http://www.chennailibrary.com



10. ராஜதந்திரச் சிக்கல்

... தொடர்ச்சி ...

     "விக்கிரகங்களைக் கொண்டு போய் வைக்க வேறு இடமில்லை என்றால் காவேரியில் போடுவதுதானே?"

     இந்த வார்த்தைகளிலிருந்த சூடும் கடுமையும் உறைத்து, 'இனி இதில் இவனுடைய முடிவு வேறுவிதமாக இராது' என்று வந்திருந்தவர்களுக்குப் புரிந்ததும் தயங்கி நின்றனர் அவர்கள்.

     அவர்களிடம் மேலும் ரங்ககிருஷ்ணனே தொடர்ந்தான்.

     "ஏதடா அபசாரமான வார்த்தைகளை பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம். உண்மையைவிட உயர்ந்த தெய்வமில்லை என்பது எல்லாச் சமயங்களும் ஏற்கிற உண்மை. பெரும்பாலனவர்கள் ஒன்று சேர்ந்து செய்திருக்கிறார்கள் என்பதனால் ஒரு தப்பான காரியம் நியாயமாகிவிடாது. சிறுபான்மையோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனால் ஒரு நியாயத்தை புறக்கணித்து விடமுடியாது."

     "ஆனால் அரசரின் இந்த முடிவால் பெரும்பாலான பக்தர்களின் மனஸ்தாபத்தைத்தான் எதிர்பார்க்க முடியும்" என்றே சற்றே துணிவுடன் ஆரம்பித்தார் வந்தவர்களில் ஒருவர். துணிந்து வாய் திறந்து விட்டாலும் பயந்து கொண்டே தான் பேசினார் அவர்.

     "நீதி நியாயங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு விதம், சிறுபான்மையினருக்கு மற்றொரு விதம் என்று பார்க்க முடியாது."

     தீர்மானமாக இப்படி அவர்களுக்கு மறுமொழி கூறி அனுப்பினான் ரங்ககிருஷ்ணன். அவனுடைய தீர்ப்பின் நடுநிலைமைப் பண்பையும், நியாயத்தையும் தாய் மங்கம்மாள் பாராட்டினாள். தொடர்ந்து இப்படியே நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அவனை மேலும் வாழ்த்தினாள்.

     மிகச் சில தினங்களிலேயே கிறிஸ்துவர்களுகு உரிய இடங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பாதிரியாரும் கிறிஸ்தவ மக்களும் ரங்ககிருஷ்ணனைச் சந்தித்து அவனுக்குத் தங்கள் விசுவாசத்தைத் தெரிவித்தனர்.

     இவை எல்லாம் முடிந்த பின் பட்டத்தரசி சின்ன முத்தம்மாள் மட்டும் ஒருநாள் இதைப்பற்றி ரங்ககிருஷ்ணனிடம் பேசிய போது சிறிது வருத்தப்பட்டாள்.

     "விக்கிரங்களைத் தூக்கி ஆற்றில் எறியச் சொன்னீர்களென்று நம் குடிமக்களின் சிலர் உங்கள் மீது கோபமாயிருக்கிறார்கள். நீங்கள் அத்தனை கடுமையாகச் சொல்லியிருக்கக் கூடாது."

     "மெய்யாகவே 'ஆற்றில் கொண்டு போய் எறியுங்கள்' என்ற அர்த்தத்தில் நான் அப்படிச் சொல்லவில்லை. நியாயத்தைப் பாராமல் 'தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்று அவர்கள் பிடிவாதமாகப் பேசினார்கள். அதனால் தான் நானும் அப்படிப் பதி பேச வேண்டியதாயிற்று."

     '"ஒரு சொல் வெல்லும், மற்றொரு சொல் கொல்லும்' என்பார்கள். நீங்கள் நினைத்ததையே இன்னும் இதமாகச் சொல்லியிருக்கலாம்."

     "அவர்களது முரண்டும் பிடிவாதமும் மட்டுமே என்னை அப்படிப் பேசவைத்தன. தவிர இன்னொரு காரணமும் இருக்கலாம் முத்தம்மா! அவ்வப்போது நமது நண்பராகவும், எதிரியாகவும், சில வேளைகளில் நண்பரா எதிரியா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையிலும் இருக்கும் இரகுநாத சேதுபதி இந்தப் பிரச்சனையில் எப்படி நடந்து கொள்கிறாரோ அப்படி நாமும் நடந்து கொண்டு நமது பேரைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பது என்னுடைய கருத்து."

     "நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே! கொஞ்சம் புரியும்படியாகத் தான் சொல்லுங்களேன்."

     "ஒரு பிரச்சனையில் நமது எதிரியின் முடிவு சரியில்லையானால் அதே பிரச்சனையில் நாம் சரியான முடிவெடுத்து மற்றவர்களின் அன்பையும் அநுதாபத்தையும் நம் பக்கம் திரட்ட வேண்டும். இப்பிரச்சனையை இப்படி ஒரு நோக்கிலும் நான் கவனித்திருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இது ராஜ தந்திரப் போக்கான காரியம். மறவர் நாட்டிலும் கிழவன் சேதுபதியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளிலும் விதேசிகளும், கிறிஸ்துவர்களும் மிக அதிகமாக கொடுமைப்படுத்தப் பெற்றிருக்கிறார்கள். 'மங்கலம்' என்னும் மறவர் நாட்டு ஊரில் பிரிட்டோ பாதிரியாரும் அவருடன் வந்த ஆட்களும் பலவந்தமாகச் சிவலிங்க வழிபாடு செய்யும்படி வற்புறுத்தப் பட்டிருக்கிறார்கள்."



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm10a.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.