8 மாதவியின் வேண்டுகோளுக்கிணங்கி அவளைப்பற்றிக் கோபாலிடம் விசாரிக்காமலே விட்டு விட்டான் முத்துக்குமரன். 'மாதவியை நீ சாப்பாடு பரிமாறக் கட்டளையிடுவது, எச்சிற்கையைக் கழுவுவதற்குத் தண்ணீர் ஏந்தி வரச் செய்வது போன்ற காரியங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அவை உன் திமிரைக் காட்டுகின்றன' என்று கோபாலிடம் கண்டித்துப் பேச வேண்டும் என்று நினைத்திருந்த முத்துக்குமரன் - மாதவியின் வேண்டுகோளுக்காகவே அந்த நினைவைக் கைவிட வேண்டியதாயிற்று. 'அவரோட ரொம்ப நாளாகப் பழகிக் கொண்டிருக்கிற என்னிடம் அவர் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டுமென்று திடீரென்று இப்போதுதான் நீங்கள் கண்டிக்கப் புறப்படுவது என்னவோ போலிருக்கும். அது வேண்டாம்' - என்றாள் மாதவி. அவளைப் பரிமாறச் சொல்லியது, கைகழுவத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லியது ஆகியவற்றைப் பற்றி நண்பன் கோபாலிடம் தான் கண்டிப்பதோ, விசாரித்துப் பேசுவதோ மாதவியைப் பாதிக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது. கோபாலையும் நாளாக நாளாகத்தான் முத்துக்குமரனால் கணித்துப் புரிந்து கொள்ள முடிந்தது. வந்த முதல் தினத்தன்று சந்தித்த கோபாலிடம் எவ்வளவு பெருந்தன்மை இருந்ததாக அவனுக்குத் தோன்றியதோ அந்தப் பெருந்தன்மை அவ்வளவும் தவறான கணிப்பு என்று இப்போது தோன்றியது. வெளியில் பெருந்தன்மை உடையவனைப் போல தோன்றினானே ஒழியக் கோபாலனிடம் உள்ளூற வஞ்சகமும், சிறுமையும், தற்பெருமையுமே நிரம்பியிருப்பதையே கண்டான் முத்துக்குமரன். சென்னையைப் போன்ற பெரிய நகரங்களில் மனிதர்களின் பெருந்தன்மையைப் பற்றிச் சராசரி வெளியூர்க்காரனுக்கு ஏற்படுகிற ஆரம்பகால அநுமானம் நாட்பட நாட்படப் பொய்யாகி விடுகிறது என்பதை முத்துக்குமரன் இப்போது புரிந்துகொண்டிருந்தான். பெருந்தன்மையும், கருணையும், அன்புமே முதலில் தெரிந்து அவற்றின் காரணங்கள் பின்னால் போகப் போகத் தெரியும்போது முதலில் ஏற்பட்ட அநுமானமும், கணிப்பும் தவறோ என்று தயங்க வேண்டியிருக்கிறது. கோபாலைப் பொறுத்த அளவில் இப்போது அதே தயக்கம்தான் முடிவாக முத்துக்குமரனுக்கு ஏற்பட்டிருந்தது. சமூகத்தில் நாகரீகமடைந்த வீதிகள் எல்லாம் அழகாகவும் அலங்காரமாகவும் பட்டினத்தில் தோன்றினாலும் - அந்த வீதிகளில் - வீடுகளில் ஆற்றல் நிறைந்த சந்தர்ப்பவாதிகளும், கொடியவர்களும், ஆதரவற்ற நியாய வாதிகளும்; நல்லவர்களும் முறைமாறிய சரிசமமற்ற பலத்தோடு நிரந்தரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்களென்றே தோன்றியது. சிந்தாதிரிப்பேட்டை அங்கப்பனின் ஓவியக் கூடத்திற்கு எல்லோருமாகப் போய்ப் பார்த்து 'ஸீன்கள்' தேர்ந்தெடுத்து விட்டு வந்த தினத்திற்குப் பின் ஓர் இரண்டு வாரங்கள் கோபாலோடு நெருக்கமாகவோ, அடிக்கடி சந்தித்துப் பழகவோ வாய்ப்பின்றிப் போகும்படி தானாகவே ஒரு வசதி நேர்ந்தது முத்துக்குமரனுக்கு. அடுத்த நாளே, ஏதோ ஒரு படத்தின் வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்பிற்காகக் கோபால் விமானம் மூலம் குழுவினருடன் காஷ்மீருக்குப் புறப்பட்டு விட்டான். தான் திரும்ப இரண்டு வாரமாகுமென்றும் - அதற்குள் நாடகத்தை எழுதி முடித்து ரிஹர்ஸலைத் தொடங்குவதற்கு ஏற்ற முறையில் வைத்திருக்க வேண்டுமென்றும் முத்துக்குமரனிடமும், மாதவியிடமும் கோபால் திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டுப் போயிருந்தான். அதனால் முத்துக்குமரன் கடற்கரைக்கோ, வேறு வெளியிடங்களுக்கோ செல்வதைக் குறைத்துக் கொண்டு நாடகத்தை தீவிரமாக எழுதி முடிப்பதில் ஈடுபட்டான். மாதவியும் அவன் எழுதிய கையெழுத்துப் பிரதியை டைப் செய்வதில் தீவிரமாகக் கவனம் செலுத்தினாள். அந்த வேகமான நாட்களில் முத்துக்குமரன் இரவிலும் கண்விழித்து எழுதினான். இரவில் அவன் எழுதிக் குவித்தவற்றையும் சேர்த்துப் பகலில் பிரதி எடுக்க வேண்டிய கடுமையான வேலை மாதவியின் தலையில் சுமந்தது. இதனால் ஒரு பத்துப் பன்னிரண்டு நாட்கள் எப்படி கழிந்தனவென்றே தெரியாமல் வேகத்தில் போய்விட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|