3 "நீ சும்மா எழுது வாத்தியாரே! அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். 'நடிகர் திலகம் கோபால் நடிக்கும் நவரச நாடகம்'னு ஒருவரி விளம்பரப்படுத்தினாப் போதும், தானா 'ஹவுஸ்புல்' - ஆயிடும்... சினிமாவிலே கிடைக்கிற புகழை நாடகத்துக்குப் பயன்படுத்தணும். அதுதான் இப்ப 'டெக்னிக்'." "அதாவது எழுதறவன் எந்தப் பயலாயிருந்தாலும் உன்பேர்ல நாடகம் தடபுடலாகிவிடும்னு சொல்றியா?" "பின்னென்ன? சும்மாவா?" "அப்படியானா நான் எழுத முடியாது!" முத்துக்குமரனின் குரலில் கடுமை நிறைந்திருந்தது. சிரிப்பு முகத்திலிருந்து மறைந்து விட்டது! "ஏன்? என்ன?" "உன்னுடைய லேபிளில் மட்டமான சரக்கையும் அமோகமாக விற்க முடியும் என்கிறாய் நீ! நானோ நல்ல சரக்கை மட்டமான லேபிளில் விற்க விரும்பவில்லை." இதைக் கேட்டவுடன் கோபாலுக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. வேறொருத்தன் இப்படிச் சொல்லியிருந்தால் கன்னத்தில் அறைந்து 'கெட் அவுட்' என்று கத்தியிருப்பான். ஆனால், முத்துக்குமரனிடம் ஓர் அடங்கிய மனைவி கணவனுக்குக் கட்டுப்படுவது போல் கட்டுப்பட்டான் அவன். சிறிது நேரம் நண்பனுக்கு என்ன பதில் சொல்வதென்பது தெரியாமல் திகைத்தான் அவன். கோபமாகப் பேசமுடியவில்லை. நல்லவேளையாக முத்துக்குமரனே முகம் மலர்ந்து புன்சிரிப்புடன் பேசத் தொடங்கினான். "கவலைப்படாதே கோபால்! உன்னுடைய அகங்காரத்தை ஆழம் பார்க்கத்தான் அப்படிப் பேசினேன். உனக்கு நான் நாடகம் எழுதுகிறேன். ஆனால், அது நீ நடிக்கிற நாடகம் என்பதை விட நான் எழுதிய நாடகம் என்பதையே நினைவு படுத்திக் கொண்டிருக்கும்." "அதனால என்ன? நீ பெருமை அடைந்தால் அதில் எனக்கும் உரிமை உண்டு வாத்தியாரே?" "முதல் நாடகம் - சமூகமா? சரித்திரமா?" "சரித்திரமாகவே இருக்கட்டும்! ராஜேந்திரசோழனோ சுந்தரபாண்டியனோ எதுவேணா இருக்கட்டும். அதுலே நடுநடுவே பார்க்கிறவங்க கைதட்டறாப்பல சில டயலாக்ஸ் மட்டும் கண்டிப்பா வேணும்! நீங்க சரித்திரத்திலே எந்த ராஜாவை எழுதினாலும் இது வேணும்! எம் மன்னர் காமராஜர், கன்னியர் மனங்கவரும் அழகுக் கொண்டல், இரப்போர்க்குக் கருணாநிதி, இளைஞர்க்குப் பெரியார், தம்பியர்க்கு அண்ணா - என்பதுபோல அங்கங்கே வசனம் வரணும்." "அது முடியாது?" "ஏன்? ஏன் முடியாது?" "ராஜராஜசோழன் காலத்தில் இவங்கள்ளாம் இல்லை. அதனாலே முடியாது." "மாஸ் அப்பீலா இருக்கும்னு பார்த்தேன்." "இப்படி எழுதினா மாஸ் அப்பீல் என்பதைத் திருத்தி 'மாசு அப்பீல்'னுதான் சொல்லணும்." "பின்னே என்னதான் எழுதப்போறே? எப்பிடி எழுதப் போறே?" "நாடகத்தை - நாடகமாகவே எழுதப்போறேன். அவ்வளவுதான்." "அது எடுக்கணுமே...?" "எடுக்கறதும் - எடுக்காததும் நாடகத்தைச் 'சிறப்பா' அமைக்கிறதுலேதான் இருக்கே ஒழிய நாடகத்துக்குச் சம்பந்தமில்லாததுலே மட்டும் இல்லே." "எப்படியோ உன்பாடு... நீ வாத்தியார். அதனாலே நான் சொல்றதைக் கேட்கமாட்டே?" அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|