5. பக்கத்து வீட்டுப் பகைமை கட்டுமஸ்தான உடலமைப்பும் அந்த வலிமையை மிகைப்படுத்தி எடுத்துக் காட்டும் கரிய நிறமும் கொண்ட மறவர்சீமை வீரன் ஒருவன் கையில் ஓலையோடு நுழைவாயிலருகே தென்பட்டான். மின்னலைப் போல் சரேலேன்று உள்ளே நுழைந்த அவன், "மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதியின் தூதன் நான். இது அவர் அனுப்பிய ஓலை" என்று இராயசம் அச்சையாவிடம் நீட்டிவிட்டு, மூன்று பேருமே எதிர்பாராத வகையில் பதிலை எதிர்பாராமலே விருட்டென்றுத் திரும்பிச் செல்லத் தொடங்கினான். சம்பிராதாயத்துக்குப் புறம்பாகவும், பண்பாடின்றியும் இருந்தது அவனது செயல். உடனே அதைக் கண்டு ஆத்திரமடைந்த ரங்ககிருஷ்ணன் பின் தொடர்ந்து அவனைப் பாய்ந்து கைப்பற்ற முயன்றபோது சைகையால் இராயசம் அவனைத் தடுத்துவிட்டார். ஆத்திரத்தோடு ரங்ககிருஷ்ணன் கேட்டான்; "வழக்கமில்லாத புதுமையாக நமக்கு அடங்கிய சிற்றரசன் 'மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதி' என்றான். அனுப்பிய ஓலையைப் படிப்பதற்கு முன்பே திரும்பிப் போகிறான். இதெல்லாம் என்ன? இதைவிட அதிகமாக நம்மை வேறெப்படி அவமானபடுத்த முடியும்? இந்த முறைக்கேட்டையும், அவமானத்தையும் நாம் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?" "பொறுத்துக் கொள்ள வேண்டாம் தான்! எய்தவனிருக்க அம்பை நொந்து பயனென்ன ரங்ககிருஷ்ணா? சேதுபதியிடம் தொடுக்க வேண்டிய போரை அவனுடைய தூதனிடமே தொடுக்க வேண்டாம் என்று தான் உன்னைத் தடுத்தேன்" என்று ரங்ககிருஷ்ணனுக்கு மறுமொழி கூறிவிட்டு இரகுநாத சேதுபதியின் ஓலையைப் படிக்கத் தொடங்கினார் அச்சையா. முதலில் மெல்லத் தமக்குள் படிக்கத் தொடங்கியவர், பின்பு, இரைந்தே வாய் விட்டுப் படிக்கத் தொடங்கினார். "இன்று இவ்வோலை எழுதும் போது தொடங்கி மறவர் நாடு இனி யார் தலைமைக்கும் கீழ்ப்பணிந்து சிற்றரசாக இராது என்பதை இதன் மூலம் மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதி, சம்பந்தப்பட்ட சகலருக்கும் பிரகடனம் செய்து கொள்கிறார்." "குமாரப்ப பிள்ளையும் அவர் குடும்பத்தையும் கொன்றது போதாதென்று சுயாதீனப் பிரகடனம் வேறா?" ராணி மங்கம்மாள் இவ்வாறு வினவியவுடன் "எவ்வளவு திமிர் இருந்தால் அதை நமக்கே ஓலையனுப்பித் தெரிவித்து விட்டு நம்முடைய மறுமொழியை எதிர்பாராமலே தூதுவனைத் திரும்பியும் வரச்சொல்லிப் பணித்திருக்க வேண்டும்? குமாரப்ப பிள்ளையை அவர்கள் கொன்றது நியாயமென்றால் இப்போது இங்கு வந்து சென்ற இந்தத் தூதுவனை நாம் மட்டும் ஏன் தப்பிப் போகவிட வேண்டும்?" என்று கொதிப்போடு கேட்டான் ரங்ககிருஷ்ணன். கிழவன் சேதுபதி என்னும் பட்டப்பெயரை உடைய ரகுநாத சேதுபதியிடமிருந்து வந்திருந்த ஓலையைப் படித்துச் சொல்லிவிட்டு மேலே எதுவும் கூறாமல் இருந்த அச்சையா இப்போது வாய் திறந்தார். "ஒரு தவற்றை இன்னொரு தவற்றால் நியாயப்படுத்தி விடமுடியாது ரங்ககிருஷ்ணா!" "பல தவறுகள் நடந்துவிட்ட பின்பும் இப்படிப் பொறுமையாக இருந்தால் எப்படி?" "எதிரிகளை அழிப்பதில் பல ராஜதந்திர முறைகள் உண்டு அப்பா! அதில் ஒன்று அவர்களை அதிகத் தவறுகள் செய்ய அனுமதிப்பது. கோழை பின்வாங்கித் தயங்குவதற்கும், வீரன் பின்வாங்கி நிதானிப்பதற்கும், நிறைய வித்தியாசங்கள் உண்டு. கோழை பயத்தினால் பின்வாங்குவான். வீரன் எதிரியை முன்பை விட அதிக வேகமாகப் பாய்ந்து தாக்குவதற்குப் பின்வாங்குவான். நமது நிதானம் இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்ததாக இருக்கட்டும்." "டில்லி பாதுஷாவின் ஆட்கள் பழைய செருப்புடன் ஊர்வலம் வந்த போது அம்மா சொல்லிய அதே அறிவுரையைத்தான் இப்போது நீங்களும் கூறுகிறீர்கள் ஐயா!" "சொல்லுகிற மனிதர்கள் வேறுபட்டாலும் அறிவும், அறிவுரையும் வேறுபடுவதில்லை! மறவர் நாட்டின் மேல் படையெடுத்தாக வேண்டுமென்ற நமது முந்திய முடிவுக்கும் இந்த அறிவுரைக்கும் தொடர்பு இல்லை. உனது முன் கோபத்தையும் ஆத்திரத்தையும் தணித்துச் செயலில் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்குத்தான் இந்த அறிவுரை." அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |