்தினம் சிரித்துக் கொண்டே அழகியநம்பியிடம் கூறினார். திடீரென்று பூர்ணாவை அங்கே சந்தித்த பதற்றமும், பரபரப்பும் அடங்குவதற்கு அழகியநம்பிக்குச் சில விநாடிகள் ஆயின. ஆழ்ந்த - நல்ல - சுகமான தூக்கத்தில் கெட்ட சொப்பனம் ஒன்று கண்டு விழித்துக் கொண்டது போன்றிருந்தது அவன் நிலை. சபாரத்தினமும் அவனும் கழனியாவிலிருந்து புறப்படும் போது இருட்டத் தொடங்கிவிட்டது. நீலநிறக் கண்ணாடிக் குழாய்க்குள்ளே போட்ட வெண்ணிற இரசகுண்டுபோல் சுற்றிப்புறம் ஒளி மங்கி இருண்டு கொண்டு வந்தது. கழனியாவின் பௌத்த ஸ்தூபியிலும் ஆலயத்தின் பிற்பகுதிகளிலும் பெரிய பெரிய ஒளி அரும்புகள் குபீர் குபீரென்று வெடித்துப் பூத்தாற் போல மின்சார விளக்குகள் பலவண்ணங் காட்டி எரிந்தன. ஆண்களும், பெண்களுமாக ஆலயத்துக்குள் போவோர் - வருவோர் கூட்டம் அதிகரித்திருந்தது. அந்தச் சமயத்தில் ரோட்டுக்கு வந்து நகரத்துக்குள் செல்வதற்காகப் பஸ் ஏறினர் சபாரத்தினமும், அழகியநம்பியும். "இல்லை! நான் இன்றிரவு கடைக்கே போய்விடுகிறேன். பிரமநாயகம் கூட ஊரில் இல்லை. ஏதோ வியாபார விஷயமாகக் கண்டிக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார்" - என்று அவருக்குப் பதில் கூறினான் அழகியநம்பி. "கழனியாவில் அவளைச் சந்தித்ததிலிருந்தே உங்கள் மனம் சரியாயில்லை போலிருக்கிறது. ஏன் இப்படிச் சோர்ந்து போயிருக்கிறீர்கள். உங்கள் குரல் கேட்பதற்கு என்னவோ போலிருக்கிறதே. நீங்கள் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டிருப்பது நல்லதென்றுதான் சில விவரங்களை உங்களிடம் தெரிவித்தேன். அவைகளை நினைத்துச் சதா வீண் மனக்கலவரமடையாதீர்கள்." சபாரத்தினம் இப்படிக் கூறியபோது, 'தன்னுடைய அப்போதைய மன நிலையை அவரால் அவ்வளவு விரைவில் எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது?' என்றெண்ணி வியந்தான் அழகியநம்பி. "சபாரத்தினம்! நீங்கள் கெட்டிக்கார மனிதர்! ஒரே ஒரு விநாடிக்குள் என் மனத்தில் இருப்பதை அப்படியே கண்டு பிடித்துச் சொல்லி விட்டீர்களே? நீங்கள் அனுமானித்துச் சொன்னது சரிதான். இப்போது என் மனநிலை சரியில்லை. நிம்மதியற்றுக் குழப்பமடைந்திருக்கிறது. இன்று இரவு எனக்குச் சாப்பாடு கூட வேண்டியதில்லை. ஆனால், சில மணி நேரச் சிந்தனைக்கு அவகாசம் வேண்டும். தனிமை வேண்டும். இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும். அவ்வளவு குழப்பமடைந்திருக்கிறது என் மனம்." இதைக் கேட்டுப் பதில் கூறாமல் சிரித்தார் சபாரத்தினம். சிரித்துக் கொண்டே தம்முடைய சட்டைப் பைக்குள் கையைவிட்டு டைரிபோல் ஒரு சிறிய கையடக்கமான புத்தகத்தை வெளியே எடுத்தார். அழகியநம்பி அதைப் பார்த்தான். அது ஒரு திருக்குறள் புத்தகம். சபாரத்தினம் அப்போது அந்தத் திருக்குறள் புத்தகத்தை எதற்காக வெளியில் எடுக்கிறார் என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால், சபாரத்தினம் கூறிய சொற்கள் அடுத்த நிமிஷமே அதைப் புரியவைத்தன. "நண்பரே! குழப்பமோ, கவலையோ ஏற்பட்டால் உங்களைப்போல் தனிமையையும், சிந்தனையையும் தேடி அவற்றை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டேன் நான். அவற்றுக்கு மருந்து இதோ இந்தப் புத்தகத்துக்குள் இருக்கிறது." - என்று சொல்லிக் கொண்டே அதைப் பிரித்து அதில் சிவப்பு மையால் அடியில் கோடிட்ட சில தலைப்புக்களை அழகியநம்பிக்குக் காட்டினார் சபாரத்தினம். அவர் காட்டிய தலைப்புகளில் சிலவற்றை மெல்லிய குரலில் வாய் விட்டுப் படித்தான் அவன். "ஊக்கமுடைமை - இடுக்கணழியாமை - ஆள்வினையுடைமை..." "சபாரத்தினம்! இந்த வயதில் உங்களுக்கு இருக்கும் அறிவும், மனத்திட்பமும் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன." - என்று வியப்பு மேலிட்டுக் கூறினான் அழகியநம்பி. கேட்டுவிட்டுச் சிரித்தார் சபாரத்தினம். "இதில் வியப்புக்கு என்ன இருக்கிறது? அனுபவங்களைப் புரிந்து கொண்டு அவற்றிற்கு ஏற்ற சிந்தனையை வளர்த்தால் மனத்திட்பம் தானே உண்டாகிறது?" - அவருடைய பதில் சுலபமாக இருந்தது. அதன் பிறகு சிறிது நேரம் பேசிக் கொள்ளாமல் உட்கார்ந்திருந்தனர் இருவரும். பஸ் சென்று கொண்டிருந்தது. "எங்கள் வீட்டிற்குப் போவதற்கு நான் அடுத்த 'ஸ்டாப்பில்' இறங்க வேண்டும். நீங்களும் என்னோடு வீட்டிற்கு வருவதாயிருந்தால் அங்கேயே இறங்கிவிடலாம். கடைக்குப் போவதாயிருந்தால் இதே பஸ்ஸில் முன்பு நாம் ஏறினோமே அந்த ஸ்டாப்பில் இறங்குங்கள்." - என்று சபாரத்தினம் கூறிக் கொண்டிருக்கும் போதே அவர் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. "நான் கடைக்கே போய்க்கொள்கிறேன். இன்னொரு நாள் கட்டாயம் உங்களுடைய வீட்டுக்கு வருவேன். இப்போது என்னை மன்னித்துவிடுங்கள்." - என்று கெஞ்சும் குரலில் சபாரத்தினத்திடம் வேண்டினான் அழகியநம்பி. "பரவாயில்லை! உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள், நான் விடைபெற்றுக் கொள்கிறேன். நாம் மறுபடி நாளைக்குச் சந்திக்கலாம்." - என்று சொல்லிவிட்டுச் சபாரத்தினம் இறங்கினார். அவரை அங்கே இறக்கி விட்டுவிட்டுப் பஸ் மேலே நகர்ந்தது. வலிமையும், அன்பும் செறிந்த அசைக்க முடியாத துணை ஒன்று அந்த இடத்தில் தன்னை விட்டுப் பிரிந்து கீழே இறங்கி விட்டது போல் ஓருணர்ச்சி அவனுக்கு உண்டாயிற்று. ஊருக்குப் புதியவனாகையினால் இருட்டில் தான் இறங்க வேண்டிய இடத்தைத் தவற விட்டுவிடக் கூடாதே, என்பதற்காகப் பஸ்ஸிற்கு வெளியே தெருவை அடையாளம் பார்த்துக் கொண்டே வந்தான் அவன். அந்தப் பஸ் ஸ்டாப்பிற்கு இரண்டொரு முறை கடையிலிருந்து வந்துபோய்ப் பழகியிருந்தாலும் இருளில் பல நிற மின்சார விளக்கொளியில் நகரமே ஒவ்வொரு மூலையிலும் - ஒவ்வொரு இடத்திலும் - முற்றிலும் புதிதாக மாறியிருப்பது போல் தோன்றியது. கண்கள் அளவுக்கு மீறின ஒளியாலும், செவிகள் அளவுக்கு மீறின ஒலியாலும், கூசின. இன்னும் சில நாட்கள் ஆனால் வழிகளும், இடங்களும் தெளிவாகப் பழக்கமாகிவிடும்! அழகியநம்பி பஸ் ஸ்டாப்பை அடையாளம் கண்டுபிடித்து இறங்கி விட்டான். அங்கிருந்து கடைக்குப் போகச் சிறிது தூரம் நடக்க வேண்டும். ஆரவாரமும், வியாபார நெருக்கடியும், மக்கள் கூட்டமும், போக்குவரவுகளும் மிகுந்த பிரதான வீதி அது. முதல் முதலாக அப்போது தான் அந்தப் புதிய நகரத்தின் பெரிய வீதியில் தனியாக நடக்கிறான் அவன். பார்வையில் மிரட்சி, கால்களில் விரைவற்ற தடுமாற்றம், நெஞ்சில் குழப்பம் - இந்த நிலையில் கடையை நோக்கி நடந்து கொண்டிருந்தான் அவன். அங்கே - இங்கே சுற்றியலைந்துவிட்டு வீட்டுக்கு அல்லது தங்குமிடத்துக்குப் போகும்போது இருக்கவேண்டிய இயல்பான விரைவு அவனிடம் இல்லை. பின் கட்டில் பிரமநாயகத்தின் பேச்சுக்குரல் கேட்டது. அவன் அதிர்ச்சியடைந்தான். அவனுடைய மனக்குழப்பம் இரண்டு மடங்காயிற்று. தயங்கித் தயங்கி உள்ளே போய்த் தன் அறைக்கதவை ஓசைப் படாமல் திறந்தான். கண்டிக்குப் போவதாகச் சொன்ன பிரமநாயகம் ஏன் போகவில்லை என்று