http://www.chennailibrary.com





10. ராஜதந்திரச் சிக்கல்

     "கிறிஸ்துவர்களுக்கு வேறு இடங்களில் நிலம் ஒதுக்கிவிடுங்கள்" என்றே தொடர்ந்து வாதிட்டனர் கோயில்களை நிர்வகித்து வருபவர்கள். இனிமேல் தங்களை யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்ற இறுமாப்பு அவர்களிடம் இருப்பதைக் கண்டுணர்ந்த ரங்ககிருஷ்ணன், அவர்களைக் கேட்டான்:

     "இதே நிலங்கள் உங்களுக்குச் சொந்தாமாயிருந்து நீங்கள் எங்காவது வெளியேறிச் சென்றிருக்கும் போது அவர்கள் தங்கள் சிலுவைக் கோயில்களை அங்கே கட்டியிருந்தால் நீங்கள் திரும்பி வந்ததும் என்ன செய்வீர்கள்?"

     தனது இந்தக் கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை அவன் கூர்ந்து கவனித்தான். ஆனால் அவர்களது பதில் அவனுக்கு ஏமாற்றமளிப்பதாயிருந்தது. "அரசே! நாங்கள் வெளியேறிச் சென்றிருந்தாலும் எங்கள் நிலங்களை அவர்கள் அவ்வளவு சுலபமாகக் கைப்பற்றி அவற்றின் மேல் சிலுவைக் கோயில் கட்டி விடலாம் என்று நினைக்கக்கூட முடியாது."

     "ஏன் முடியாது?"

     "அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் தடுக்காமல் சும்மா விட மாட்டார்கள்."

     "மிக்வும் சரி! அதே போல் அவர்களுடைய நிலத்தில் நீங்கள் ஆலயங்கள் கட்டும்போது அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் ஏன் தடுக்கவில்லை?"

     "தடுப்பதற்கு அக்கம்பக்கத்திலே அப்போது அவர்களில் யாருமேயில்லையே?"

     "ஓகோ? ஓர் அநியாயத்தைத் தடுக்க முடிந்தவர்கள் நேரில் இருந்தால் ஒரு நீதி. இல்லாவிட்டால் வேறொரு நீதியா? வேடிக்கையாயிருக்கிறதே நீங்கள் சொல்லுவது?"

     "நீதியோ அநீதியோ கட்டிய கோயிலை இனிமேல் என்ன செய்ய முடியும்? சாஸ்திர சம்மதமாகிவிட்ட ஒரு நிறைவேறிய காரியத்தைக் குறை சொல்லிப் பயனில்லை."

     "நியாயமும், சாஸ்திரமும் வேறு வேறானவை என்று நான் நினைக்கவில்லை பெருமக்களே!"

     "சாஸ்திரம் என்ன சொல்லுகிறதோ அதற்கு நியாயமும் கட்டுப்பட்டாக வேண்டும்."

     "நியாயத்துக்குப் புறம்பான ஒன்றை சாஸ்திர அங்கீகாரம் பெற்றதென்று நீங்கள் கட்டிப் பிரதிஷ்டை செய்து வழிபடுகிற தேவாலயங்களில் உள்ள சர்வ சக்தியும் வாய்ந்த தெய்வங்கள் கூட ஒப்புக்கொள்ளப் போவதில்லை..."

     - அரசர் தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பது வந்தவர்களுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. உடனே வாதிடுவதை விடுத்து, அவனைத் தன்னைக் கட்டிக்கொண்டு காரியத்தைச் சாதிக்க முயன்றார்கள் அவர்கள்.

     "எப்படியோ கட்டிய கோயிலை ஒன்றும் செய்ய முடியாது அரசே!"

     இதற்கு ரங்ககிருஷ்ணன் மறுமொழி எதுவும் கூறவில்லை. அவர்களை உறுத்துப் பார்த்தான். முகபாவத்திலிருந்து அவன் உறுதியானதொரு முடிவுக்கு வந்துவிட்டான் என்று புரிந்தது.

     "தயை கூர்ந்து அரசர் கருணை காட்ட வேண்டும். அரசராகிய தாங்களும் மக்களாகிய நாங்களும் எந்தத் தெய்வங்களை வழிபட்டு அருள் வேண்டுகிறோமோ அதே தெய்வங்களுக்குத் தான் நாங்கள் கோயில் கட்டியிருக்கிறோம்."

     மறுபடியும் அவர்களைக் கடுமையாக உறுத்துப் பார்த்தான் அவன்.

     "கும்பாபிஷேகம் செய்து முறைப்படி குடியேறிவிட்ட மூர்த்திகளை இனி எங்கே கொண்டு போக முடியும் அரசே?"

     - இதற்கு அப்போது ரங்ககிருஷ்ணன் கூறிய மறுமொழி அங்கிருந்த அனைவரையுமே துணுக்குறச் செய்தது. திகைத்துப் போய் நின்றார்கள் அவர்கள்.

     சமயப்பற்றும் பக்தியும் மிக்கவனான ரங்ககிருஷ்ணனின் மனதில் 'நியாயத்தைக் காட்டிலும் உயர்ந்த தெய்வமில்லை' என்ற உணர்வு மட்டுமே அப்போது ஓங்கியிருந்தது. ஆகவே அவர்களிடம் அவன் தார்மிகக் கோபத்தோடு கேட்டான்.



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm10.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க






வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.