13 அன்றிரவு அவள் உறங்கவே இல்லை. கண்ணீரால் தலையணை நனைந்தது. 'என்னை வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க ஒரு துணை வேண்டும்' - என்று முத்துக்குமரனைக் கூப்பிட்டுவிட்டு அவன் நடந்தே உடன் புறப்பட்டு வந்த பின் கோபாலுடன் காரில் கிளம்புகிற அளவு தன் மனம் எப்படி எங்கே பலவீனப்பட்டது என்பதை இப்போது அவளாலேயே அநுமானிக்க முடியாமலிருந்தது. தான் செய்ததை நினைத்த போது அவளுக்கே அவமானமாயிருந்தது. மறுநாள் முத்துக்குமரனின் முகத்தில் விழிப்பதற்கே பயமாகவும், கூச்சமாகவும் இருந்தது. அவளுக்கு கோபால் தானே வீட்டில் கொண்டு போய் விடுவதாகக் கெஞ்சியபோது தான் எப்படி உடனே மனம் நெகிழ்ந்து அதற்கு இணங்கினோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவளுக்கு வியப்பாகவே இருந்தது. காலையில் எழுந்ததும் இன்னோர் அதிர்ச்சியும் காத்திருந்தது. இந்த இரண்டாவது அதிர்ச்சிக்குப் பின் கோபாலைச் சந்திப்பதற்கும் அவள் கூசினாள்; பயப்பட்டாள் என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. முத்துக்குமரனைக் கனியழகன் பேட்டி கண்டு வெளியிட்டிருந்த ஜில் ஜில் இதழ் அன்று காலை முதல் தபாலில் அவளுக்குக் கிடைத்தது. ஜில் ஜில் கனியழகன் அந்தப் பேட்டியின் இடையே ஒரு புகைப் படத்தையும் பிரசுரித்திருந்தான். முத்துக்குமரனின் தனிப் படத்தையும் மாதவியின் தனிப் படத்தையும் - வெட்டி இணைத்து அருகருகே நிற்பது போல ஒரு 'பிளாக்' தயாரித்து வெளியிட்டிருந்தான். 'ஜில் ஜில்' 'மாதவியைப் போல ஒரு பெண் கிடைத்தால் மணந்து கொள்வேன்' - என்று முத்துக்குமரன் கூறியதாகவும் பேட்டியில் வெளியிட்டிருந்தது. அந்தக் கனியழகன் மேல் கோபம் கோபமாக வந்தது அவளுக்கு. கோபாலுக்கும் அதே பத்திரிகை அன்று காலைத் தபாலில் கிடைத்திருந்தால் என்ன உணர்வை அவன் அடைந்திருப்பான் என்று அநுமானிக்க முயன்றாள் அவள். ஜில் ஜில் கனியழகன் பேட்டிக்குரியவர் என்ற முறையில் முத்துக்குமரனுக்கும் அதே இதழை அனுப்பி வைத்திருப்பான் என்று அவளுக்குப் புரிந்தது. தான் முத்துக்குமரனோடு சேர்ந்து நிற்பது போன்ற அந்தப் படமும், தன்னைப் போன்ற ஒருத்தியையே மணந்து கொள்ள விரும்புவதாகக் கூறிய முத்துக்குமரனின் பேட்டி வாக்கியமும் - கோபாலுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் என்பதை உணர்ந்தாள் அவள். இருவரையுமே அன்று சந்திக்கப் பயமாகவும் கூச்சமாகவும் இருந்தது அவளுக்கு. கோபாலையும் முத்துக்குமரனையும் சந்திக்கத் தயங்கி அன்று மாம்பலத்துக்குப் போகாமலே இருந்துவிட முடிவு செய்தாள் அவள். ஆனால் எதிர்பாராத விதமாகப் பதினோரு மணிக்குக் கோபால் அவளுக்கு ஃபோன் செய்து விட்டான். ''பாஸ்போர்ட் அப்ளிகேஷன்லியும் வேறு ரெண்டொரு பேப்பர்லியும் கையெழுத்துப் போடணும். ஒரு நடை வந்திட்டுப்போனா நல்லது.'' ''எனக்கு உடம்பு நல்லாயில்லே. அவசரம்னா யாரிட்டவாவது குடுத்தனுப்பிடுங்க, கையெழுத்துப் போட்டு அனுப்பிடறேன்'' என்று அங்கே போவதைத் தட்டிக் கழிக்க முயன்றாள் அவள். அவளுடைய முயற்சி பலித்தது. அவள் கையெழுத்துப்போட வேண்டிய பாரங்களை டிரைவரிடம் கொடுத்தனுப்ப ஒப்புக்கொண்டான் கோபால். முத்துக்குமரன் அவளுக்கு ஃபோன் செய்ய விரும்பவில்லை என்று தெரிந்தாலும் அவளே அவனுக்கு ஃபோன் செய்வதற்குப் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு. முதல் நாளிரவு அவன் கூறிய பதில் இன்னும் அவள் மனத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. அவன் கடுமையாகப் பேசிவிட்டான் என்ற உறுத்தலைவிடத் 'தான் தவறு செய்துவிட்டோம்' என்ற உறுத்தலும் பதற்றமும் தான் அவளிடம் அதிகமாக இருந்தன. அவளால் முத்துக்குமரனின் கோபத்தைக் கற்பனைசெய்து பார்க்கவும் முடியாமல் இருந்தது. அன்று அவள் மனக்குழப்பத்துடனும் போராட்டத்துடனும் வீட்டிலேயே இருந்து விட்டாள். இரண்டு மணிக்கு மேல் கோபாலின் டிரைவர் வந்து அவளிடம் கையெழுத்து வாங்க வேண்டிய பாரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு போனான். அதே போல முத்துக்குமரனிடம் பாரங்களைப் பூர்த்தி செய்து வாங்கியிருப்பார்களா இல்லையா என்பதை அறிய முடியாமல் தவித்தாள் அவள். முதல் நாளிரவு நிகழ்ச்சியால் தன் மேலும் கோபால் மேலும் ஏற்பட்டிருக்கும் கோபத்தில் முத்துக்குமரன் மலேயாவுக்கு வரமறுத்தாலும் மறுக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. ஓர் அப்பழுக்கற்ற வீரனின் தன்மானமும் கவிஞனின் செருக்குமுள்ள முத்துக்குமரனை நினைந்து நினைந்து உருகினாலும் சில சமயங்களில் அவனை அணுகுவதற்கே அவளுக்குப் பயமாக இருந்தது. அவன் மேல் அளவற்ற பிரியமும், அந்தப் பிரியம் போய் விடுமோ என்ற பயமுமாக அவள் மனம் சில வேலைகளில் இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவித்தது. முத்துக்குமரன் மலேயாவுக்கு வரவில்லை என்றால் தானும் போகக்கூடாது என்று எண்ணினாள் அவள். அப்படி எண்ணுகிற அளவிற்குத்தான் அவள் மனத்தில் துணிவு இருந்தது. அந்தத் துணிவை வெளிக்காட்டிக் கொள்ளும் நெஞ்சுரம் அவளுக்கு இல்லை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |