10 அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தபடியே முத்துக்குமரன் கூறலானான்: "என்ன காரணமோ தெரியவில்லை, ஒரு பெரிய சக்கரவர்த்திக்கு நடுங்குகிற மாதிரி நீங்களெல்லாம் கோபாலுக்கு நடுங்குகிறீர்கள் -" "சமூகத்தின் மேற்படிகளில் பணம் படைத்தவர்களும் புகழ் படைத்தவர்களும் தான் சக்கரவர்த்திகளாக இன்னும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது!" "எந்தச் சக்கரவர்த்திகளுக்கும் எங்கேயும் நடுங்கிப் பழக்கமில்லை எனக்கு. ஏனென்றால் நானே என்னை ஒரு சக்கரவர்த்தியாக நினைத்துக் கொண்டிருப்பவன்." "அதனால்தானோ என்னவோ இப்போதெல்லாம் நான் உங்களை நினைத்தும் நடுங்க வேண்டியிருக்கிறது." "கோபாலைக் கண்டு நடுங்கும் நடுக்கத்திற்கும் இந்த நடுக்கதிற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டானால்தான் நான் பெருமைப்படலாம்..." -இப்படிக் கூறியவுடன் அவள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள், புன்னகை பூத்தாள். "நீங்கள் ரொம்பப் பொல்லாதவர்..." "ஆனாலும் என்னைவிட பொல்லாதவர்களுக்குத்தான் நீ பயப்படுவாய் என்று தெரிகிறது." "அன்புக்குப் கட்டுப்பட்டுப் பயப்படுவதற்கும் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு பயப்படுவதற்கும் வித்தியாசமிருக்கிறது." அவள் பேச்சு உண்மைப் பிரியத்துடனும் மனப்பூர்வமாகவும் ஒலிப்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. மறுநாள் காலையிலிருந்து ஒத்திகைகள் வேகமாகவும் தீவிரமாகவும் நடைபெறத் தொடங்கின. மந்திரி கொடுத்திருந்த தேதியில் அவருடைய தலைமையிலேயே நாடகத்தை அரங்கேற்றிவிட வேண்டும் என்பதில் கோபால் அதிக அக்கறை காட்டினான். குறிப்பிட்டிருந்த நாட்களுக்கு முன்பாகவே ஒத்திகைகளை முடித்து நாடகத்தைத் தயாராக்கிவிட ஏற்பாடுகள் நடந்தன. பாடல்களை எல்லாம் பின்னணிப் பாடகர் - பாடகிகளைக் கொண்டு ப்ரீ ரிக்கார்ட் செய்து விட்டான் கோபால். சினிமாத்துறையிலிருந்த மியூஸிக் டைரக்டர் ஒருவர் தான் பாடல்களுக்கு இசையமைத்துக் கவர்ச்சியான ட்யூன்கள் போட்டிருந்தார். நாடகம் - மொத்தம் எவ்வளவு நேரம் வரும் என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ளுவதற்கும்; ஒரு ஃபைனல் ஸ்டேஜ் ரிஹர்சலுக்கும் பக்கா அரங்கத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரஸ் ப்ரிவ்யூவையும் அன்றே வைத்துக் கொள்ளலாமென்று கோபால் முடிவு செய்திருந்தான். நாடக அரங்கேற்றத்தன்றும், அதைத் தொடர்ந்து பல காட்சிகளுக்கும் - ஹவுஸ்ஃபுல் ஆவதற்கேற்றபடி அத்தனை சிறப்பாக எல்லோரும் பத்திரிக்கைகளில் புகழ்ந்து எழுதி விடுவதற்கான சூழ்நிலையையும் கோபாலே உருவாக்கி இருந்தான். அதோடு இந்த நாடகத்தை அரங்கேற்றுவதில் வேறு ஒரு திட்டமும் கோபாலின் மனத்தில் இருந்தது. மலாயாவிலுள்ள பினாங்கிலிருந்து அப்துல்லா என்கிற பணக்கார இரசிகர் ஒருவர் சென்னைக்கு வந்திருந்தார். மலாயாவிலிருக்கும் பிரபல வியாபாரிகளில் ஒருவரான அப்துல்லா இந்திய நாடகக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை - மலாயாவில் ‘காண்ட்ராக்ட்’ எடுத்து ஊர் ஊராக ஏற்பாடு செய்யும் பொறுப்பை நடத்துவதில் சாமர்த்தியசாலி. கோபால் நாடக மன்றத்தின் முதல் நாடகமான ‘கழைக்கூத்தியின் காதலை’ மந்திரி தலைமை வகித்து அரங்கேற்றும் முதல் தினமே பினாங்கு அப்துல்லாவும் அதைப் பார்ப்பதாக இருந்தது. பார்த்தபின் கோபாலையும், நாடகக் குழுவினரையும் மலாயா, சிங்கப்பூரில் - நாடகங்கள் நடத்த ஒரு மாதச் சுற்றுப்பயணத்திற்கு ‘காண்ட்ராக்ட்’ பேசி அப்துல்லா அழைப்பாரென்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அப்துல்லா உடனே ஆர்வத்தோடு விரும்பி முன் வந்து - ‘கழைக்கூத்தியின் காதலை’ - ஒரு மாத காலம் மலாயாவில் நடத்துவதற்கு உடன்பட வேண்டுமென்று கோபாலைக் கேட்கத் தூண்டுகிற அளவிற்கு முதல் நாள் நாடகமே அமைய வேண்டுமென்று விரும்பினார்கள் குழுவினர். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|