17 மறுநாள் மாலை அவர்கள் குழுவின் முதல் நாடகம் நடைபெறவேண்டிய தினமாகையினால் காலையில் அவர்கள் எங்குமே வெளியே செல்லவில்லை. பகலில் மேடை ஏற்பாடுகள், ஸீன்ஸ் - ஆகியவற்றைச் சரி பார்ப்பதற்காக கோபாலும் வேறு சிலரும் நாடகம் நடைபெற இருந்த இடத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். அன்று பகலுணவு ஸென்யீ என்ற அப்துல்லாவின் நண்பரான சீனாக்காரர் வீட்டில் நடந்தது. 'காண்ட்ராக்ட்காரர்' அப்துல்லா ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு அடை காப்பதுபோல் மாதவியையே சுற்றிச் சுற்றி வந்தார். முத்துக்குமரன் அவளோடு கூடவே இருந்தது அவருக்குப் பெரிய இடையூறாக இருந்தது. நாளுக்கு நாள் அவன் மீது அவருடைய வெறுப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. தான் மாதவியோடு பேசவோ நெருங்கிப் பழகவோ முடியாமல் அவன் பெரிய போட்டியாகவே இருக்கிறானென்று அவருக்குத் தோன்றியது. முதல் நாள் நாடகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அன்றிரவு அப்துல்லாவுக்கும் முத்துக்குமரனுக்கும் நேரிடையாகவே ஒரு மனஸ்தாபம் நேர்ந்தது. நல்ல வசூல் ஆகியிருந்ததனாலும் நகரமண்டபம் கொள்ளாமல் கூட்டம் நிறைந்திருந்ததனாலும் அத்தனைக்கும் காரணமான அப்துல்லாவின் மேல் கோபாலுக்கு மிகுந்த பிரியம் உண்டாகியிருந்தது; நாடகம் முடியும்போது இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. நாடக முடிவில் எல்லாரையும் மேடைக்கு வரவழைத்து மாலை சூட்டியும், அறிமுகப்படுத்தியும் நன்றி கூறிய அப்துல்லா - முத்துக்குமரனை மட்டும் மறந்தாற்போல் விட்டுவிட்டார். அவருக்கு மறக்கவில்லை என்றாலும் பிறர் அதை மறதியாக எண்ணிக் கொள்ளட்டும் என்பதுபோல் வேண்டுமென்றே விட்டுவிட்டார். கோபாலுக்கு நினைவிருந்தது, அப்துல்லாவின் செய்கைகளில் குறுக்கிட்டுக் கூறப் பயந்தவன் போல அவனும் சும்மா இருந்துவிட்டான். மாதவி மட்டும் மனம் குமுறினாள். அவர்கள் எல்லாரும் திட்டமிட்டுக்கொண்டு சதி செய்வது போலத் தோன்றியது அவளுக்கு. நாடகம் முடிந்தபின் பினாங்கிலுள்ள பெரிய பணக்காரர் ஒருவர் வீட்டில் அன்றிரவு அவர்கள் விருந்துண்ண ஏற்பாடு செய்திருந்தார் அப்துல்லா. நாடகம் நடந்து முடிந்ததும் அங்கிருந்தே அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார், விருந்துண்ண அழைத்திருந்த செல்வந்தர். மேடையில் நடந்ததில் மனம் குமுறியிருந்த மாதவி முத்துக்குமரனைக் கிரீன் ரூமுக்கே வரச் சொல்லித் தனக்கு மிகவும் வேண்டிய துணை நடிகை ஒருத்தியிடம் சொல்லியனுப்பியிருந்தாள். அவளுக்கும் மலையாளத்துப் பக்கம் தான். "மாதவி விளிச்சு" என்று மேடையருகே கீழே நின்று கொண்டிருந்த முத்துக்குமரன் காதருகே வந்து கூறினாள் அந்தத் துணை நடிகை. அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன் போலிருந்த முத்துக்குமரனிடம் மீண்டும் அருகில் வந்து "ஞான் வரட்டே?" என்று கேட்டாள் அந்தத் துணை நடிகை. முத்துக்குமரன் அவள் போகலாம் என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினான். அவள் போய்விட்டாள். சிறிதுநேர இடைவெளிக்குப்பின் அவனும் கிரீன் ரூமுக்குச் சென்றான். மாதவி அவனருகே வந்து குமுறினாள். "இங்கு நடந்த இந்த அக்கிரமத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாம் விருந்துக்குப் போக வேண்டாம்." "தன்மானம் வேறு! அற்பத்தனம் வேறு; அவர்களைப் போல் நாமும் அற்பத்தனமாக நடந்துகொள்ளக்கூடாது. மாதவி! இந்த மாதிரி விஷயங்களில் நான் ரொம்ப ரோஷக்காரன். அசல் கலைஞன் ஒவ்வொருவனுமே இப்படி ரோஷக்காரன்தான். ஆனால் அது ரோஷமாக இருக்க வேண்டுமே ஒழிய மிகவும் அற்பத்தனமான குரோதமாக இருக்கக் கூடாது. புது நாட்டில் புது ஊரில் நாம் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்." "அது சரி! ஆனால் மற்றவர்கள் நம்மிடம் அப்படிப் பெருந்தன்மையோடு நடந்துகொள்ளவில்லையே? அற்பத்தனமாக அல்லவா நடந்து கொள்கிறார்கள்." "பரவாயில்லை! இன்னும் நாம் பெருந்தன்மையாக நடந்து கொள்வதற்குத்தான் அவசியமிருக்கிறது." - இதற்குமேல் மாதவி அவனோடு வாதிடவில்லை. அன்றிரவு அவர்கள் விருந்துக்குப் போனார்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|