14. இடமாற்ற எண்ணம் அப்போது சின்ன முத்தம்மாளின் இதயத்தில் தாய்ப் பாசத்துக்கும் விரக்திக்கும் இடையே ஒரு போராட்டம் மூண்டது. துணிவதும், தயங்குவதுமாக ஊசலாடிக் கொண்டிருந்த மனம் துணிந்து முடிவெடுத்திருந்தாலும் மறுபடியும் பாசமும், பிரியமும், அஞ்ஞானமும் குழம்பின. சிரமப்பட்டு வலிந்து முயன்று இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டாள் அவள். மறுபடியும் திரும்பி வந்து தன் கட்டிலில் படுத்தாள். சில விநாடிகளில் விழித்துக் கொண்ட பணிப்பெண் ஒருத்தி, "அம்மா! ஏதாவது வேண்டுமா?" என்று கேட்ட போது "ஒன்றும் வேண்டாம்! நன்றாகத் தூங்கவேண்டும். தூங்கப் போகிறேன் என்றாள் சின்ன முத்தம்மாள். பணிப்பெண் இந்த வார்த்தைகளில் எந்த வேறுபாடான அர்த்தத்தையும் காணவில்லை. சகஜமாக ஏற்று சகஜமாகவே புரிந்து கொண்டாள். பொழுது விடிந்தது. அரண்மனையில் ஒரே பரபரப்பு. சின்ன முத்தம்மாளுக்குப் பயங்கரமாக ஜன்னி கண்டிருந்தது. மரணத்தின் பிடியிலிருந்து அவளை மீட்க வைத்தியர்கள் போட்டி போட்டுக் கொண்டு முயன்றனர். பலிக்கவில்லை. ஜன்னி வேகத்தினைத் தாங்க முடியாமல் உயிர் நீத்தாள் சின்ன முத்தம்மாள்! ராணி மங்கம்மாள் பேரக் குழந்தையை அப்போது கையிலெடுத்தாள். மறுபடி அக்குழந்தையை அதன் தாயிடம் விட முடியாமல் தானே வளர்க்க வேண்டியதாயிற்று. தாயாகவும், பாட்டியாகவும் இருந்து அக்குழந்தையை வளர்த்தாக வேண்டிய பொறுப்பு அவளிடம் வந்தது. மறுபடியும் அந்த அரண்மனையில் தற்காலிகமானதோர் இருள் சூழ்ந்தது. இரண்டு பெரிய துக்க சம்பவங்கள் நேர்ந்து விட்ட திரிசிரபுரம் அரண்மனையில் இருப்புக் கொள்ளாமல் தவித்தாள் மங்கம்மாள். எங்கே திரும்பினாலும் மகன் ரங்ககிருஷ்ணனின் ஞாபகமும், மருமகள் சின்ன முத்தம்மாளின் நினைவும் வந்து வேதனைப்படுத்தின. மகனையும், மருமகளையும் நினைத்து உருகாமல் அவள் அந்தப் பெரிய அரண்மனையில் ஒரு விநாடி கூட நிம்மதியாய் இருக்க முடியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் மகன் ரங்ககிருஷ்ணனின் சிரிப்பொலி கேட்பது போல் பிரமையாயிருந்தது. அந்த அரண்மனை முழுவதும் மறைந்து போன அவ்விருவரின் நினைவுகளே எங்கும் நிரம்பிக் கிடந்தன. அரசியல் அநுபவங்களும், ஆட்சிப் பொறுப்புகளும் ஓரளவு அவள் மனத்தைக் கல்லாக்கியிருந்தன. இல்லாவிடில் அவளும் ஒரு பேதையைப் போல் இக்கொடுமைகளிலிருந்து விடுபடத் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும். பயந்து ஓடியிருக்கக்கூடும். புகழ் பெற்ற நாயக்க வம்சத்துக்கு ஒரு வாரிசை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையும் உள்ளார்ந்த திருப்தியுமே அவளை அப்படி எல்லாம் செய்யவிடாமல் அப்போது வாழ வைத்திருந்தன. நீறுபூத்த நெருப்பாக உள்ளே கனன்று கொண்டிருந்த துயரம் வெளியே தெரியவிடாமல் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள். மக்கள் அவளை வீராங்கனை என்றும், எவ்வளவு துயரங்களையும் தாங்கிக் கொண்டு ஆட்சிக் கடமைகளை ஆற்றக்கூடிய திடசித்தமுள்ளவள் என்றும் வானளாவப் புகழ்ந்தனர். ஆனால் அவளது மனம் எவ்வளவுக்குக் கவலையில் சிக்கித் தவிக்கிறது என்பது இராயசம் போன்ற இரண்டோர் அரண்மனை முக்கியஸ்தர்களுக்குத் தெரிந்துதான் இருந்தது. அவர்களிடம் அவளால் அதை மறைக்க முடியவில்லை. ஒரு நாள் மாலை அரண்மனை மந்திராலோசனை மண்டபத்தில் ராணி மங்கம்மாளுடன் பேசிக் கொண்டிருந்த போது இராயசம் ஒரு யோசனையைக் கூறினார். அவள் கையிலிருந்த பேரன் விஜயரங்க சொக்கநாதனை சுட்டிக்காட்டி, "இவனுடைய நலனுக்காவது இதை நீங்கள் செய்தாக வேண்டும்" என்றார் அவர். அவர் கூறிய அந்த யோசனை ராணி மங்கம்மாளைச் சிந்திக்க வைத்தது. "இந்த அரண்மனையில் இரண்டு சாவுகளுக்கு மேல் நேர்ந்து விட்டன. தொடர்ந்து இங்கே இருப்பது உங்கள் மனவேதனையை அதிகப்படுத்தலாம். நடந்த துயரங்களை நினைவுபடுத்தி உங்களை இந்தச் சூழலே கலக்கப்படுத்தலாம். தயவு செய்து நீங்களும், குழந்தையும் இடம் மாற வேண்டும்" என்றார் இராயசம். ராணி மங்கம்மாள் அவரைக் கேட்டாள்: "உங்கள் யோசனையை ஏற்கிறேன். ஆனால் எங்கே இடம் மாறுவது என்று தான் எனக்குப் புரியவில்லை." அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |