12. பேரன் பிறந்தான் பேரிடிப் போன்ற இந்தச் செய்தியை அறிந்ததும் கர்ப்பிணியாக இருந்த சின்ன முத்தம்மாள் நிலை குலைந்து போனாள். வளைகாப்பணிந்த சமயத்தில் தன்னிடம் "உனக்கு ஒரு கஷ்டமும் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று உறுதி கூறியிருந்த ஆருயிர்க் கண்வன் இன்று எல்லாக் கஷ்டங்களையுமே தன் தலையில் சுமத்தி இப்படி அமங்கலியாகவும் அநாதையாகவும் அழவைத்து விட்டுப் போனதை எண்ணி மனம் நைந்து வருந்தினாள். அவளது மங்கலக் கழுத்து மூளிக் கழுத்தாகிப் பொலிவிழந்தது. "நான் இனிமேல் உயிர் வாழ்வதற்கே ஆசைப்படவில்லை! என்னைக் கணவனோடு வைத்து எரித்து விடுங்கள். எனக்கு இந்த உலகமும் வேண்டாம், வாழ்க்கையும் வேண்டாம்" என்று ராணி மங்கம்மாளிடம் கதறினாள் அவள். வயிறும் பிள்ளையுமாக இருந்த அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றுவது யாராலும் முடியாதிருந்தது. துயரங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் வேதனைகளுக்கும் ஈடு கொடுத்துப் பழகியிருந்த ராணி மங்கம்மாளே உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தாள். மனம் மறுகி அலமந்தாள்; அயர்ந்து போனாள். அப்போது சின்ன முத்தம்மாளின் துயர வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவாவது தான் தனது உணர்வுகளை முதலில் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று எண்ணினாள். எல்லாரையும் போலத் தானும் அழுது புலம்பித் திகைத்து நிற்பது தன் எதிரிகளுக்கு மகிழ்வூட்டக் கூடிய காரியம் என்று அவளுக்கே தோன்றியது. ஆனாலும் தாய்ப் பாசம் அவ்வளவு சுலபமாக அடங்கிவிடக் கூடியதாயில்லை. எதிர் காலத்தில் நாயக்க வம்சத்தின் நம்பிக்கைகளை எல்லாம் கொன்றுவிட்டு மாண்டு போயிருந்தான் ரங்ககிருஷ்ணன். தன்னுடைய ஆட்சிக்கும், அரசியலுக்கும் இனிமேல் தான் சோதனைக்காலம் தொடங்குகிறது என்பது ராணி மங்கம்மாளுக்குப் புரிந்தது. விரோதங்களும், பொறாமைகளும் ஒரு பக்கம் இருந்தாலும், கிழவன் சேதுபதி உட்பட எல்லா அக்கம் பக்கத்து அரசர்களும் துக்கம் விசாரிக்க வந்து போனார்கள். துக்கம் விசாரிக்கத்தான் வந்தார்களா அல்லது தான் எந்த அளவு சோக மிகுதியால் பலவீனப்பட்டு போயிருக்கிறோம் என்று நேரில் பார்த்து விட்டுப் போக அவர்கள் வந்தார்களா என்னும் அந்தரங்கமான சந்தேகம் கூட ராணி மங்கம்மாளுக்கு இருந்தது. அந்தச் சந்தேகத்தில் ஓரளவு உண்மை இல்லாமலும் போகவில்லை. ரங்ககிருஷ்ணன் சடலத்தை அரண்மனை எல்லையிலிருந்து மயானத்திற்காக எடுப்பதற்கு முன் முத்தம்மாளின் பிடிவாதம் எல்லை மீறியது. அவன் உடல் மீது விழுந்து புரண்டு கதறியழுது தன்னையும் அவனோடு சேர்த்து எரித்து விடும்படி மீண்டும் முரண்டு பிடித்தாள் சின்ன முத்தம்மாள். பணிப் பெண்களின் உதவியோடு ராணி மங்கம்மாள் சின்ன முத்தம்மாளைத் தனியே பிரித்து அழைத்துச் சென்று அவளிடம் பேசினாள்; "உன் துயரத்தைவிட என் துயரம் பலமடங்கு பெரியது முத்தம்மா! மகன் இறந்த உடனேயே என் உயிரும் போயிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பல்லைக் கடித்துக் கொண்டாவது நான் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. கணவனை இழந்த உன் துயரத்தைக் காட்டிலும் ஏற்கெனவே கணவனையும் இழந்து இன்று மகனையும் இழந்து தவிக்கும் என் துயரம் எவ்வளவு பெரியது என்று நினைத்துப் பார்..." "நியாயம் தான்! உங்களால் துயரத்தைத் தாங்க முடிகிறது. தாங்குகிறீர்கள். என்னால் முடியவில்லை. துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் பக்குவமும் எனக்கு இல்லை. எனக்கு நீங்கள் ஏதாவது உதவ முடியுமானால் அது இப்போது என்னைச் சாக விடுவதுதான்." "சாவதும், வாழ்வதும் நம் கையில் மட்டும் இல்லையம்மா! அளவற்ற துயரம் வரும்போது சாகவேண்டுமென்று நினைப்பதும், மகிழ்ச்சி வரும்போது வாழவேண்டும் என்று திட்டமிடுவதும் மனத்தின் ஆசாபாசங்களால் நிகழ்பவை! உன் வயிற்றில் ஒரு சிசு வளர்கிறது. அது இந்த வம்சத்தின் எதிர் காலத்திற்கு மிகவும் அவசியமானது. உன் கணவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமானால் இறப்பது தான் ஒரே வழி என்று நீ நினைப்பது தவறு அம்மா! அவனுடைய கருவை வளர்த்துப் பெற்றெடுப்பது தான் அவனுக்கு விசுவாசமான காரியம்...! உன்னைக் கொன்று கொள்ள வேண்டுமானால் உனக்கு உரிமையிருக்கலாம்! ஆனால் உன்னுள் வளரும் குழந்தையைக் கொல்லும் உரிமை உனக்கில்லை!" என்று கண்டித்துக் கூறி அவளை நிர்பந்தமாக ஓர் அறையில் அடைத்துச் சில பணிப் பெண்களையும் அவளோடு காவலுக்கு வைத்து விட்டுச் சென்றாள் ராணி மங்கம்மாள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |