18. சேதுபதியின் சந்திப்பு மதுரைப் பெருநாட்டைச் சேர்ந்தவையும் அப்போது ராணி மங்கம்மாளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தவையுமான சேலம், கோயமுத்தூர்ப் பகுதிகளைக் கவனித்துக் கொண்டிருந்த சிற்றரசர்களை மெல்ல மெல்ல அடக்கித் தன் வசப்படுத்திக் கொண்டு அப்பகுதிகளின் மூலமாகப் படை எடுத்துத் திரிசிரபுரத்தை முற்றுகையிட்டிருந்தன மைசூர்ப்படைகள். எதிர்பாராத அபாயமாக இது நேர்ந்திருந்தது. அப்போது மைசூர் அரசன் சிக்க் தேவராயனின் படைத் தலைவர்களில் மிகவும் சாமர்த்தியசாலியான குமரய்யாவின் தலைமையில் இந்தப் படையெடுப்பு நடந்திருக்கிறது. வடக்கே மைசூரிலிருந்து வழி நெடுகிலுமுள்ள சிற்றரசர்களின் ஒத்துழைப்போடு படையெடுப்பு நடந்ததன் காரணமாக மிகவும் இரகசியமாகவே எல்லாக் காரியங்களும் முடிந்திருந்தன. குமரய்யாவும், அவனது படைகளும் திரிசிரபுரம் வந்து கோட்டையை வளைத்துக் கொண்டு முற்றுகையிடுகிறவரை அந்தப் படையெடுப்புத் தகவல் பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இராயசமும் மற்றவர்களும் அந்தத் தகவலைத் தன்னிடம் வந்து கூறியபோது ராணி மங்கம்மாளுக்கு ஓரிரு கணங்கள் அதிர்ச்சியாகத் தானிருந்தது. மங்கம்மாள் அவர்களை வினவினாள்: "இப்படிப் பலகாத தூரம் படை நடத்தி வந்து குமரய்யாவும் அவன் படைவீரர்களும் திரிசிரபுரத்தைப் பிடிக்கிறவரை நம் ஒற்றர்களும் ராஜ தந்திரிகளும் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்?" "வழி நெடுகிலும் உள்ள சிற்றரசர்களின் ஒத்துழைப்போடு குமரய்யாவும் அவனுடைய ஆட்களும் திவ்ய தேசயாத்திரை செல்லும் தேசாந்திரிகளைப் போல முன்னேறி வந்து விட்டார்கள். இளவரசரும் சின்னராணி முத்தம்மாளும் அடுத்தடுத்துக் காலமான துயரத்தினாலும் கவலையாலும் நாம் தளர்ந்திருந்தோம். திரிசிரபுரத்திலிருந்து மதுரைக்கு வேறு வந்து விட்டோம்." "இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை." "சில சமயங்களில் எதிர்பார்த்தபடி நடப்பதில்லை. எதிர்பாராதபடி ஏதாவது நடந்து விடுகிறது மகாராணீ!" "எதிர்பார்க்க முடிந்த அபாயங்களுக்கு ஆயத்தமாக இருக்க வேண்டியதோடு எதிர்பாராத அபாயங்களுக்கும் ஆயத்தமாக இருக்க வேண்டியது என் கடமை." "உண்மைதான் மகாராணீ! 'திரிசிரபுரம் கோட்டையை வளைத்து வெற்றி கொள்ளாமல் மைசூருக்குத் திரும்ப மாட்டேன்' என்று சிக்க தேவராயனிடம் சூளுரை கூறிய பின்பே குமரய்யா படைகளோடு புறப்பட்டிருக்கிறான் என்கிறார்கள். எப்படியோ இது நேர்ந்துவிட்டது. சமாளித்தாக வேண்டும்." "பேசிக் கொண்டிருக்கவோ திட்டமிட்டுக் கொண்டிருக்கவோ நேரமில்லை. உடன் முற்றுகையை எதிர்த்துப் போரிட வேண்டும்" என்றாள் ராணி மங்கம்மாள். மதுரையிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் படைகள் ஆயத்தமாயின. படைத் தலைவர்கள் போர்க்கோலம் பூண்டனர். படைகள் திரிசிரபுரம் நோக்கி விரைந்தன. நல்ல வேளையாக ராணி மங்கம்மாளின் நல்வினைவயத்தால் மலைபோல வந்த துயரம் பனிபோல் நீங்கிற்று. குமரய்யா படைகளுடன் திரிசிரபுரத்தைப் பிடிக்க வந்த சமயத்தில் மைசூரை மராத்தியர்கள் எதிர்பாராத விதமாகத் தாக்கவே, குமரய்யாவும் அவனுடன் வந்த பெரும் படையினரும் உடனே மைசூருக்குத் திரும்ப வேண்டியிருந்தது. மைசூருக்குத் திரும்பாத எஞ்சிய வீரர்களைத் திரிசிரபுரம் கோட்டையிலிருந்தவர்களே அடித்துத் துரத்தி விட்டார்கள். இந்தத் தகவல் தெரியச் சில நாட்கள் ஆயின. அதுவரை கவலையோடு இருந்த ராணி மங்கம்மாள் இது தெரிந்ததும் நிம்மதியடைந்தாள். திரிசிரபுரத்திற்கு அனுப்பிய பெரும்படையை வீணாக்காமல் எந்தப் படையெடுப்பிற்காவது பயன்படுத்தியாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. மைசூர்ப் படைத்தலைவன் குமரய்யாவும், அவனது வீரர்களும் இப்படித் திடீரென்று திரும்பி ஓடுவார்கள் என்று எதிர்பார்க்காததால் பெரும் படையைப் பல திசைகளிலிருந்தும் திரட்டியிருந்த ராணி மங்கம்மாளின் தளபதிகள் அந்தப் படை வீரர்களின் உத்வேகத்தை அப்படியே முடக்கிவிடாமல் உடனே எதற்காவது உபயோகப்படுத்தியாக வேண்டும் என்பது உணரப்பட்டதைத் தெரிவித்தார்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |