http://www.chennailibrary.com





4. இராயசம் அச்சையாவும் ரகுநாத சேதுபதியும்

     டில்லி பாதுஷாவின் பிரதிநிதி ஆத்திரம் அடைந்ததைக் கண்டு ரங்ககிருஷ்ணமுத்து வீரப்பன் அவனை நோக்கிப் புன்னகை பூத்தான்.

     "நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! இதன் விளைவுகள் கடுமையாயிருக்கும் என்பதைச் சிந்திக்காமல் செயல்படுகிறீர்கள் என்பதை மீண்டும் வற்புறுத்த விரும்புகிறேன்" என்றான் பாதுஷாவின் பிரதிநிதி.

     "தங்கள் பேரரசுடன் முன்பு நாங்கள் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கப்பம் கட்டுவதாக மட்டும் ஒப்புக் கொண்டது உண்மை. செருப்பை வணங்குவது அந்தப் பழைய உடன்படிக்கையில் அடங்காத ஒன்று. உடன்படிக்கைப்படி பார்த்தால் வரம்பை மீறுவது தங்கள் அரசரேயன்றி நாங்கள் இல்லை."

     "வலிமை உள்ளவர்களுக்கு வலிமையற்றவர்கள் அடங்கித்தான் ஆகவேண்டும்."

     "அடக்கம் வேறு; அடிமைத்தனம் வேறு."

     "இதற்குப் பாடம் கற்பிக்காமல் விடப்போவதில்லை."

     "முடிந்தால் செய்யுங்கள்."

     இவ்வளவில் பாதுஷாவின் பிரதிநிதியும் உடன் வந்திருந்தவர்களும் வெளியேறி விட்டார்கள். படைகளையெல்லாம் மதுரையிலிருந்து அவசரப்பட்டு வடக்கே திருப்பியனுப்பி விட்டது எத்தனை பெரிய தவறு என்ற ஏக்கத்துடனே வேறு வழியில்லாத காரணத்தால் ஒன்றும் செய்யமுடியாமல் டில்லி திரும்பினான் ஔரங்கசீப்பின் பிரதிநிதி. போகிற போக்கில் திரிசிரபுரம் கோட்டையும் அதன் சுற்றுப்புறங்களும் படை வீரர்களால் நிரப்பப்பட்டு ஆயத்தமாயிருப்பதையும் அவன் கண்டுகொண்டான். கையாலாகாத்தனமும் ஆத்திரமும் அவன் உள்ளத்தை வெதுப்பின. அந்த ஆத்திரக் குமுறலில், முத்து வீரப்பனின் கோட்டைப் படை வீரர்களுடன் பாதுஷாவின் ஆட்கள் போர் செய்ய முயன்று தோற்றுப் போனார்கள். சிலர் அதில் உயிரிழக்கவும் நேரிட்டது.

     'கணவனை இழந்து கைம்பெண்ணான ஒரு ராணி உங்களை அவமானப்படுத்திவிட்டாள்' என்பதாகப் பாதுஷாவிடம் போய் அவருக்குச் சினமூட்டுகிற விதத்தில் சொல்லலாம் என்றால் மங்கம்மாள் தான் இதில் சம்பந்தப்படாமல் எல்லாவற்றையுமே சாதுரியமாகச் செய்திருந்தாள். அவளுடைய அந்தச் சாதுரியத்தை நினைக்கும்போது அவன் குமுறல் இரண்டு மடங்காயிற்று. நேரடியாக அவமானப்பட்டது முத்து வீரப்பனிடம் என்றாலும் தங்களை அவமானப்படுத்திய மதிநுட்பம் ஒரு பெண் பிள்ளையினுடையது என்ற உறுத்தல் உள்ளே இருந்தது அவனுக்கு.

     டில்லி பாதுஷாவின் ஆட்கள் திரும்பிப்போன பின்புதான் கைப்பிடித்த மனைவி சின்ன முத்தம்மாளுடன் இரண்டு வார்த்தை சிரித்துப் பேசவும், சரசமாடவும் நேரம் கிடைத்தது முத்துவீரப்பனுக்கு. அடுத்து சில நாள்கள் மண வாழ்வின் இனிய மயக்கத்தில் கழிந்தன. காவிரியில் புதுவெள்ளம் வந்தது. அவர்கள் மனத்தைப் போலவே காவிரியும் நிரம்பி வழிந்தது. கோடையின் சுகத்தைக் காவிரிக்கரையின் இதமான மாந்தோப்புகளில் செலவிட்டார்கள் அந்த இளம் காதலர்கள். ஆடிப்பாடி மகிழவும் படகு செலுத்திக் களிக்கவும் நேரம் போதாமலிருந்தது அவர்களுக்கு.

     ஒரு மண்டலத்திற்குப் (40 நாள்) பின் விடிந்த ஒரு வைகறையில் ராணி மங்கம்மாளும் இராயசம் அச்சையாவும் (அரண்மனைக் காரியஸ்தர்) அவசரம் அவசரமாக முத்து வீரப்பனை அழைத்து வரச் சொல்லி அந்தப்புரத்திற்கு ஆளனுப்பினார்கள். விடியலின் கனவும் நனவும் கலந்த இனிய உறக்கத்திலிருந்து அவன் எழுந்திருந்து விரைவாக அவர்கள் இருவரையும் அரண்மனை மந்திராலோசனை மண்டபத்தில் வந்து சந்திக்க வேண்டுமென்று ராணி மங்கம்மாளிடமிருந்து வந்த ஆள் கூறிவிட்டுப் போயிருந்தான். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சின்ன முத்தம்மாளை எழுப்பாமலே தாயையும் இராயசத்தையும் சந்திக்கச் சென்றான் அவன். இன்னும் இருள் பிரியவில்லை. காற்று சில்லென்றிருந்தது.



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm4.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.