http://www.chennailibrary.com



24. பிரிட்டோ பாதிரியார் கொலையும் பின் விளைவுகளும்

... தொடர்ச்சி ...

     இராமநாதபுரத்தில் வெடித்த இந்தக் கிறிஸ்தவ எதிர்ப்பு உணர்ச்சி மெல்ல மெல்ல தஞ்சைக்கும் பரவியது. தஞ்சை மன்னன் உடையார் பாளையம் குறுநில மன்னனுக்கும், திரிசிரபுரத்திலிருந்த ராணி மங்கம்மாளுக்கும் அவரவர்கள் நாட்டிலிருந்த கிறிஸ்தவர்களை உடனே வெளியேற்றுமாறு தன் கைப்பட எழுதியனுப்பினான். வேறு காரணங்களுக்காகத் தஞ்சை நாட்டுடன் ராஜதந்திர நட்பு வைத்துக் கொண்டிருந்தாலும் அந்நாட்டு மன்னனின் கிறிஸ்தவ எதிர்ப்புச் சம்பந்தமான யோசனையை ராணி மங்கம்மாள் ஏற்கவில்லை. சேதுபதியைப் போலவோ, தஞ்சை மன்னனைப் போலவோ நடந்து கொள்ளாமல் நேர்மாறாகத் தன் ஆட்சி எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் கிறிஸ்தவர்கள் எப்போதும் போல் அமைதியாகவும், நலமாகவும் வாழுமாறு பார்த்துக் கொண்டாள் அவள். எல்லா மக்களிடமும் காட்டிய அன்பையும் ஆதரவையும், பரிவையும், கிறிஸ்தவர்கள் மேலும் காட்டினாள். அவர்கள் பாதுகாப்பாக வாழுமாறு பார்த்துக் கொண்டாள்.

     "கிறிஸ்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றாவிட்டால் இந்து சமயத்துக்கும், இந்துக் கோயிலுக்கும், இந்துக்களால் ஆளப்படும் அரசாட்சிக்கும் உடனடியாக ஆபத்து ஏற்படும்" என்று தஞ்சை மன்னன் ராணி மங்கம்மாளுக்கு மிகவும் வற்புறுத்தி எழுதியிருந்தான்.

     "இறைச்சி உண்பவர்கள் எல்லாரும் அருகில் வாழ்ந்தாலே அரிசிச் சாதம் உண்பவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆபத்து என்பது போலிருக்கிறது உங்கள் கூற்று. அதை நான் ஏற்பதில்லை. காய்கறி, அரிசிச் சோறு உண்பவர்களையும், இறைச்சி, மீன் உண்பவர்களையும் எப்படி ஒரே ஆட்சியின் கீழ் சம உரிமைகளோடு மக்களாக வாழ விடுகிறோமோ அப்படித்தான் இந்தப் பிரச்சனையையும் நான் பார்க்கிறேன். ஓர் ஆட்சியின் கீழ் வாழும் மக்களில் யார் எந்த எந்த மதநெறியை ஏற்றுக்கொண்டு அநுசரித்து வாழ விரும்பினாலும் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அதுதான் தர்மம். இதை அரசாட்சி வற்புறுத்தித் திணிக்க முடியாது என்று நினைக்கிறேன்" என்று தஞ்சை மன்னனுக்கு மிக விளக்கமாக மறுமொழி அனுப்பியிருந்தாள் ராணி மங்கம்மாள்.

     சேதுபதி கிறிஸ்தவர்களை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுத்தாரோ அவ்வளவுக்கு அவ்வளவு ராணி மங்கம்மாள் அவர்கள் மேல் அன்பும் ஆதரவும் காட்டினாள்.

     பங்காளித் தடியத்தேவருக்குத் தெரியாமலே பாம்பாற்றங்கரையில் இருந்த ஓரியூருக்குப் பிரிட்டோ பாதிரியாரை அனுப்பி அங்கு அவரைக் காவலில் வைக்க ஏற்பாடு செய்தார் கிழவன் சேதுபதி. ஓரியூர் சேதுபதியின் ஆட்சிக்கு அடங்கிய சிறு தலைக்கட்டி ஒருவரால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. சேதுபதிக்கு மிகவும் வேண்டியவர் அந்த ஓரியூர்த் தலைக்கட்டுத் தேவர். அந்தத் தேவருக்கு எழுதியனுப்பிய அந்தரங்கக் கடிதத்தில் பாதிரியாரைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்று விடுமாறு உத்தரவு இட்டிருந்தார் கிழவன் சேதுபதி.

     ஓரியூர்த் தலைக்கட்டு பாதிரியாரைக் கொல்லத் தயங்கினார். ஆனால் அவருடைய பிரதானியாயிருந்த முருகப்பப் பிள்ளை என்பவர் துணிந்து சேதுபதியின் கட்டளைப்படி பாதிரியாரை உடனே கொன்றுவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சேதுபதியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் தேவரை வற்புறுத்தி நிர்ப்பந்தப்படுத்தினார்.

     கிழவன் சேதுபதியின் கடுங்கோபத்துக்கு ஆளாகிச் சிரமப்படுவதைவிடப் பாதிரியாரைக் கொன்று விடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்தார் ஓரியூர்த் தலைக்கட்டுத் தேவர்.

     இம்முடிவின் விளைவாக ஜான்டி பிரிட்டோ பாதிரியார் கொல்லப்பட்டார். அவர்களுடைய உடல் சின்னாபின்னப்படுத்தப் பெற்றுக் கழுகுகளுக்கு உணவாக இடப்பட்டது.

     நீண்ட நாள்களுக்கு இந்தக் கொலை இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மறவர் சீமையில் எழுந்த புயலும் ஓயவில்லை. தொடர்ந்து கிறிஸ்தவ சமய அன்பர்களும், மதகுருமார்களும் தொல்லைக்கு ஆளானார்கள்.

     பெர்னார்டு பாதிரியார் என்ற மற்றொரு குரு முப்பத்திரண்டு பற்களும் நொறுங்கி உதிருமாறு தாக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெர்னார்டு பாதிரியாரின் சீடர்கள் பிரக்ஞை மங்கித் தரையில் விழுகிற வரை சவுக்கடி பெற்றார்கள். இவற்றை எல்லாம் கேள்விப்பட்டு ராணி மங்கம்மாள் மனம் வருந்தினாள். மறவர் நாட்டிலும், தஞ்சையிலும் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ மத குருக்களும் கொடுமைப்படுத்தப்பட்டது போல் தன் ஆட்சியில் எதுவும் நடைபெற்றுவிடாமல் பொது நோக்கோடு கவனித்துக் கொண்டாள் அவள். தன் சொந்தமதமாகிய இந்து மதத்தின் மேலுள்ள பற்றை விட்டு விடாமல் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பேருதவிகளைச் செய்து மிகவும் பரிவுடன் நடந்து கொண்டாள் அவள்.



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm24a.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.