http://www.chennailibrary.com





15. சாதுரியமும் சாகஸமும்

     'கிழவன் சேதுபதி' என்ற பெயரைக் கேட்டவுடனே தன் சொந்தத் துயரங்களைக்கூட மறந்து உறுதியும் கண்டிப்பும் திடமான முடிவும் உடையவளாக மாறியிருந்தாள் ராணி மங்கம்மாள்.

     அரசியலில் ஏற்க வேண்டியதை ஓரிரு கணங்கள் தாமதித்து ஏற்பதும், எதிர்க்க வேண்டியதை ஓரிரு கணங்கள் தாமதித்து எதிர்ப்பதும் கூட விரும்பத் தகாத விளைவுகளை உண்டாக்கி விடலாம் என்பதைக் கடந்த கால அனுபவங்களிலிருந்து அவள் நன்கு உணர்ந்திருந்தாள். புரிந்து கொண்டிருந்தாள். கணித்தும் வைத்திருந்தாள்.

     'தான் ஒரு பெண் - அதனால் பலவீனமானவள்' என்று தன்னைப்பற்றி யார் எண்ணினாலும் அவர்களது எண்ணத்தைப் பொய் என்று உடனே நிரூபித்துக் காட்டும் துணிவோடு செயற்படுவது எப்போதுமே அவளுடைய வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

     மகனையும், மருமகளையும் இழந்து தான் பலவீனமாக இருந்தாலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல எதிரிகள் நடந்து கொள்ளத் தயங்கமாட்டார்கள் என்றுதான் அவளுக்குத் தோன்றியது. ராஜதந்திரிகளும் அரசாங்க அதிகாரிகளும் கூறிய யோசனைகளை மட்டுமே நம்பிவிடாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சுயமாகவும் சிந்தித்தாள் அவள்.

     விஜயரங்க சொக்கநாதன் குழந்தையாக இருக்கும்வரை மறைமுகமாக ஆட்சிப் பொறுப்பின் பாரத்தைத் தாங்குவது என்று தனக்குள் முடிவு செய்து கொண்டிருந்தாள் அவள்.

     ராணி மங்கம்மாள் குழந்தையோடு நல்ல நாள் பார்த்து மதுரைக்குச் சென்றாள். ராணியின் பரிவாரங்களும் சுற்றமும் உடன் சென்றன. அக்கம் பக்கத்துப் பகையரசர்களை உத்தேசித்துத் திரிசிரபுரத்திலும் மதுரையிலும் மாறி மாறி இருப்பது போல் காட்டிக் கொள்வது நல்லதென்றுகூடச் சில ராஜ தந்திரிகள் அபிப்பிராயப்பட்டார்கள். ராணியும் அதைப் பற்றிச் சிந்தித்தாள். அக்கம் பக்கத்து எதிரிகளை தற்காலிகமான நண்பர்களாக்கிக் கொள்ளவும் அவள் முயல வேண்டியிருந்தது. எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்கிற சாணக்கியத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

     தன் கையில் பேரக் குழந்தையோடும், மனத்தில் அரசியல் பொறுப்புகள் என்னும் சுமைகளோடும் ராணி மங்கம்மாள் மதுரைக்கு வந்த போது சுற்றுப்புற அரசியல் சூழ்நிலைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. சிலரது மறைவால் வேறு சிலருக்கு தைரியம் வந்தது. சிலர் தலையெடுத்த காரணத்தால் வேறு சிலர் தைரியத்தை மறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

     மராத்திய சிங்கம் வீரசிவாஜி மறைந்து விட்டதனால் அதுவரை அந்தப் பெருவீரனுக்குப் பயந்து சில ஆக்கிரமிப்புகளைச் செய்யாமல் இருந்தவர்கள் ஆக்கிரமிப்புகளுக்குத் துணிந்தார்கள்.

     விரைந்து அப்படித் துணிந்தவர்களில் டில்லி பாதுஷாவும் ஒருவர். டில்லி பாதுஷாவின் கவனம் தெற்கே சிறிது சிறிதாகச் சிதறியிருந்த நாடுகள் மேல் விழுந்தது. அவற்றின் வளத்தையும் வாழ்வையும் ஏதோ ஒரு வகையில் தனக்கு அடிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவன் மனத்தில் எழுந்தது.

     சூரியோதயத்தில் சிறிய சிறிய நட்சத்திரங்கள் ஒளியிழந்து போவதைப்போல் வலிமை வாய்ந்த டில்லி பாதுஷாவின் எழுச்சியில் தென்னாட்டு அரசர்கள் ஒவ்வொருவராக வலுவிழந்தனர்.

     அதுவரை மிகப் பெரிய பராக்கிரமசாலியாயிருந்த மைசூர் மாமன்னன் சிக்கதேவராயன் டில்லி பாதுஷாவை எதிர்க்க விரும்பாமலும் முடியாமலும் சமரசம் செய்து கொண்டு கப்பம் கட்ட இணங்கிவிட்டான். தஞ்சையை ஆண்டுவந்த மராத்திய மன்னனும் டில்லி பாதுஷா அவுரங்கசீப்புக்குக் கப்பம் கட்டத் தொடங்கிவிட்டான். இந்தச் சூழ்நிலையில், 'தான் என்ன செய்வது' என்று சிந்திக்கத் தொடங்கினாள் ராணி மங்கம்மாள். அவசரமாக அவள் முடிவு எடுக்க வேண்டியிருந்தது.

     முன்பு தன் மகன் ரங்ககிருஷ்ணன் பட்டத்துக்கு வந்த புதிதில் பாதுஷாவின் மிதியடிகளை வணங்கக்கோரி வந்த பிரதிநிதிகளுடன் ஏற்பட்ட சச்சரவும் அதே சமயம் அந்த சச்சரவோடு சச்சரவாக மறுக்காமல் அவர்களுக்கு, தான் செலுத்த வேண்டிய திறையைச் செலுத்தியிருந்ததும் ராணி மங்கம்மாளுக்கு நினைவு வந்தன. அன்று தொடங்கிய சச்சரவைத் தொடர்வதா அல்லது சமரசம் செய்து கொள்வதா என்கிற பிரச்சனை எழுந்தது.



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm15.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.