http://www.chennailibrary.com





23. சேதுபதியின் மூலபலம்

     மேற்கே மலைப்பகுதிகளில் இடையறாது அடைமழை பெய்ததால் நீர்ப்பெருக்கு அதிகமாகி சிக்க தேவராயன் காவிரியின் குறுக்கே எடுத்திருந்த அணை தானே நலிந்து நகர்ந்து போய்விட்டது. அப்போதிருந்த பயங்கரமான வெள்ளப் பெருக்கில் சிக்க தேவராயன் மறுபடி காவிரியை வழிமறித்து நிறுத்தலாம் என்று நினைக்கக்கூட முடியவில்லை. காவிரி மீண்டும் தன் இஷ்டப்படி ஓடினாள்.

     திரிசிரபுரம் தஞ்சைப் பகுதிகளில் காவிரியில் வெள்ளம் இருகரையும் நிமிர ஓடியது. வறட்சி தவிர்ந்தது. உழவர்களின் துயரம் ஒழிந்தது. இதனால் மைசூரின் மேல் படை எடுப்பது என்ற திட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாகத் திரிசிரபுரத்துக்கும், தஞ்சைக்கும் ஏற்பட்ட ஒற்றுமை மட்டும் தொடர்ந்து நீடித்தது. அந்த நட்பு வேறொரு படையெடுப்புக்குப் பயன்பட்டது. வேறொரு படையெடுப்புக்கு அவசியமும் ஏற்பட்டது.

     இங்கே ராணி மங்கம்மாள் திரிசிரபுரத்திலிருந்து கொண்டு தஞ்சையிலும், மைசூரிலும் கவனம் செலுத்தி வந்த சமயத்தில் கிழவன் சேதுபதி பெரும்படையோடு படையெடுத்துச் சென்று மதுரையையும் சுற்றுப்புற நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டிருந்தார். இப்படி நடக்கும் என்று ராணி மங்கம்மாள் முற்றிலும் எதிர் பார்த்திருக்கவில்லை. சேதுபதி தந்திரமாக மதுரையைக் கைப்பற்றியிருந்தார்.

     ஏற்கெனவே மதுரைப் பெருநாட்டுக்குப் பணிந்து திறை செலுத்த மறுத்ததோடு மேலே எதுவும் செய்யாமல் இருந்து விடுவார் என்றுதான் சேதுபதியைப் பற்றி ராணி மங்கம்மாள் நினைத்திருந்தாள். புதிதாக விரோதங்கள் எதையும் வளர்க்கமாட்டார் என்று அவள் எண்ணியிருந்ததற்கு மாறாக அவர் மதுரை நகரையும், சுற்றுப்புறங்களையும் மறவர் படையோடு வந்து ஆக்கிரமித்தது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது.

     காவிரி நீர்ப்பிரச்சினையை ஒட்டி நட்பு ஏற்படுவதற்கு முன்னர் சேதுபதியே ஒருமுறை மங்கம்மாளுக்கு எதிரணியில் தஞ்சை மன்னர் ஷாஜியோடு இணைந்து மங்கம்மாளுக்குத் தொல்லை கொடுத்திருக்கிறார். இப்போது அதே சேதுபதியை எதிர்த்து ஷாஜியைத் தன் அணியில் திரட்ட வேண்டிய கட்டாயமும் நிர்ப்பந்தமும் மங்கம்மாளுக்கு ஏற்பட்டன.

     இதற்கு முன்னால் ஒருமுறை சேதுபதி மதுரை நகரைக் கைப்பற்றி ஆள முயன்ற போது ஷாஜியின் துணையின்றியே தளவாய் நரசப்பய்யா மதுரைக்குப் படை எடுத்துச் சென்று தனியே வென்றிருக்கிறார். இப்போது தஞ்சைப் படைகளும் உதவிக்குக் கிடைக்கிற காரணத்தால் தளவாய் நரசப்பய்யா சேதுபதியை ஓட ஓட விரட்டிவிடலாம் என்றே எண்ணினார்.

     முன்பு தன் மகன் ரங்ககிருஷ்ணன் சேதுபதியை அடக்கி வெற்றி கொள்ள முடியாமல் திரும்பியதிலிருந்து தொடர்ந்து அவர் அடங்க மறுத்து வந்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்த ராணி மங்கம்மாள் மதுரையைக் கைப்பற்றிய நிகழ்ச்சியை அவரது அடங்காமையின் அதிக எல்லையாகக் கருதினாள். திமிர் நிறைந்த காரியமாக எண்ணினாள்.

     பேரன் விஜயரங்கன் வளர்ந்து பெரியவனாகிப் பொறுப்பை ஏற்கும் நாள்வரை நாட்டின் எல்லைகள் பறிபோகாமல் கட்டிக் காக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இருந்தது. விஜயரங்கன் அவனுடைய தந்தை ரங்ககிருஷ்ணனைப் போல் இளம் பருவத்திலேயே அரசியல் பொறுப்புகளை ஏற்கக்கூடிய பக்குவமுள்ளவனாக இல்லை. சின்னஞ்சிறு வயதில் அவனை நம்பி முடிசூட்டுவது அவனையும் நாட்டையும் அபாயத்தில் கொண்டு போய் விட்டுவிடக்கூடும் என்பது ராணி மங்கம்மாளுக்கே தெளிவாகப் புரிந்திருந்தது. விளையாட்டுப் பிள்ளையாகவும் விடலையாகவும் அவன் இருந்தான்.

     அதனால் அரசியல் காரியங்களில் விஜயரங்கனை அவள் சம்பந்தப்படுத்தவேயில்லை. சேதுபதி மதுரை நகரையும் சுற்றுப் புறங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு ஆளும் தகவல் தெரிந்ததும் இராயசம் முதலியவர்களோடு மந்திராலோசனை செய்தபின் தளவாய் நரசப்பய்யாவிடம் தான் அவள் மனம் திறந்து பேசினாள்.

     "உங்களுக்கு இது பெரிய காரியமில்லை! இதே கிழவன் சேதுபதியை முன்பு மதுரையிலிருந்து மானாமதுரை வரை ஓட ஓட விரட்டியிருக்கிறீர்கள் நீங்கள். அந்த நம்பிக்கையில் இந்தப் பொறுப்பை இப்போது உங்களிடம் மீண்டும் ஒப்படைக்கிறேன்..."

     "ஒருமுறை நம்மிடம் தோற்றிருப்பதால் சேதுபதியும் இப்போது அத்தனை அலட்சியமாக இருக்க மாட்டார் முன்னை விட படைபலத்தைப் பெருக்கியிருப்பார்! ஆனாலும் கவலை வேண்டாம் மகாராணீ! மதுரையை சேதுபதியிடமிருந்து மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!."



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm23.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.