http://www.chennailibrary.com





24. பிரிட்டோ பாதிரியார் கொலையும் பின் விளைவுகளும்

     கிழவன் சேதுபதியைப் போலவே அரசுரிமை வாரிசுகளில் ஒருவராக இருந்த தடியத்தேவர் என்பவரை ஜான்டி பிரிட்டோ பாதிரியார் முயன்று கிறிஸ்தவராக மதம் மாற்றி விட்டார்.

     போர்ச்சுகலுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தவுடன் அவர் செய்த மதமாற்றங்களில் இது மிகவும் பெரியதாகவும், சர்ச்சையைக் கிளப்பக் கூடியதாகவும் அமைந்தது. இம்முறை பிரிட்டோ பாதிரியாரும் தாம் இதற்கு முன்பு செய்தது போல் தயக்கமோ பயமோ இல்லாமல் தமது உயிரையே இழந்தாலும் பரவாயில்லை என்கிற அளவு துணிச்சலுடன் மதமாற்ற முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். இராமநாதபுரத்து மறவர் சீமையைச் சேர்ந்த இந்துக்களின் எதிர்ப்பைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை.

     கிழவன் சேதுபதிக்குப் பிறகு அல்லது அவர் உயிருடன் இருக்கும்போதே ஆட்சி தடியத்தேவருக்குக் கிடைக்கும்படிச் செய்யப்படும் என்ற ஆசை வார்த்தைகளும் கிழவன் சேதுபதி மேலிருந்த வெறுப்புமே தடியத் தேவர் கிறிஸ்தவத்தை விரும்பி ஏற்கச் செய்திருந்தன.

     இராமநாதபுரம் மன்னர்களுக்குப் பல மனைவியர் இருந்ததினால் அரசுரிமை வாரிசுகள் என்று சிலரே தகுதி பெற்றனர். அந்தச் சிலரில் கிழவன் சேதுபதி பட்டம் ஏற்றிருக்காவிட்டால் தடியத்தேவர் தான் பட்ட மேற்றிருப்பார் என்கிற அளவிற்கு நெருக்கமாக இருந்தும் அவரது வாய்ப்புத் தவறிப் போயிருந்தது. தடியத்தேவர் விரக்தியோடிருந்தார். அத்தகையவரைத் தேடிப் பிடித்துக் கிறிஸ்தவராக்கிய ஜான்டி பிரிட்டோவின் செயல்கள் கிழவன் சேதுபதிக்குப் பலத்த சந்தேகங்களை உண்டாக்கின. ஆட்சியை அபகரிப்பதற்கான சதியோ என்றுகூட இதனைப் பற்றிக் கிழவன் சேதுபதி நினைத்தார்.

     இந்தச் சந்தேகத்துக்குக் காரணம் இல்லாது போகவில்லை. கிழவன் சேதுபதி மறவர் சீமையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்காவிட்டால் தடியத்தேவர் தான் அதை ஏற்றிருப்பார் என்கிற அளவு நெருக்கமான வாரிசாக இருந்தார் அவர். தடியத்தேவரை மதம் மாற்றியது கிழவன் சேதுபதியைச் சீறி எழ்ச் செய்தது. இதற்கு மற்றொரு காரணமும் இருந்தது.

     தடியத்தேவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்முன் தமக்கிருந்த ஐந்து மனைவிமார்களில் நான்கு பேரை விலக்கிவிட்டு ஒரே ஒருத்தியை மட்டும் மனைவியாக ஏற்க வேண்டியதாயிற்று. மற்ற நால்வரையும் தள்ளி வைப்பது தவிர்க்க முடியாது போயிற்று. அப்படி அவர் நீக்கி வைத்த நான்கு மனைவிமார்களில் ஒருத்தி கிழவன் சேதுபதியின் சகோதரி மகளாக இருந்தாள். மணவாழ்வில் சுகங்களை அதிகம் அடையாத இளம் பெண்ணாக இருந்த அவள் தன் கணவன் தடியத்தேவரிடம் போய்த் 'தன்னைத் தொடர்ந்து மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி' கெஞ்சிப் பார்த்தாள். தடியத்தேவர் பிடிவாதமாக அதற்கு மறுத்துவிட்டார்.

     கணவன் மறுத்தவுடன் நேரே தன்னுடைய தாய் மாமனான கிழவன் சேதுபதியிடம் போய் நடந்த விவரங்களைத் தெரிவித்தாள் அந்தப் பெண். கூடப் பிறந்தவளின் மகள் தன்னிடம் வந்து கதறியழுது கண்ணீர் சிந்தியதைக் கண்டு மனம் கொதித்தார் சேதுபதி.

     தடியத்தேவர் மேல் எழுந்த ஆத்திரம் அவர் மாறிய மதத்தின் மேலும் அவரை அப்படி மாற்றியவர்கள் மேலும் பாய்ந்தது. தடியத் தேவரின் மத மாற்றத்தைப் பெரிய அரசியல் சதியாகக் கருதினார் சேதுபதி. தடியத் தேவரைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியதன் மூலம் நமது அரசையும், ஆட்சியையும் கவிழ்ப்பதற்கு ஏற்பாடு நடப்பதாக சேதுபதியும் அவருடை நெருங்கிய நண்பர்களும் நினைத்தார்கள். பெருவாரியான மறவர் சீமை வீரர்களும் அப்படியே எண்ணினார்கள். அதன் விளைவாக மறவர் சீமையில் பெரும் புயல் எழ்ந்தது. சேதுபதியின் கட்டளைப்படி மறவர் நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. பாதிரியார்கள் பலத்த கொடுமைக்கு ஆளாயினர்.

     "என் சகோதரி மகளை வாழாவெட்டியாக்கி என் ஆட்சியையும் அழிப்பதற்கு ஏற்பாடு நடக்கிறது! இதை நான் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது" என்று குமுறி எழுந்த சேதுபதி பிரிட்டோ பாதிரியாரையும் ஏனைய பாதிரிமார்களையும் சிறைச்சாலையில் பிடித்து அடைக்கும்படி உத்தரவிட்டார்.

     வெளியூரில் சிறைப்படிக்கப்பட்ட பிரிட்டோ பாதிரியார் இராமநாதபுரம் கொண்டு வரப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

     பிரிட்டோ பாதிரியார் சிறைவைக்கப்பட்ட சமயம் தடியத்தேவரும் இராமநாதபுரத்தில் தான் இருந்தார். பாதிரியாரை எதுவும் செய்தால் தடியத்தேவர் கலவரம் விளைவிக்கக்கூடும் என்று தயங்கினார் கிழவன் சேதுபதி. தடியத்தேவர் இராமநாதபுரத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தது பிரிட்டோ பாதிரியார் விஷயத்தில் ஒரு முடிவெடுக்க முடியாமல் சேதுபதியைத் தயங்க வைத்தது.



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm24.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க






வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.