முதல் பிடில் ... தொடர்ச்சி ... "அப்பொழுது சரிதான். என்னைக் கொன்றவன் மீது பழிவாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். நீ சொல்வதைப் பார்த்தால் மனித ஜாதியையே பழிவாங்க வேண்டுமென்று தோன்றுகிறது - எப்படிப் பழிவாங்குவோம் சொல்லு" என்றது பூனை. "நான் பழிவாங்க யோசிக்க வேண்டாம். தானாக நடக்கும் பார்! மனிதன் மண் மீது இருக்குமட்டும் நம்மை மறக்க முடியாமல் ஆகிவிடும் பாரேன்." "எனக்கென்னவோ இதில் நம்பிக்கை இல்லை. வசவுக்கு வசவு, பிறாண்டலுக்கு பிறாண்டல், கொலைக்கு கொலை இது தான் நான் அறிந்த சட்டம்." "பின்னொரு சட்டமும் உண்டு. மரத்தை வெட்டுகிறார்களே, அதற்காக, கோடாலிக்காரனுக்கு நிழல் தர மாட்டேன் என்கிறதா?" "இதெல்லாம் மனிதன் சொல்லுகிற கட்டுக்கதை. எனக்குப் புரியாது. என் கருத்தை அப்பொழுதே சொல்லிவிட்டேன். பிறகு உன்னிஷ்டம். ஆனால் ஒன்று. நான் மாத்திரம் தனித்து நின்றால் என்ன செய்யமுடியும்? நீ சொல்கிறபடி கேட்கிறேன்." "வா வழிக்கு. நாம் இருவரும் மனம் ஒத்து சும்மா கிடந்தால் அதுவே பழி வாங்குவதற்கு மேல் பலனளிக்கும் பாரேன்..." இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு அந்த மைதானத்தின் வழியாக வந்தான் ஒரு பித்துக்குளி இந்தியன். வாய் ஓயாமல் குதிரைகளைப் பற்றி பாடிக்கொண்டிருந்தான். மைதானத்து ஓடத்தில் ஒரு பெரிய மரம் வளர்ந்திருந்தது. அதன் அடிபாகத்தில் போய் நின்று கொண்டு, குதிரைகளைப் பற்றி ஒரு ஆவர்த்தம் வைதுவிட்டு, ஒரு பத்து கஜம் விழுந்தடித்து ஓடினான். குதிரையின் சிதைந்த உடல் கண்ணில் தட்டுப்பட்டது. அதன் அடர்ந்த வெள்ளைவால் மயிர் அவன் கவனத்தை இழுத்தது. ஒரு பிடிமயிரை உருவி எடுத்துக்கொண்டு ஓடினான் பூனையண்டை. கம்பிகள் போல் இறைந்து கிடந்த நரம்புகள் தடுக்கிவிட்டன. அவற்றில் நாலைந்தைப் பொறுக்கி எடுத்துக் கொண்டான். நடு வழியிலே, பொன்வர்ணத்தில் ஒரு பிரம்பு கிடைத்தது. அதை எடுத்து குதிரை வால் மயிரால் நடுவில் கட்டினான். நான்கு கஜத்திற்கப்பால் ஒரு காய்ந்த மரமொன்றிருந்தது. அதனடிப்பாகத்தில் ஒரு பொந்து. அங்கு போய் உட்கார்ந்தான். கை விஷமம் செய்ய ஆரம்பித்தது. கையிலிருந்த நரம்பை எடுத்து பொந்தின் வாயில் நெடுக்காகக் கட்டினான். வில்லை எடுத்துக் குறுக்காக இரண்டு தரம் இழுத்தான். சுத்தமான ஸ்வரங்கள் எழுந்தன. அனாயாசமாக பிறந்தது ஒரு புதிய சங்கீத வாத்யம். அது தான் முதல் பிடில்! அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |