16 ஈப்போ விமானநிலையத்தில் அப்துல்லாவோடு முன்னால் இறங்கிப் போன கோபால் மறுபடி திரும்பி வந்து மாதவியையும் கூப்பிட்டான். "மாதவி! நீயும் ஒரு நிமிஷம் வந்து தலையைக் காட்டிப்பிட்டுப் போயிடு. இந்தக் காலத்திலே ஆம்பிளைங்க மட்டும் போனா எந்த ரசிகன் மதிக்கத் தயாராயிருக்கான்? 'உங்க குழுவிலே நடிகைகள் யாருமே வரலியா'ன்னு கேட்கிறாங்க," "நான் ஒண்ணும் வரலை, எனக்குத் தலைவலியாயிருக்கு..." "ப்ளீஸ்...ரொம்பப் பேர் பாவம் - மாலையோட காத்துக்கிட்டிருக்காங்க..." போவதா, வேண்டாமா என்று கேட்பதுபோல் முத்துக்குமரன் பக்கம் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள் அவள். "போயிட்டுத்தான் வாயேன். வந்து மாலை போடக் காத்திருக்கிறவங்களை ஏன் ஏமாத்தணும்?" - என்று அவளிடம் காதருகே கூறினான் முத்துக்குமரன். அவள் வேண்டா வெறுப்பாக மீண்டும் எழுந்து சென்றாள். விமானத்தின் கண்ணாடிப் பலகணி வழியே வெளியே இருந்த கூட்டத்தைப் பார்த்தான் முத்துக்குமரன். ஐந்தாறு நிமிஷங்களில் அவர்கள் ஒரு கத்தை மாலைகளோடு திரும்பி வந்தார்கள். விமானம் புறப்பட்டது. கண்மூடித் திறப்பதற்குள் 'பினாங்கு' வந்துவிட்ட மாதிரி இருந்தது. பினாங்கு - விமான நிலையத்திற்கும் நிறையக் கூட்டம் வந்து காத்திருந்தது. வரவேற்புக்கள் தடபுடலாயிருந்தன. மாதவியும், கோபாலும்தான் முத்துக்குமரனை யாரென்று வந்திருந்தவர்களுக்குச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தார்களே ஒழிய அப்துல்லா முத்துக்குமரனைப் பொருட்படுத்தவே இல்லை. முத்துக்குமரனும் அப்துல்லாவைப் பொருட்படுத்தவில்லை என்றாலும் - தங்களை அந்த நாட்டிற்கு வரவேற்றிருக்கும் 'ஹோஸ்ட்' ஆகிய அவர் அப்படித் தன்னிடம் மட்டும் பாராமுகமாக இருந்தது அவனுக்கு வருத்தத்தை அளித்தது. விமான நிலையத்திலிருந்து பினாங்கு ஊருக்குள் போகும் போது நன்றாக இருட்டிவிட்டது. அன்றிரவு பினாங்கு ஹில்லில் உள்ள தம்முடைய பங்களாவில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார் அப்துல்லா. எனவே விமான நிலையத்திற்குள்ளிருந்து புறப்பட்ட கார்கள் நேரே பினாங்கு ஹில் ரயில் புறப்படும் இடத்திற்கு வந்து நின்றன. அந்தச் சிறிய ரயிலில் செங்குத்தாக மேலே ஏறிப் பயணம் செய்வது மிகமிக உற்சாகமளிக்கும் அநுபவமாயிருந்தது. அந்தச் சிறிய அழகிய பெட்டி இரயிலில் மாதவியும், முத்துக்குமரனும் அருகருகே அமர்ந்து கொண்டிருந்தனர். கீழே திரும்பிப் பார்த்தபோது ரயில் புறப்படுமிடத்துக் கட்டிடமும், நகரின் சில விளக்குகளும் சிறிய சிறிய புள்ளிகளாய் மங்கித் தெரிந்தன. மலைமேல் ஏறியதும் அப்துல்லாவின் பங்களாவிற்குப் போகிற வழியிலிருந்து கீழே பள்ளத்தில் கடலும், பினாங்கு துறைமுகமும், பிறையிலிருந்து பினாங்குக்கும் பினாங்கிலிருந்து பிறைக்குமாக வந்து போகும் ஃபெரி ஸர்வீஸுகளுமாக விளக்குகள் மினுக்கின. நகரின் பல வண்ண விளக்குகளும் நியான்ஸைன் காட்சிகளும் கண்கொள்ளா வனப்பை அளிப்பனவாயிருந்தன. பினாங்கு ஹில் பார்க்கில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு அப்துல்லாவின் பங்களாவிற்குப் போய்ச் சேர்ந்தார்கள் அவர்கள். அப்துல்லாவின் பங்களா மலையுச்சியில் அமைதியாகவும் அடர்த்தியாகவும் இருந்த பகுதி ஒன்றில் அமைந்திருந்தது. மாடியில் தங்கிக் கொள்ள ஒவ்வொருவருக்கும் சகல வசதிகளுமுள்ள தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டன. இரவு உணவுக்குப் பிறகு ஹாலில் எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, "என்ன மிஸ்டர் கோபால்! 'காக்டெய்ல்' மிக்ஸ் பண்ணுவதில் இந்த மலேயா 'ஸெடெ ரெயிட்ஸி' லேயே நான் எக்ஸ்பெர்ட் என்று பெயர். பல மாநில சுல்தான்கள் தங்கள் பிறந்த தின விழாக்களைக் கொண்டாடும்போது காக்டெயில் மிக்ஸ் பண்ணுவதற்கென்றே எனக்கு விசேஷ அழைப்பு அனுப்புவார்கள்" - என்றார் அப்துல்லா. "அந்தப் பாக்கியத்தைத் தயவு செய்து எங்களுக்கும் அளிக்கலாமல்லவா?''- என்று அவரைக் கெஞ்சத் தொடங்கினான் கோபால். மாதவியும் முத்துக்குமரனும் ஒன்றும் பேசாமல் இருந்து விடவே, "நீங்க மட்டும் தானே சொல்றீங்க மிஸ்டர் கோபால், மாதவி ஒண்ணுமே சொல்ல வில்லையே? இந்த ப்ராவின்ஸ் வெல்லெஸ்லியிலேருந்து என் கையாலே காக்டெயில் கலந்து குடிக்கணும்னு தினம் எத்தினியோ கோடீசுவரன் இங்கே தேடி வந்திட்டுப் போறான். மாதவியம்மா மட்டும் வாயைத்திறக்கவே மாட்டேங்கிறாங்க..." அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |