http://www.chennailibrary.com





27. விஜயரங்கன் தப்பி விட்டான்

     ராணி மங்கம்மாளின் மனம் நிம்மதியிழந்து தவித்தது. பேரன் விஜயரங்க சொக்கநாதன் பேசிவிட்டுச் சென்ற சொற்களை அவளால் மறக்கவே முடியவில்லை.

     பேரன் வலுவில் வந்து தன்னிடம் ஏறுமாறாகப் பேசி இப்படியெல்லாம் வற்புறுத்தியிராவிட்டால், அவளே ஒருவேளை அவனைக் கூப்பிட்டுச் சில நாட்களில் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்றுகூட எண்ணியிருக்கலாம். ஆனால் அவனே வற்புறுத்தி நிர்ப்பந்தப்படுத்தியதால் அவளது சந்தேகம் அதிகமாயிற்று. அதில் ஏதோ பிறர் தூண்டுதல் அல்லது சதியிருக்க வேண்டும் என்று அவள் சந்தேகப்பட்டாள்; கலங்கினாள்.

     அரச பதவியை அடைய அவன் பறந்ததும் அவசரப்பட்டதும் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது. இவ்வளவு நாட்களாகத் தான் கட்டிக் காத்த பொறுப்புகளை அவன் சீரழித்து விடுவானோ என்று அஞ்சினாள் அவள்.

     'அநுபவமோ, பக்குவமோ இல்லாமல் அவன் வயதுக்கு மீறி ஆசைப்படுகிறான்' என்பது அவளுக்குப் புரிந்தது. அதைப்பற்றிக் கலந்து ஆலோசிக்க வேண்டுமென்று கருதி உடனே தளவாய் அச்சையாவைக் கூப்பிட்டனுப்பினாள் அவள்.

     அச்சையா வந்தார். எல்லா விவரங்களையும் ராணி மங்கம்மாள் அவரிடம் கூறினாள். அவர் மிகவும் சிந்தனை வயப்பட்டவராகச் சிறிதுநேரம் மௌனமாய் ஏதும் கூறாமல் இருந்தார். இந்த அதிர்ச்சி நிறைந்த செய்தியை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று தோன்றியது. பின்பு நிதானமாகக் கூறினார்:

     "இப்படி ஒன்று நடந்தது என்பதை யாரிடமும் கூற வேண்டாம்! இது மிகவும் இரகசியமாக இருக்கட்டும். 'ராணி மங்கம்மாளுக்கும் அவள் பேரனுக்கும் ஆகவில்லை, விரோதம் மூண்டுவிட்டது' என்ற செய்தி அவ்வளவு நல்ல விளைவுகளைத் தராது. உங்கள் எதிரிகளை மனம் மகிழச் செய்யும். அதனால் இப்படி ஒன்று நடந்தது என்பதையே மறந்து விட்டுப் பேசாமல் இருப்பதுதான் உத்தமம்."

     "'எரியும் நெருப்பைப் பஞ்சால் மூடிவிட்டு அப்புறம் பேசாமல் இரு' என்பது போலிருக்கிறது நீங்கள் சொல்வது."

     "விஜயன், தானே ஓய்ந்து போய் விடுவான் என்று எனக்குத் தோன்றிகிறது."

     "எனக்கு அப்படித் தோன்றவில்லை! இந்தக் கலகம் தொடர்ந்து நடக்கும் என்றே படுகிறது."

     "சிறுபிள்ளைகளுக்கு அவ்வப்போது ஏதேனும் புதிய விளையாட்டு விளையாடிப் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கும். இரண்டு நாள் ஒன்றும் பேசாமல் இருந்தால் பின்பு மூன்றாவது நாள் அவர்களுக்கே அது மறந்து போய் விடும்."

     "அவன் வந்து நின்ற விதம், மிகவும் ஆத்திரப்பட்ட தோரணை, பேசிய சீற்றம், எல்லாவற்றையும் சேர்த்து நினைத்துப் பார்த்தால் அப்படி இது அவனுக்கு மறந்து போய்விடும் என்று தோன்றவில்லை.

     "இருக்கட்டுமே! இளங்கன்று. அதனால் தான் பயமறியாமல் துள்ளுகிறது. கொஞ்சம் ஆறப்போட்டால் தானே மறந்து விடும்."

     தளவாய் அச்சையா கூறியபடி விஜயரங்க சொக்கநாதன் எதையும் மறப்பான் என்று ராணி மங்கம்மாளுக்குத் தோன்றவில்லை.

     இங்கே அரண்மனையில் மற்றவர்களிடமும் மற்றும் வெளியே பிறர் பலரிடமும் விஜயரங்கன் கண்டபடி பேசி வருவதாகத் தெரிந்தது. ராணி மங்கம்மாள் பதவி வெறி பிடித்தவள் என்றும் அவளுக்கும் அச்சையாவுக்கும் கள்ளக்காதல் நிலவுகிறது என்றும் செய்திகளைப் பரப்பினான் விஜயரங்கன். சொந்தப் பாட்டி என்று கூட நினையாமல் அவளை எதிர்த்து ஏறக்குறையப் போர்கொடியே உயர்த்தியிருந்தான் அவன். வதந்திகளாலும் குழப்பமான செய்திகளாலும் அரண்மனை நாறியது; குழம்பியது; கலங்கியது.

     இவற்றையெல்லாம் கேள்விப்பட்டவர்களே இரண்டு விதமாகப் பேசினார்கள். 'சொந்தப் பாட்டி என்றுகூடப் பாராமல் விஜயரங்கன் விசுவாசத் துரோகம் செய்கிறான்' என்று அவனைத் தூற்றினார்கள் சிலர்.

     'நெருப்பில்லாமல் புகையுமா? இவளும் அச்சையாவுமாகச் சேர்ந்துகொண்டு தாங்கள் உல்லாசமாக இருப்பதற்காகப் பேரப் பிள்ளையாண்டானை முடிசூடி அரசாளவிடாமல் தொல்லை கொடுக்கிறார்கள் போலிருக்கிறது' என்றும் பேசினார்கள் சிலர். இப்படி வம்புகளும் வதந்திகளும் பொறுமையைச் சோதிக்கிற அளவு வளர்ந்தன. அதை நீடிக்கவிடக்கூடாது என ராணி மங்கம்மாள் நினைத்தாள். விஜயரங்கனைக் கூப்பிட்டு மறுபடியும் கண்டிப்பாகப் பேசிவிட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm27.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.