http://www.chennailibrary.com



6. கிழவன் சேதுபதியின் கீர்த்தி

     ரங்ககிருஷ்ணன் முற்றிலும் எதிர்பாராத பகுதியிலிருந்து சலனமும் தயக்கமும் ஏற்பட்டிருந்தன. திரிசிரபுரம் கோட்டையிலும், மதுரைக்கோட்டையிலும் இருந்த படைவீரர்களில் பெரும் பகுதியினர் மறவர் சீமையைச் சேர்ந்தவர்கள். வெகு தொலைவில் இருந்து வந்து ஒரு புதிய நிலப்பரப்பில் சாம்ராஜ்யத்தை நிறுவ நேர்கிற அனைவருக்கும் இது ஏற்படக்கூடியது தான் என்று தோன்றியது. அரசு என்கிற மாளிகையைத் தாங்கும் நான்கு இன்றியமையாத தூண்களில் ஒன்றாகிய படை உள்நாட்டு மக்களைக் கொண்டதாகத்தான் அமைய முடியும். அமைந்திருந்தது.

     ஒரு படையில் உட்பகை உண்டாகிவிட்டாலோ, உண்டாவது போலத் தோன்றினாலோ, அது எள்ளை இரண்டாகப் பிளந்தது போலச் சிறியதானாலும் கூடப் பெரிதும் ஆபத்தானது. அப்படி ஆபத்தின் அடையாளங்கள் இப்போது தெரியத் தொடங்கியிருந்தன. வெளிப்படையாக அது தனக்குத் தெரிந்ததை ரங்ககிருஷ்ணன் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனதில் அந்தச் சலனம் ஏற்பட்டுவிட்டது. இதைக் கருத்திற் கொண்டுதான் தாய் ராணி மங்கம்மாளும், இராயசம் அச்சையாவும் கிழவன் சேதுபதியைச் சிக்கலான எதிரி என்று வர்ணித்தார்களோ என்று கூட இப்போது அந்தத் தொடருக்குப் புது விளக்கமே தோன்றியது அவனுக்கு.

     தன்னுடைய உள்நாட்டு மக்களிடமும் தன் நாட்டிலும் முழுநம்பிக்கைக்குரியவராகக் கீர்த்தி பெற்றிருக்கும் ஒருவரை வெளியேயிருந்து படையெடுத்து வந்து செல்வது எத்தனை சிரமமான காரியமாயிருக்கும் என்பது மெல்ல மெல்லப் புரிந்தது. தீர்க்க தரிசனம் பிடிபடாத வரை அரசியல் பொறுப்புகள் சிரம சாத்தியமானவையாகவே இருக்குமென்று தோன்றியது. அரசியலுக்குத் தீர்க்க தரிசனம் மிகமிக முக்கியமென்றும் புரிந்தது.

     மறுநாள் அதிகாலையில் படைகள் பயணத்தைத் தொடர்ந்தன. திட்டமிட்டபடி எல்லாமே நடந்தன. ஆனால் பெரிய அதிசயம் என்னவென்றால் மறவர் சீமை எல்லைக்குள் நுழைந்ததும் அங்கே இவர்களை எதிர்த்து யாரும் சீறிப்பாயவில்லை. இலட்சியம் செய்யவுமில்லை. "புதிதாகப் பட்டமேற்றுள்ள சின்ன நாயக்கர் படை பரிவாரங்களோடு தரிசனத்துக்காகவும் தீர்த்தமாடிப் புண்ணியம் அடைவதற்காகவும் இராமேஸ்வரம் போகிறார் போலிருக்கிறது" என்பதுபோல் பேசிக் கொள்ளவும் செய்தார்கள். ரங்ககிருஷ்ணன் மனதை இது மிகவும் உறுத்திற்று.

     தங்கள் சீமைக்குள் தங்களை யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்ற மிதப்பில் அவர்கள் இருப்பதாகப்பட்டது. ஆள்கட்டும் ஒற்றுமையும், அந்நியருக்கு விட்டுக் கொடுத்துத் தளர்ந்துவிடாத உறுதியும், எதற்காகவும் தங்களைச் சேர்ந்தவரை அந்நியரிடமோ, வெளியாரிடமோ காட்டிக் கொடுத்துவிடாத இயல்பும், மறவர் சீமையின் தனித்தன்மைகள் என்பதை ரங்ககிருஷ்ணன் அறிந்திருந்தான். எவ்வளவு பெரிய எதிர்ப்பையும் பகையையும் சமாளிக்கக்கூடிய நிலைமையை இந்த ஆள்கட்டும் ஒற்றுமையுமே அவர்களுக்கு அளித்திருந்தன என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது. ஒரு முறை இராமேஸ்வரத்தில் தரிசனம் செய்ய வந்திருந்த சேர அரசன் ஒருவன் திரும்பும் போது சேதுபதியைக் காண இராமநாதபுரம் வந்து ஏழுநாள் காத்திருக்க வேண்டியதாயிற்று. பேரரசனாகிய சேரனே சிற்றரசனாகிய சேதுபதியைச் சந்திக்க ஏழுநாள் காத்திருக்க நேர்ந்தது. இராமேஸ்வர தரிசனத்தின் பயன் சேதுபதியையும் கண்டு முடித்தாலொழியப் பூர்த்தியாகாது என்ற ஐதீகத்தால் சேரன் பொறுமையாக ஏழுநாள் தங்கிக் காத்திருந்து, சேதுபதியையும் பார்த்துவிட்டுத் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றான் என்பதைத் தனது தாய் சொல்லிக் கேள்விபட்டிருந்தான் ரங்ககிருஷ்ணன்.

     சிவகங்கையைக் கடந்து மானாமதுரை ஊர் எல்லைக்குள் புகுந்த பின்னும் ரங்ககிருஷ்ணனையோ, அவனது படைகளையோ, யாரும் பொருட்படுத்தவில்லை. 'ஊர் எல்லையிலோ, எதிர்பார்த்த இடங்களிலோ சேதுபதியின் படை வீரர்கள் எதிர்ப்பதற்குத் திரண்டு நிற்கவில்லை. எங்கும் வாழ்க்கை எப்போதும் போல் சகஜமாயிருந்த்து.

     எதிரியின் பகைமை அல்லது கோபத்தைக் கூடப் பொறுத்துக் கொண்டு விடலாம். ஆனால் அலட்சியத்தையோ அவமதிப்பையோ பொறுத்துக் கொள்வதென்பது முடியாத காரியம். கிழவன் சேதுபதி குமாரப்ப பிள்ளையைக் குடும்பத்தோடு கொன்றதாகவும், மறவர் நாட்டைச் சுவாதீனப் பிரகடனம் செய்ததற்காகவும் தன்னைக் கண்டித்து யாரேனும் படையெடுத்து வரமுடியும் என்று எதிர்பார்த்து ஆயத்தமாயிருப்பதாகவே தெரியவில்லை. ஒரு படையெடுப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போர்க்கால ஆயத்தங்களோ அவசரங்களோ பரபரப்புகளோ எங்கும் இம்மியளவுகூடத் தென்படவில்லை என்பது ஏமாற்றமளித்ததோடு போகாமல் எரிச்சலும் ஊட்டியது.



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm6.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.