http://www.chennailibrary.com





16. ஒரு மாலை வேளையில்...

     மராத்தியப் படைத்தலைவர்களும் ராணி மங்கம்மாளிடம் அடிக்கடி பணம் பறித்தனர். மதுரைப் பெருநாட்டின் ஆட்சிக்கு ஊரு நேராமலிருக்கவும் எல்லைகளைப் பாதுகாக்கவும் மராத்தியர்களை அடிக்கடி தன்னைக் கட்டிக் கொண்டு போக வேண்டியிருந்தது. படை பலத்தைக் காட்டுவதிலும், நேரடிப் போரில் இறங்குவதிலும் இருந்து தன்னை தவிர்த்துக் கொண்டு ராஜ தந்திர முறைகளாலும், சாதுரியங்கள் சாகஸங்களாலும் ஆள்வதில் கூட ராணி மங்கம்மாளுக்கு இப்படிச் சில சிக்கல்கள் ஏற்படத் தான் செய்தன. பெண் ஆளும் நாட்டின் எல்லைப் புறப் பகுதிகளை ஆக்கிரமித்து ஆளுவது சுலபம் என்று அக்கம் பக்கத்து அரசர்கள் துணிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டி அவர்களை மிரட்டி வைக்க வேண்டியிருந்தது.

     மிகவும் தொலைதூரத்தில் இருந்தாலும் அடிக்கடி தெற்கே படைகளை அனுப்புவதிலுள்ள சிரமங்களாலும் டில்லி பாதுஷாவின் உதவிகள் கிடைப்பதிலும் சில இடையூறுகள் விளைந்தன.

     திரிசிரபுரத்தின் எல்லைப் பகுதியில் சில சிற்றூர்களை உடையார்பாளையம் சிற்றரசன் கைப்பற்றி ஆண்டு வந்தான். அவனிடமிருந்து அந்த ஊர்களை மீட்பதற்காகப் பாதுஷாவின் படைத்தளபதி டாட்கானுக்கு நிறையப் பொருள் கொடுத்து முயன்றாள் அவள். அவ்வளவு பொருள் உதவி செய்தும் டாட்கானே நேரில் வரமுடியவில்லை. மங்கம்மாள் இழந்த பகுதிகளை மீட்பதற்குப் படை வீரர்களை மட்டுமே அனுப்பி வைத்தான் அவன்.

     ரங்ககிருஷ்ணனின் மகன் விஜயசொக்கநாதன் குழந்தையாயிருந்தாலும் அவனுக்கே முறையாக முடிசூட்டிவிட விரும்பினாள் அவள். அந்தக் குழந்தைக்கு முடிசூட்டி ஆட்சியுரிமையை அளித்துவிட்டு அவனுடைய பிரதிநிதியாக இருந்து தான் ஆட்சிக் காரியங்களை நடத்தலாம் என்பது அவள் எண்ணமாயிருந்தது.

     "தாய் தந்தையை இழந்து பாட்டியின் ஆதரவில் வளரும் சிறுவனை எதிர்த்துப் போர் புரிவது அப்படி ஒன்றும் வீரதீரப் பிரதாபத்துக்குரிய செயல் இல்லை" என்ற எண்ணத்தில் எதிரிகள் குறைவாகவே தொல்லை கொடுப்பார்கள் என்பது அவளது கணிப்பாயிருந்தது.

     தன்னையும் தன் நாட்டையும் அதன் எதிர்கால வாரிசான குழந்தை விஜய ரங்க சொக்கநாதனையும் சுற்றிப் பிறருடைய இரக்கமும் அநுதாப உணர்வுமே சூழ்ந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணினாள் அவள்.

     ஒரு நல்ல நாள் பார்த்து நல்ல வேளை பார்த்துக் குழந்தை விஜய ரங்க சொக்கநாதனுக்கு முடிசூட்டச் செய்தாள். தன் தலையில் சுமத்தப்படுவது எத்தகைய பாரம் என்பது அவனுக்கு ஒரு சிறிதும் புரியாத பாலப் பருவத்திலேயே அந்தப் பாரத்தைச் சுமந்தான் குழந்தை விஜய ரங்க சொக்கநாதன்.

     "குருவி தலையில் பனங்காயை வைப்பது போல் என்பார்கள்! இந்த முடிசூட்டு விழாவும் அப்படித் தான் நடக்கிறது" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் இராயசம். மங்கம்மாள் அதை மறுத்தாள்.

     "குருவி எந்த நாளும் பனங்காயை சுமக்க முடியாது! இவன் அப்படியில்லை. வளர்ச்சியும் பொறுப்பைத் தாங்கும் பக்குவமும் இவனுக்கு வரும்.

     "வரவேண்டும் என்று தான் நானும் ஆசைப்படுகிறேன். தாயையும் இழந்து தந்தையையும் இழந்து வளரும் இவனை உருவாக்குவதற்கு மகாராணியார் அரும்பாடு பட வேண்டியிருக்கும்! மகனறிவு தந்தையறிவு என்பார்கள். தந்தை கண்காணத் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தால் தான் அது முடியும். இவனோ இந்த மண்ணில் பிறப்பதற்கு முன்பே தந்தையை இழந்துவிட்டான். பிறந்தபின் உடனே தாயையும் இழந்து விட்டான்."

     "இவன் மட்டும் பிறந்திருக்காவிட்டால் இங்கு நான் இன்னும் உயிர் வாழ்வதற்கு அவசியமே இருந்திராது."

     "இவன் பிறந்திருந்தும்கூடச் சமயா சமயங்களில் இப்படி விரக்தியடைந்தது போல் பேசுகிறீர்கள். இப்படி ஒரு பேரன் பிறவாமலே இருந்திருந்தால் மகாராணியாரின் விரக்தி எவ்வளவாயிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை...."

     "திரிசிரபுரத்தை விட்டு நீங்கி மதுரைக்கு மாறி வந்ததில் என் துயரங்கள் அதிக அளவு குறைந்துள்ளன. ஆனாலும் பழைய துயரங்களும் இழப்புகளும் நினைவுவரும்போது எங்கிருந்தாலும் மனத்தை ஆற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன்."



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm16.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.