17. கெட்ட சொப்பனமும் குழப்பமும் பேரன் விஜயரங்கனின் ஆசையை மறுக்க முடியாத காரணத்தால் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் கோபுரத்தில் ஏறிக்கொண்டிருந்தாலும் ராணி மங்கம்மாளுக்குப் படியேறி மேலே செல்வது களைப்பாகத்தான் இருந்தது. பாதிக் கோபுரம் ஏறிக் கொண்டிருக்கும் போதே "இங்கிருந்து ஒருவரைக் கீழே தள்ளினால் உயிர் பிழைக்க முடியுமா பாட்டி?" என்று முன்போலவே சிரித்தபடி கேட்டான் பேரன். ராணி மங்கம்மாள் மூச்சு இறைக்க நின்று ஆசுவாசப் படுத்திக் கொண்டபடி அவனுக்குப் புத்திமதி சொன்னாள்: "மேலே போகப்போக எண்ணங்கள் உயர்ந்தனவாக அமைய வேண்டும் அப்பா! மேலேயிருந்து யாரைக் கீழே தள்ளி விடலாம் என்று நினைப்பதைவிடக் கீழே இருக்கிற யாரை மேலே அழைத்து உயர்த்திக் கொள்ளலாம் என்று நினைக்கப் பழகவேண்டும்." "அப்படிப் பழகலாம் பாட்டி! ஆனால் கீழேயிருக்கிற ஒருவரை மேலே வரவழைக்க் நேரமும் சிரமமும் அதிகம். மேலே இருக்கிற ஒருவரைக் கீழே தள்ளிவிட அரைநொடிகூடப் போதுமானது...." "அற்பர்களுக்குத்தான் அப்படித் தோன்றும் விஜயரங்கா! நீ அற்பனாகிவிடக் கூடாது. பெருந்தன்மையானவனாக வளர்ந்து உருவாக வேண்டும். பெருந்தன்மை உள்ளவன் கீழே இருந்து சிரமப்படுகிறவனை மேலே கொண்டு வருவதற்கு முயலுவானேயன்றி, மேலேயிருப்பவனைக் கீழே தள்ளிவிட்டு மகிழ ஒருபோதும் முயலமாட்டான்." "பாட்டி! எனக்குப் பெருந்தன்மை கிடையாது. வேண்டவும் வேண்டாம்." அவன் இதைச் சொல்லும்போது அவர்கள் கோபுரத்தின் உச்சிக்கு வந்திருந்தார்கள். மேலே நீலவானின் விதானத்தில் பிறைநிலவு தெரிந்தது. நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. காற்று இதமாக வீசியது. மெல்ல மெல்ல இருட்டிக் கொண்டு வந்தது. குபீரென்று அவள் மேல் பாய்ந்து கீழே தள்ளிவிட முயன்றான் விஜயரங்கன். "விளையாடாதே விஜயரங்கா! விளையாட்டு வினையாகிவிடும்." "இது விளையாட்டு இல்லை பாட்டி! உங்களை இங்கு அழைத்து வந்ததே இதற்குத்தான்" என்று சொல்லியபடியே பலங்கொண்ட மட்டும் முயன்று மறுபடி அவளைக் கீழே தள்ள முயன்றான் விஜயரங்கன். அவன் முகத்திலிருந்த குரூரத்தையும் கொலை வெறியையும் பார்த்துத் திடுக்கிட்ட ராணி மங்கம்மாள் பதறிப் போனாள். அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா அல்லது திடீரென்று ஏதேனும் பேய், பிசாசு பிடித்து ஆட்டுகிறதா என்று அவளுக்குப் பயமாகப் போய்விட்டது. அவள் பரிதாபமாகக் கேட்டாள்: "ஏண்டா இந்தக் கெட்டபுத்தி? உன்னை வளர்த்து ஆளாக்கிய பாவத்திற்கு இதுவா நீ எனக்குத் தருகிற பரிசு?" "உன்னிடமிருந்து எனக்கு விடுதலை வேண்டும் பாட்டி! உனக்கும் வயதாகிவிட்டது." "துரோகி! நிஜமாகவே என்னைக் கீழே பிடித்துத் தள்ளுகிறாயே பாவி! நான் உனக்கு என்னடா கெடுதல் செய்தேன்? வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் இப்படி...?" அவள் அலறிக் கத்தினாள். விஜயரங்கன் அந்த உயரமான கோபுரத்திலிருந்து அவளைக் கீழே தள்ளியே விட்டான். அவள் வீறிட்டுக் கூக்குரல் எழுப்பியபடி தலைகுப்புற விழுந்து விட்டாள். கண்ட கனவை அலர்மேலம்மாவிடம் கூடச் சொல்வதற்குத் துணிவு வரவில்லை அவளுக்கு. கட்டிலில் இருந்து புரண்டு விழுந்ததில் உடம்பு வேறு வலித்தது. தூக்கக் கிறக்கத்தில் கட்டிலிலிருந்து புரண்டு விழுகிற அளவு அவள் ஒருநாளும் அவ்வளவு அயர்ந்து உறங்கினதே இல்லை. இன்று அந்த அளவு அயர்ந்து விட்டோம் என்ற நினைப்பே கூட அவளுக்கு நாணத்தை அளித்தது. விடிவதற்கு இன்னும் சில நாழிகைகளே இருந்தன. அவளுக்கு உறக்கம் கலைந்து விட்டது. மறுபடியும் உறங்கினால் எங்கே கெட்ட கனவு தொடருமோ என்ற அச்சமும் தயக்கமும் வேறு தடுத்தன. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|