11. உதயத்தில் நேர்ந்த அஸ்தமனம் சின்ன முத்தம்மாளும், ரங்ககிருஷ்ணனும் அரசியற் கவலைகள் ஏதுமின்றிச் சிறிது நிம்மதியாக வாழ முடிந்தது. எந்தப் பிரச்சனையும் ரங்ககிருஷ்ணனைச் சின்ன முத்தம்மாளிடமிருந்து பிரிக்கவில்லை. கிழவன் சேதுபதியை அவன் வெற்றி கொள்ள முடியாமலே திரும்பியதில்கூட ராணி மங்கம்மாளுக்கு வருத்தம் எதுவும் இல்லை. ரங்ககிருஷ்ணன் போகாமல் தானே ஏற்பாடு செய்து படைகளை அனுப்பியிருந்தால் கூட அந்த மறவர் சீமைப் படையெடுப்பு அப்படித் தான் பயனற்றுப் போயிருக்க முடியும் என்பது அவளுக்குத் தெரியும். அதனால் அவள் அதிகம் மனவருத்தப்படவில்லை. 'இளைஞன். அரசியல் முதிர்ச்சி அதிகம் இல்லாதவன். தந்தையால் பயிற்சியளிக்கப்படும் வாய்ப்பைக்கூட இழந்தவன்' என்றெல்லாம் ரங்ககிருஷ்ணனைப் பற்றிச் சில குறைகள் இருந்தாலும் அவனைப் பற்றிய திருப்தி என்னவோ அவற்றை விட அதிகமாக இருந்தது. நிம்மதியாக ஆளும் பொறுப்புகளை அவனிடம் விட்டுவிட்டு அவ்வப்போது அறிவுரை கூறும் அளவுக்கு ஒதுங்கி நிற்கலாம் என்று கூட அவளுக்குத் தோன்றியது. மகன் முழுநம்பிக்கைக்குரியவனாக இருந்தான். ரங்ககிருஷ்ணன் பொதுமக்களின் குறைகளை அறிவதில் சமநோக்கு உடையவனாக இருக்கிறான். மக்கள் குறைகளை அறிய அடிக்கடி மாறு வேடத்தில் சகல பகுதிகளுக்கும் நகர பரிசோதனைக்குச் சென்று வருகிறான். கர்வமில்லாமல் மக்களோடு பழகுகிறான். எளிமையாக இருக்கிறான். நீதி வழங்கும் இன்றியமையாத நேர்மையும் ஒழுக்கமும் இருபுறமும் சீர்தூக்கிப் பார்க்கும் குணமும் அவனிடம் உள்ளன. நாயக்க வம்சத்திலும் அக்கம்பக்கத்திலுள்ள பிற ராஜ வம்சங்களிலும் பட்டமகிஷியைத் தவிரவும் பல பெண்களை மணந்து கொள்வது வழக்கமாக இருந்தும் ரங்ககிருஷ்ணன் ஏகபத்தினி விரதமுள்ளவனாக வாழ்கிறான். தெய்வபக்தி உள்ளவனாகவும் தர்மசீலனாகவும் இருக்கிறான். என்றெல்லாம் அவனைப் பற்றி எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டாள் அவனுடைய தாய் ராணி மங்கம்மாள். ஆண்டுகள் ஓடின. ரங்ககிருஷ்ணனின் ஆட்சித்திறமையால் தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்திருந்த சில பகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. ஆட்சி அமைதியாக நடைபெற்றது. மங்கம்மாள் எதிர்பார்த்ததுபோல் ரங்ககிருஷ்ணன் மக்களிடம் நல்ல பெயர் வாங்கினான். ஆட்சி முறையின் ஒழுங்குகளால் அவன் புகழ் எங்கும் பரவிற்று. பொது வாழ்விலும் தனி வாழ்விலும் அவன் மிகவும் மகிழ்ச்சியாயிருந்தான். அவனும் சின்ன முத்தம்மாளும் உயிருக்குயிராக ஒருவரை ஒருவர் நேசித்தார்கள். அந்த இணைப் பிரியாக் காதலைப் பார்த்து ராணி மங்கம்மாள் பெருமகிழ்ச்சியடைந்தாலும் உள்ளூற ஒரு மனகுறையும் இருந்தது. இவர்களுக்கு மணமாகி இத்தனை ஆண்டுகளின் பின்னும் மக்கட்செல்வம் இல்லையே என்ற குறைதான் அது. ஆறு ஆண்டுகள் நீடித்த அந்தக் குறை ஏழாவது ஆண்டில் தீர்ந்தது. சின்ன முத்தம்மாள் கருவுற்றிருந்தாள். இச்செய்தி எல்லாருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. அரண்மனை வட்டாரத்தில் திருவிழாக் கொண்டாட்டம் போல ஓர் உவகையைப் பரப்பியது, இந்த நல்ல செய்தி. மங்கம்மாள் இந்த நல்ல செய்தியறிந்ததும் நிறையத் தான தர்மங்களைச் செய்தாள். சாந்திகள், ஹோமங்களையும் செய்வித்தாள். அந்த ஆண்டின் வசந்த காலமும் வந்தது. சித்திரா பௌர்ணமிக்கு மங்கம்மாளும், ரங்ககிருஷ்ணனும், சின்ன முத்தம்மாளும் மதுரைக்குப் போய் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தைத் தரிசித்துவிட்டு வந்தார்கள். அந்த ஆண்டு கோடை வெயில் எல்லா ஆண்டுகளையும் விட மிகவும் கடுமையாக இருந்தது. திரிசிரபுரத்திலும் சுற்றுப் புறங்களிலும் அனல் பறந்தது. அரண்மனை வளையல்காரர் ஒருவர் நல்ல மங்கலவேளை பார்த்துச் சின்ன முத்தம்மாளுக்கு விசேஷமான வளையல்களை அணிவித்தார். வளைகாப்பு வைபவத்தின் போது ரங்ககிருஷ்ணனும், ராணி மங்கம்மாளும் உடனிருந்தனர். சின்ன முத்தம்மாளின் தோழிகளும் அரண்மனைப் பெண்களும் மகிழ்ச்சியோடு கூட்டமாகக் கூடி நின்று வளைகாப்பு அணிவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் மங்கலமான பாடல்களை இனிய குரலில் பாடினார்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|