25. பாவமும் பரிகாரங்களும் அன்றொரு நாள் அரண்மனை நந்தவனத்தின் அதிகாலை இருளில் பணிப் பெண்கள் தங்களுக்குள் ஒட்டுப் பேசியதை இன்று வெளிப்படையாகவே தனக்கும் அச்சையாவுக்கும் முன்னால் விஜயரங்கன் பேசக் கண்டாள் ராணி மங்கம்மாள். முதலில் பணிப்பெண்கள் மத்தியில் முளைவிட்ட ஓர் அபவாதம் இப்போது தன் பேரன் வரை பரவியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள் அவள். பனைமரத்தின் கீழே நின்று ஒரு கலயத்தில் பசுவின் பாலைக் குடித்தாலும் உலகம் அதை நம்பாது என்பது மெல்லப் புரிந்தது. இராயசம் அச்சையா ஆஜானுபாகுவாகவும், அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தது தான் காரணம் என்று தோன்றினாலும் மனம் அதை நினைத்துப் பார்க்கவே கூசியது. பேரன் விஜயரங்கன் அப்பாவி என்ற நினைப்பு மாறி அவனுக்குள்ளும் விஷம் இருப்பது புரியத் தொடங்கியது அவளுக்கு. மிகவும் பெரிய பெரிய ராஜ தந்திரப் பிரச்சனைகளுக்குக் கூடப் பதறாமல் இருந்த ராணி மங்கம்மாள் இந்தச் சொந்த அபவாதத்துக்காகப் பதறிக் கலங்கினாள். அவள் மனம் சஞ்சலப்படத் தொடங்கியது. சொந்தப் பேரனே முளைத்து மூன்று இலைவிடாத சிறு வயதில் இப்படி அபவாதங்களையும் வதந்திகளையும் நம்பித் தன்னை எதிர்த்துக் கேட்கும்படி ஆகிவிட்டதே என்று வருந்தினாள். யாராவது அவனுடைய மனத்தை அப்படிக் கெடுத்திருப்பார்களோ? என்றுகூட எண்ணிக் கவலைப்பட்டாள். அப்படியே ஒருவர் தவறாகச் சொல்லிக் கொடுத்திருந்தாலும் சிறிதுகூட இங்கிதமும் நாசூக்கும் இல்லாமல் அவன் நடந்துகொண்டவிதம் அவளை ஆழமாகப் புண்படுத்திப் பாதித்திருந்தது. பேரன் விஜயரங்கன் இப்படி நடந்து கொண்டதைப் பார்த்து மதிப்பும் கௌரவமும் நிறைந்த அச்சையா தன்னைப் பற்றி என்ன எண்ணியிருப்பார் என்று நினைத்து மனம் குன்றிப் போயிருந்தாள் அவள். தான் எத்தனையோ பெரிய காரியங்களைச் செய்த போது தனக்கு வந்த புகழை விடச் செய்யாத தவறு ஒன்றிற்காக ஏற்படும் அபவாதம் பெரிதாக எழுவது கண்டு மனம் நலிந்தாள். தான் செய்தவற்றில் பெரிய காரியங்கள் எனத் தோன்றியவற்றை மீண்டும் அவள் நினைவு கூர்ந்தாள். பலவீனமான மனநிலையில் பழைய சாதனைகளை நினைத்து ஆறுதலடையும் மனநலிவு அப்போது அவளையும் விட்டபாடில்லை. முன்பு கணவர் சொக்கநாத நாயக்கர் காலமாகி ரங்ககிருஷ்ணன் கைக்குழந்தையாக இருந்தபோது ஆட்சி அவள் பொறுப்பில் இருந்தது. அப்போது நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றை இன்று அவள் நினைத்தாள். வடக்கே சந்திரகிரியிலிருந்து வந்து திரிசிரபுரம் அரண்மனையில் தங்கியிருந்தவனும் மகாராணி மங்கம்மாளுக்கு இளைய சகோதரன் முறையுள்ளவனுமாகிய ஓர் அரச குடும்பத்து மனிதன் பெரிய தவறு ஒன்றைச் செய்துவிட்டான். அவன் செய்திருந்தது பழிபாவத்துக்கு அஞ்சாத படுபாதகமான செயல். அதற்காக மரண தண்டனையே வழங்கபட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றமும், நீதிவழங்கவேண்டி நீதிபதியும், குற்றவாளி ராணிக்கு உடன் பிறந்தான் முறையினன் ஆயிற்றே என்று தீர்ப்புக் கூறாமலே விட்டுவிட்டார்கள். குற்றவாளி தன் சகோதரன் முறையினன் என்பதற்காக ஏதாவது சலுகை காண்பிக்கிறார்களா என்பதை முதலில் இருந்தே ஒற்றர்கள் வைத்துக் கண்காணித்து வந்த ராணி மங்கம்மாள் துணிந்து தானே நீதி வழங்க முன் வந்தாள். 'ராணிக்குச் சகோதரன் முறை என்பதனால்தான் குற்றவாளிக்குத் தண்டனை எதுவும் கொடுக்கவில்லை' என்று ஊரெல்லாம் வேறு பேச்சுக் கிளம்பிவிட்டது. ராணி மங்கம்மாள் தானே நீதிமன்றத்தைக் கூட்டினாள். "தங்கள் சகோதரனுக்கு எப்படி மரண தண்டனை அளிப்பது என்பதே எங்கள் தயக்கம் என்றுதான் நாங்கள் தீர்ப்புக் கூறவில்லை" என்று நியாயாதிபதிகள் அவளிடமே தயக்கத்தோடு கூறினார்கள். "வேண்டியவர்கள் வேண்டாதவர் என்றெல்லாம் பார்ப்பது நியாயத்திற்கு அழகில்லை. குற்றவாளிக்கு, அரசியாகிய நானே மரணதண்டனை விதிக்கிறேன்" என்று சிறிதும் கலங்காத குரலில் தீர்ப்பளித்தாள் ராணி மங்கம்மாள். அந்த நேர்மையைக் கண்ட அன்று நீதிபதிகள் வியந்தனர். அப்படி வியப்பைச் சம்பாதித்த தனது நேர்மைக்கா இன்று இப்படி ஓர் அபவாதம் என்றெண்ணும் போது அவள் கண்களில் நீர் சுரந்தது. இன்னொரு முறை அவள் பழனி மலையிலுள்ள முருகப் பெருமாளை வணங்குவதற்குச் சென்றிருந்தாள். அடிவாரத்திலிருந்து மலைக்குச் செல்லும்போது உரிய காவலர்கள், பரிவாரம் மெய்க்காப்பாளர்கள் எல்லாரும் உடனிருந்தும்கூட ஒரு சிறிய அசம்பாவிதம் நேர்ந்துவிட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|