12 ஒரு பெண்ணின் நளினம் என்பதே தன் அன்பை அவள் அழகாகவும், சாதுரியமாகவும் வெளியிடுவதில்தான் இருக்கிறதோ என்று தோன்றியது முத்துக்குமரனுக்கு. அவள் கூறிய அந்த வாக்கியம் அவனை முற்றிலும் நெகிழச் செய்துவிட்டது. 'எங்கூட நீங்க வராம வேறே யார் வருவாங்க?' - இந்த வாக்கியத்தில் இழைந்து ஒலித்த ஏக்கமும், தாபமும் அவன் உள்ளத்தை உருக்கின. அவள் தன்னோடு என்றும் துணையாகக் கூடவருவதற்கு அவனைத் தவிர வேறெவருமே இல்லையென்று நம்பிக்கையோடு நினைப்பதை அந்தக் குரலில் தெரிந்து கொள்ள முடிந்தது. அவளிடம் அவ்வளவு உரிமையோடு கோபப்படுவதற்கும் தாபப்படுவதற்கும் தான் யார் என்றும் எவ்வளவு காலமாகத் தான் அவளோடு பழகுகிறவன் என்றும் நினைத்துப் பார்த்த போது அது அவனுக்கு வேடிக்கையாகவே இருந்தது. அவளுடைய உரிமைகளைக் கட்டுப்படுத்தவும், தளர்த்தவும் செய்கிற அளவிற்குத் தான் அவள்மேல் அத்தனை பிடிப்பையும், பற்றையும் எப்போது கொண்டோம், எப்படிக் கொண்டோம் என்றெல்லாம் எண்ணியபோது, அந்த மாறுதல் அவனையே அயரச்செய்தது. பிரியத்தையும், ஆசையையும் விடமுடியாத அளவுக்கு அவள் தன் மனத்தில் இணைபிரியாத பொருளாகியிருப்பதை அவனே புதிதாக அப்போதுதான் புரிந்து கொள்வதுபோல் உணரத் தலைப்பட்டான். மாலையில் அப்துல்லாவை அழைத்துவரச் செல்வதற்கு முன்னால் முத்துக்குமரனை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்தாள் அவள். "நான் மலேயாவுக்கு வரலை. இப்ப படம் ஒண்ணும் எடுக்க வேண்டாம்" என்றான் முத்துக்குமரன். "நீங்க வரலையின்னா நானும் போகப் போறதில்லே" என்றாள் அவள். அவள் சொல்லியதை அவன் சிரித்துக்கொண்டே மறுத்தான்: "நீ நாடகத்துக்குக் கதாநாயகி, நீ போகாட்டி நாடகமே நடக்காது. அதனாலே நீ போய்த்தான் ஆகணும்." "கதாநாயகரே வராட்டாக் கதாநாயகி போய் என்ன பிரயோசனம்?" "கோபால்தான் வர்ரானே." "நான் கோபாலைப் பத்திப் பேசலை, இப்ப என்னோட கதாநாயகரைப் பத்திப் பேசறேன். "அது யாரு?" "தெரிஞ்சு உணர்ந்து வேணும்னே கேட்கறீங்க இதை, அப்பிடித்தானே?" அவள் தன்னையே ஆத்மார்ததமான கதாநாயகனாக வரித்துப் பேசும் அந்தப் பேச்சைக் கேட்டு உள்ளம் பூரித்துப் பேசத் தோன்றாமல் மௌனமாயிருந்தான் அவன். அதன்பின் சிறிது நேரத்தில் அவள் கூப்பிட்டதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் அவளோடு போட்டோ ஸ்டூடியோவிற்குச் சென்றான் அவன். போட்டோ ஸ்டூடியோவில் பாஸ்போர்ட்டுக்காக படம் எடுத்து முடிந்ததும், அவள் விரும்பியபடியே அவளும் அவனும் சேர்ந்து ஒரு படம் எடுத்துக் கொண்டார்கள். மாலையில் அப்துல்லாவை அழைத்துவர ஓஷியானிக் ஹோட்டலுக்குப் புறப்பட்டபோது அவன் மனநிலையை அறிந்து அவள் - தனியே செல்லவில்லை. காரில் அவனையும் உடனழைத்துக் கொண்டே புறப்பட்டாள். அவனும் அவளும் புறப்பட்ட கார் பங்களா காம்பவுண்டைத் தாண்டி வெளியேறுவதற்குள்ளேயே கோபால் இன்னொரு காரில் எதிரே வந்து விட்டான். அவள் அப்போதுதான் அப்துல்லாவை அழைத்துவரப் போகிறாள் என்று புரிந்து கொண்ட கோபமும், தான் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி தனியே போகாமல் மாதவி முத்துக்குமரனையும் உடன் அழைத்துக் கொண்டு போகிறாள் என்பதைக் கண்டு எரிச்சலுமாகக் கடுகடுப்பான முகத்தோடு அவளை எதிர்கொண்டான் அவன். "அப்பவே போகச் சொல்லியிருந்தேனே உன்னை? நீ இப்பத்தான் போறியா?" "முடியலை. இவரை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைச்சிட்டுப் போனேன். நேரமாயிடுச்சு. இப்பத்தான் புறப்பட முடிஞ்சிது." "அது சரி! சாரை ஏன் வீணா சிரமப்படுத்தறே? நீ மட்டும் அப்துல்லாவைக் கூப்பிடப் போயிட்டு வந்தாப் போதாது?" என்று நாசூக்காக முத்துக்குமரனைக் கத்திரித்துவிட முயன்றான் கோபால். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|