http://www.chennailibrary.com


மூவாதியார்
இயற்றிய
ஐந்திணை எழுபது

(உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.)

... தொடர்ச்சி ...

சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,
வலி ஆகி, பின்னும் பயக்கும்; மெலிவு இல்
கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை
நயம் திகழும் என்னும், என் நெஞ்சு. 5

கேண்மை - நட்பு
கயம் - குளம்

     "தோழியே! சான்றோரின் நட்பானது சிதைவு இல்லாததாய் நிலைத்து நின்று வலிமையுடையதாகிப் பலவகை நன்மைகளை உண்டாக்கும். அதுபோல நீர் நிலைகளால் வளமாகக் காணப்படும் சோலைகள் சூழ்ந்த மலைநாட்டுத் தலைவனின் நட்பானது குறைவின்றி இன்பம் பயக்கும் என என் நெஞ்சம் நினைக்கின்றது" என்று தலைவி கூறுகிறாள்.

புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது

பொன் இணர் வேங்கை கமழும் நளிர் சோலை
நல் மலை நாட! மறவல்; வயங்கிழைக்கு
நின் அலது இல்லையால்; ஈயாயோ, கண்ணோட்டத்து
இன் உயிர் தாங்கும் மருந்து? 6

இணர் - பூங்கொத்து
இழை - அணிகலன்

     "வேங்கை மரங்களும் நறுமணம் வீசுகின்ற குளிர்ந்த பூஞ்சோலைகள் மிக்க நல்ல மலை நாட்டுத் தலைவனே! தலைவியை மறவாமல் காப்பாயாக. உன்னை விட்டால் அவளுக்கு உதவயாருமில்லை. ஆதலால் நின் அருட்பார்வையால் இனிய உபாதை நிலைபெறச்செய்யும் மருந்துபோன்று திருமணத்தை அவளுக்கு அளித்துக் காப்பாயாக" என்றாள்.

பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, படைத்து மொழி கிளவியால் தோழி வரைவு கடாயது

காய்ந்தீயல், அன்னை! இவளோ தவறு இலள்; -
ஓங்கிய செந் நீர் இழிதரும் கான் யாற்றுள்,
தேம் கலந்து வந்த அருவி குடைந்து ஆட,
தாம் சிவப்பு உற்றன, கண். 7

செந் நீர் - சிவந்த நீர்

     "அன்னையே! உயர்ந்த மலைகளிலிருந்து இறங்கி ஓடும் சிவந்த நீரையுடைய காட்டாற்றுள் தேன் கலக்கப் பெற்றுப் பாயும் அருவியில் தலைவி தலை முழுகி விளையாடியதால் அவள் கண்கள் சிவந்தன. இவள் தவறு ஏதும் செய்யவில்லை. எங்களைச் சினந்து கூறவேண்டாம்" என்று கற்பனையாகத் தோழி செவிலித்தாயிடம் கூறினாள்.

புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது

வெறி கமழ் தண் சுனைத் தெண்ணீர் துளும்ப,
கறி வளர் தே மா நறுங் கனி வீழும்
வெறி கமழ் தண் சோலை நாட! ஒன்று உண்டோ,
அறிவின்கண் நின்ற மடம்? 8

கறி - மிளகு
மடம் - அறியாமை

     "மிளகுக் கொடிகள் படர்ந்துள்ள இனிய மாமரத்தின் நறுங்கனிகள் மணம் கமழ்கின்ற குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீர் ததும்பும்படியாக வீழும். நறுமணம் கமழ்கின்ற குளிர்ந்த சோலைகள் நிரம்பியுள்ள மலைநாட்டுத் தலைவனே! உம்மிடம் அறியாமை இல்லை. அறிவுள்ளவனாகிய உன்னிடம் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்று கூறவேண்டியதில்லை" என்று தோழி தலைவனிடம் கூறினாள்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/iynthinaiezhupadhu2.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.