7 "பெண்புத்தி பின்புத்திதான்" - என்பதை அப்போது முத்துக்குமரன் நன்றாக உணர்ந்திருந்தான். தன்னைப்பற்றி ஏன் அவள் சந்தேகப்பட நேர்ந்திருக்கிறது என்ற காரணத்தை அப்போது அவனால் அநுமானிக்க முடிந்தது. காரமாகவும் சுருக்கென்று உடனே அவள் மனத்தில் தைப்பது போலவும் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. "உன்னைப் போல் பயந்து சாகிறவள் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம். நான் ஏன் அப்படிச் செய்கிறேன்?" அவள் பதில் சொல்லவில்லை. அவளுடைய கைவிரல்கள் டைப் செய்வதை நிறுத்தி விட்டன. மௌனமாகத் தலை குனிந்தபடி, நின்று கொண்டிருந்த அவனையும் பாராமல் இருந்தாள் அவள். அவளை அப்படி மௌனமாக ஆக்கியதை அவனாலும் தொடர்ந்து விரும்ப முடியவில்லை. "என்ன நடந்ததென்றுதான் சொல்லேன்?" - என்று மறுபடியும் கேள்வியில் கோபத்தைக் குறைத்துப் பேச்சைச் சுமுகமாகத் தொடர்ந்தான் முத்துக்குமரன். அவள் கேட்கத் தொடங்கினாள். "ஏதோ, சொன்னீர்களே; அதை மறுபடி சொல்லுங்களேன் பார்க்கலாம்!" "எதைச் சொல்கிறாய் மாதவி? நான் தப்பாக ஒன்றும் சொல்லவில்லையே?" "ஏன் சொன்ன வார்த்தைகளை மறைக்கிறீர்கள்? 'உன்னைப்போல் பயந்து சாகிறவள்' - என்று சற்றுமுன் ஏதோ கூறினீர்களே?" "ஆமாம், நேற்றிரவு நான் உன் வீட்டிலிருந்து புறப்படும்போது நீ காரில் என்னருகே வந்துசொன்ன வார்த்தைகள் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை." "அப்படி நான் என்ன சொல்லி விட்டேன்?" "நாம் கடற்கரைக்குப் போனது வந்தது எல்லாம் 'அங்கே ஒண்ணும் ரொம்ப சொல்ல வேண்டாம்'னு நடுங்கினியே; அதைத்தான் சொன்னேன்..." "நடுக்கம் வேறே, முன்னெச்சரிக்கை வேறே..." "ரெண்டுக்கும் வித்தியாசம் நீ சொல்லித்தான் எனக்குத் தெரியணும் போலேயிருக்கு..." "அவசரப் படறவங்களுக்கும், ஆத்திரப்படறவங்களுக்கும் எப்படிச் சொன்னாலும் எதுவும் புரியப் போறதில்லை..." - திடீரென்று இரண்டு பேருமே இந்த விதமாகக் கடுமையுடன் உரையாடலைத் தொடர்வதை விரும்பாமல் சலிப்படைந்தான் முத்துக்குமரன். "சண்டை போட்டுக்கற கிழட்டுப் புருசன் பெண்சாதி மாதிரி எவ்வளவு நேரம்தான் ரெண்டு பேரும் இப்படிப் பேசிக்கணும்னு நீ நினைக்கிறே?" - இந்த உதாரணத்தைக் கேட்டு மாதவி கோபம் கலைந்து கலீரென்று சிரித்துவிட்டாள். நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவள் தோள்பட்டைகளில் கைகளை ஊன்றி அழுத்தினான் முத்துக்குமரன். "சும்மா விடுங்க...வேலை செய்யிறவங்களைத் தொந்தரவு படுத்தப்படாது..." "இதுவும் ஒரு வேலைதானே?" "ஆனால் கோபால் சார் இந்த வேலைக்காக நம்மை இங்கே உட்கார்த்தலியே...? விறுவிறுன்னு எழுதுங்க... நாடகம் முடியணும். அவரு அரங்கேற்றத்துக்கு தலைமை வகிக்க மினிஸ்டரிட்டே டேட் வாங்கியிருக்காரு..." அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |