http://www.chennailibrary.com





8. பாதிரியார் வந்தார்

     இரகுநாத சேதுபதியின் அந்த வார்த்தை வித்தகம் ரங்ககிருஷ்ணனை மெல்லத் தளரச் செய்திருந்தது. பேச்சிலேயே எதிரியை வீழ்ச்சியடையச் செய்யும் அந்தக் கிழச் சிங்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினான் அவன். போரிலும் வெல்ல முடியாமல், பேச்சிலும் வெல்ல முடியாமல் சேதுபதியிடம் சிக்கித் திகைத்துக் கொண்டிருந்தான் ரங்ககிருஷ்ணன். சிக்கல்கள் இப்போது மேலும் சிக்கலாயிருந்தன.

     ஆத்திரத்தோடு படையெடுத்து வந்த தன்னை விருந்தினனாக்கி இராமேஸ்வரத்துக்குத் தீர்த்த யாத்திரை வந்தவன் போல மாற்றிக் காட்டி நாடகமாடிய அந்தச் சாமர்த்தியம் அவனை மருட்டியது. திகைத்து மிரளச் செய்தது.

     மறுநாள் வைகறையில் ரங்ககிருஷ்ணனின் ராமேஸ்வர யாத்திரைக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கியிருந்தார் சேதுபதி. அவனாலேயே அதைத் தடுக்க முடியவில்லை; ராமேஸ்வர தரிசனத்தைப் புறக்கணிக்கவும் முடியவில்லை.

     சேதுபதியின் விருந்துபசாரம் முடிந்ததும் உடன் வந்திருந்த படைத்தலைவர்களும் ரங்ககிருஷ்ணனும் மறுபடி சந்தித்துக் கொள்ள முடிந்தது. இரவில் அவர்கள் தங்கிய விருந்தினர் மாளிகையில் ஓரளவு தனிமையில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது.

     அதுவரை தன் மனத்தில் ஆவலோடு அடக்கிக் கொண்டிருந்த ஒரு சந்தேகத்தை அப்போது தான் ரங்ககிருஷ்ணன் தன்னுடன் வந்திருந்த படைத்தலைவர்களில் ஒருவனிடம் கேட்டான்.

     "என்னைப் புகழ்ந்து சேதுபதியின் சபையில் பாடப்பட்ட அந்தப் பாட்டில் ஏதோ மோசம் இருப்பதாகச் சொன்னாயே அது என்ன?"

     "சொல்கிறேன் அரசே! மேலோட்டமாகப் பார்த்தால் அப்படி எதுவும் மோசம் இருப்பது போல் தெரியாது. ஆனால் தமிழ் யாப்பு இலக்கண மரபு தெரிந்தவர்களால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்."

     "எங்கே? எனக்குப் புரியும்படியாக அதை விளக்கிச் சொல். பார்க்கலாம்!"

     "வெண்பாவில் 'வகையுளி' என்று ஒன்று உண்டு! நல்லெண்ணத்தோடு வாழ்த்திப் பாடுகிற பாடல்களில் அந்த வாழ்த்துக்கு உரியவரின் பெயரில் வகையுளி செய்து இரண்டு பிரிவாகப் பெயரைப் பிளக்கக்கூடாது."

     "பெயரைப் பிளந்தால்?"

     "அப்படிப் பிளப்பது மிகவும் அமங்கலமானது. மரபும் ஆகாது!... முத்து வீரப்பர் என்ற தங்கள் பெயரைப் பிளந்து வகையுளி செய்து வாழ்த்தியிருக்கிறார்கள்."

     "புரிகிறது சந்தேகப்பட வேண்டிய காரியந்தான்" என்றான் ரங்ககிருஷ்ணன். மேலும் சில நாட்கள் இராமநாதபுரத்தில் சேதுபதியின் விருந்தினராகத் தங்கிய பின்னர் இராமேசுவர யாத்திரையையும் நிறைவு செய்து விட்டு முறைப்படித் திரும்பும் காலையில் மீண்டும் இராமநாதபுரம் வந்தபோது திரிசிரபுரத்திலிருந்து தூதன் வந்து காத்திருந்தான். வந்த தூதனிடம் இருந்து ரங்ககிருஷ்ணனுக்குப் பல விவரங்கள் தெரிந்தன.

     தான் படைகளோடு புகுந்தபோது மறவர் சீமையிலிருந்த சூழ்நிலையை விவரித்துத் தாய்க்கு ரங்ககிருஷ்ணன் ஏற்கெனவே அனுப்பியிருந்த தகவல்களுக்கு அவளிடமிருந்து மறுமொழி இப்போது கிடைத்திருந்தது. "நிலைமையை மேலும் சிக்கலாக்க முயல வேண்டாம். போரிட ஏற்ற நிலைமையில்லாவிட்டால் பேசாமல் திரும்பி விடவும்" என்று மறுமொழி வந்திருந்தது. ரங்ககிருஷ்ணன் உள்ளடக்கிய ஆத்திரத்தோடும் படைகளோடும் வந்த வழியே திரும்ப நேர்ந்தது. வெற்றியா தோல்வியா என்று புரியாமலே போர் முடிந்திருந்தது.

     முதலில் திரிசிரபுரத்திலிருந்து புறப்படும் போதிருந்த உற்சாகம் திரும்பும் போதில்லை. பட்டமேற்று முடிசூடிக் கொண்டதும் தொடங்கிய கன்னிப்போரே இப்படிக் காரிய சித்தி அடையாததாகி விட்டதே என்று மனம் கலங்கியது. ரங்ககிருஷ்ணனின் இரண்டு குற்றச்சாட்டுகளையுமே சேதுபதி ஏற்கவில்லை... மறுக்கவுமில்லை. இலட்சியமும் செய்யவில்லை. அலட்சியமும் செய்யவில்லை.

     குமாரப்ப பிள்ளையின் கொலையைப் பற்றி மிக எளிதாகத் தட்டிக் கழித்துப் பதில் சொல்லிவிட்டார் அவர். முதலில் ஜாடைமாடையாக பதில்கள் இருந்தாலும், பின்னால் தொடர்ந்து தங்கியிருந்த சில நாட்களிலும் அப்பேச்சு நிகழ்ந்த போது நேரடியாகவே ரங்ககிருஷ்ணனும் கேட்டான். நேரடியாகவே சேதுபதியும் பதில் சொல்லியிருந்தார். பதிலில் பணிவோ பயமோ இருக்கவில்லை.



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm8.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.