வியப்படைந்தான். அவர் சமையலறைக்குள் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் போலிருக்கிறது! சமையலறைக்குள்ளிருந்து சோமுவின் குரலும், அவர் குரலும் சேர்ந்து வந்த விதத்திலிருந்து இதை அனுமானித்தான். தன்னை அவர் பார்த்தால், 'எங்கே போனாய்? எதற்குப் போனாய்? யாரைக் கேட்டுக் கொண்டு போனாய்?...' - என்று கோபித்துக் கொள்வாரோ என அஞ்சினான். அப்போது அவன் மனம் இருந்த நிலையில் அறை விளக்கைக் கூட போட்டுக் கொள்ளத் தோன்றவில்லை அவனுக்கு. இருட்டிலேயே படுக்கையை விரித்துக் கொண்டு அதன்மேல் சாய்ந்தான். தலை ஒரேயடியாகக் கனத்தது. உள்ளே சமையலறையில் பிரமநாயகமும் சோமுவும் பேசிக் கொண்ட பேச்சு அறைக்குள் படுத்துக் கொண்டிருந்த அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. "ஏண்டா சோமு! இந்தப் பையன் அழகியநம்பியை எங்கே இன்னும் காணவில்லை?" "எங்கே போனாரென்று எனக்குத் தெரியாது முதலாளி. நீங்கள் கண்டிக்குப் போவதாக வெளியில் கிளம்பிப் போன சிறிது நேரத்திற்கெல்லாம் இங்கே வந்தார். பலகாரம் - காபி - கொடுத்தேன். சாப்பிட்டுவிட்டு இந்த யாழ்பாணத்துப் பிள்ளையாண்டான் சபாரத்தினம் இருக்கிறாரே, அவரோடு ஏதோ பேசிக் கொண்டு நின்றார். பிறகு இரண்டு பேருமாக எங்கோ வெளியே போனார்கள். போகும்போது என்னிடம் சொல்லிக் கொள்ளவில்லை." "போகும்போது எத்தனை மணி இருக்கும்?" "ஐந்தரை மணிக்குமேலே இருக்கலாம் முதலாளி!" அறைக்குள்ளே இருட்டில் கண்களை மூடிக்கொண்டு உறங்காமல் படுத்துக் கிடந்த அழகியநம்பி இந்த உரையாடலை முழுதும் கேட்டான். பிரமநாயகம் சாப்பிட்டுக் கை கழுவினார். சமையற்காரச் சோமு முன்புறம் கடைக்குள்ளே போய் அவருக்கு வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு கடைக்குள் போவதற்காகத் திரும்பி நகர்ந்தவர் அழகியநம்பியின் அறைக் கதவு திறந்திருப்பதைப் பார்த்துவிட்டார். உடனே, "ஏண்டா! சோமு! அந்தப் பையன் வெளியிலே போகும் போது அறைக் கதவைப் பூட்டிக் கொள்ளாமலா போனான்? இப்படிக் கேள்வி முறையில்லாமல் திறந்து கிடக்கிறதே? நீயாவது பார்த்துப் பூட்டியிருக்கக் கூடாதோ?" என்று சோமுவைக் கூப்பிட்டு இரைந்தார். "இல்லையே முதலாளீ! அவர் போகும்போது நன்றாகப் பூட்டிக் கொண்டுதானே போனார். நான் பார்த்தேனே!" - என்று பதில் சொல்லிக்கொண்டே சமையலறைக்குள்ளேயிருந்து சோமு வந்தான். வெளியே இவ்வளவு கூத்தும் நடந்த போது அழகியநம்பி சும்மா கண்களை மூடிக் கொண்டு தான் படுத்திருந்தான். "பூட்டிவிட்டுப் போயிருந்தால் அவனைத் தவிர வேறு யார் வந்து திறந்திருக்க முடியும்? எங்கே? விளக்கைப் போட்டு உள்ளே போய்ப் பார்!" - என்று பிரமநாயகம் சோமுவுக்கு உத்தரவிட்டார். தானே எழுந்திருந்து விளக்கைப் போட்டுத் தான் வெளியில் போய்த் திரும்பி வந்த விவரத்தைப் பிரமநாயகத்திடம் சொல்லிவிட்டால் என்ன என்று அழகியநம்பிக்குத் தோன்றியது. ஒரு விநாடி அப்படியே செய்து விடலாமென்று எழுந்திருக்கக் கூட முற்பட்டுவிட்டான். 'பிரமநாயகத்தின் முகத்தில் விழிக்க வேண்டுமே! அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமே!' - என்று பயமும் மலைப்பும் எழுந்த போது தன் எண்ணத்தைக் கைவிட்டான். பேசாமல் தூங்குவது போல் கண்களை மூடிக் கொண்டு அப்படியே படுத்திருந்தான். சமையல்காரச் சோமு உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டான். பிரமநாயகம் அவனைத் தொடர்ந்து அறைக்குள் வந்தார். "அடேடே! எப்போது வந்து படுத்துக் கொண்டார்? எனக்குத் தெரியாதே?" - என்று உள்ளே படுத்துக் கொண்டிருந்த அழகியநம்பியைப் பார்த்து வியப்புடன் பிரமநாயகத்திடம் கூறினான் சோமு. "சாப்பிட்டாயிற்றோ; இல்லையோ?" "இங்கே சாப்பிடவில்லை, சாப்பிட வருவார் என்று இவருக்கும் சேர்த்துத்தான் சமைத்து வைத்திருக்கிறேன். வெளியே எங்காவது சாப்பிட்டுவிட்டு வந்தாரோ, என்னவோ?" - "போர்வையை விலக்கி உடம்பைத் தொட்டுப் பார் அப்பா! படுத்திருக்கிற விதத்தைப் பார்த்தால் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. உடம்புக்கு ஏதாவது..." பிரமநாயகம் பரபரப்படைந்து கூறினார். சோமு அப்படியே செய்து பார்த்துவிட்டு, "அதெல்லாம் ஒன்றுமில்லை. சும்மாதான் படுத்திருக்கிறார். சுற்றித் திரிந்த அலுப்புப் போலிருக்கிறது. படுத்த உடனே நன்றாகத் தூங்கி விட்டார்." - என்றான். "ஏ அப்பா! அழகியநம்பி! எழுந்திரு..." - என்று எழுப்பினார் பிரமநாயகம். அழகியநம்பி அசையவே இல்லை. நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருப்பது போலச் சாதித்து விட்டான். "நல்ல தூக்கம் தன்னை மறந்து தூங்குகிறார்." - என்றான் சோமு. "சரி! நான் கடைக்குள்ளே போகிறேன். கொஞ்சம் வரவுக் கணக்குகளைச் சரிபார்க்க வேண்டியிருக்கிறது. பையனை எழுப்பிச் சாப்பாடு போடு. சாப்பிட்டதும் அங்கே என்னிடம் அனுப்பு." - என்று சொல்லிவிட்டுக் கடைக்குள் சென்றார் பிரமநாயகம். அவர் போனதும் சோமு அழகியநம்பியை எழுப்ப முயன்றான். பிரமநாயகம் தொட்டுத் தட்டி இரைந்து எழுப்ப முயற்சி செய்தும் அசைந்து கொடுக்காமல் படுத்திருந்த அழகியநம்பி, சோமு மெல்ல ஒரு குரல் கூப்பிட்டதுமே படுக்கையில் துள்ளி எழுந்து உட்கார்ந்தான். "நன்றாகத் தூங்கி விட்டீர்களோ? எப்போது வந்தீர்கள்? நீங்கள் வந்ததே எனக்குத் தெரியாது. ஐயா விசாரித்தார்கள். இப்போது சிறிது நேரத்திற்கு முன் கூட இங்கே வந்து உங்களை எழுப்பினார்கள். நீங்கள் எழுந்திருக்கவில்லை. எழுந்திருந்ததும் சாப்பாட்டைப் போட்டு அங்கே கடைக்குள் வரச் சொல்லி அனுப்புமாறு கூறிவிட்டுப் போயிருக்கிறார்கள்." - என்றான் சோமு. "சோமு! எனக்குப் பசி இல்லை, நீ போய்ச் சாப்பிடு. எனக்கு உடம்பு ஒரு மாதிரி இருக்கிறது. நிம்மதியாகத் தூங்க வேண்டும்." - என்றான் அழகியநம்பி. "என்ன செய்கிறதென்று சொன்னீர்களானால் கைப்பக்குவமாக ஏதாவது மருந்து செய்து கொடுப்பேன். அரத்தைக் கஷாயம், இஞ்சி மருந்து ஏதாவது..." "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். வெறும் அலுப்புத்தான். தூங்கினா தீர்ந்து போகும். நீ ஐயாவிடம் சொல்லி விடு!" - என்றான் அழகியநம்பி. நொடித்தவன் மேல் நொடித்தவன் தான் அனுதாபம் காட்டுகிறான். அந்த ஏழைச் சமையற்காரன் கைப்பக்குவமாக மருந்து செய்து கொடுக்கிறேன் என்று சொன்னபோது, அந்த உண்மை அனுதாபத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது அவனுக்கு. அதே சமயத்தில் பெருமையாகவும் இருந்தது. "நன்றாகத் தூங்குங்கள்! நான் ஐயாவிடம் சொல்லி விடுகிறேன்" - என்று கூறி விளக்கை அணைத்து விட்டுப் போனான் சோமு. நிம்மதியை நாடியது அவன் உடல். சிந்தனையை நாடியது உள்ளம். அவற்றின் முரண்பட்ட போராட்டம் தூக்கத்தை வரவிடவில்லை. |
கல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) |
தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) |
ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் |
சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் |
புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) |
அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) |
பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் |
பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் |
மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) |
ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) |
லா.ச.ராமாமிருதம் : அபிதா |
சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை |
ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள் |
ரமணிசந்திரன் |
சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் |
க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு |
கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் |
மகாத்மா காந்தி : சத்திய சோதனை |
ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி |
பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி |
மாயாவி : மதுராந்தகியின் காதல் |
வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் |
கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் |
என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் |
கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே |
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு |
விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் |
கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் |
எட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) |
பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் |
பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) |
ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி |
ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் |
வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் |
சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை |
மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா |
கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் |
ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி |
ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை |
திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் |
திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் |
ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை |
முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் |
நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா |
இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை |
உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா |
குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் |
பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் |
நான்மணிமாலை நூல்கள் :
திருவாரூர் நான்மணிமாலை |
தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது |
கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை |
கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் |
பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா |
ஆன்மீகம் : தினசரி தியானம் |
|
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888 |
|
|
© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் |