நெருப்புக் கோழி ... தொடர்ச்சி ... "உட்கார். வாய்மேல் கை வை" என்றதும், குழந்தைகள் உட்காரும். "பிரார்த்தனை கீதம்", "அருள் புரிவாய் கருணைக் கடலே" என்று குழந்தைகள் ஆளுக்கொரு ஸ்தாயில் கத்தும். காமாட்சி வந்து கை நீட்டியதும், அதில் இரண்டடி விழும். வாங்கிக்கொண்டு, தன் இடத்திற்குத் திரும்பி விடுவாள். இதற்கிடையில் வாத்தியார் பிள்ளைகளை அடித்தால், கசமுசவென்று பேசுவார்களே, அதே மாதிரி இந்தக் குழந்தைகள் பேசிக் கொண்டிருக்கும். "பேசாதே, அடிச்சூடுவேன்." கப்சிப் என்ற மௌனம். இம்மாதிரி மாலைக் காட்சி ஒன்று தினம் வீட்டில் நடைபெறுகிறது. வாத்தியார் அடித்து விட்டார் என்று பள்ளிக்கூடம் போன உடனே திரும்பும் குழந்தைகளும், வாத்தியார் அடிப்பார் என்று பள்ளிக்கூடம் போக முரண்டு செய்யும் குழந்தைகளும் சேர்ந்து இந்த மாலைப் பள்ளிக்கூடத்தை நடத்துவது வியப்பல்லவா? எந்த அடியைப் பள்ளிக்கூடத்தில் வாங்க இஷ்டப்படவில்லையோ, அந்த அடியை இங்கே வாங்குவதில் அவர்கள் இன்பம் காணுகிறார்கள்! எந்தக் கட்டுப்பாடு பள்ளிக்கூடத்தில் வேம்பாக இருக்கிறதோ, அதற்கு இங்கே அளவு கடந்த மதிப்பு! இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த துறை ஒன்றிருக்கிறது. நாடகங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். வாழ்க்கையில் காணும் வெற்றி தோல்விகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டுவதுதானே நாடகம்? வாழ்க்கையில் தாங்க முடியாத இன்பம் ஒன்று மனத்தில் பிறக்கிறதே, அது ஏன்? இவைகளை எல்லாம் நினைக்கும் பொழுது ஒரு இயற்கை நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. சூரியன் தினம் நம்மைப் பொசுக்குகிறான். சூரியனிடமிருந்து சக்தியைக் கடன் வாங்கும் சந்திரன், நமக்கு ஒளியையும், குளுமையையும் தான் தருகிறான். சூரியனின் வெப்பத்தைச் சந்திரன் என்ன செய்தான்? இந்த அதிசயத்தின் ரகசியம் தான் என்ன? இப்படி இருக்கலாமோ? உண்மை என்று ஒன்றிருக்கிறது. காலம் என்று மற்றொன்றிருக்கிறது. உண்மைக்கும் நமக்கும் இடையே காலம் குறுக்கிடுகிறது. காலம் ஒரு மந்திரவாதி. நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும் பொழுதே, அவைகளுக்குப் புதிய வர்ணத்தைக் காலம் பூசிக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாகத்தான் செத்தவன் கண்போல் மனத்தில் காட்சி அளிக்கிறான். அடிபட்ட பள்ளிப் பிள்ளைகள் போலிப் பள்ளிக்கூடம் நடத்தி இன்பம் அடைகிறார்கள். ஒரு வேளைச் சோற்றுக்குத் தாளம் போடுகிறவன் நாடகத்தில் ராஜாவாக நடைபோடுகிறான். சூரியனின் கிரணம் சந்திரனை வந்து அடையும்பொழுது, காலம் கடந்துவிடவில்லையா? வெப்பத்தை மாற்றிக் குளுமை அளிப்பது காலத்தின் மாயஜாலமா? அல்லது, சூரிய வெப்பத்தை விழுங்கிவிட்டு அமுத ஒளி பொழியும் மாயவித்தை ஏதேனும் சந்திரனிடத்தில் இருக்குமோ? சந்திரனிலிருந்து மனம் உண்டாகிறதென்று உபநிஷதம் கூறுகிறது. ஜோதிடத்திலும் சந்திரனைக் கொண்டு மனத்தின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள். ஆகையால், சந்திரனுக்குள்ள மாய சக்தி மனத்திற்கும் இருக்கலாம் அல்லவா? இரும்பாணியையும், மண்ணையும் தின்னும் நெருப்புக் கோழி மென்மையான அழகிய சிறகுகளைப் போர்த்திக் கொள்கிறதல்லவா? இந்த மாதிரி அற்புத சக்தி மனத்திற்கும் இருக்குமோ? இந்த சக்தியிலிருந்து பிறப்பதுதான் கலையோ? அல்லது வினையை விளையாட்டாக்குவதுதான் கலையோ? அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |