22. காவிரி வறண்டது! அப்போதிருந்த பரபரப்பில் காவிரிக்கரை உழவர்களைப் பார்க்க முடியாது போலிருந்தது. தேடி வந்திருக்கும் அந்த உழவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு மறுபடி சில நாள் கழித்து வந்து தன்னைச் சந்திக்கச் சொல்லலாமே என்று தான் முதலில் ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அந்த அபிப்ராயத்தை அவள் மாற்றிக் கொண்டாள். தேடி வந்திருப்பவர்கள் ஏழைகள் உழவர்கள் என்பதனால் அவர்களை அலைக்கழிக்காமலும், இழுத்தடிக்காமலும் உடனே பார்ப்பதுதான் முறை என்று எண்ணி அவர்களை அப்போதே தன்னைச் சந்திக்க அனுமதிக்குமாறு காவலர்களிடம் கூறி அனுப்பினாள். சிறிது நேரத்தில் உழவர்கள் கூட்டமாக அவளைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் முகங்களில் எல்லாம் பயமும் கவலையும் அணைகட்டித் தேக்கினாற் போலிருந்தன. அவர்களுக்கு ஏதோ தீராத பிரச்சினை இருக்கவேண்டும் என்று ராணி மங்கம்மாளால் பார்த்த அளவிலேயே அனுமானிக்க முடிந்தது. அவள் அவர்களை அன்போடு கேட்டாள்; "உழவர் பெருமக்களே! உங்கள் கவலை என்ன? என்னால் முடியுமானால் உங்கள் கவலையைக் களைவேன். தயங்காமல் சொல்லுங்கள்." "மகாராணீ! திடீரென்று காவிரியில் நீர் வற்றி வறண்டு விட்டது. மேல்மழை பெய்ததும் சரியாகும் என்று நினைத்துக் காத்திருந்தோம். அப்படியும் சரியாகவில்லை. சோழ நாட்டின் பெரும்பகுதி நிலங்களும் எங்களை ஒத்த விவசாயிகளும் காவிரியை நம்பித்தான் இருக்கிறோம் என்பது தாங்கள் அறியாததில்லை. மைசூர் மன்னன் சிக்கதேவராயனுக்கும், தங்களுக்கும் உள்ள பகையினால் தங்களுக்கும் தங்களது நாட்டு மக்களுக்கும் தொல்லைக் கொடுக்கக் கருதி மைசூரார் காவிரியை அணை எடுத்துக் தேக்கிவிட்டார்கள் என்று கேள்விப் படுகிறோம். காவிரி வறண்டிருப்பதால் உழவர்களாகிய எங்கள் வாழ்வும் வறண்டுவிட்டது." சிக்கதேவராயன் காவிரியை அணை கட்டித் தடுத்து நிறுத்திவிட்டான் என்று கேள்விப்பட்டு ராணி மங்கம்மாள் ஆச்சரியப்படவில்லை. அவன் அப்படித்தான் செய்திருக்கக் கூடும் என்பதில் அவளுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. திரிசிரபுரத்தை முற்றுகையிட்ட சிக்கதேவராயரின் படைகளையும், தளபதி குமரய்யாவையும் தாங்கள் மைசூருக்குத் துரத்திய பின்பே இப்படிப் பழிவாங்கும் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டிருக்கவேண்டுமென்று தோன்றியது. இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக உழவர்களுக்கு ஆறுதலும் மறுமொழியும் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு இராயசத்தையும், பிரதானிகளையும் படைத்தலைவர் நரசப்பய்யாவையும் உடனே அது பற்றிக் கலந்து ஆலோசித்தாள் அவள். "இந்தக் காவிரி நீர்ப் பிரச்சினையால் நாம் மட்டும் பாதிக்கப்படவில்லை. அண்டை நாடாகிய தஞ்சை நாட்டுக்கு நம்மைவிட அதிகப் பாதிப்பு ஏற்படும்" என்றார் இராயசம். அவர் இப்படிக் கூறி முடிக்கவும் வாயிற்காவலன் உள்ளே வந்து தஞ்சையின் மன்னர் ஷாஜியின் பிரதிநிதியாக அமைச்சர் பாலோஜி சந்திக்க வந்திருப்பதாகத் தெரிவிக்கவும் சரியாயிருந்தது. ஏற்கனவே தஞ்சை அரசன் ஷாஜியின் கோபத்துக்கு ஆளாகியிருந்த பாலோஜி தன் ஆள்கள் மூலம் தஞ்சை நாட்டின் பெரு வணிகர்களையும், செல்வர்களையும் தன் உறவினர்களையும் வற்புறுத்திப் பெரும் பொருள் திரட்டியதோடு அரசாங்கக் கருவூலத்திலிருந்து ஒரு பெருந்தொகையையும் எடுத்துக்கொண்டு திரிசிரபுரத்துக்கு வந்திருந்தான். திரட்டிய பொருளைத் திறைப்பணமாக அளித்து, ராணிமங்கம்மாளோடு சமாதானம் செய்துகொண்டு, அந்த சமாதானத்தைச் செய்து வந்தவன் என்ற பெருமையில் தன் அரசனான ஷாஜியின் கோபத்தைத் தணிக்க முயலவேண்டும் என்பது பாலோஜியின் திட்டமாக அப்போது இருந்தது. திடீரென்று திரிசிரபுரம், தஞ்சை இருபகுதி ஆட்சிக்கும் நிர்ப்பந்தத்தை உண்டாக்கும் பொருட்டு மைசூர் மன்னன் ஏற்படுத்திவிட்ட காவிரிநீர்த் தடுப்பு பிரச்சனை பாலோஜிக்கு இப்படி ஓர் இராஜதந்திர லாபத்தை உண்டாக்கித் தந்தது. மைசூர் மன்னன் சிக்கதேவராயன் என்கிற பொது எதிரியைத் தொலைக்கும் முகாந்திரத்தை முன்வைத்து ராணி மங்கம்மாளையும், தஞ்சை மன்னன் ஷாஜியையும் சமாதானப்படுத்த முடியும் என்ற புது ஞானோதயம் பாலோஜிக்கு உண்டாயிற்று. அதை வெறும் சமாதானமாக மட்டும் நிறுத்திவிடாமல் சிநேகிதமாக மாற்றித் திரிசிரபுரம், தஞ்சை இரண்டையும் நட்பு நாடுகளாக்கிவிடத் திட்டமிட்டான் அவன். காற்று அவனுக்குச் சாதகமாக அவனது பக்கம் வீசியது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|