![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
52. ஒற்றர் உரைத்தவை வருடகாரன் முதலிய அமைச்சர்களை அழைத்துத் தம்பியர்களையும் உடன் வைத்துக் கொண்டு, சில முக்கியமான திட்டங்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு விட்டால் முன்னேற்பாடு நலமாக அமையும் என்று தோன்றியது உதயணனுக்கு. இந்த எண்ணம் தோன்றியவுடனே ஒரு காவலனை அழைத்து, வருடகாரனையும் இடவகனையும் கூப்பிட்டு வருமாறு அனுப்பினான் உதயணன். தன்னுடைய செல்வத் தம்பிகளாகிய பிங்கல கடகர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றிய பின், ஆருணியை வென்று அவனிடமிருந்து தங்கள் நாட்டை மீட்கும் வழியைச் சிந்திக்கத் தொடங்கினான் உதயணன். அந்தச் சிந்தனையில் கலந்து கொள்வதற்காக அவன் அழைப்பை ஏற்றுக் கொண்டு வருடகாரனும் இடவகனும் வந்திருந்தனர். மூவரும் கூடி, ஆருணியை வெல்லும் வழியை ஆலோசிக்கலாயினர். ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் வருடகாரன் தன் மனத்தில் தோன்றிய வழியைக் கூறினான். உதயணனும் இடவகனும் அதைக் கூர்ந்து செவிமடுத்துக் கொண்டிருந்தனர். "அரசர் பெருந்தகையே! ஆருணியை வெல்ல முயலும் இந்த முயற்சியில் நாம் சாதாரண ஆற்றலை மட்டுமே செலவிடக் கருதினோமானால் அது போதாது. பயங்கரமான சூழ்நிலையை உண்டாக்குவதற்கு உரிய சில சூழ்ச்சிகளையும் சற்றும் தயங்காமல் செய்ய முற்பட வேண்டும். நம்முடைய ஒற்றர்கள் ஏற்கெனவே கோட்டைக்குள்ளும் அரண்மனையிலும் சென்று வந்து, நமக்கு எவ்வளவோ பயன்படத்தக்க விவரங்களைக் கூறியிருக்கின்றனர். கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அரணின் நிலையும் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். இந்த நல்ல வாய்ப்பைத் துணையாகக் கொண்டு நம்முடைய வீரர்களில் சிலரைக் கோட்டைக்குள் அனுப்பி, ஆருணி அஞ்சி நடுங்கத்தக்க இரகசியக் கலகம் ஒன்றைச் செய்ய வேண்டும். பகல் நேரத்தில் இந்த ஏற்பாடு சாத்தியமாகாது. எனவே இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான நேரம் நடு இரவுதான். நடு இரவில் கோட்டை வாயிலின் எல்லாக் கதவுகளும் அடைத்து விடுவார்கள். ஆகையால் கயிற்று ஏணிகளின் மூலமாகவே தந்திரமாக நம் வீரர்களைக் கோட்டைக்குள் அனுப்ப வேண்டும். மதில்களின் பிரம்மாண்டமான சுவர்களைக் கடந்து கோட்டைக்குள் நுழைவதற்கு இதைத் தவிர வேறு வழிகளே இல்லை. இந்த வழியை மேற்கொண்டு உட்புகுந்த நம் வீரர்கள், எதிர்பாராத விதமாகப் பொங்கிக் கரையருகே உள்ள ஊர்களை அழிக்கும் கடலைப் போல அமைதியான துயிலில் ஆழ்ந்திருக்கும் அரண்மனையிற் கலகம் புரிந்து குழப்பத்தை விளைவிக்க வேண்டும்! அதே நேரத்தில் தாங்கள் கோட்டைக்கு வெளியே போருக்கு ஆயத்தமாக அணிவகுத்த படைகளோடு காத்திருப்பது அவசியம். உள்ளே புகுந்த வீரர்கள் இரவோடிரவாக அரண்மனையிலும், போர் வீரர்கள் வசிக்கும் படைச்சாலைகளிலும் எவ்வளவு அழிவு செய்ய முடிகிறதோ அவ்வளவு அழிவைத் தங்கள் கலகத்தின் மூலம் செய்வார்கள். இன்னும் ஒரு செய்தி! கோட்டைக்குள் இருக்கும் மக்கள் யாவரும் தங்கள் பழைய மன்னனாகிய உங்கள் மேல் தான் அந்தரங்கமான பற்றும் விருப்பமும் கொண்டிருக்கிறார்கள். ஆருணி, வன்முறை ஆட்சியால் அவர்களை அடக்கி ஆண்டு வருகிறான். நம் வீரர்கள், 'உதயணன் வாழ்க' என்ற வாழ்த்தொலி மூலம் தங்கள் வரவைக் கோசாம்பி நகர மக்களுக்குத் தெரிவித்தால், அவர்கள் ஆதரவும் நமக்குக் கிடைக்கும். இவற்றையெல்லாம் திட்டம் பிறழாமல் நாம் செய்து முடித்தால் ஆருணிக்கு அதோ கதிதான். இருளில் பெரிய மழையிலே தனியாக அகப்பட்டுக் கொண்ட ஆண்குரங்கைப் போலத் திகைத்துத் திண்டாடுவான் அவன். நகர மக்கள் நமது வரவைத் தெரிந்து கொண்டு விட்டால் நம்மைப் பாராட்டி வாழ்த்தி வரவேற்பர். அவர்களாகவே ஒரு படை போலத் திரண்டு நம்மோடு வந்து சேர்ந்து கொள்ளுவார்கள். இந்தத் திட்டத்தை நீங்கள் ஒப்புக் கொண்டால், ஆருணியைத் தோல்வியுறச் செய்து சுலபமாக அவன் உயிரையும் வாங்கி விடலாம்" என்று இவ்வாறு தான் கருதிய வழியைக் கூறி முடித்தான் வருடகாரன். வருடகாரன் கூறிய இந்தத் திட்டம் இடவகனுக்கும் உதயணனுக்கும் பொருத்தமுடையதாகவே தோன்றியது. அவ்வாறே செய்ய உடன்பட்டு வருடகாரனைப் பாராட்டி நன்றி கூறினான் உதயணன். மேலே நடக்க வேண்டிய செயல்களை ஒரு பளிக்கு அறைக்குச் சென்று மிக இரகசியமாக நடத்தினர். ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எல்லாத் திட்டங்களுக்கும் சூழ்ச்சிகளுக்குமே பொதுவான நியதி ஒன்றுண்டு. அதுதான் நினைப்பளவிலும் பேச்சளவிலும் கவர்ச்சியுடையதாக இருத்தல், செயலில் இறங்கும் போதுதான் எண்ணமும் சொல்லும் எவ்வளவிற்கு எளிமையானவை என்று தோன்றும். பளிங்கு அறையிலே இரகசியத் தனிமையில் மூவரும் கூடிச் சிந்தித்த போது சற்றே மலைப்புத் தென்பட்டது! சொல்லும்போது சாதுரியத்தோடு திட்டத்தைச் சொல்லி விவரித்த வருடகாரனுக்கே 'தான் கூறியவைகள் செயலுக்கு வருவது இவ்வளவு கடினமா!' என்ற வியப்பு உண்டானது. ஆயினும் திட்டத்தை எவ்வகையிலேனும் நடத்தியே தீருவது என்ற முடிவு மூன்று பேருக்கும் உறுதியாக இருந்தது. இந்த நிலையில் ஆருணியை ஒற்றறிவதற்குக் கோட்டைக்குள்ளே மாறுவேடத்தோடு சென்றிருந்த சில ஒற்றர்கள் 'அவசரமாக அரசனைக் காண வேண்டும்' என்று சொல்லிக் கொண்டே திரும்பி அங்கே வந்தனர். ஒரு சேவகன் இந்தச் செய்தியை உள்ளே வந்து உதயணனிடம் கூறினான். உதயணனுக்கு வியப்பு ஏற்பட்டது. உடனே அவர்களை உள்ளே வரச்சொல்லி உரைக்குமாறு சேவகனை அனுப்பி சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் ஒற்றர்கள் உள்ளே நுழைந்து மூவரையும் வணங்கினர். வணங்கியபின் ஒற்றர்கள் செய்தியைக் கூற, மூவரும் ஆவலோடு அதைக் கேட்டனர். அந்த ஒற்றர்கள் படையெடுப்புக்கு வேண்டிய ஒற்றுச் செய்திகளையும் அறிந்து வந்திருந்தனர். |