28. மங்கம்மாள் சிறைப்பட்டாள் விஜயரங்கனை அரண்மனையிலிருந்து தப்பவிட்டுவிட்ட காவலாளிகளைச் சீறினாள் ராணி மங்கம்மாள். அவர்கள் களைத்துப் போய் உறங்கி விட்ட பிறகு இரவின் பின் யாமத்தில் தான் அவன் சுலபமாக நூலேணி மூலம் வெளியேறித் தப்பியிருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றியது. தப்பிச் சென்றுவிட்ட பேரனைப் பற்றிக் கவலையாகவும் இருந்தது கோபமாகவும் இருந்தது. தன் வயதுக்கு மீறிய காரியங்களில் அவன் ஈடுபடுவதாக அவள் எண்ணினாள். இந்த வயதில் இத்தனை தீவிரம் அவனுக்கு எப்படி உண்டாகியிருக்க முடியுமென்று அவளால் கற்பனை செய்யக்கூட முடியாமல் இருந்தது. அவனை நல்வழிக்குக் கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கை இப்போது அவளுக்கு அறவே இல்லை. அரண்மனை வீரர்களை அழைத்து "எங்கே தப்பிச் சென்றிருந்தாலும் விஜயனைத் தேடிப் பிடித்து வாருங்கள்! அவன் உடலுக்கோ உயிருக்கோ சேதமும் ஆபத்தும் இன்றி அழைத்து வாருங்கள்! மற்றவற்றை அப்புறம் நான் பார்த்துக் கொள்கிறேன்" - என்று மங்கம்மாள் கட்டளையிட்டாள். தப்பிச் சென்றுவிட்ட விஜயரங்கனோ யாரும் அறிய முடியாத ஒதுக்குப்புறமான மறைவிடம் ஒன்றில் போய்த் தங்கிக் கொண்டு தன் நண்பர்களையும் தன்னோடு ஒத்துழைத்த கலகக்காரர்களையும் சந்தித்துப் பேசினான். ராணி மங்கம்மாளின் ஆட்சியை எப்படி ஒழிப்பது என்று திட்டமிடலானான். பாட்டியைத் தன் விரோதி என்றே தீர்மானித்திருந்தான் அவன். தன்னைப் பற்றி பாட்டிக்கு நல்லெண்ணம் எதுவும் இருக்க முடியாது என்றே அவன் முடிவு செய்து விட்டான். அவனும் அவனுக்கு வேண்டியவர்களும் சதியாலோசனைகளைத் தொடர்ந்தார்கள். ராணி மங்கம்மாள் விஜயனைத் தேடி அனுப்பிய காவலர்களால் அவன் ஒளிந்திருந்த மறைவான இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பேரன் செய்வது விளையாட்டுப் பிடிவாதம் இல்லை. வினைதான் என்பது அவள் மனத்தில் இப்போது மீண்டும் உறுதிப்பட்டது. நாள் நீடிக்க நீடிக்க அவள் கவலை அதிகமாகியது. மேற்கொண்டு என்ன நடக்கும் என்பதை அவளாலேயே அநுமானிக்க முடியாமல் இருந்தது. அதே சமயம் மறைந்து சதியாலோசனைகளில் ஈடுபட்டிருந்த விஜயரங்கனின் நிலைமையோ நாளுக்கு உறுதிப்பட்டு வந்தது. தன் ஆட்கள் சிலர் மூலமாக அரண்மனைப் படைத்தலைவர்கள் சிலரையும் பாதுகாப்புப் பொறுப்புகளில் இருந்த சிலரையும்கூடத் தனக்கு உதவுகிறபடி வளைத்திருந்தான் அவன். "எப்படியும் பாட்டிக்குப் பின் நான் தான் ஆளப்போகிறேன்! இப்போது உங்களில் யார் யார் என்னை எதிர்க்கிறீர்களோ அவர்களை நான் அரசனாகியதும் ஒழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்பதை இப்படி இன்று நான் சொல்லித்தானா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? ஜாக்கிரதை! ஒழுங்காக இப்போதே என்னோடு ஒத்துழைத்து விடுங்கள்! இல்லாவிட்டால் பின்னால் சிரமப்படுவீர்கள்!" படைத் தலைவர்கள் பலரிடம் இப்பேச்சு நன்றாக வேலை செய்தது. பலர் அப்போதே விஜயரங்கனோடு ஒத்துழைக்க முன் வந்துவிட்டார்கள். அநேகமாக அரண்மனைப் பாதுகாப்பு ஏற்பாடு முழுவதுமே மெல்ல மெல்ல இரகசியமாக விஜயரங்கனின் பிடியில் வந்துவிட்டது. எல்லாமே தனக்குச் சாதகமாக இருந்தும் விஜயரங்கன் சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ராணி மங்கம்மாளுக்கும் தளவாய் அச்சையாவுக்கும் தெரியாமலே இரகசியமாக அரண்மனையும் படைத்தலைவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விஜயரங்கனின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டிருந்தன. மேற்பார்வையில் மட்டும் நாடு ராணி மங்கம்மாளே எல்லாவற்றையும் ஆண்டு வருவது போலிருந்தது. உள்ளேயே சூழ்ச்சிகளும் சதிகளும் நிறைவேறி இருந்தன. முடிவில் ஒரு நாள் தான் மறைந்து தங்கியிருந்த இடத்திலேயே தன் சதிக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் படைத் தலைவர்கள் கூடிய கூட்டத்தில் அவர்கள் முன்னிலையில் நாயக்க சாம்ராஜ்யத்தின் அரசனாக விஜயரங்கன் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டான். சதிக்கு ஒத்துழைத்த படைத்தலைவர்களையும் நண்பர்களையும் நம்ப வைப்பதற்கு இந்த மகுடாபிஷேக நாடகத்தை அவன் ஆடியே தீர வேண்டியிருந்தது. இரவில் பரம இரகசியமாக இது நடந்தது. விஜயரங்கன் காணாமல் போய்த் தலைமறைவாகிச் சில நாட்கள் கழித்து ராணி மங்கம்மாள் அந்தப்புரத்தில் தன் படுக்கை அறையில் அயர்ந்து உறங்கிவிட்ட ஓர் அதிகாலையில் ஏதோ கூப்பாடுகளும் முழக்கங்களும் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள். "மாமன்னர் விஜயரங்க சொக்கநாதர் வாழ்க! மதுரைச் சீமையின் மகராசர் விஜயரங்கர் வாழ்க!" - என்ற வாழ்த்தொலிகளால் அரண்மனை கலகலத்துக் கொண்டிருந்தது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|